எங்கள் வீட்டில் இருந்து
கிழக்காக புறப்படும்போது
முதலில்
ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும்
ஒரு குச்சொழுங்கை
இடையில்
குளியாப்பிட்டி மணியைத்தார் காணி
அடுத்து ராசையா கடை சந்தி
வடக்காக திரும்பும்
அடுத்து
பரமசாமி அண்ணன் வீடு கடந்து
குணத்தார் சிவத்தார்
ரைவர் தங்கராசா அப்பா
அதற்கிடையில் கமலநாயகி ரீச்சர் வீடு
அருகில் கந்தப்பு அண்ணன் வீடு
அந்த ஒழுங்கையில்
கந்தப்பு அண்ணனின்
வேலி அடைப்பு தனிரகம்
கோழி உள்ளே இருந்து வெளியேயும்
பூனை வெளியே இருந்து உள்ளேயும்
போக முடியாத
நீக்கல் இல்லாத நேர்த்தியான வேலி
கள்ளி என்றால் என்ன
பாவட்டை கிளுவை கிடுகு என்றால் என்ன
கந்தப்பு அண்ணனிடம் குடுத்துப்பார்க்கவேண்டும்
பிறகு ஆச்சரியம் தான் வளவு
வேலி மட்டுமா
கதவு இடைவெளியால் தெரியும்
உள் வளவில்
சோறு போட்டு சாப்பிடலாம்
அப்பிடி ஒரு அழகு
கந்தப்பு மனைவியின்
விளக்குமாத்து வித்தை
ஆனால்
அருகில் இருக்கின்ற
சிவத்தார் வீட்டை எப்போது கடந்தாலும்
கமலநாயகி ரீச்சர் வீடுவரை
விட்டுத்துரத்திறதுக்கு இரண்டு கடிநாய்கள்
சிவத்தார் வீடு என்றால்
மகள் கோகிலா
நினைவுக்கு வருவதற்கு முதல்
அந்த கடியன்கள்தான் முன்னுக்கு வரும்
அந்தப்பயத்திலேயே
குறுக்கு ஒழுங்கையில் விட்டு
கனகாம்பிகை அக்காவீட்டடியால்
லீலா ரீச்சர் சந்தியில் திரும்பி
தங்கராசா அப்பா வளவு கடந்து
பள்ளத்தில் இருக்கின்ற
கிருஸ்னன் கோயில் போவது வழக்கம்
ஆனால் இந்த ஒழுங்கைகள்
கடந்துபோனால்
எங்கள் ஊருக்கும் திருவையாறுக்கும்
இடையில் முச்சந்தியில் இருக்கும்
சண்முகராசரும் கடையும்தான்
இதை எழுத தொடங்கியதன் பின்புலம்
ஊரை கடந்தும்
சண்முகராசரை தெரியும்
சைக்கிள் திருத்துவதில்
சண்முகராசர் ஒரு ரேட் மார்க்தான்
ஒரு காலத்தில்
வீட்டுக்கு வீடு சைக்கிள் நின்றன
அதிலும்
அந்த ரலி சைக்கிள் வைத்திருப்பவருக்கு
ஒரு தனி மதிப்பு இருக்கும்
அவருக்கும்
உள்ளுக்குள் ஒரு கர்வமும் உறங்கும்
சைக்கிள்களுக்கு
ஆயிரம் வருத்தம் வருவதுண்டு
மட்காட் எங்காவது உரஞ்சும்
செயின் கவருக்குள் தேய்க்கும்
கொட்டப்பின் ஆடும்
சீற் முன்னுக்கு சரியும்
பின்னுக்கு படுக்கும்
காண்டில் திடீரென்று
மற்றப்பக்கம் திரும்பும்
பிறிவில் பிடிக்காது
பிறேக்கட்டை ஒன்று கழன்று தொங்கும்
அச்சுக்குள்ளே குடத்துக்குள்ளே என்று
இன்னோரன்ன வருத்தங்கள் உண்டு
அனைத்துக்கும்
