Tuesday, March 8, 2022

அணிலார் குறிப்பு-பொன்.காந்தன்

 

செம்பரத்தை மறைவினிலே
செக்கல் நிற கடுவன் பூனை
நக்குவதும் பார்ப்பதுமாய்
நல்ல படி விருந்தொன்று
இப்பொழுது கிடைக்குமென்று
இருந்தபடி கற்பனையில்
அத் தருணம் மாமரத்தில்
அணிலொன்று உலவிவந்து
கொப்பினிலே கொந்தலினை
குறுக்கா கிடந்து கவ்வி
விற்பனைக்கு போகாதொரு
விளாட்டும்தான் ருசியென்று
பக்குவமாய் ஒரு புறத்தில்
பகலுணவாய் அருந்துகையில்
எப்படியோ அடி மரத்தில்
இறங்கிவர பாய்வொமென
எதிர்பார்ப்பில் களித்திருக்க
அக்கிளையில் ஒரு பெட்டை
அணிலொன்று வந்துசேர்ந்து
ஆணருகில் ஏதோசொல்ல
கொப்பினிலே மேல்சென்று
குறிபார்க்கும் பூனையாரை
வைத்த கண் வாங்காமல்
வடிவாக பார்த்து விட்டு
பெட்டையிடம் போயருகில்
பிறகால கதைகள்சொல்லி
முத்தங்களும் சிலபொழிந்து
மோகத்தினிலே கூடல்செய்ய
வப்பனாய் இருப்பான்போல்
வாய்க்குள்ள புறுபுறுத்தார்
வாயாமல் கறுத்தப் பூனை
எப்படித்தான் அணில்வாழ்வு
எழிலாக போகின்றது
நித்தமந்த தென்னங்கீற்று
தெவிட்டாத குரும்பட்டிகள்
கொய்யாமர கனிவிருந்து
கொந்தல் சுவை மாம்பழங்கள்
மத்தியானம் இரவு காலை
உத்தியோகம் கரைச்சலில்லை
பத்திரிகைகள் பார்த்தும்
அத்தினத்தை அளப்பதில்லை
எத்தனையோ நாள்பார்த்து
அட்டமி நவமி அதன்பிறகும்
மரணயோகம் பஞ்சமியும்
தட்டிக்கழித்து தடவியெடுத்து
உச்சத்திலொரு சுபகாலம்
அணில் வாழ்வில் ஏதுமுண்டோ
கன்னிராசி கடகமொன்று
உத்தரம் பூரம் ஓராம் பாதங்கள்
அச்சுவினி ஆயிலியம் குற்றம்
ஒத்து வராத தோசம்பொருத்தம்
ஒன்றுமில்லை சிக்கல்போலும்
கொப்பில் கூடிக் குழந்தைபேறு
குட்டிகளுக்கோ முகட்டில் வீடு
புலுனிகளோடு மாலைபாட்டு
இளனிகள் அரித்து தாகப்பாடு
குறிப்பு சாதகம் பெயர்ச்சியில்லை
மரங்கள் காய்க்க மகிழ்ச்சி எல்லை
அழுத அணிலை காண்பதுண்டா
விழுதில் தூங்கி தற்கொலையுண்டா
விரக்தி கிளையை முறிப்பதில்லை
பொழுது விடிய தினமும் ஓசை
அணில் பேசுவது என்ன பாசை

முதலாம் குறுக்கும் பீயோன் நடராசாவின் பெல்லும்-பொன்.காந்தன்

 

முதலாம் குறுக்கு எப்படி மாறிவிட்டது
பேசியலுக்கு பிறகு
பிம்பிள்சும் இல்லை தழும்புகளும் மாயம்
வேறு யாரோ போல
பீயோன் நடராசாவையே மறந்து போச்சு
அந்த பெல் அடித்தால்
பிரம்ம முகூர்த்தங்கள்
ஒன்றிரண்டா நினைவில் வரும்
என்னதான் இருந்தாலும்
கன்னக் குழிகளோடுதான் அது அழகு
சல்லிகள் போட்டு
எருமை வாகனம் ஏதோ ஏறி உழக்கி
பம்மிங்கும் எடுத்தாப்பிறகு
பரமக்கா வளவுக்கு மட்டுமில்லை
பரலோகம் போறவருக்கும்
அதுதான் வழி
முதலாம் குறுக்கின்
முழுவியளமே சாணக்கும்பிதான் முன்பு
ஏரம்பரின் பட்டியின்
இரவு மஞ்சம்
ஓரம்போவதற்கு ஒன்றும் வராது
புளுதியுடுத்து காற்று கதகளியாடும்
நடுத்தெருவில் கிடக்கும் சைக்கிள்
நல்ல வெறியில்
சறத்துக்குள் படமோடும்
கண்டவர் சிரிக்க
பெண்டுகள் வாயை பொத்தி பறக்க
அது ஒரு நந்தவனத் தெருவும்தான்
காப்பற்றுக்கு பிறகு
கண்டு தலையாட்டிப் போகும்
உறவுச்சங்கமம் ஓடியே போயிற்று
நின்று கதைக்க நேரமில்லாதவருக்கு
வாழ்க்கை பட்டு
முண்டி விழுங்கிக்கிடக்கிறது தெரு
குண்டு குழி புளுதியில் கூட
புன்னகைக்கொரு பொன்வீதி இருந்ததுபோல
கந்தர்வப்பூக்களை சொரிந்து
இந்திர வீதியென
முகவரி மாற்றும் கொண்டல்
அந்தியொன்றை
அற்புத கனிகளாய்த் தரும்
நாவலிரண்டு
குழப்படி செய்ய
கொந்தல் மாங்காய் வளவு
மன்னிப்புக்கள் அடிக்கடி கேட்க
மாதா சொருபமொன்று
வெள்ளிக்கிழமைகளில்
எக்ஸ்றாவாய் கைகள் தந்தருளி
பஞ்சாமிர்தத்துக்கு
படாதபாடு படவைக்கும் பிள்ளையார்
அற்றைத் தெருவே அமுதுதானே
மாரியில்
மணியண்ணையின் றக்டர் புதையும்
உரலும் வைத்து
உலக்கையும் வைத்து தெண்டி
உன்னி தள்ளி உடம்பெல்லாம்
ஓவியம் சேற்று வர்ணம்
இயற்கையின் ஜாலங்கள்
எல்லாமிருந்தது ஓர் நாள்
சாரதாவுக்கு வரும் கடிதங்களில்
முதலாம் குறுக்கு
மன்மத அம்புகளால் எழுதியிருக்கும்
ஆண்டில் ஒருநாள்
கனகாம்பிகை அம்மன் வருவாள்
நிறைகுடங்களோடு நிற்கும் தெரு
நீர் தெளித்த மண்வாசம்
நிறைந்துவழியும்
கனகாம்பரங்களை சூடிய
காரிகைகள் பேரழகில் கிறங்கும்
அடுத்த ஊர் அஞ்சலன்
அன்றாடமே வந்துபோவான்
கண்ணிலே மந்திரம் வைத்த
கஸ்தூரியும் அத் தெருதானே
கனகசபையின் தோட்ட
கதலியும் கப்பலும் வெளியிலும் எட்டிப்பார்க்கும்
வெருளியுமொன்று
அரளி மரங்கள்
அம்பலவாணர் வேலியில்
சீமைக்கிளுவைகளை பற்றி
சிலாகித்து பேசிப்போகும் ஆடுகள்
கட்டாக்காலி பேரெடுத்த
கறுத்தது இரண்டு
எல்லாம்
முதலாம் குறுக்கின் முதுசங்கள்
இரண்டு கல்வீடு
அறுபது கொட்டில்கள்
இடிந்த
மண் கிணறுகளின் உழண்டி சத்தம்
நிலவின் நிழலை இறைக்கும்
ஊசிலியின் இரவு பாட்டு
ஒவ்வொரு வேலியிலும்
குடியுரிமைபெற்ற குருவிகள்
சில்வண்டுகளுக்கும்
ஒரு அந்தஸ்த்து
தூக்கணாங்குருவிக்கூட்டு மரம்
கூப்பிடு தூரத்தில் இருந்தன
முதலாம் குறுக்கில்
தொலைதூரம் இப்போது
ஒரு பொழுது
அறிவொளி தெருவென்று
அதற்கு அறிமுகமொன்று கிடைத்தது
மகிழ்ந்து பூரித்தது
முதலாம் குறுக்கின் புளுதி
மறுபடி அதையிழந்தது
அதனால்
அது பெருவலியான வழி
கைபேசிக்கோபுரமொன்று
கவட்டை பிளந்தபடி
வண்ணத்துப்பூச்சி வளவுக்குள்
தண்ணியை எற்றி விளையாட
பள்ளமும் இல்லை இப்போது
நிரவப்பட்டு விட்டன எல்லாமே
புளுதி அடங்கிய மாலைப்பொழுதில்
புள்ளியாய் தெரிந்து
பெருக்கும் உருவத்தில்
முதலாம் குறுகுப்படலையில் விரியும்
சரசுவும் புன்னகையும் கூட!

