ஊரெல்லாம் வெள்ளம்
உட்கார இடமில்லை
வைக்கோலும் சக்கலாகியதால்
பாலன் பிறப்பும் பக்கத்து ஊர் பள்ளி வகுப்பறையில்தான்
தோளில் குந்தியிருக்கும் கடைசி வடிக்கு
மாரி மூடிய ஊரியானை காட்டி
இதுதான் அத்திலாந்திக் என்கிறார் ஒரு அப்பா.
பாரெல்லாம் படைத்தவனுக்கு
ஊர்களில் உள்ள பலபேருடன் ஊடலாக்கும்
கேரளத்தில் இறங்கி கதகளியாடியும்
இந்தோனிசியாவை பந்தாக்கி உதைத்தும்
ஏரிமலை வாய்களால் காறி உமிழ்ந்தும்
கஜாவாய் சீறிச்சினந்தும்
காதலை முறித்துக்கொள்வதாய் கடிதம் எழுதுகின்றார்.
பொக்கேயிற்கு பதிலாய் பூகம்பத்தை ஏந்தி நிற்க
இந்த ஆண்டு இடறுப்பட்டு புறப்படுகின்றது
இருந்தாலும்
மல்லையாவின் கடன்களை பார்த்து
செல்லையா பெருமூச்சு விடுகின்றார்
நில்லையா கொஞ்சம்
எல்லையை கொஞ்சம் நீட்டு
எடுத்த கடனை அடைக்கிறேனென இழுத்தடிக்கிறார்.
அட நானென்ன அம்பானியின் மகளாடா
அறுநூறு வகை அமிர்தம் படைக்க
கொய்யால குளத்தில விரால் இருக்கு
கொண்டுவா
அறுத்து மஞ்சள் பூசி முறுக பொரித்துத்தாறன்
கடித்து முடித்துவிட்டு
கதவைச் சாத்தி ஆட்டத்தை தொடங்கென
வெட்கத்துடன் விரிக்கிறாள் பாயை வேதவல்லி.
காட் வாங்கி தேய்த்து ஏத்தி
கணக்கில் மீதி முடியும்வரை
தீபிகாபடுகோனின் தேனிலவை தேடி
பாதி நாட்கள் போயிருக்கிறது பலபேருக்கு.
ஐயப்பனை
அன்ரிமார் நெருங்கலாமா இல்லையா என்பது பற்றி
சன்னதம் ஆடுவது இன்னும் நின்றபாடில்லை.
தனியீழம் கேட்டு உயிர்களை தாரைவார்த்தவர்க்கு
எண்ணைவிலை குறைத்து இதயங்குளரவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வீட்டு ஆடுவந்து
கத்தரி வெண்டியின் தலைப்பில் நன்னியதுக்கு
படுக்காமல் சண்டியை கட்டுகிறவர்கள்
தங்கள் பெண்டுகளை இழுத்து உரிந்து
ஒன்றுக்கு பலபேர் ஏறி வன்புணர்ந்தவனோடு
ஒன்றாய் கிடந்து திண்டுபேள்வதில்
தங்கள் அப்பன் பேரை விக்கிரமசிங்கவென சத்தியக்கடதாசி முடித்துள்ளார்கள்.
எப்படி இருக்கிறது இரண்டாயிரத்து பதினெட்டு
இதோ முடியப்போகிறது
யாரும் கொய்யகத்தில் முடிஞ்சோ
கோவணத்துக்குள் சுருட்டியோ
தமிழீழத்தை வைத்திருந்தால்
கொண்டோடிப்போய் கொழும்பில் கொடுங்கள்.
எல்லாம் முடிந்துவிட்டது
இதுவரை தமிழன் சிந்திய இரத்தம் இனிச் செல்லாது.
வெட்கத்தை விட்டு இந்த ஆண்டின் வீரவசனமாய்
சொல்லியே ஆகவேண்டும் சிங்களத்தந்திரம் தலைசிறந்தது
அங்குடு தொத்திகளை வைத்து அதை எதிர்கொள்ளமுடியாது.
பிரபாகரன் இல்லாத வெற்றிடம் என்பது
கக்கூசுக்கு அடைக்கும் கடப்பு என நினைக்கிறார் சிலர்
அது பிரபஞ்சத்தை அடைக்கும் பெருங்கதவு!
சக்கடத்தார் பலபேர் ஏறிவிழுந்த குதிரையினை
இந்திரனின் உச்சைஸ்ரவசு என எண்ணி உன்னி ஏறியிருக்கின்றார்கள்.
எதிர்கொள்ளப்போவதோ ஐராவதம்.
தக்கன பிளைக்கும் என்பது தமிழர் தலைவிதியை பொறுத்து
தவறாகத்தான் இருக்கிறதோ டார்வின்!
மெக்சிக்கோவுக்கு முன் சாந்தகப்பையுடன் நிற்கும் டிரம்பிற்கு
கண்டாவளைவரை கால் பிடித்துவிட ஆள் இருப்பதில்
வல்லரசுகளின் வாழ்வுக்கு
அடிமைகளின் ஆலாபனை நீண்டு செல்கின்றது.
