Saturday, November 21, 2026

 







கொடிய போர் கண்ட நகரம் போலில்லை

காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை

கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை

உண்டாக்கவில்லை

யாரேனும் பறக்கத் தொடங்கவில்லை

இத்தனைக்கும் தன்னையுணரும் நகரமொன்று

பெருவெடிப்பின் இன்னொரு துண்டின்

பரிணாம ஆரச்சரியத்தை நிகழ்த்தியிருக்கும்

உடைந்து  நொறுங்கிப் போய்விட்டதை

ஒத்துக்கொண்டவைகள்

கற்களை அடுக்கி கோபுரங்கள் எழுப்பிவிட்டன

இந்த நகரம் இன்னமும்

இல்லாதவைகளை திறந்து வைத்துவிட்டு

தினமும் மூடுகின்றன

பெருங்குழியிலிருந்து ஏறிவர நீளாத

இருக்கின்ற இந்த கைகளும்

போரில் இழக்கப்பட்டிருக்கலாம்

போரை விட கொடிய நாட்களை

இப்போதுதான் இந்த நகரம் கடக்கின்றது

இருளுக்குள் சிரிக்கும் ஒலிகள்

எதையுணர்த்துகின்றது

Thursday, October 22, 2026

 







யாருக்கும்  சொல்ல முடியாத கதைகளை

அவள் எனக்கு சொல்லுகிறாள்

யாருமறியா காயங்களை எனக்கு காட்டுகிறாள்

யாரும் அறியாத  ஒரு இடத்திற்கு அழைக்கின்றாள்

இனி இடமேதுமில்லை 

இறுதியிடத்தில் நிற்பதாய் உணர்த்துகிறாள்

நான் இப்போது யார்

சிலுவையில் என்னை அறைந்துவிட்டு

தோன்றவா

என்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்து

இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்கவா

அருகே நடந்து வரச்சொல்லவா

பின்னே தொடர்ந்து வர சொல்லவா

முன்னே போகச் சொல்லவா

அவன் பெருமூச்சில் கலந்தவளை

யாவற்றிலும்  விடுதலை செய்ய

யாரெனவாவேன் நான்

தன்னையுணர்த்தி களைத்தே விட்டாள்

காலமெல்லாம் அவள்

Tuesday, October 20, 2026

 





இப்போதெல்லாம்
பல் பொருள் அங்காடிக்குள்
தேடிக் கொண்டிருக்கும் போது
ஒரு சில மட்டும்
ஐம்பது ஆண்டுவரை
ஒரு கணம் பின்னேர் இழுத்து செல்லும்
மாமைட் லக்ஸ் ரெக்ஸ்சோனா சன்லைட்
இப்படி சில உண்டு
சில ஊது பத்தி பெட்டிகளை எடுத்து
மூக்கு அருகில் இதயத்தின் ஆழம்வரை
சுவாசித்து பார்ப்பதுண்டு
ஆனால் அதை இதயம் நிராகரிகிறது
அந்த நாள் வாசம் இல்லை என்று
கவர்ச்சி வாசகங்களால்
முதலில் கண்கள் ஏமாந்து விடுகிறது
இதயமோ அப்படி இல்லை
நெக்டோ கலரின் மீதான காதல்
இன்று வரை தீரவில்லை
அது வெறும் மேனியோடு பொடி நடையாய்
புழுதி தெருவில் ஓடி போய்
நம்ம ஊர் இராசையா கடையில்
பத்து இருபது ரூபாய்க்குள்
மாட்டு தாள் பைக்குள் சீனி தேயிலை
வாங்கிய காலத்தில் தொடங்கியது
அந்த நெக்டோவுக்காக ஆறு ஏழு வயதில்
ஒரு இரண்டு நாள் காய்ச்சல் வந்தது
ஆனால் பிளேன் சோடா தான்
காய்ச்சலுக்கு திறம் என்று ஒரு ஐதீகம்
ரொம்ப காலமாய் இருந்ததால்
என் காய்ச்சல் நாடகம் பிசுபிசுத்து போனது
நெக்டோவை அனுபவிக்க எங்கள் இஸ்டப்படி ஒரு வயது உண்டு அல்லவா
அதுவரை காத்திருந்தேன்
புட் சிட்டியில் எல்லாம் உண்டு
என் கால இன்பத்தை வாங்க முடியாது
நானே எனக்கு பிடித்ததை தேர்வு செய்ய
ஒரு சுதந்திரம்
இந்த வடிவிலும் வரும் என்று
ஒரு காலத்தின் கடை தெரு உணர்த்தி இருக்குமா
கோவில் திருவிழாவில் ஒரு சுருள்
கச்சான் வாங்க
ஒரு சுண்டு கச்சானை கொஞ்சமும்
இரக்க மில்லாமல் வாய்க்குள் அரைத்து
தரம் பார்க்கும்
அக்காலத்து கஞ்சல் குணங்களை
புட் சிட்டி சோதனைக்கு உள்ளாக்கும்
அநேகமாய் எல்லாம் பொதி செய்யப்பட்டவை கச்சானும் கூட
எங்கள் ஊர் இராசையா கடைக்கு போனால்
அது என்ன வாசம் என்று சொல்ல முடியவில்லை
ஆனால் அது எந்தன் கால வாசம்
ஊது பத்தி கருவாடு பாண் மண்னெண்ணை கனிந்த கதலி
பொயிலை எல்லாம் கலந்து வரும்
ஒரு மணம் மனம் முழுக்க
முன்பு சொல்லுக்கு
இன்று ஒரு மெஷின் தரும் பில்லுக்கு
தலை ஆட்டிவிட்டு புறப்படுகிறோம்

