Wednesday, January 2, 2019
மரியாளின் பிரசவ வலி-,பொன்.காந்தன்
மரியாளுக்கு நேற்று பிள்ளை பிறந்துவிட்டது
ஆண்குழந்தை
பெயர் இன்னும் வைக்கவில்லை
கடந்த சில நாட்களாக
யோசேப்புவுக்கு இருந்த பதட்டம்
நேற்று தணிந்துவிட்டது
சுகப்பிரசவம்
மரியாளும் மகிழ்ச்சியாய் இருக்கிறாள்
நேற்றைக்கு முந்தைய நாட்களில்
மரியாளின் பெறு மாதத்தை நினைத்து
யோசெப்பு ஒரு பதட்டத்தோடும்
மகிழ்ச்சியோடும் இருந்தார்
மரியாளும் அப்படித்தான்
இரவுகளில் மரியாள் தன் வயிற்றில்
யோசேப்புவின் தலையை சாய்த்தபடி
பிறக்கப்போவது ஆணா பெண்ணாவென கேட்டாள்
ஆணென்ன பெண்ணென்ன
அது எங்கள் குழந்தை என்றார்
அந்த சமதர்மவாதி யோசேப்பு
ஆண் என்றால் அவனை
எப்படி ஆளாக்குவது
கஞ்சாவும் போதை வஸ்த்துக்களும் சூழ்ந்த ஊரில்
அவனை நல்லவனாக்குவது எப்படி
துப்பாக்கிகளும் ஆர்பார்ப்பட்டங்களும்
நிறைந்த ஊரில்
ஒர் அமைதியான மனிதனாக எவ்வாறு வளர்ப்பது
தந்தையும் தாயும் கொல்லப்பட்ட
ஏதிலிகள் நிறைந்த மண்ணில்
அவன் யாருடன் மகிழ்ச்சியாய் மண்ணளைவது
மரியாள் கவலை தோய்ந்த வார்த்தைகளுடன்
யோசேப்புவை பார்க்கிறாள்
ஏன் மரியாள் அவனை நாம்
ஓர் மதமற்ற மனிதனாக வளர்கக்கூடாது!
மரியாளுக்கு பேரதிர்ச்சி
யோசேப்புவின் அந்த வார்த்தைகள்
அனுபவத்தின் முதிர்ச்சி என்பதை புரிகிறாள் மரியாள்
அவனை நாம் ஏன்
ஒரு ராச்சியத்தின் தலைவனாக வளர்க்கக்கூடாது
என்றபடி மரியாளை பார்த்தார் யோசேப்பு
எந்த இராச்சியம் அது
அது கிறித்துவின் பேராலா
அல்லாவின் பேராலா
புத்தனின் பேரால
சிவனின் பேராலா
மரியாளின் கேள்வியில்
பூமியை விட்டு நாம் வேறெங்கினும் போய்விடலாமா
என யோசித்தார் யோசேப்பு
சிரியக்குழந்தையும்
நந்திக்கடலில் தமிழ் குழந்தையும்
மியன்மாரில் ரோகிங்கியா குழந்தையும்
பாக்தாத்தின் குழந்தைகளும்
பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டார்கள்
நிறைமாதக் கர்ப்பிணிகள் வயிற்றில்
சன்னங்கள் பாய்ந்திருந்தன
எல்லா இராச்சியத்திலும்
இன்னமும் ஏரோதுக்கள் ஆள்வதுதானே
நியாயங்களாயும்
நியதியாயும் உள்ளபொழுது
எந்த நியாயத்தின் அடிப்படையில்
அவனை தலைவனாக்குவது
ஒரு அமெரிக்க நியாயத்தின் அடிப்படையிலா
ருஸ்ய தத்துவங்களின் அடிப்படையிலா
சீன வரலாற்றின் அடிப்படையிலா
குமரிக்கண்டத்தின் நியாயங்கள் வழியிலா
எது உலகத்தின் நியாயம்
அந்தக்கேள்விக்கு யோசேப்புவிடம் விடையில்லை
வேண்டாம் அவன் தலைவனாக வேண்டாம்
ஒரு அழகிய பெண் குழந்தை என்றால்
மகிமை அல்லவா என்றார் யோசேப்பு
அவளுக்கான ஆடையெது
அவள் கூந்தலை எப்படி வைத்திருப்பது
அவளுக்கான கல்வி எது
அவளுக்கான காதலன் யார்
அவளுக்கான கடவுள் யார்
அவளுடைய பகல் இரவு எது
அவளுடைய மகிழ்ச்சி எது
எல்லாம் அவளே தீர்மானிக்கும்
பூமியாய் இது விரிந்து கிடக்கிறதா
எனக்கேட்கிறாள் மரியாள்
வன்புணர்ந்த குரல்கள் திரண்டு
ஓர் பெரு இடியாய் மாறி
ஆண் காடொன்றை எரித்து சாம்பராக்கி
அம்மேட்டில்
ஆண்குறிகளை அறுத்தெறியும் யாகசாலையின் நடுவில்
திரண்டு குந்தியிருந்த பெண்மொழியின்
புராணபடலத்தில்
பெண் குழந்தையை முற்றத்தில் இறக்குதலே
பெருந்தவமெனும் அர்த்தத்தில்
யோசேப்பு தெளிந்து பார்த்தார் மரியாளை
யோனியும் மார்புடன் கூடிய
ஓர் அழகிய தின்பண்டத்தை
அரக்கர்க்கு படைக்கும்
பத்தினியாய் தோன்றினாள் மரியாள்
இருந்தும் பெற்றெடு மரியாள்
விண்ணையும் தொடுமீனென
ஓர் வில்லில் அம்பாய் அவளை ஏற்றி
எய்வேன் அவளை இப்பூமியில் என்றார் யோசேப்பு
ஆளரவமற்ற பெருங்கடலில்
நீந்தி பிளம்பாகும் அங்கயற்கன்னியென உறுதியை
உன் திருவயிற்றின் கனியாய்
மரியாள் நீ சுமந்திருப்பினும் மகிழ்வேன் மாதே
ஆயினும்
நம்பிக்கையீனங்களே கவ்வியிருந்தது மரியாளை
நேற்று பிறந்தது ஆண் குழந்தை
அவன் பெயர் இயேசு இல்லை என
முடிவாய் சொன்னாள் அன்னை மரியாள்
மீட்பர்களை பற்றிக்கொள்ளாத உலகத்தில்
மீட்பர்கள் மீண்டும் பிறக்கக்கூடாது என்றாள்
Subscribe to:
Post Comments (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...
No comments:
Post a Comment