ராசியான சைக்கிள் வைத்தியராக சண்முகராசர்
சண்முகராசரிடம் கழுவிப்பூட்டினால்தான்
பலருக்கு ஊருக்குள் திருப்தி
வேறு ஊர்களில் இருந்தும்
எப்பிடியாவது
சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்து
சண்முகராசரிடம் விட்டுச்செல்வார்கள்
இரண்டு வாரம் கழித்து
திரும்பி வந்து பார்க்கும்போது
சைக்கிளுக்கு பதிலாக ஒரு ரதம் நிற்கும்
சண்முகராசருக்கு ஓய்வில்லை
இரவு நெடுநேரமாயும்
அரிக்கன் லாம்பில்
கம்பிகளை கறள் தட்டி
வெள்ளியாக்கி
மின்ன வைத்துக்கொண்டிருப்பார்
லாம்புக்காலம் என்றால் புரிந்துகொள்வீர்கள்
எங்கள் ஊரின் எண்பதுகள் தொண்ணூறுகள்தான்
அந்த காலத்தில்
சண்முகராசரின் மூத்த மகன் சபேசன்
ஒரு குட்டி சைக்கிளில் வருவான்
அது சண்முகராசரால்
வெட்டி குறைத்து பொருத்தி
தன் மகனுக்காக உருவாக்கியது
அந்த குட்டி சைக்கிள்
ஊருக்குள் இருந்த எல்லா சிறுசுகளுக்கும்
ஒரு கனவு கன்னிபோல இருந்தது
சபேசனிடம் கெஞ்சி கூத்தாடி
ஊருக்குள் இருந்த
ஏனைய சிறியான்கள்
தெண்டித்து ஓடி ஒரு வட்டமடித்து
தங்கள் ஆசைகளை போக்கிவிடும்
சபேசனும் அதை குடுத்து மகிழ்ந்தான்
கொடுக்கின்ற அந்த மனசுதானோ என்னவோ
பின்னாளில்
தன் உயிரையும் கொடுத்து
மண்ணுக்காய் மடிந்தான் சபேசன்
ஊருக்குள்
சைக்கிளுக்கு என்ன பிரச்சனை என்றாலும்
உடனடியாக
சண்முகராசா கடைக்கு போவதான் புத்தி
வேளைக்கே கொண்டு போனால்
மிகுதி போல்சுகள் உடையாமலும்
அச்சு தேயாமலும்
செயின் அறாமலும் காப்பாற்றலாம்
ஆனாலும் சிலவேளை அது நடப்பதில்லை
காத்துப்போவதற்கு
காரணங்கள் பல உண்டு
பின்னாளில்
காத்து போவது என்பது
ஒரு சங்கேதமொழி
ஒருவர் பதவியிறக்கப்படுவதற்கும்
ஆளுக்கு காத்து போயிற்று
என்றுதான் சொன்னார்கள்
சில பொறுப்புக்களில் இருந்து
சிலரை அகற்றுவதை
வால்கட்டை பிடுங்குவது என்றும் சொல்வதுண்டு
சிலருக்கு கொட்டப்பின் என்று பட்டமும் இருந்தது
முன் ரயருக்கு காத்து அதிகம் அடித்தால்
ஒடும்போது சைக்கிள் உதறும்
உதறுவது என்றால்
ஒருவருக்கு எல்லா பதவி பட்டங்கள் சொகுசு
எல்லாம் கிடைத்தால்
அதை உதறுது என்பார்கள்
சில வேளை ஊதி ரயரும் வெடிக்கும்
மனிதர்களின் மண்டை கனமும்
கதையை முடிக்கும்
சண்முகராசரின் சைக்கிள் கடைக்கு போதலும்
அங்கு உணர்தலும் பல தத்துவங்களும்
பக்கிள் வடிவிலும்
கம்பி வளைவாயும் இருந்தன
முள் குத்தி அல்லது வால்கட்டை இளகினால்
வால் ரியூப்பு உருகினால்
காத்துப்போக வாய்ப்புக்கள் இப்படித்தான்