 





வேலிக்கருகில் ஒரு விளாட்டு
நாரி சவண்ட பின்னும் நாலைந்து கிளையில்
பூமுகிழ்க்கும் பொலிவுடன் இன்றும்
பாறிவிழுமென்ற ஆருடமெல்லாம் மீறி
தேறி நிற்கிறது தெருவை எட்டிப் பார்க்கிறது
வேரினில் ஊறிய வைரம் வெளியில்
இலைத்துளிராய் மாரிப்பொழுதில் இறுமாப்பெய்தும்
மனதையும் கொஞ்சம் வருடி விடும்
ஏழெட்டுப் புயலை எதிர்கொண்டது
கழற்றி எறிய கங்கணத்துடன் வந்த காற்று
விழுத்தி எழுப்பி வேரை அறுத்தெடுத்து
கழுத்தில் பிடித்து வீசக் கனவும் கண்டது
கடைசியில் ஒன்றிரண்டு கிளைகள் இழந்து
விளாட்டே வென்றது
வீரியத்துடன் மறுபடியும் காய்த்துக்கொட்டியது
பாதியில் குரங்குகள் பங்கெடுத்தன
பறவைகள் பதம் பார்த்து திறம் என்று பாராட்டின
தேடி வந்து அணில்கள் கொந்தின
சிறிது நேரம் நின்று பாடின பரவசம் கண்டன
மீதி ஐம்பது நூறு வீட்டுக்குள் வர விதியிருந்தது
சாக்குப் படுக்கை விரித்து மூலைக்குள்
வேப்பங்குழை மூடி விடிந்தன சில நாள்
பிட்டுடன் சில சேர பேறு பெற்றன
கொட்டை சூப்புவோருக்கும் ஒப்புதலாகி உடன்பட்டன
மற்றவை சில மடையில் குந்தின
மந்திரம் சாம்பிராணிப்புகைக்குள் கலந்து
இந்திரலோகம் கண்டன
ஒன்றிரண்டு ஆடுமாட்டின் வாய்க்குள் ஐக்கியமாகின
காணிவளவு திருத்த வந்த ஒருத்தர்
ஒற்றை தளிரிலையோடு கொட்டைசில
முளைத்ததுக் கிடக்கக் கண்டு
வெட்டியெடுத்துப் போனார்
விளாட்டின் சந்ததிகள்
வேறங்கோ பெருகிக் காய்த்திருக்க வேண்டும்
பறவைகள் அணில்களின் பாட்டு
பரந்திருக்கிறது திசையெங்கும்
ஒற்றை மரவேர் புகழ் ஓங்குக
ஒரு போதும் ஈடாடாத் திண்ணியம்
பற்றி நிற்கும் சந்ததிக்கும் பல சவால் வெல்லும்
மறுபடியும் வசந்தம் துளிர்க்கும் கிளை

 






