Wednesday, January 2, 2019

வெள்ளத்திற்கு வயது நாற்பது-பொன்.காந்தன்



எனது ஊரின் வெள்ளத்திற்கு வயது நாற்பது.முதலில் வெள்ளத்திற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.எனக்கும் கிளிநொச்சியின் மாரிக்கும் கிட்டதட்ட நாற்பது வருட நட்பு உண்டு.இந்த மழையோ இந்த வெள்ளமோ எனக்குப் புதிதல்ல ஆனால் இப்பொழுது இந்த வெள்ளம் புதிர்.நினைவுக்கு எட்டிய வகையில் எனது பாலர் பருவத்தில் இருந்து நான் எனது பள்ளிகளுக்கு போவதற்கு இரண்டு வெள்ளம் பாயும் இடங்களை கடக்க வேண்டியிருந்தது.முதலாவது ஐந்தடிவான்.இது கிளிநொச்சிகுளத்தில் நீர் நிரம்பினால் தளம்பும் நீர் பாயும் வழி.இந்த ஐந்தடி வான் கிட்டத்தட்ட நூறு மீற்றர் வரையில் அகன்று நீர்பாயும்.கொட்டோ கொட்டென்று மழை கொட்டினால் இந்த ஐந்தடி வானில் ஐந்தடிவரை நீர் வேகமாக பாயும்.ஓரளவு மழை என்றால் ஓரடி இரண்டடிக்கும் பாயும்.இடுப்புக்கு நீர்பாயும் அளவில் நான் சிறிய வயதில் புத்தகப்பைகளை தலைக்கு மேல் தூக்கிப்பிடித்தபடி நண்பர்களோடு கைகோர்த்தபடி இந்த ஐந்தடிவானை கடந்து குளத்தடி பள்ளி என நாம் முன்பு அழைக்கும் கனிஸ்ட மகாவித்தியாலயத்துக்கு செல்வோம்.ஐந்தடி பாய்ந்தால் இரண்டு மூன்று நாட்கள் பாடசாலைக்கு போகமுடிவதில்லை.இந்த ஐந்தடிவான் வழியேதான் வட்டக்கச்சி இராமநாதபுர சிரிபி பேருந்துகள் போகும்.இரண்டு மூன்றடி நீரை கிழித்தபடி பேரூந்துகள் கடப்பதை கரையில் நின்றும் நீருக்குள் நின்றும் ரசிப்பதும் உண்டு.சக்கரங்களால் உதைக்கப்படும் நீர் எங்களை முழுவதுமாய் நனைப்பதும் உண்டு.இந்த ஐந்தடிவான் பாயும் வழியே ஒரு பெரியமண் புட்டி இருந்தது.அது சிறிய குன்றுகளின் தொடர்போல இருக்கும் அதில் மரங்கள் நிறைந்திருந்தது.ஒரு பெரிய புளியும் இருந்தது.அந்த புட்டியில் நெடுங்காலமாக ஒரு கொஞ்ச மக்கள் வாழ்ந்தே வாழ்ந்தார்கள்.அவர்களுக்கு கிளிநொச்சிக்குளமும் மாரியும் ஐந்தடிவானும் வெள்ளமும் ஆச்சரியமல்ல.அந்த புட்டியில் வாழ்ந்த இளசுகள் ஆண்கள் பெண்கள் என நீந்தி மகிழ்வார்கள்.ஆடைகள் துவைப்பார்கள்.அந்த ஐந்தடிவானும் முடிவில் பல கிராமங்கள் கடந்து ஆனையிறவு கடலை அடையும்.

