Monday, December 9, 2019

ஏவாளின் பழக்கடை-பொன்.காந்தன்


ஆதாமின் கனிபோலிருந்தவள்
அவனை இழந்தாள் நேற்று
ஆதாம் பறித்துண்ண உண்ண
பழுத்துக்கொண்டே இருந்தவள்
சோடை பற்றினளோ
காடு முழுக்க
பழங்கள் சொரியும் இராவில்
உண்ணாவொண்ணொதென
அசரீரியற்ற வாயூறும் வசனங்கள்
தின்னப்பணிக்கும் கணங்கள்
விடிகாலையில்
விழுந்துடையும் பாலைவனத்தில்
குழந்தைகளின் முகங்கள்
எல்லாம் உங்களுக்குப் படைக்கப்பட்டதாய்
திருத்தப்பட்ட வசனத்துடன்
குவித்து வைத்தாள் கனிகளை இன்று
கனிகள் பற்றிய
ஓராயிரம் கேள்விகளுக்கு முன்
ஏவாளின் பழக்கடையும்
இன்று நேற்று எங்கள் தெருவில்
ஆதாமின் கனியாய் இருந்த கணம்
கண்ணீராயும்
சேலை தலைப்பில் பிசுபிசுக்க
ஏதோ ஒரு
தேவலோக கனியை
உதடுகளாக்கி
நாள் முழுக்க கனிகள் முன்
வேர்ப்பிடித்திருக்கிறாள் ஏவாள்
நானும் ஒரு கனிவாங்கினேன்
உண்ணவல்ல
அவள் கண்களுக்குள் இருக்கும்
இலந்தைகள் துடைத்து
ஏவாள் இளைப்பாற.....

Sunday, December 8, 2019

உலராப்பறவை-பொன்.காந்தன்



இராமசாமியின்
மீன் பெட்டியில் தொடங்கும்
ஒரு நீர்க்காக்கையின் நீச்சல்
முடிவற்ற குளத்தில்
உலராப்பறவையின் காதலாயிற்று
கரை ததும்பிக்கிடக்கும்
சலனத்தில்
எம்பிக் குதிக்கும் மீன்குஞ்சுகள்
ஆழக் குமுழிகளின்
கனவில் வளரத்துடிக்கும்
கள்ளுண்ட வாயில்
சிக்குண்ட விரால்களின்
வெடில் தீரா வார்த்தைகளில்
மயங்கித் தெளியும்
இத்தீராக்குளம்
மொச்சையில் கிடந்துழலும் நாய்கள்
இராமசாமியின் மீன் பெட்டியை
அமரர் உலகம் வரை
பின் தொடரும் கிறக்கமாய்
விட்டுப்பிரியாதபடி குளம்
தீட்டு நாட்களற்றும் பரந்து கிடக்கிறது
கூதல் ஊறிக்கிளர்ந்த
சிறகு முளைத்தெழுந்த பட்சி
பட்ட மரத்தில்
சிலுப்பிடச் சிந்திய துளிகள்
கரையில் தேன்குடமாய் உடைய
முடிவற்ற குளத்தின் வார்த்தைகள்
புலம்பித் தாமரை இதழாய் அவிழ்ந்தன
வெகு நேரமாய் கரையில்
காத்திருந்த
தூண்டிலில் சிக்கிக்கொண்டது
முடிவற்ற குளத்தின் மோகம்
மீன் கொத்தியின் பாடலாகி
பேரூந்துக்கு காத்திருக்கும்
தேவதையின் செவிகளிலும்
உலராப்பறவையின் காதல் நீள்கிறது