பக்கங்கள்-பொன்.காந்தன்


வரும் வழிகளில்
நானும் குமாரும்
சலம் விட்டு
படவைத்த செடிகள்
நின்றிருந்தால்
நெடு வெளி நிரம்பியிருக்குமோ
அறியாப் பருவத் தவறுகளுக்கு
இப்போது
ஆங்காங்கு நிறுத்தி
கையை நீட்டென்று
சிலதுக்கு மூன்று அடி
சிலதுக்கு ஐந்து
முட்டுக்கால் தண்டனையும்
மேசைக்குள் குனிய வைத்து
பின்னால் விழுகின்றவைக்கு
காற்சட்டைப்
புளுதி கிளம்பி
காலம் கலைகின்றது
காட்டையே நட்டு
பழங்கள் பறிக்க
தாவுகின்றது மனம்
வேட்டைக்காரனாகி
மயிலிறகு பிடுங்க
வருகிறவனை நோக்கி
அம்பெய்து சொல்கிறது
மயிலிறகு குட்டி போடாதென்று
தங்கம்மா ரீச்சரின்
கையெழுத்தும்
மிக நல்லது எனும் பாராட்டும்
ஏதோவொரு
புல்வெளியில்
மலர்ந்து கிடக்கிறதோவென
ஓடுகிறது மனம்

பரீட்சை முடிவுகளும் காலத்தின் பாடத்திட்டமும்-பொன்.காந்தன்

 

தேர்வு எழுதிக் காத்திருப்பது
ஒரு தேவசுகமென்று சொல்லலாமா
இந்திரலோகத்தில் தொங்கும்
இளக்கயிற்றில் வாழ்வது போலாமே
பதிலெழுதியது சரியானாலும்
பசியெடுக்காத ஒரு வருத்தம் இருக்கும்
தாளொன்றை
தலை கீழாய்க் கட்டிவிட்டதாய்
சந்தேகமொன்று ஆட்டிவைக்கும்
இரண்டு புல்டோசர்கள்
இதயத்துக்குள் உருண்டுகொண்டிருக்கும்
எது பிழை எது சரியென்று
இன்னொரு மாறாட்டமும் பீடித்துலுப்பும்
எவர் சந்திக்கவில்லை
ஒரு தேர்வையும் முடிவையும்
எதுவானாலும்
காலத்தின் கைபிடித்து
எவரும் எழமுடியும்
எதிர்காலம் ஆயிரம் கதவுகளோடு
ஒன்று மூடும்
இன்னொன்று திறக்கும்
விழும்போது கிடைப்பது அடிகளல்ல
அவை படிகள்
தோல்விகள் சில கேள்விகள் தரும்
சரியாக பதிலெழுதினால்
வரலாற்றிலும் அனுமதி கிடைக்கலாம்
கடைசி பெஞ் காரர்கள்
முதற்பரிசு பெறுகின்றவர்களுக்கு
முன்னுதாரணமாயும் மாறலாம்
தோற்கலாம் துவண்டுவிட கூடாது
கலசங்களாக்க நினைக்கும் காலத்துக்கு
அது தான் பிடிக்காத ஒன்று
ஊருக்குள் இப்போது தேர்வொன்றின்
தேறுதல் வந்துள்ள காலம்
இனிப்பும் கசப்புமாயிருக்கும்
வாழ்க்கை ஓட்டத்தில் இதுவுமொன்று
இடறி விழுதலும் சகஜம்
முழுங்கால் தழும்புண்டோ
கவனியுங்கள்
முதற்தேர்வு அங்குதான் நடந்தது
உடும்பு பிடித்தெழும்பி
நடக்க முயல்கையில்
நாலு இடத்தில் விழுந்தவை
எழுதலுக்கான முதலாது கற்கை
முற்றத்திலேயே முடிந்துவிட்டது
இதுவெல்லாம் துரும்பு
உள்ளத்தில் இருக்கிறது
ஈயம் இரும்பு நம்பு
ஆனையிறவில் ஆகாய கடல் வெளிச்சமர்
ஓலைகட்டி
ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள்
பள்ளிகள்
இப்படி தான் மூடிக்கிடந்தன பலமாதம்
முட்டைமா சேகரிப்பும்
பொம்மர் ஒரு பக்கம்
கொள்ளிவால் பிசாசாய் இரவுகள்
காயம்பட்ட மேனிகளுக்கு
கட்டுப்போட்டு
ஊருக்குள் கிடத்தியிருந்தனர்
நாளைய சந்ததிகளுக்காக
நாலிளம் இரத்தமும் உயிரும் கசிந்துகொண்டிருந்தது
அக்காலத்திலும்
ஒரு கபொத தேர்வு வேளை
நெருங்கி வந்துவிட்டது
நடக்காது பரீட்சையென்று
படிக்காதும் இருந்தனர் பலர்
நடக்குமென்ற நம்பிக்கையில்
புத்தகமும் கையுமாய்
புண்ணுக்கு மருந்துகட்டுமிடத்தில்
ஒத்தாசை புரிந்தனர் சிலர்
தேடிக்கொண்டிருந்தது
வை பன்னிரண்டு சகடை
ஓடிப்போய் பங்கருக்குள் ஒளிந்தனர்
முடிவில்
சுட்டெண்ணும் நேரசூசியும்
கைக்கெட்டியபோது
அந்தக்கெட்டிக்காரர்கள்
புத்தகத்தோடு
தவமிருந்தினர் சில வாரங்கள்
குப்பி விளக்கை காற்றணைத்தது
வித்துடல்களும் வந்து கொண்டிருந்தன
பல்லைக்கடித்தபடி
பாவம் பிள்ளைகளென
முன்னமே ஊட்டியிருந்தனர் ஆசிரியர்கள்
கொஞ்சமே தஞ்சமாயிருந்தது
நாலு நளவெண்பாவோடும்
தேற்றங்கள் சிலதோடும்
தேவாரங்கள் ஒன்றிரண்டோடும்
இங்கிலீசில் ஏதோ ஒன்றிரண்டு
அலுமினியும் செம்பு ஆவர்த்தனமும்
கூடவே கூட்டிக்கொண்டு
சிலபர்ஸ் முடியாத
சிக்கலான போர்ப்பொழுதில்
தேர்வு மண்டபத்தில்
திகிலோடு போயமர்ந்தனர்
நம்பிக்கையால் எழுதினர்
மார்கழிக்கு பிறகு வந்த முடிவில்
மயிரிழையிலும் பலர் வென்றனர்
ஒரு முறை தோற்றவர்
மறுபடியும் எழுதினர்
அவர்களில் சிலரே
ஒரு வழியும் தெரியாமல் பூட்டிக்கிடந்த
புளுதி வன்னியில்
அதிவிசேடமாய் தேறி வென்றனர்