சில வேளை அடி பெட்டிக்குள்
ஆச்சரியங்கள் நடக்கின்றன
அக்கம் பார்த்து விட்டு
கைக்குள் திணித்தது
யாரும் இல்லாத உலகத்தில்
அன்று நடந்ததுதான்
என் பார்வையில் மட்டும்
உன் முகமாய் மாறுகிறது
காய்ந்து போன
கை விசேட வெற்றிலை
மஞ்சள் துண்டு சதங்களோடு
ஒன்றாய் கலந்து
என் இன்னொரு முகத்தை
இத்தனை காலம் காட்டி கொடுத்ததில்லை அது

 





என் பள்ளியில் படித்தவர்களில்
என் நினைவுக்கு எட்டியவரை
நித்தி, பத்மநாதன் என்ற இருவர்
தபால்காரர் ஆனார்கள்
பள்ளிபடிப்பு முடிந்தும்
அரை காற் சட்டையை கை விடாத வரம்
இவர்கள் இருவருக்கும் மட்டும் கிடைத்தது
இருவரும் சிவலை
வெயிலுக்குள் ஓடி ஓடியே கொஞ்சம் கறு த்தும் போனார்கள்
என் வீட்டு படலையில் ஒலித்த கடைசி
தபால் காரர் வரிசையில்
இருவரும் இருந்தார்கள்
அத்தோடு கடிதத்திற்கு காத்திருக்கும்
அந்த பசுமையான காலம்
அருக தொடங்கி விட்டது
அத்தோடு வார்த்தைகள் தரும்
ஆச்சரியம், கிளர்ச்சி, ஏக்கம், இன்பம், எதிர்பார்ப்பு எல்லாமும் கூட
நெடு நதி வற்றுவது போலானது
எங்கள் ஊருக்குள் பார்வை மங்கிப் போன முதியவர் ஒருவர்
தனக்கு வரும் கடிதத்தை என்னிடம் கொண்டு வருவார்
அதை நான் எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு உணர்ச்சி கொடுத்து வாசிப்பேன்
சில இடங்களை திரும்ப வாசிக்க வேண்டும்
பிறகு பதிலை அவர் சொல்ல சொல்ல எழுத வேண்டும்
அங்கே தான் வில்லங்கம் சிரிப்பு கவலை ஆதங்கம் எல்லாவற்றும்
வார்த்தை தேடி தவிக்கும் நிலையில் இருப்பேன்
கோபத்தில் அவர் திட்டும் வார்த்தைகளை
தணிக்கை செய்து எழுத வேண்டும்
பதில் ஒன்றுக்காக
ஒரு வாரம்
சில வேளை ஒரு மாதம்
பதில் வராத கடிதங்களும் உண்டு
முகவரி மாறி கடிதம் போனால்...
மிஸ்ட் கோல், ட்ரோங்நம்பர், இல்லாத ஒரு உலகம்
தீபாவளி பொங்கல் வாழ்த்து அனுப்ப
வகுப்பில் முகவரி வாங்க
நீட்டிய கொப்பி
ஒரு போஸ்ட் காட்டில்
ஊரே பார்க்கும் ஒரு பாசம்
மெல்ல மெல்ல நழுவ விட்டு வந்து விட்டோம்
நெடுந்தூரம்
ஐம்பது சத முத்திரை கடித மூலையில்
மட்டும் அல்ல
அது காதல் கடிதம் என்றால்
நெஞ்சின் ஓரத்திலும் ஒட்டப்பட்டது

 



இன்று பேருந்து முப்பது நிமிடம் தாமதிக்காமல்
பத்து நிமிடம் தாமதித்தது
இன்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன
எதிராக இல்லை ஆதரவாக
இன்று உணவில் உப்பு சரியாக இருந்தது
காரம் அதிகம்
மின் வெட்டு இன்றும் மூன்று தடவை அல்ல ஒரே ஒரு தடவை
புழுக்கமான மதியத்தில் அல்ல
குளியல் அறையில் நீர் தீர்ந்த வேளை
தினமும் உம் என்று முகத்தை வைத்தபடி
என்னை கடக்கும் அவள்
இன்று சிரித்தாள் என்னை பார்த்து அல்ல
இன்று பேருந்தில்
எனது இருக்கைக்கு அருகில் குறட்டையுடன் எவரும் தூங்கவில்லை
அழகி ஒருத்தி கதைத்தபடியே இருந்தாள்
கை பேசியில் யாரோ ஒருவனுடன்
மிஸ்டர் பிரசிடென்ட்
போரை தொடருவேன் என்று சொல்ல வில்லை
முடிக்க மாட்டேன் என்கிறார்
இதுவும்
ஒரு நிறைவான நாள் தான்

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...