பிச்சைக்காரனுக்கும் ரோசம் இருக்கின்றது
புளுவுக்கும் ஒரு கோபம் இருக்கின்றது
என்பதை வெளிப்படுத்தமுடியாதபடி வீழ்த்தப்பட்டுவிட்டோமெனும்
மனம் செழித்து வளர
அடிக்கடி அடியுரம் மருந்து மாயங்கள் அடிக்கப்படுகின்றது.
முடிந்தவரை கத்துவோம் மூச்சு நிற்கமுதல்
மதகுத்தண்ணிக்குள் இருந்து பாய்ந்து
தமிழர் மண்ணுக்குரிய மாபெரும் சிறப்பாம்
பச்சோந்தியாகி
பாவங்களோடு சேர்ந்து படுகுழியில் வீழ்வோம் வேறென்ன செய்ய!
அப்புக்காத்தைகள் ;பலரை ஆத்தை பெத்தெடுத்தது பெருமைதான்
ஒரு எருமைகூட
ஆத்தைக்கு ஒரு துன்பம் என்றால்
காத்தைக்கோளியென சண்டித்தனம் செய்வதில்லை
சரணாகதிதான் சரணம் என்பதுதான் கடந்த காலங்கள்!
இனியும் ஏதும் ஆச்சரியம் நடக்கும் என்ற நம்பிக்கையில்லை
கடவுளே
முடிந்தால் நக்குவதற்கு இன்னொரு நாக்கைத்தாருங்கள்
வேறன்ன
அடுத்த ஆண்டும் நல்லூர் வரும் போவோம்
எழுதுவதற்கு ஏதுமில்லையென்றால்
தங்கக்கோபுரத்தை பிறகும் புறுபுறுப்போம்
மடுவரும் போவோம்
காலியில் இருந்தோ கட்டுகஸ்த்தோட்டையில் இருந்தோ
தக்காளிகள் வரும்
நல்லிணக்கம் என்றபேரில் நாக்கைத் தொங்கவிடுவோம.;
எலும்புக்கூடுகளை ஏறெடுத்துப்பார்க்கோம்
வற்றாப்பளை புளியப்பொக்கணை போவோம்
வெசாக்வரும் வீதிவீதியாய் அலைந்து வேண்டித்தின்போம்
மாவீரர் நாளும் வரும் பத்தை வெட்டி படமெடுப்போம்
பாட்டடிப்போம்
ஏரியல் வியூவில் படமெடுத்து இரண்டு மூன்று நாட்கள்
பரபரப்பாய் இருப்போம்
புலி என்ற வார்த்தை வராமலும்
சிங்களப்படை இனவெறியர் என்ற வசனங்கள் வராமலும்
வரலாற்றை துண்டாக்கி
அலரிமாளிகையை கூலாக்கும் செண்டாக்கி விளக்கேற்றுவோம்.
விசர்க்குணத்தில்
நாட்டில் இரண்டு பிரதமர் இரண்டு எதிர்கட்சி தலைவரென
வேட்டியை உருவி விளையாடுவதில்
ஆளுக்கொரு தரப்பை நாமும் பிரிந்து விசிலடிப்போம்
உணர்;ச்சி மேலீட்டினால்
ரணிலும் மகிந்தவும் மகிழ்ந்திருக்க நேத்திவைப்போம்
அவர்களை எங்கள் குழந்தைகளுக்கு
சித்தப்பா மாமாவென அறிமுகம் செய்வோம்.
வெள்ளம் பாய்ந்து எல்லாவீதிகளும்
சல்லடையாகிவிட்டது
இனி வேட்டைதான் திட்டங்கள் தயாரிப்போம்
பள்ளங்களில் கிறவல் கொட்டி கயிலாயத்துக்கு பாதையிடுவதாய்
கையை காட்டி நீட்டி படமெடுப்போம்
ஒப்பந்தகாரர்களை கைக்குள் வைத்து
ஓரிரண்டு வீதத்தை உருவி எடுப்போம்
தார் ஊற்றுவதற்கு பதிலாய் தடவுவோம்
தடவுவதற்கு பதிலாய் தெளிப்போம்
மந்தைகள் மகிழ்ந்து பிறகும் வாக்களிக்கும்
பத்தரமுல்லைப்பக்கமாய் சொத்துக்களை வாங்கிவிடுவோம்
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று
இளமையை கருக்கியவர் எழுந்துவரவா போகிறார்கள்
முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்கள் என்ன மூச்சுவிடவா போகிறார்கள்
முடிந்தவரை எவர் தந்தாலும் வாங்கித்தின்று
இருக்கின்ற நாட்களை ஓட்டி முடிப்போம் என்ற சாத்திரத்தை பரப்புவோம்.
இந்த ஆண்டு விடைபெறுகின்றது
அதுவும் சரி இதுவும் சரி எதுவும் சரியென
ஒரு சரி உலகத்தில் இல்லை
ஏதோ ஒன்றுதான் சரியாய் இருக்கும்
எது அந்தச் சரியென்பதை கண்டுபிடிப்பதுதான்
முன்னே விரியும் புதிர்
நன்றி இரண்டாயிரத்து பதினெட்டே!