பிங்கரை வைக்க பேசாமலின்று எல்லாம் திறக்கும்!-பொன்.காந்தன்


ஏனோ தெரியவில்லை
இரவு கனவில்
பேனா வந்து விட்டது
இதென்ன புதிசாயிருக்கு
ஊர்வசிகள் உலவும் வேளை
எப்படி இது உள்ளே வந்தது
வீணாப் போனவனே என்றே
என்னை விழித்தது
பெரிதாய் நின்றது பேனா
பூஞ்சல் துடைத்து நோக்கினேன்
நீல கூந்தலுடன்
நெடுத்த ரெனோல்ட்
என் கைபேசியை அது
கள்ளப் பெண்டாட்டியோ என்றது
ஐபாட்டை கண்டு
அந்தப்புரம் தான் போலென்றது
கணனியை கண்டு
கடவுளே கருவாயா
போதாதா உனக்கு ஒன்றென்று
பொரிந்து தள்ளியது
கைகழுவி விட்டு கனகாலம்தான்
லவ்லெற்றர் எழுதும் போது
மைகூட கக்காமல் மசிந்தது
பொய்கள் நூறெழுதுகையில்
மெய் கூசாமல் குமிழ் சிரித்தது
வேசமிட மனம் ஒப்பவில்லை
மானே என்றிழுத்து
மடியில் இருத்தி வருடிக்கொடுத்தேன்
எதையும் மறக்கவில்லை
கண்ணே ரெனோல்ட்டென்று
கசிந்துருகினேன்
மெல்ல அந்த வெண்மேனியை
கண்மணியேயென கால்வரை
எழுதாத புதுச் சொல்லால் இளகினேன்
மன்னித்துக் கொள்
மடலெழுதக் கூட தேடுவதில்லைதான்
ஈமெயிலில்தானே
ஈமக்கிரியை வரை எல்லாமின்று
பிங்கரை வைக்க
பேசாமல் எல்லாம் திறக்கிறது
பிறகெதற்கு பேனா
காணாமல் ஆக்கியது குற்றம்தான்
கைநாட்டை தவிர
வையென்றால்
வடகீழ் மூலைக்கிழுத்து
வல்லைபோய் சில்லாலை சுளிச்சு
முல்லைத்தீவு ஓடி
முறுக்கியிடும் சிக்னேச்சரோடு
என்னென்றாலும் இழுபட்டதானே
இந்த பேனாக் கூட்டம்
கள்ளச் சைனுக்கும் கூட
கவலைபட்டு விட்டு விட்டெழுதி
விதியையும் நொந்ததுதானே
பாக்கரொன்று
கிளாக்கரிடமிருந்தது
தூக்கலாமென்று எத்தனை திட்டம்
பவுன்ரைனொன்றுக்கு
பத்துப் பேர் சுத்தியது நினைவு
பால்பாய்ண்ட் இல்லாமல்
பத்தியம் ஆனதா இல்லை
கவர்ச்சிக்கு மட்டுமென்ன குறைச்சல்
ஒரு சொட்டுமை வரை
உள்ளே காட்டுவதிலும் உச்சம்தான்
பின்னால் கழற்றவும் பேசாமலிருந்தது
உறுப்பெழுத்தா ஓம்தான்
கிறுக்கலா அதற்கும் சம்மதம்
வெற்றிடம் நிரப்பவா
வேண்டாமென்று நின்றதில்லை
பத்து புள்ளி கட்டுரைக்கு
செத்து செத்து எழுதியதன்றோ
சுத்திவளைத்து ஏன் கதைப்பான்
மல்லிகாவின் கையிலிருக்கும்போது
மணிமணியாய் எழுதும்
வஞ்சகம்தான்
நான் எழுதும்போது மட்டும்
கோட்டைவிட்டிறங்கி
கோப்பாய் பக்கமிழுக்கும்
என்ன இருந்தாலும்
பகுதி இரண்டு பரீட்சையில்
பரம்பொருளாய் பக்கத்துணைதான்
பல அனுபவம் அதற்கு
மழையென்றால் மலையும்
கதலியென்றால்
காதலியுமெழுதிய
வித்தகரோடும் விழுந்து சிரித்தது
களத்திலிருந்தும் கடிதம் எழுத
காவலர்களோடு கூட இருந்தது
நிலத்தின் கதையை
நிமிர்ந்து புனைய
சுரந்து கிடந்தது சுதந்திர மை
எழுத்து எழுத்து
எல்லாம் எழுத்திலேயே இருந்தது
இரவில் கவிதை வர
எழும்பி எடுத்த ஏவுகணையது
கரும்பு வில்லின்
கணைகளும் அது தான்
இறுதிக்கடிதம் எத்தனை வரைந்தது
இனிமையும் நிறைய
இதயம் கனக்கும் ஈரமையுமதிகம்
விரும்பி முதலில் வாங்கியது
நான் ஒரு றெனோல்ட்
நீங்கள்....

மஞ்சத்தடியில் மசுந்துகிறான் ஒருத்தன் அந்தப்புரத்தை அளக்கிறது ஒரு கறுமம்-பொன்.காந்தன்

 

ஒருக்களித்து தூங்குகிறாள் அழகி
உருவியெடுப்பதற்கு
ஊருப்பட்ட திருடர்கள்
கட்டுடலை காந்துகிறேன் கண்ணால்
பட்டமரத்தின் பறவையாய் பாடுகிறேன்
ஒட்டிய மேனியசைத்து
ஓசை கேட்டு திரும்புகிறாள்
மிஸ் யூடா செல்லம் என்றேன்
கொட்டுக்குளிருக்கும் இருக்கும் கிளிகளாய்
இன்னமும் சொட்டும் தேன்
உதட்டில் துளிகளுண்டு
விட்டுப்போக முடியாத விரகத்தில்
வெளியான் போல் காதலனின் தவிப்பு
கட்டுக்குலைக்கப்பட்டாலும்
கண்ணின் ஓரத்தில்
ஒத்தி இழுக்கும் கணை உறங்கிறது
ஓ மை பேபி
பட்டுவஸ்திரத்தை பரதேசிகள் பறித்தன
பாயும் குடுக்கவில்லை பதிலாய்
கட்டுநாயக்காவில் கள்ளர் வந்திறங்குகிறார்
பூஞ்சல் கண்ணன்
பூரி மணத்தோடு ஒருவன்
எக்சிற் கிடையாது
எல்லாத்திருடர்களும் எம் வேலிக்குள்ளே
கள்ளக் கூட்டங்களுக்கு
காலுக்கு செங்கம்பளம்
உள்ளம் கொள்ளை கொண்டவளுக்கு
உருப்படியான துணிமணி இல்லை
எக்கிறிமென்ற் என்கிறார்கள்
எல்லாத்திருட்டுக்கும்
இலாவகமாய் ஒவ்வொரு நாமம்
கைச்சாத்து என்று
காணிக்குள் நுழைகின்றார்கள்
மஞ்சத்தடியில் மசுந்துகிறான் ஒருத்தன்
அந்தப்புரத்தை அளக்கிறது ஒரு கறுமம்
ஊஞ்சலடியிலும் ஒரு இளவு
காற்று விழ
கவட்டை விரிக்க முடியில்லை
பட்டுப்பாதை போகிறதாம் பாவாடையோரம்
அவளை விடுங்கடா அறுவாரே
அற்புதத் திருத்தேரில் திரிந்தவளுக்கு
குப்பை மேடா மஞ்சம்
பொய்கை நீராடியவளுக்கு
புத்தடிக் குழியை காட்டுகின்றார்
பட்டம் அறுந்து விழுந்த வெளியில்
கட்டை சிவலையொன்று
கட்டியவழியிலும் கனக்சன் இல்லை
குத்தகைக்கு எடுத்த கோதாரியாம்
குந்தியிருந்து விட்டு
குளிர்ந்த குளத்து தண்ணியால்
அலம்பி அடிக்கவும் குறுக்கே எவனோ
ஐம்பத்தி மூன்றுவீதம் பங்காம் அதிலும்
மாடத்தோடிருந்தவளுக்கு
ஏனிந்த நிலை
மானத்தை மட்டும் வைத்திருக்கிறாள்
மற்றெதெல்லாம்
கூறு போட்டு குதறியெடுக்கப்படுகின்றன
சாணிபோடவும் மாட்டுக்குப் பயம்
சட்டியை எவன் ஏந்துவான்
சொண்டுக்குள் தான் முணுமுணுக்கவேண்டும்
தேர்ச்சாரதி திருடனின் ஆளின்று
கால் மாட்டிலும் ஏதோ சத்தம்
காற்றாலை திட்டமாம்
சீலையை தூக்க
சிலு சிலுவென்றிருக்குமாம்
மாமரத்து காற்றை என்ன செய்ய
மடியில் அவளை கிடத்த வருடும்
தென்றலை எங்கு அனுப்ப
ஆரது புதுசாய் வளவுள்
குசினுக்குள்ளும் குறுங்கால பங்களிப்பாம்
மானிய அடிப்படையில்
மசாலாப் பொடியாம்
தூளாலை அடிப்பேன் துலைவாரே
தும்புக்கட்டையுமுண்டு
ஆளில்லை அவனென்று
எத்தனை ஆட்டம் எருமைகளே
ஒரு நாள் வரும்
ஒருக்களித்துக்கு கிடக்கும் அழகிக்கு
மறுபடியும் திரும்பும் ஆனந்தம்
திரும்பும் பக்கமெல்லாம் திருவெழிலாவாள்