அடுத்தது இரத்தினபுரத்தின் வழியில் இருந்த ஆனைப்பள்ளம்.இது ஒரு கிட்டத்தட்ட இருபத்தைந்து மீற்றர் வரையான நீளமுள்ள ஒரு பள்ளம்.கனகாம்பிகைகுளத்தில் தளம்பும் நீர் இந்த ஆனைப்பள்ளம் வழியே பாய்ந்து கிளிநொச்சி குளத்தை அடையும் கிளிநொச்சிக்குளம் நிரம்பும் ஐந்தடிவான் வழியே பாயும்.மாரிகாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்துக்கு போகின்றவர்கள்.இடுப்பளவு நீரில் நனைந்தே போவார்கள்.இந்த வீதியால் அநேகமாக வாகனங்கள் செல்வதில்லை.அக்காலத்தில் பெரும்பாலானவர்களிடம் துவிச்சக்கரவண்டியே நின்றது.அதை தங்கள் தலைக்கு மேல் தூக்கிப்பிடித்தபடி இந்த ஆனைப்பள்ளத்தை ஊர்க்காரர்கள் கடப்பார்கள்.பெருமாரி என்றால் அநேகமாக ஆனைப்பள்ளத்திற்கு ஒரு முனையில் இராமசாமி அண்ணை வீட்டுக்குள்ளும் இன்னொரு முனையில் பரமக்கா வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்துவிடும்.இதுதான் அன்று பெருமாரியின் அளவு கோல்.ஆனைப்பள்ளத்திற்கு அருகில் காட்டுப்பகுதியில் இருந்த மயில்வாகனம் குடும்பமும் இன்னும் சிலகுடும்பங்களும் இடம்பெயர்வார்கள்.சிலவேளைகளில் வீட்டுக்கூரைகளில் மேல் ஏறிக்குந்தி வெள்ளம்வடிய அவர்கள் இறங்குவதும் உண்டு.அநேகமாக இன்றைக்கும் அதே வழிகளில் வெள்ளம் பாய்கின்றது.வெள்ளம் தன் பாதைகளை பெரிதாக மாற்றிவிட்டதாக தெரியவில்லை.அக்காலத்தில் வெள்ளம் தன்பாட்டில் தன்வழியில் விசாலமாய் பாய்ந்துகொண்டிருந்தது.அநேகமாக மழையையும் மாரியையும் வெள்ளத்தையும் ரசிக்கும் அளவில் இருந்தது.அதனால் அதிகம் இடர்கள் இருக்கவில்லை.அநேகமாக இந்த ஆனைப்பள்ளம் ஐந்தடி வான் என்பன இயற்கை தன் வசதிப்படி அமைத்த பாதைகள்.அந்தப்பாதைகளில் மாரியையோ மழையையோ வெள்ளத்தையோ திட்டித்தீர்க்கமுடியாதபடி இயற்கை அழகான ஒரு பருவ அனுபவத்தை எனக்கு நெடுங்காலமாய் தந்திருந்தது.

ஐந்தடிவானிலையோ ஆனைப்பளத்திலேயோ அதிகம் நீர்பாய்ந்தால் நீளமான கயிற்றை கட்டி அதில் பிடித்தபடி கடக்க பழகினார்கள்.இன்னாரு மாரியில் வெற்று எண்ணை கொள்கலன்களை வைத்து கட்டுமரம்போல் செய்து அதில் ஏறி பயணித்தார்கள்.பாலமற்ற அந்தக்காலத்தில் மாரிகாலத்தில் இந்த வெள்ளம்பாயும் பாதைகளை மக்கள் இயல்பாக கடக்க ஏற்பாடுகளை செய்து கடந்தார்கள்.ஊருக்கு போகும் வழியில் இந்த பள்ளங்கள் இருந்ததால் அந்தப்பள்ளங்கள் வழியே மாரிகாலத்தில் கரைபுரண்டு வெள்ளம் பாய்ந்ததால் ஆதியாய் காடுவெட்டி குடியேறியவர்களைத தவிர புதிதாக எவரும் குடியேறவும் காணிகள் வாங்கவும் விரும்பவில்லை.காணிகள் பெரிதாக விலையும் இல்லை.கோடைகாலங்களில் ஆனைப்பள்ளத்தாலும் வாகனங்கள் போகும் வழக்கத்தை கொண்டிருந்தன.மாரிகாலத்தில் எல்லாம் நின்றுபோகும் நடையாயும் துவிச்சக்கரவண்டிகளை தூக்கிக்கொண்டும்.நீர் இழுக்க இழுக்க இழுத்துப்பிடித்துக்கொண்டும் போனார்கள்.ஆனாலும் இந்த ஐந்தடிவானுக்கும் ஆனைப்பள்ளத்துக்கும் பாலங்கள் வேண்டும் என்ற கனவு பிறகு வளரத்தொடங்கியது.இடைக்கிடை தண்டவாளங்களை வைத்துக்கொண்டு மரப்பாலங்களை போடும் முயற்சிகளிலும் இறங்கினார்கள்.இப்போது இந்த இரண்டு வெள்ளம் கரைபுரண்டோடும் பாதைக்கும் பாலக்கனவு நிறைவேறி நெடுங்காலம் ஆயினும் இராமசாமி அண்ணை வீட்டுக்குள்ளும் பரமக்கா வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுவது நின்றுபோகவில்லை.வெள்ளம் இன்றும் அநேகமாக தன்வழியிலேயே பாய்கின்றது.கனகாம்பிகை குளம் நிரம்பி தளம்ப ஆரம்பித்தவுடன் அது மெல்ல இறங்கி இரணைமடுச்சந்தியில் இருந்து கனகாம்பிகை அம்மன் கோவிலுக்கு போகும் அம்பாள்நகர் வீதியை கடந்து காட்டு ஆற்றில் இறங்கிஅது ஆனைப்பளத்தை கடக்கும் இன்றும் அதைதான் செய்கின்றது.எனக்கு தெரிந்தவரையில் நாற்பது ஆண்டுகளாக அது அதைதான் செய்கின்றது.இதற்கு வேறுவழி கிடையாது.ஏனெனில் தண்ணீரின் அப்பாவும் தண்ணீரின் அப்பாவின் அப்பாவும் இந்த வழிகளிலேயே போனார்கள்.பாட்டன் முப்பாட்டன் என நாம் அடம்பிடிக்கும்போது மனிதகுலத்துக்கு முன்னைய இந்த இயற்கை அடம்பிடிக்காதா என்ன.