Friday, December 6, 2019

குங்கும பூவின் வர்ணத்தில் ஒரு மின்னல்!-பொன்.காந்தன்



இன்று சற்று பெரிய குவளை
ஆவிபறக்கிறது மேசையில் தேனீர்
இன்று மின்னலின் நிறம்
எனக்கு பிடித்தமான ரோஜாப்பூ நிறமென்று
மழை பொய் சொல்லி
என்னை வெளியே அழைக்கப்பார்க்கிறது
ஈசல்களும் நுழையாமல்
அடித்துக் கதவை சாத்திவிட்டு
ஒரு பெரிய கம்பளிப்போர்வைக்குள்
எவளோ ஒருத்தியை
கனவு காணப்போவதாக
மழைக்கு என் மீது கோபம்
சின்ன வயதில்
அம்மணமாய் ஓடிவந்து
இப்படி ஓர் இரவுப்பொழுதில்
வாசல் படியில் நின்றபடி
தாழ்வாரத்தில் பெய்து விட்டு
ஓடியதை
எல்லோருக்கும் சொல்லப்போவதாக
மழை வெளியே
வெகுநேரமாய் மிரட்டிப்பார்க்கிறது
அயல்வீட்டு மொட்டை மாடியில் காயும்
பட்டுத் தாவணி நனையாமல்
கொட்டித்தீர்க்கும்
மாஜிக்கை பார்க்கும்படியும்
அழைப்பு விடுகிறது மழை
எப்படியோ
புதிய இரகசியங்களும் சில
மழைக்குத் தெரிந்திருக்கிறது
தேனீர்க் குவளையை பார்க்கிறேன்
அடியில் கொஞ்சம்
அந்தரங்கம் பதுக்கப்படுவதாக உணர்வு
பின்னொரு மழை நாளில்
மழையும் தேனீர் குவளையும்
பெரிய கம்பளிப்போர்வையும் ஒன்றாகி
சிலுமிசங்களை வைத்து
கவிதைகளை கப்பமாக கேட்கக்கூடுமோ
வெட்கத்தையும்
பிடிவாதத்தையும் விட்டுவிட்டு கேட்டேன்
குங்குமப்பூவின் வர்ணத்தில் மின்னலோடு
குழிவிழுந்த கன்னப் புன்னகையாய்
உன்னால் பெய்ய முடியுமா மழையே!