கஞ்சாங்கோரை தொடக்கம் மொஸ்குயிரிக்ஸ் வரை-பொன்.காந்தன்



சுவர்களில் தாத்தாவின் படங்களைப்போல இப்பொழுது கொரானா மாஸ்க்கும் வீடுகளில் ஏதோ ஒரு இடத்தில் நிரந்தரமாகிவிட்டது.ஏதோ சந்தர்ப்பத்தில் இப்படி ஏதோ ஒன்று எங்கள் விருப்பு வெறுப்புக்களை கேட்காமலே எங்களோடு ஒட்டிக்கொள்கின்றது.சுமந்து கொண்டிருக்கின்றோம்.கொரானாக் கவசம் தொற்றிக்கொண்டு ஓரிரு ஆண்டுகள்தான் ஆகிறது.ஆனால் இப்போதும் படுக்கை அறையில் எங்கோ மூலையில் ஒரு நுளம்புத் திரிப்பெட்டியும் காலை திருநீறுபோல கிடக்கும் அதன் சாம்பலும் என காட்சிகள் தொடங்கி பல தசாப்தங்கள் பல ஆகிவிட்டன.நுளம்புத்திரியை எடுத்து அதை நிற்கவைத்து கொழுத்துகின்ற சிரமங்கள் போய் இப்போது தொலைபேசி சாச்சரை கழற்றி விட்டு இன்னொன்றை கொழுவிட்டால் நுளம்புச்சுருள் செய்யும் வேலையை அது செய்கின்றது.அது இருந்த உறையை எடுத்துப்பார்த்தால் இதமான தூக்கம் என்றிருக்கின்றது.உண்மையில் இதமான தூக்கம் தொலைந்து பல ஆண்டுகள் நூறு ஆண்டுகள் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.
அநேகமாக எல்லாவீடுகளிலும் இன்னொரு புதினமும் உண்டு மாலைப்பொழுதானால் விம்பிள்டன் டென்னிஸ் வீரவீராங்கனைகள் போல மாமியோ மருமகளோ அப்பாவோ சித்தப்பாவோ நிற்பார்கள்.நுளம்பும் அவர்களை ஆரம்பத்தில் கையில் வைத்திருக்கும் வலை பின்னிய மட்டையை பார்த்து கிரான்ட்ஸ்லாம் வெல்லப்போகிறார்கள் என்று நினைத்தது. போகபோகத்தான் புரிந்தது அது தங்களை கொல்ல மனிதர்கள் கடைசியாய் கண்டு பிடித்த நவீன ஆயுதம் என்று.இந்தக்கதை மலேரியாவை பற்றியது ஏனெனில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான மனிதகுலத்துன்பத்துக்கு மருத்துவ உலகம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக போராடி பல பத்து ஆண்டுகள் பரிசோதனை களத்தில் பயணத்து முடிவாக நேற்று மலேரியாவுக்கு எதிரான வெற்றிகரமான தடுப்பூசியை உலக மக்களுக்கு அங்கீகரித்து வரலாற்று தருணம் என்று சொல்லியிருக்கின்றது.இதுவரை பல இலட்சம் பேரை கொன்று தின்றுவிட்ட மலேரியா வலியில் இருந்து உலக சனங்களுக்கு மொஸ்க்குயிரிக்ஸ் ஊசியினால் விடிவு என்று நம்புவோமாக.
மலேரியாவுக்கும் நுளம்புக்கும் நமக்கும் பூர்வ ஜென்ம பந்தம்போல துரதிஸ்டவசமாக எங்களுக்கும் பிணைப்புண்டு.மலேரியா பீடித்த மீண்டவர்கள் நான் உட்பட உங்களில் ஏராளம்பேர்.கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீடுகளை சுற்றி காடுகளும் பற்றைகளும் இருந்தன.இந்த கட்டிடக்காடுகள் இல்லை.குடிசைகளுக்குள் வாழ்ந்தோம்.வீட்டு முற்றம் அநேகமாய் நிறைந்த பூமரங்களுக்கு மத்தியில் இருந்தது.அதற்கு அப்பால் கோரைப்புற்களும் கஞ்சாங்கோரைகளும் நாயுருவி தொட்டாச்சிணுங்கி கீழ்க்காய் நெல்லி இப்படி நினைவில் பெயர்கள் மறந்துபோன ஏராளம் செடிகொடிகள் நின்றன.செவ்வந்திகள் விதைகொட்டினால் நூறாய் அவதாரமெடுக்கும்.மணிவாழை ஒன்று நட்டால் போதும் அது ஊரை சுற்றி வளைக்கக்கூடியது.சீனியாசும் அப்படித்தான் செவ்வரத்தை அகன்று பெருக்கும்.மல்லிகை கொடி விட்டுத் தாவி அடுத்தவரோடு உரசிக்கொண்டிருக்கொண்டிருக்கும் முற்றம் இப்படித்தான் இருக்கும்.மாலை மங்கும் வேளையில் இந்த அழகிய முற்றத்தில் தாக்குதல்கள் தொடங்கும்.அநேகமாக கெரில்லாக்கள் அந்தப்பூக்கன்றுகளுக்குள் மறைந்திருந்து வந்துதான் தாக்குதலை நடத்தினார்கள்.யார் அந்த தாக்குதலாளிகள்.நுளம்புகள்தான்.மலேரியா டெங்கு போன்ற நோய்காவிகள் என்பதால் நுளம்பு மனிதனுக்கு எதிரிகளாகவிட்டன.ஆனால் உற்றுக்கவனித்தால் உலகத்தில் ஒவ்வொரு படைப்புக்கும் வாழ்வில் தங்களுக்கு முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ள ஏதோ ஒரு பலம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.சிறிய நுளம்புக்கு அதன் கூரிய ஆயுதமாய் இருக்கும் அலகுதான் வரம்.தன் வரத்தை அது பயன்படுத்துகின்றது.அநேகமாக எல்லோருடைய கைகளும் நுளம்புகளை பதம் பார்த்தவைகள்தான்.சிலர் அடிக்கும் போது கொடிய தூசணங்களும் சேர்த்துக்கொள்வார்கள் காரணம் கடி தந்த வலிதான்.சிலர் தங்கள் கன்னத்தில் இருக்கும் நுளம்புக்கு குறிவைத்து தாக்குதலை தொடுக்கும்போது நுளம்பு தப்பிவிடுவதும் உண்டு அந்த வேளையில் ஐந்து விரல் தழும்புகளை நாமே நமக்கு வைப்பதுமுண்டு.ஒமக்குச்சி தொடக்கும் குண்டுகள் வரை ஒருவரையும் விட்டுவைப்பதில்லை நுளம்புகள்.
நுளம்புகள் மட்டும் இரத்தத்தை உறிஞ்சு விட்டு தூங்கிடுவதில்லை.அவை தங்களின் மாலை விருந்து பற்றி சிலாகித்து பேசுவதுமுண்டு.ஒவ்வொருவது இரத்தத்தின் ருசியை பொறுத்த குடிகாரப்பயல் என்றும் என்னதான் இவன் சாப்பிடுவானோ என்று கேள்வி எழுப்பியும் கலப்படக்காரன் என்றும் அவையும் ஒவ்வொருவருக்கும் சான்றிதழ்களை வழங்குகின்றன.அதனால் நுளம்புகளிடமாவது நல்ல பெயரெடுக்க முயலவேண்டியிருக்கின்றது.நிறைய உறிஞ்சிவிட்டது பெண் நுளம்பாய்த்தான் இருக்குமென்று பெண்கள் மீதுள்ள கடுப்பை நுளம்பின் மீது தீர்ப்பாரும் உள்ளனர்.வன்னி மண்ணை பொறுத்தவரை எப்படி கெரில்லாக்களுக்கு மணலாறு வசதியாய் இருந்ததோ நுளம்புகளுக்கும் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏராளம் மறைவிடங்கள் இருந்தன.தென்னை மட்டைகள் தேங்காய் கோம்பைகள் சிரட்டைகள் கிணத்தடி வாய்க்கால்கள் மணிவாழைத்தோட்டம் வைக்கல் பட்டடை அடிவளவு என்று நுளம்புகள் பாசறை அமைத்தும் குடும்பம் நடத்தி வம்சம் பெருக்கவும் வசதிகள் அதிகம்.இதனால் அடிக்கடி வன்னி வாழ் பெருமக்கள் தங்கள் வீடுகளில் ஒப்பபேரேசன் செம்பரத்தை ஒப்பரேசன் குறோட்டன் என்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியிருந்தது.இதனால் நீண் கூந்தலோடு இருந்து மல்லிகை கிப்பியாகவும் தாடியும் மீசையுமாய் இருந்த குறோட்டன் முழுச்சவரம் செய்தும் காணவேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது.ஆனால் கஞ்சாங்கோரைக்கும் வேப்பம் குழைக்கும் கரிச்சட்டிக்கும் ஒரு காலப்பெறுமதி இருந்தது.மாலையானால் ஒரு பக்கத்தில் வேப்புகளின் கிளைகளை வளைப்பதும் கஞ்சாங்கோரை தேடி வளவுக்குள் திரிவதும் வேப்பங்கொட்டை பொறுக்கி பேணிக்குள் நிரப்பி வைத்திருப்பதும் வழமையாக இருந்தது.நுளம்புகளில் இருந்து தப்பிக்க நம்மவர்கள் கண்ட இயற்கை வழி வக்சின் அதுதான்.இடைக்கிடை ஆபத்பாந்தவர்கள்போல மலத்தியோன் விசிறும் மலேரியா ஒழிப்பு பிரிவினர் தோன்றினார்கள்.ஓவசியர் காலாட்படை தளபதி போல முன்னே வந்து போனார்.கூரையில் இருந்து கூடவே கரப்பான்களும் கட்டெறும்புகளும் விழுந்தன.பிறகு கொஞ்ச நாள் நுளம்புகள் இல்லாத தூக்கம்.பிறகு அந்த மருந்துக்கும் ஈடுகொடுக்கும் அவதாரத்தோடு நுளம்புகளின் அடுத்த சந்ததி பிறந்தது.கடி தொடங்கியது.
இன்றைக்கு கனகாம்பரம் சூடிச்செல்லும் கூந்தல்களை காண்பதரிது அதனால் கஞ்சாங்கோரையும் அதன் வாசனையும் இந்த இளைய தலைமுறையில் எத்தனை பேருக்கும் தெரியும் என்ற கேள்வியுமுண்டு.
இந்த படலத்தில் நாங்கள் வசமாக நுளம்புகளின் சுற்றி வளைப்புக்குள் சிக்கியது இடப்பெயர்வுகளின்போதுதான்.அக்கராயன் வன்னேரி ஆனைவிழுந்தான் மல்லாவி மாங்குளம் தெருவழிகளில் வன்னியில் காட்டோரங்களில் நுளம்புப்படையணிகள் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டன.யூஎன்சிஆர் தந்த வலைகளுக்குள் புகுந்து தப்ப முயன்றபோதும் காலை மாலையில் காட்டுப்பற்றைகளுக்குள் மிரண்டா போத்தலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு போய் மறைவாய் குந்திய வேளைகளில் கடிக்கக்கூடாத இடங்களிலெல்லாம் ஈட்டிகளை இறக்கி எல்லாம் முடித்து எழும்புவதற்குள் எண்பது நூறு இடங்களில் கண் மூடி முழிப்பதற்கு இடையில் தாக்குதலை முடித்துவிடும் நுளம்புகள்.அக்கராய்ன் மல்லாவி வெளிநோயாளர் பிரிவு நிரம்ப வழிந்தது.எல்லோரும் ஒரு போர்வையை போர்த்தபடி நின்றிருந்தோம் வைத்தியர் சோதிக்கவே தேவையில்லை அனைவருக்கும் மலேரியா சீசனது.சில சுப்பையரிடமும் தமிழ் வைத்தியர் சித்திராவிடமும் ஜீவாவிடமும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு சங்கரிடமும் தாமோதரப்பிள்ளையிடமும் ஓடினர்கள்.பலர் குளோரோ குயினை போட்டுவிட்டு அரைக்கண் தூக்கத்தில் யாரோ தன்னை அழைத்து வர வந்திருப்பதாய் புலம்பினார்கள்.சிலர் வெயிலில் நிற்க சுகமாக இருக்கிறது என்றார்கள்.சிலர் வேப்பம் பட்டையை அவித்து மூன்று நேரமும் தேத்தண்ணி போல குடித்துவிட்டு வாயை தேங்காய் விழுந்து நெளிந்த பானை போல் வைத்துக்கொண்டு நின்றார்கள்.
கடைசியில் என்ன நடந்தது.நுளம்புகளுக்கு ஒரு பெரிய கூட்டமொன்று அக்கராயன் குளத்துக்கு பக்கத்தில் நடந்தது.தாங்கள் தோல்வியடைந்துவிட்டதாகவும் அதற்கு காரணங்களையும் தேடின.முடிவான நுளம்புகளின் அறிக்கையில் தாம் பல்வேறு உத்திகளை வகுத்து தாக்குதல்களை தொடுத்தபோதும் மலேரியா ஏவுகணையை அவர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள்.அதற்கு காரணம் முதலாவது அவர்கள் தமிழர்கள் இரண்டாவது பாணும் பருப்பும் சீனி இல்லாத தேத்தண்ணியும் சிறுவயதில் சாப்பிட்டு உளுத்தங்களியும் ஒடியல் பிட்டும் என்று எழுதப்பட்டிருந்தது.