இன்று மழையோ மாரியோ வெள்ளமோ புதிதல்ல.நாமே அதற்குப்புதிர்கள்.நகரம் அண்டிய வாழ்க்கைக்காகவும்.நம் வசதிக்காகவும்.எந்தவித திட்டமிடல்கள் இன்றி இயற்கையின் நியதிகள் இயல்புகளை மதிக்காமல் அதன் குறுக்கே குந்தியிருக்கின்றோம்.அதை சிரமப்படுத்துகின்றோம்.ஆண்டுதோறும் மழை கொட்டும்.குளங்கள் நிரம்பும்.வெள்ளம்பாயும் நம்மில் ஒரு சாரார்.அந்த ஆண்டு முழுக்க சேர்த்த சொத்து சுகங்களை இழந்து ஊரைவிட்டு பெயர்வார்கள்;.நிவாரணங்களும் அரசியல்வாக்குறுதிகளும் வந்து கொட்டும் மழைநீரோடு நீலிக்கண்ணீரும் கலக்கும்.அவசர நிவாரணங்களுக்காக அந்தரப்படுவோம்.வெயில் எறிக்கும் எல்லாம் காயும்.புளுதி பறக்கும் எல்லாம் மறந்துவிடுவோம்.தமிழர்களின் தேசியக்கொள்கை பற்றி இந்த மழைக்குத் தெரியாது.அதற்கு தெரிந்தது.அதன் பருவத்தில் தன் கடமையை செய்வதே அது தன் கடமையை சரியாகவே செய்கின்றது.அபிவிருத்தி வேண்டாம் உரிமையே வேண்டும் சோறுவேண்டாம் சுதந்திரமே வேண்டும் என்ற வாக்குமூலங்கள் எல்லாம்.கருமுகில்கள் திரளும் வானத்துக்குப்புரியாது.அது இடிஇடிக்கும் மின்னல் வெட்டும் மழை கொட்டும்.நிலம் செழிக்க அதன் பண்பாட்டை அது மீறாது.அபிவிருத்தியும் வேண்டும் உரிமையும் வேண்டும் என எமது பித்தலாட்டங்களும் காடுகளின் மேல் கருக்கொள்ளும் முகில்களுக்கும் கனராயன் ஆற்றுப் படுக்கைக்கும் புரியாது.காட்டாறுபாயும் இரணைமடு நிரம்பும் தளம்பி கரைபுரண்டு வான்பாயும்.அது தன் கடமையை செய்யும்.நாம்தான் புதிரானவர்கள்.மழைக்கும் வலிக்காமல் எமக்கும் வலிக்காமல் திட்டமிட தெரியாதவர்கள்.

பாலம் போடுவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா.இது ஒரு புதியமுறை எம்பிக்கு வால்பிடிக்கும் சுப்பு ஒரு ஒரு பாலப்பட்டியலை கொண்டுவருவார்.சுப்புவையும் எம்பி முறிக்க ஏலாது.சுப்பவிடம் கொஞ்ச வாக்கு வங்கி உண்டு.அதனால் சுப்புவின் பரிந்துரைகள் எம்பியின் பரிந்துரைகளாக மாறும்.எம்பியின் பரிந்துரைகள் அல்லவா பாவம் அதிகாரிகளும் எதுக்கு வில்லங்கம்  என்று இயற்கையின் இயல்புகள் ஆக்கபூர்வமான அபிவிருத்தி தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் இன்றியே பாலத்தை நிறுவ முனைவார்கள்.பாலத்தின் ஒப்பந்தத்தை சுப்புவின் மனைவியின் தமையனுக்கு கொடுக்கும்படி எம்பி இரவு தொலைபேசியில் அதிகாரிகளுடன் குழைவார் என்ன செய்வது முகத்துக்கு அஞ்சி வேசையாடின கதையின் வடிவமாக சில பாலங்களும் உருவாகும் மழையோ கொட்டும் வெள்ளம் முட்டும் இது என்ன என் வழியில் என்று சிலவேளை தடவிப்போகும் சிலவேளை தட்டி தலைகீழாக்கி தன்னோடு அழைத்துச்சென்றுவிடும் பாலங்களை.ஆக மழை புதிர் அல்ல நாமே புதிர்!

நான் இங்கே இந்த உரைக்கு பதிவிட்டுள்ள படம்
2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது.அது கிளிநொச்சி பரந்தன் சிவபுரத்தில் இதே போன்றதோர் மாரியில் இதே போன்றதோர் வெள்ளத்தில் எடுக்கப்பட்டது.இதுபோலவே அதற்கு முன் இவ்வாறே மாரியில் வெள்ளம் வந்திருக்கின்றது பலமுறை.இவ்வாறான கிராமங்களுக்கு நிரந்தரமான அவர்கள் மழைகாலத்திலும் இடம்பெயராமல் வாழ்வதற்குரிய நிரந்தர நிவாரணங்கள் என்ன அதுவே இந்த 2018 மழையும் எம்மிடம் கேட்டுப்போகும் கேள்வி!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...