எதுவென்றாலும்
சண்முகராசர் கடைக்குப்போய் பார்ப்பது நல்லது
வால் ரியூப்போட்டும் காத்துப்போனால்
ஒட்ட வேண்டிவரலாம்
சண்முகராசர் பக்குவமாய்
சைக்கிளை தொங்க விட்டு
ரியூப்பை கழற்றி காத்தடித்து
தண்ணீருக்கும் அமிழ்த்தும்போது
ஒரு இடத்தில் மட்டும்
அந்த குமுழிகள் வந்தால்
பெருமூச்சு விட்டபடி
அந்த சொலிசன் மணத்தை
சண்முகராசரின் சன்னிதானத்து
கற்பூர வாசம் போல முகர்ந்து புறப்படலாம்
ஆனால்
ரியூப்பு தண்ணீருக்குள் மூழ்கும்போது
அடுத்தடுத்து
குமுழிகள் பொங்கிப்புறப்பட்டால்
சண்முகராசரும் என்னதான் செய்வார்
இரண்டு கேள்விகள் கேட்பார்
எங்கே முள்ளுக்குள் கல்லுக்குள் விட்டீர்களா
சிலரிடம் சண்முகராசரின் கேள்விகளுக்கு பதில் இருக்காது
ஏதோவது மழுப்பல் இருக்கும்
வேறு வழியில்லை
இருதய மாற்று சிகிச்சைபோல
ஒரு புது ரியூப் போடுவது சிறப்பு என்பார் சண்முகராசர்
ரிம்மில் ஓடுவாருக்கு
கடைசியில் சண்முகராசரின் வரம் கிடைக்காது
எனக்கும் அனுபவம் உண்டு
ஒரு நாள் லுமாலா காத்துப்போய்விட்டது
முதன் முதலில்
பதினாறு வயதில் புதுச்சைக்கிள் வாங்கித்தந்தார்கள் வீட்டில்
ஒரு நாள் காத்துப்போய்விட்டது
ஒரு சொட்டு காத்து நின்றது
சண்முகராசரிடம் மெல்ல உருட்டிச்சென்று
வால்ரியூப்பார்த்து காத்தடித்திருக்கலாம்
பயணம் இனிதாகியிருக்கும்
ஆனால் அதுதான் நடக்கவில்லை
சண்முகராசா கடைக்கும்போகும் வழியில்தான்
அந்த என் பதினாறு
கண்வைத்த
கனவு கண்ட குமரிகள் போய்வருதுண்டு
சைக்கிளை உருட்டிச்செல்ல
அவர்கள் கண்டால் என்ன ஆவது
வெக்கமும் கூச்சமும்
உருட்டிச் செல்லத்தடுத்தது
ரிம்மில் ஓடிச்சென்று
சண்முகராசரிடம் காத்தடித்தபோது
நன்னிய பத்துவாசல் வழியே
காத்து நில்லென சொன்னாலும் கேட்காமல்
ஓடிப்பறந்தது
சண்முகராசர் சிரித்தார்
அவருக்கு புரிந்தது
உன் வீட்டில் இருந்து
இரண்டு ஒழுங்கை தாண்ட
என் கடை
உன்னால் முடியவில்லை உருட்டிவர என்பதுபோல
ஏறிட்டுப்பார்த்தார் என்னை
போய் புது ரியூப் வாங்கிவரச்சொன்னார்
நடந்துதானே போகவேண்டும்
ஏதோவது செய்து ஒட்ட முடியாத
என்று கேட்டிருக்கலாம்
ஒட்டலாம்
உட்காந்திரு தாமதமாகும் என்றிருப்பார்
எப்படி ஆயினும்
ஒரு பயணம் ஒன்று நின்றுவிட்டது
ரிம்மில் ஓடியிருக்கக்கூடாது
சண்முகராசரிடம் உருட்டிப்போயிருக்கவேண்டும்
ரிம்மில் ஓடியவர்களை பார்த்து
சண்முகராசர் உதிருமம் சிரிப்பு
இன்றும் பரந்து பரவுவதுபோல இருக்கின்றது