பழைய டிசைன் என்றாலும் பா வாடை கனவை கிளப்பும்-பொன்.காந்தன்


நவராத்திரி சீசனும் கடக்கின்றது
கடை விழிகள் சில வந்து
கவிதை எழுதென்கிறது
புயல்கள் பல அடித்தாலும்
புல் நுனியின் பனித்துளிகள்
எஞ்சியிருந்து இதயத்தில் சிலிர்ப்பு
இலைக்கும் வடைக்கும்
ஏழாயிரம் லைக் இன்று
கண்ணூறு படக்கூடாது
எங்கள் பணியார இரகசியத்துக்கு
பலமான அத்திவாரம்தான்
மோதகத்தை வைத்தே
மூன்று மணி நேரம் டிஸ்கசன் நடத்தலாம்
பயறு எப்பிடி உள்ளே போனது
பரீட்சையில்
பத்து புள்ளிக்கு வினா தொடுக்கலாம்
வடையில் ஓட்டையை
வம்புக்கு இழுத்தவரை
வச்சு செய்யிறாங்கள் நம்மாளுகள்
கொளுக்கட்டை இம்சித்தால்
கொஞ்ச நஞ்சமா கோபம்வரும்
இணையக்காலம் நிற்க!
எங்கள் காலத்துக்கு ஓடுகிறேன்
பழைய டிசைன் என்றாலும்
பாவாடை கனவை கிளப்பும்
குருத்து வெட்டித் திரியும் கூட்டம்
குளத்தடித் தாமரைக்கு
இன்னொரு குறூப்பு
அவல் ஊறப்போட ஐந்து
அரசி கிளையும் கொஞ்சம்
பூவுக்கும் மாலைக்கும் இரண்டு
பூட்டித் திறப்போடு நிற்க ஒன்று
ஐயர் வேலை பார்க்கவும் ஒரு அழகு
ஐயோ கற்கண்டு மறந்ததென
சைவர் ஏழேழு அடித்து
சதொசவுக்கு அறிவிக்க ஏலாது
எல்லாம் ஓட்டம்தான்
இருந்து பூசை நடத்த எதுவும் இல்லை
பறந்து திரிந்தால்தான்
பயறு சர்க்கரையும் வாங்கலாம்
கறந்த பால்தான் அபிசேகத்துக்கு
பைக்கற்றென்றால்
பறித்து வீசியிருப்பாள் பத்திரகாளி
றக்கோட்டில் ஆகாது
சகலாவல்லி மாலை
சக்கப்பணிய இருந்து
சபச தொடையில் போட்டு
கூப்பன் மாவில் கோலமிட்டு
குளிர்வித்தால்தான் வரம்
சாம்பிராணி தூக்க வெக்கம் என்றால்
சரசு கணக்குப் பாடத்தில் கவிழ்ப்பாள்
முத்தேவிகளை
முகம் சுளிக்க விட்டதில்லை
பத்து மணிவரை காலையில்
ஊதுபத்தி வாசத்தில் உலகமினிக்கும்
வேறு இல்லையோ என்று
உங்கள் வேகமும் விடாயும் புரிகிறது
இனித்தான் கிளைமாக்ஸ்
சும்மா திரிந்த சுதர்சினி
கண்ணுக்கு மையை பூசி
காலில் சலங்கை பூட்டி
முன்னுக்கு வந்து நிற்பாள்
இப்பிடியொரு சிலையை
மிஸ் பண்ணியிட்டனென்று
மினக்கெட மனங்கள் தவிக்கும்
பண்ணுக்கென்றே பிறந்த
துசியும் கலைச்செல்வியும் பொன்விழியும்
தம்மை மறந்திசைத்த பாடல்களில்
விண்ணில் கைதட்டல் கேட்கும்
ஒன்றுக்கு இரண்டு தேர் அனுப்பலாம்
ஒரு கச்சேரிக்கு இந்திரன் சபை கெஞ்சும்
கீதாஞ்சலியும் தர்சினியும்
கலைவிழாக்களுக்கு கந்தர்வ அழகு
நட்டுவாங்கமும் நர்த்தனமும்
தில்லையம்பலத் திசையை திருப்பும்
இளஞ்செல்வியை
மறந்தீர்களோவென்று மன ஆதங்கமும் அறிவேன்
மதி புலம் பெயர்ந்துவிட்டாள்
அவள் குதிக்கால் ஒப்பனை
எங்கள் புழுதித் தெருவின் பொற்காலம்
அன்று மட்டும்
ஒரு அன்ட்ரோய்ட் இருந்திருந்தால்
எங்கள் கலைவிழா மேடையில்
கஸ்தூரியின் கால் மருதோண்டிக்கே
முந்நூறு மில்லியன் வியூஸ்
கைகளின் அபிநயத்தில்
எழுநூறு கோடி சப்ஸ்கிறைப்ஸ்
பின்னே
அந்த மல்லிகை மலர்க் கூந்தலுக்கு
சொல்லவே தேவையில்லை
கவனித்துப்பாருங்கள்
கலைமகள் அலைமகள் மலைமகள் கண்ணில்
எண்பதுகள் தொண்ணூறுகளின்
கற்பூர தீபம் கலையாமல் இருக்கும்
இப்போது உங்களுக்கு முன்னும்
ஒரு திரைகள் தொங்கும்
சுதர்சினிக்கு பதில் சுமதியை போட்டு
ஓடி முடியுங்கள்
ஒரு கால
உங்கள் ஒவ்வொருவரின் காவியத்தை

மீனாள்-பொன்.காந்தன்



ஆழியவளை மீன்காரி
தாளையடியிருந்து வருவாள் சந்தை
காலை பத்து மணிக்கெல்லாம்
களை கட்டும் அவளால்
கூடையை இறக்கினால் குவியும் சனம்
கொண்டையிலும் செதிலிருக்கும்
கூறு விலை சொல்லுவாள்
குறையாதோ என்றும் குரல் கேட்கும்
ஒட்டியை தூக்கிவைத்து
ஊற வைப்பாள் வாயை
சொட்டும் அவள் வார்த்தையில்
சுறாவிலே காதல் வரும்
சூவாப் பாரைக்கும் மனமலையும்
வெட்டிப் பொரித்தாலென்ன
வீட்டுக் குசினி தெரியும்
நட்டமில்லை வாங்கினால்
நாளைக்கும் அவிக்கலாம்
நாலு மாதிரி கதையிருக்கும்
நாயும் காகங்களும் நின்று
தேவியின் திருக்கரம்
திருக்கையை தாராதோவென்று பார்க்கும்
கூவி விற்குமவள் சத்தம்
காலச் சங்கீதம் தான் ஒரு கால்
நாறிப் போகாத மீன்
நாளும் தந்தவள் தேவதைதான்
செட்டுக்காட்டினால் யாரும்
செதிலை கிளப்பி
தொட்டுப்பாரென்று சொல்வாள்
மத்தியானம் கறியில்
சொர்க்கத்தை சுவைக்க வைத்தாள்
மறுநாள் உறியிலும்
கெட்டுப்போகாத ஓர் நாளிருந்தது
பக்கத்தில் மாட்டுத்தாள் பைக்கும்
படியளந்தாள் அவள்
நெட்டை மீனின் வால்
நீண்டு வெளியில் தொங்க
எட்டு வீட்டு நாயும் பூனையும்
இழுப்பட்டு திரிய
பத்துப்பேர் விருந்துக்கு
பாரையோடு நடந்த தெருவின்
அழகான நாளின் ஆகர்சியவளே
விற்றபடி அவள்
விட்டு மார்புக்குள் எடுக்கும்
மிச்சக் காசுகள் தான்
சட்டைப்பையில் யாவருக்கும்
சமத்துவம் படிப்பித்தது
பக்கப்பாட்டுக்கு சட்டியில்
பாலும் உப்பு தூள் புளி வெங்காயமும்
தட்டிப் போட்ட மிளகும்
தாழிச்சதுகளும் சுதி மீட்ட
பிட்டுச்சோத்தோடு
பேரின்பம் தந்த குழம்பில்
எட்டோ பத்துநாள்
இறுகி விறைத்து மரத்து
கட்டையில் செதில் நீக்க
கத்திகள் ஆகாதென்று
கண்டக் கோடாரியெடுக்க வைத்த
கொத்தி பிளந்துண்ணும்
குளிர்சாதனப்பெட்டி ஒட்டி
தொற்றிக் கொண்டதடி மீனாள்
துரதிஸ்டம் தான் இந்நாள்

மில்லடிக்கு போய் வருதல்-பொன்.காந்தன்



கோழிக்கு தவிடு வாங்க
குஞ்சு போய் வா என்பாள் அம்மா
ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன்
ஆக்கினை தாங்கேலாமல்
ஆமோதிப்பாள்
கோணிப்பையுடன்
இராசையர் கடை தாண்டும் போது
இரண்டு நாவல் மரங்கள்
சீசன் இல்லாத காலமென்றால்
கிளைகளை கண்கள் மேய்ந்து கடக்கும்
தாமோதரம் பிள்ளையின் நாய்
படலைக்கு வெளியில் நின்றால்
பத்து இருபது நிமிசம் தாமதமாகும்
அது வேலிக்கு கிளப்பி சலம் விட்டு
பிறகு புளுதியை கிளறி
தன் வீரப்பிரதாபத்தை காட்டும்வரையில்
பாவட்டை வேலியோடு பதுங்கிவிட்டு
பயணம் தொடரும்
தவிடு வாங்க இவ்வளவு பாடோ
மணியத்தாரின்
நாம்பன் எதிர்ப்பட்டால்
யாரும் தெருவில் வரும்வரை
காத்திருந்து காப்பெடுத்து
அந்த கொம்பையும்
குவிந்த ஏரியையும்
மனா குறி சுட்ட
கொளுத்த மேனியையும் கண்டு
தவிட்டுப் பையோடு தறிகெட்டு
கடப்பது என்பது
ஆனையிறவு தடை முகாமுக்கு முதல்
மணியத்தாரின்
மாடு தந்த அனுபவம்
மனசுக்குள் அதைப் பற்றி
ஒரு கடித்து குதறும் மிருகம்போல
கற்பனை பண்ணினாலும்
அதை பொய்யாக்கி
போக வருவோர் தடவிப் போகவுமாய்
இடப வாகனமென
இடம் பிடித்து விட்டது மனதில்
அடுத்து ஒரு பாலமும் வாய்க்காலும்
பாலத்தின்
ஒரு பக்கத்தில் இலையொன்றைபோட்டு
மறுபக்கத்தில்
அது போவதைப் பார்க்காவிட்டால்
மில்லடி பயணம் இனிக்காது
பாலத்தின் ஒரு பக்கமாய்
வாய்க்காலில்
சரிந்த மரக்கிளை மறைவில்
ஒரு முதலைப்பாளி இருப்பதாய்
அந்த வாய்க்காலில் சிறியவர்கள்
இறங்காமல் இருப்பதற்காக
ஊரார் எழுதி வைத்திருந்த
புனை கதையை நம்பி
முதலையின் முதுகு
எங்காவது தெரிகிறதா என்று
தண்ணீரில் மேல் கண் ஆராயும்
பட்ட கட்டை மிதந்தாலும்
முதலையாகத்தான் இருக்குமென
மனம் முடிவெடுத்து
வாய்க்கால் வீதியில்
பயணம் தொடரும்
இதைவிட கோணிப்பையை
பள்ளித் தோழிகள் கண்டால்
என்னவாகுமென்ற
ஒரு வெக்கமும் கூடவே
இதயத்தை கூச வைத்திருக்கும்
மில்லடிக்கு
இன்னும் கன தூரமா
இல்லை வந்து விட்டோம்
அருகில்தான்
ஏனென்றால் தூள் மணத்தில்
பலர் தும்மிக்கொண்டு போனார்கள்
சிலரது தும்மல்
வாய்க்கால் கரைகளில் பட்டு
தெருவில் எதிரொலித்தது
அந்த சத்தத்தில்
கைலாச பிள்ளை வீட்டு கடி நாயின்
தூக்கம் கலைந்துவிட்டது
கடவுளே ஓட வேண்டியதுதான்
ஊருக்குள் இருந்த ஒரே ஒரு மில்
ஊருப்பட்டவர்கள்
குத்த அரைக்க உடைக்க
வந்து போகுமிடம்
எப்போதும் அந்த மெசின் சத்தங்களே
அந்த சூழலின் சங்கீதம்
தூள் அரைக்கும் போதும்
அரிசி குத்தும் போதும்
அவற்றின்
ஆரோகணம் அவரோகணங்கள்
தியாகராஜ சுவாமிகளுக்கு பிறகு
கிளிநொச்சி திருவையாற்றின்
நித்தக் கீர்த்தனைக்கு வாய்த்தவை
பொரியரிசி உளுத்தம்மாவின் மணம்
மில்லைவிட்டு
அவ்வளவு இலேசாய் புறப்படவிடாது
பொரியரசி சாப்பிடவேண்டுமென்ற
போதையை கிளப்பிவிடும்
மில்லுக்கு பின்னணி
உமி மலைதான்
உமி கோழிகள் கொண்டாடுமிடம்
நாங்களும்தான்
இல்ல விளையாட்டுப்போட்டியில்
நீளம் உயரம் பாய்தல் கிடங்கில்
மண் கவ்வுவதற்கு பதில்
உமி கவ்வுவதையும் பார்க்கலாம்
மில்லில் இரகசியம் பேசினால் ஆகாது
உச்சஸ்தாயியில்தான் எல்லாம்
உதட்டுக்குள் முணுக்க முணுக்க
அரசி குத்தும் மெசின்
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வராது
மில் முதலாளி மேனியில்
தவிடு உமி அரிசி மா
மார்பு உரோமம் மீசை தலை
அங்கமெலாம் அலங்கரித்திருக்கும்
மில் முதலாளியென்றால்
நினைவுக்கு வருவது
அந்த தூசி படிந்த தோற்றம்தான்
அதற்குள் சகித்து இயல்பான
ஒரு மனிதர்தான் அவர்
மெசின்களின் பேரொலி தூசி
நின்றபடியும் நடந்தபடியும்
அரைக்கும்போது
இயந்திரங்களோடு சமரசம் செய்து
பொதி செய்து
அரைக்கக் குடுத்தவர்களின்
பைகளின் அடையாளங்கள் பார்த்து
மில்லில் நின்று பார்க்கும் போது
அந்த முதலாளி
வாழ்நாளில்
ஏதோ நிறைய இழந்து
அர்ப்பணிக்கிறார் என்று தோன்றும்
அவரை நம்பியிருக்கும்
குடும்பம் சொந்த பந்தங்களுக்காக
அந்த தூசிபடிந்த அவதாரம்
அவர் இறந்தும் நெடுங்காலம்
இருந்தும்
மில் முதலாளியின் உண்மையான
மாவும் உமியும் தவிடும் படாத
அந்த உருவத்தை
ஒரு போதும் பார்க்க
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை
இந்த பிறவியில்
ஒரு மனிதரை தூசிபடிந்தவராக மட்டுமே
பார்த்திருக்கிறேன் எனும்போது
ஏதோ ஒரு நெருடல்
மில்லில் இருந்தும் திரும்பும் வழி வேறு
மில்லுக்கு முன்
வாய்க்காலுக்கு குறுக்கே
ஒரே ஒருவர் மட்டுமே
போகும் மரப்பாலம்
அது உடைந்து விடுமோவென்ற பயம்
கீழே பாயும் தண்ணி
விழுந்தால் தவிடு என்னாகும்
மீன்கள் என்ன செய்யும்
சில வேளை அந்த புனைகதை முதலை
நிஜமாக உயிர்த்தால்
இப்படி பல பாலத்தைக் கடக்கு முன்
குறுக்கே நின்றாலும்
பாலத்துக்கு அப்பால் நின்ற
கொட்டங்காய் மரம்
எனக்காகவே
பத்து சிவந்த காய்களோடு காத்திருப்பதாய்
தோன்றும் போது
பாலத்தை கடந்து விடும் கால்கள்
அந்த ஐம்பது சதம் என்னவாச்சு
என்று கேட்கிறீர்களா
இந்த இனிய நினைவுகளை தந்தது
அந்த ஐம்பது சதம்தானே

இரவுக்கொரு தொடக்கம்-பொன்.காந்தன்

 

பச்சலர் பார்டியும்
அங்கேதான் நடந்தது
பள்ளித் தேர்வு முடிவு வந்தபோதும்
அங்கே போவதற்கே
காசும் அளவாயிருந்தது
முன்னிரவைத் சந்திக்கும்
நல்ல முழுவியளமும் அதுவாயனது
வெங்காயத் துண்டும் வடையும்
எங்கேயோ
மிதக்க வைத்தது இரவொன்றில்
இங்கே தான்
அவன் எங்கேயோ நிற்பான்
நகரத்தின் முடிவுவரை தேடினால்
சுதி ஏற்றிக்கொண்டிருப்பான் சுண்டல்காரன்
வெந்து கொண்டிருப்பதை
விழியால் உண்ணும் கூட்டத்தில்
மந்திரிப்பதுபோல்
மிளகாய்ப்பொடியும் தூவி
மாங்காயை மத்தளம்அடிக்க விட்டு
ஏங்க வைக்கும் இரவின் சுவையை
எழுதி விடுவான் மனதில்
வாங்காதவர் இருக்கமுடியாது
அந்த இறால் வடையை
எங்கேயும் இறால் இருக்கலாம்
அங்கே இருப்பதிலே அற்புதமிருந்தது
எங்கேயும் நான்குபேர் சேரலாம்
அங்கே கூடுவதில் அலாதியிருந்தது
போய்வரும் போது
வாங்கி வரச்சொல்வதில்
இதுவரை இருந்தவைக்குள்
இடையில் புகுந்த இன்பசாகசன்
கொடுப்புக்குள் வடையோடு
மடிப்புக் குலையாமல் மனேச்சர்
இடுப்புக்குள் கைகுடுத்து
இரும்புச் சட்டிக்குள் விழுவார்போல
என்ஜினியர் ஒருத்தர்
பொரியட்டுமென்று பொறுத்திருக்கும்
வாத்தியாரும் வாச்சரும்
வெங்காயத்துண்டு இரண்டு
இன்னும் கூடக் கெஞ்சும் டாக்குத்தர்
தின்பதற்கு வாயில் வைத்து
ஒன்றரை கடித்து
இரண்டு மணித்தியாலமாய்
ஏதோ சிலாகிக்கும் எழுத்தாளர்கள்
மாசி வடை மயக்கத்தில்
காசு கொடுக்காமல்
கனதூரம் போய்
ஓடுப்பட்டு திரும்பும் ஒன்றிரண்டு
இங்கும் விடாமல்
கம்பசு கலாசாலை இளவட்டம்
கடன் கூட வைப்பதுண்டு
சுண்டல்காரனுக்கு யாரடிமையில்லை
மங்கும் அந்தி வேளை
மலரும் இரவின் முகத்தின்
கண்படும் முகவரியந்த வண்டியும்தான்
நின்றபடி உண்பதாய்
நினைப்பே வருவதில்லை
கண்டுவிடுவார் யாரென்றும்
கரவும் இருப்பதில்லை
இன்புறும் அப்பொழுதில்
இவ்வுலகே தெரிவதில்லை
ஏழையாயிருந்தாலும்
இந் நகரத்தின் இன்பம்தரும்
இரவுவெளிச்சம் வடை வண்டில்
இந்திரலோகமென்றாலும்
இரவுக்கொரு வடை வண்டில்
இல்லையென்றால்
நரகத்தின் சாயல்தான்
நம் தெருவோ சொர்க்கம்தான்

முதல்வீடும் மழையும்-பொன்.காந்தன்

 

இரவு மழை பெய்கிறது
கார் காலம் தொடங்கிவிட்டது
மழையை பற்றி
ஏதாவது எழுதுவதற்கு
மனசுக்குள் கவிதையும் எழுத்தும்
இல்லாத காலத்தில்
சேற்று தெருவில்
புத்தகங்களை சட்டைக்குள் செருகியடி
வீட்டுக்கும் பள்ளிக்குமாய் ஓடினோம்
வழுக்கும் செருப்பிலிருந்து ஓசை
முதுகுவரை அடிக்கும்
சேற்று தண்ணீர் புள்ளிகள்
நனையக்கூடாதென்று ஓடுவோம்
ஆனால் நனைவோம்
மண்குடிசை வீடுகள்
இரண்டு மழையோடு
நிலம் ஊறத்தொடங்கிவிடும்
சாக்குத்தான் கதகதப்பை தந்தது
இரவில் முகட்டில் இருந்து
துளிகள் சிந்தும்
சில வேளை படுக்கும் பாயில் சிந்தும்
ஒவ்வொரு ஒழுக்குக்கும்
சட்டி கிண்ணம்
கோப்பை வைத்தால்
மழை தாளம் தட்டத் தொடங்கும்
நட்டுவக்காலி கொடுக்கான் மட்டைத்தேள்
எங்காவது வீட்டுக்குள் காணலாம்
தும்புக்கட்டையால் அடித்து
சமாதி கட்டாமல் தூங்க முடியாது
கோடிக்குள் தாழ்வாரத்தில்
ஆடுகளும் குட்டிகளும்
ஒடுங்கி தூவானம் பட
சுவரோடு ஒட்டியபடி நிற்கும்
தீப்பெட்டி இளவாளித்துவிடும்
விறகு நனைந்துவிடும்
அடுப்பை மூட்டி
இப்படியோர் காலத்தில்
ஒரு சூடான தேனீர் போடுவது
அவ்வளவு இலகல்ல
ஆனால்
அந்த மழைக்கால தேனீர்
குடிசையின் குளிருக்கு
சொர்க்கத்தைவிட மேலானது
மண் கிணறுகள் இடியத்தொடங்கும்
விடிய எழும்பி பார்த்தால்
மழை
பல ஆச்சரியங்களை செய்திருக்கும்
கிணற்றுக்கு வாளி தேவையில்லை
கேற்றிலால் அள்ளலாம்
தண்ணி பால் நிறமாகிவிடும்
முற்றத்தில் கப்பல்கள்
ஆங்காங்கு புரண்டும் கவிண்டுமிருக்கும்
கணிதக்கொப்பியில்
ஒற்றைகள் குறைந்து
இருபது தாள் கொப்பி
இரண்டு தாள் கொப்பியாகிவிடும்
இந்த கார் காலத்தில்
குப்பை மேட்டில்
காளான்கள் முளைத்துவிடும்
கோரைகளும் துளிர்க்கும்
அம்மா அடிக்கடி
பிடித்துவைத்து
தலையை துவட்டுவதும்
மழையில் திரியாதேயென
அதட்டுவதும்
அதை நாம் மீறுவதும்
நீர்ச் சிரங்கு கடிப்பதும்
சொறிய சொறிய இதமாக இருப்பதும்
பிறகு வலிப்பதும் கொதிப்பதும்
இரவில் எவரையும் தூங்கவிடாமல்
காலை தூக்கிவைத்து
கையில் அகப்பட்ட எண்ணெய் பூசுவதும்
கற்பூரமும் கலந்து காய்ச்சி
அம்மா பூசியதும் இக்கார் காலத்தில்
அப்பாவின் மரப்பிடிபோட்ட
பெரிய குடை
அதை அவ்வளவு இலகுவாய்
அவரிடமிருந்து வாங்க முடியாது
அப்படி தந்தாலும்
அதை வட்டுக்குள் அடிக்காமல்
பிள்ளையை போல விரிக்கவேண்டும்
படலைக்குள்ளால் போகும்போது
குடையை சரித்து
கம்பிகள் நெளியாமல்
வெளியே போகவேண்டும்
கிட்டத்தட்ட
அந்த குடையை விரிக்க
பத்து கட்டளைகள் இருக்கும்
அநேகமாய் அப்பாவிடம்
அந்த பெரிய கறுத்த
மரப்பிடி போட்ட குடையை வாங்கினால்
திரும்பி வரும்போது
அப்பாவின் விம்பமாகவே வருவோம்
ஆடு சும்மா இருக்காது
பசிவந்தால்
தாள்வாரக் கூரையை இழுத்து
ஈயக்கத் தொடங்கிவிடும்
கொஞ்சம் மழைவிடும் வேளை
அம்மா வளவு முழுக்க திரிவார்
தலையில்
ஒரு துண்டை கவிழ்த்திருப்பார்
அது என் பழங்காற்சட்டை
அவருடைய குடை அதுதான்
முள் முருக்கு குழைகளை உடைப்பார்
ஆடுகளுக்கு கோடிக்குள் கட்டப்படும்
அவை நறுக்கித்தின்னும் போது
முள் முருக்கு மணம்
வீட்டுக்குள் மிதக்கும்
உங்களுக்கு சீமைக்கிளுவை
முள் முருக்கை மணம் இரண்டையும்
பிரித்தறியும்
மோப்ப சக்தி இருந்தால்
நீங்கள்
பொற்காலத்தில் வாழ்ந்தவர்கள்தான்
மழை நாளையும் பொழியும்
ஏதாவது எழுதலாம்

பளை மார்க்-பொன்.காந்தன்


போற வழி பயணத்தில்
புதினங்கள் பல இருக்கும்
நாறவில்லை நல்ல கதை
நம் ஊரில் பலவுண்டு
ஆனையிறவு எட்டும்போது
அள்ளிவரும் உப்பு மணம்
காறியெல்லாம் உமிழவில்லை
கற்பூரம் போல அது
ஆசைப்பிள்ளை ஏத்தம்வரை
அடி மனசில் குடியிருக்கும்
சூசைப்பிள்ளை கடைச்சொதிக்கும்
சோக்கான சுவையும் தரும்
வேர்க்காமல் ஓரத்தால்
விழுகின்ற காற்றுக்கு
தூங்காமல் விடலாமோ
துலைவார்கள் விடமாட்டார்
ஐம்பத்தெட்டில் மந்திகையில்
அதிகாலை இரண்டுக்கு
செல்லம்மா வலியெடுத்து
சீக்கிரமாய் பெற்றெடுத்து
கந்தப்புச் சாத்திரியார்
கணக்குகள் பல பார்த்து
வந்திறங்கச் சனி ராகு
வரமுடியா வெள்ளிதிசை
குந்தியிருந்தது குறித்து
சர்ப்பதோடு சந்திரனும்
அசுரகணம் ஆண் குதிரை
வம்புக்குட்டி இதுவென்று
வாயுரைத்த கதையெல்லாம்
சண்டித்தனத்தோடு மறித்து
சந்தேகத்துடன் தடவி
வண்டில் எருவையும்
வைக்கோலையும் கிளறி
கிண்டிப் புலி பார்த்த
கிறுக்கருக்கும் சொல்லி
அன்றைக்கு ஓர் நாள்
ஆனையிறவு பயணம்
இயக்கச்சி பளை ஓரம்
எக்கசக்கம் கிடுகு மலை
வட்டுக்குள் பழுத்தும் ஓலை
வாழ்வினை முடிக்க தவமாம்
செட்டினில் விழுந்தும் ஓலை
சீக்கிரம் கிடுகும் ஆகும்
கட்டுக்கள் ஏற்றிப் போக
காத்திருக்கும் வண்டில் நூறு
பொத்தலின்ற முகடு வரை
பூரணமாய் கூரை வேய
உத்தரவாதமாம் நூறு
உலகத்தர பளைமார்க் கிடுகு
அத்திசை கடக்கும் போது
ஆயிரமாய் கிடுகு ஊறும்
முத்து லட்சுமி பின்னியிருக்க
முருகேசு இரண்டாக்கி
சின்னமணி அருகில் வைப்பார்
சீவரத்தினம் வீடு முன்னே
வாருமென நூறு மட்டை
வண்டிலேற முந்தி நிற்கும்
பளை ஓலை நல்ல நீளம்
ஒரு கிடுகு போதுமந்த
ஒன்றுமில்லா கிணத்தடிக்கு
உரிஞ்சானாய் நின்றவேலி
உடுப்பு போட்டு அழகாக்க
தெரிஞ்சாக்கள் கூடயெட்டி
தேக்கெனவே எழுந்தாலும்
குனிஞ்சாலும் காணாமல்
குமரிக்கு அறுக்கை பண்ண
பெரும்பாலும் அனுசரணை
பேருதவி பளைக் கிடுகு
அயல் வீட்டு பூனைரண்டு
அடுத்தடுத்து கருவாட்டை
களவெடுத்த கரணத்தால்
வழிகாண வேண்டுமென
வரம் கேட்டு பளை நோக்கி
வடிவேலு ஓடிப் போய்
அநியாயப் பூனைக்கு
அடைப்புகள் போட்டிடவே
அருள் கூர்ந்த கடவுள்கூட
பளைக்கிடுகு அவதாரம்
மதில்மாடி கொங்கிறீற்று
மலைபோல தகரங்களும்
புதிதாக கூரைவண்ணம்
புல்லரிப்பு ஆனாலும்
பளையாரின் பெருமையதோ
அடிவாங்கி தலையின்றி
அறுவாரால் இடையோடு
வெடிவாங்கி விழுந்தாலும்
உரமான வாழ்வொன்றின்
உயிர்ப்பாக தோன்றுகின்ற
உயர்தெங்கு கதையிலுண்டு
போற வழி பயணத்தில்
புதினங்கள் பல இருக்கும்
நாறவில்லை நல்ல கதை
நம் ஊரில் பலவுண்டுl

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...