Monday, December 2, 2019

திரும்பிய நாட்கள் பற்றிய ஊர் குறிப்பு-பொன்.காந்தன்



கடைசி நாட்களின் வரிகள்
முதல் தடவையல்ல
முன்பொருமுறை எழுதியபோது
திருநகரில் இருந்தேன்
போர் விமானங்கள்
தலைக்கு மேல் அலைந்துகொண்டிருந்தன
குண்டுகளின் அதிர்வில்
வேலிச் சருகளும் மலர்களும் உதிர்ந்தன
சுடசுட
பரோட்டா வாங்கும் கடை
வழமைக்கு மாறாக பூட்டியே கிடந்தது
மறைந்திருந்து புகைபிடிக்கும்
பெட்டிக்கடையும் திறக்கப்படவில்லை
அருகில் பெரிய புளியின் கீழ்
எவரும் இல்லை
வடை வண்டிலில்
பெற்றோல்மாக்ஸ் வெளிச்சம் இல்லை
எனக்குப்பிடித்ததோ இல்லையோ
வேறெதுவோ இராப்போசனமானது
மறுநாள் எப்படி விடியும்
சொல்லத் தெரியாதவனாக இருந்தேன்
பிறகு மறுநாள்
மிதி வண்டியை உழக்க ஆரம்பித்தேன்
அந்த பயணத்தின் முடிவை
அப்போது சரியாக அனுமானிக்க முடியாதவனாக
போய்க்கொண்டே இருந்தேன்
என்னுடன் பயணப்பை மட்டும் இருந்தது
வீட்டை பூட்டி திறப்புக்களை எடுத்திருந்தேன்
எனது செல்லப்பிராணிகளுக்கும்
என்னுடன் வரும்படி அழைத்திருந்தேன்
கரடிப்போக்குவரை அவையும் வந்திருந்தன
மாட்டை அவிட்டு விட்டிருந்தேன்
முன்பு
பொழுது போக்கிற்காக சென்ற வயல்வெளிகளை
வெறுமையுடன் கடந்துகொண்டிருந்தேன்
நான் திரும்பி வந்துவிடுவேன்
ஒரு வெற்றிப்பரணியை பாடிக்கொண்டு.....
எனக்கு ஒரு நம்பிக்கையை
பழைய நாட்கள்
மனம் முழுக்க விதைத்திருந்தன
வீண்போகாத நம்பிக்கையை
நானும் அனுபவித்திருந்திருந்தேன்
முல்லைத்தீவுக்காரனொருவர் சொல்ல கேட்டும்
சிலிர்த்திருக்கிறேன்
நண்பரொருவர் தந்த
ஸ்ரலின்கிராட் தியன்பியன்பூ நோர்மண்டி
வரலாற்று கதைகள் வழியேயும்
திரும்பிவிடுவேன் திருவாசமாகியது
ஓர் இரவில் முறிகண்டிப்பக்கமாய்
மிதிவண்டியில் மூச்சுவாங்க ஓடி
புத்துவெட்டுவான் காட்டுத் தெருவில்
யானைக்கு பயந்து போகாமல்
மாங்குளத்திற்கு
கடும் பனி பொழியும் பனியிரவில் பயணித்து
வடகாட்டில் குந்தினேன்
எறிகணைகள் எட்டாத தூரம்
பற்றைகளுக்களின் ஓரமாக தூங்கினேன்
காட்டுக்கிராமத்தின்
கோயில் குளம் சிறு வயல்கள்
வேட்டைக்காரர்களுன் ஏற்பட்ட நட்பு
யானை துரத்தும் சத்தம் எல்லாம்
என்னை தடுத்தாட்கொண்டன
பிறகு அக்கராயன் பக்கமாக
துணுக்காய் கோட்டைகட்டி வழியாக போனேன்
ஊர் திரும்பும் நம்பிக்கை முளைத்தபடி
கவிதைகளை எழுதினேன்
அவ்வாறே விசுவமடுவிலோ
தேராவிலிலோ குந்தியிருப்பேன்
அங்கிருந்தபடி
மூங்கிலாற்றுப்பக்கமாக வயல்களையும்
சோழன் தோட்டங்களையும் ரசித்தபடி
இன்னொரு வடை வண்டில்காரனை
சிநேகம் பிடித்தபடி திரும்புவேன்
வீடு அப்படியே இருக்கும்
காணி முழுக்க இப்பில் இப்பில் அடர்ந்திருக்கும்
எனது வீட்டு ஒழுங்கை
பூநாறிகளால் நிறைந்திருக்கும்
வேலிப்பூவரசகள் வெட்டப்படாமல் கொழுத்திருக்கும்
சன்னங்கள் துளைத்த தென்னைகளின் கீழ்
செத்தல்கள் முளைத்திருக்கும்
பலாவும் மாவும் நான்கைந்து பருவங்கள்
காய்த்துப் பழுத்து அழுகி
கொட்டைகள் விழுந்து
அதன் குடும்பம் பெருத்திருக்கும்
கிணறு பாசியடர்ந்திருக்கும்
விளிம்பில்
ஓரிரண்டு கற்கள் குண்டுகள் பட்டு உடைந்திருக்கும்
வீட்டுக்கூரையும் உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும்
ஒரு மிரண்டாப்போத்தலில்
தண்ணீரையும் நிரப்பிக்கொண்டு
முயல்கள் பாய்ந்தோட
காட்டுக்கத்தி ஒன்றுடன் வளவுக்குள்
மீண்டும் குடிபுகுதலை
அகதியின் திருவிழாவாக கொண்டாடுவேன்
இம்முறை
பழைய நாட்களில் ஊர் திரும்பியபோது
பதினெட்டாம் போர் ஏற்றத்தில்
சவரம் செய்யப்படாத முகத்துடன்
மகிழ்ச்சியுடன்
உழக்கிய மிதிவண்டி
போக போக இழந்துவிட்டேன்
சிறிய பயணப்பையையும்
சுமக்க முடியாதபடி இருந்தது
என்னை மட்டும் சுமக்கும் நாட்களாகின
திருநகர் அக்கராயன் கண்டாவளை
நான் பழகிய மனிதர்கள்
வலைஞர் மடத்திலும் மாத்தளனிலும்
மணலுக்குள் முண்டங்களாய் புதைக்கப்பட்டனர்
வன்னிப்பெரு விளையாட்டு விழாவில்
நான் ரசித்த உதைபந்து வீரன் ஒருவனை
கால்களை இழந்தவனாக
அவசர மருத்;துவமனையில் காண நேரிட்டது
ஒரு வாலிபன்
காதலியின் புகைப்படத்தை
தன் சட்டைப்பைக்குள் காவியபடி
எல்லா இளம் யுவதிகள் முகத்திலும்
அவளை
தேடி அலைந்து கொண்டிருந்தான்
பழைய நாட்களைப்போல
பலர் திரும்பமாட்டார்கள் என புலப்பட்டது
சென்றவர்கள் திரும்பா சொந்த ஊர்களும்
வாசல்களும்
உலகத்தில் இருந்துவிடுமா
இருக்கிறது
அந்த ஊரில் வசிக்கிறேன் இப்போது
இன்னமும்
பூநாறி அடர்ந்த ஒழுங்கைக்குள்
இப்பில் இப்பில் அடந்த வளவில்
திரும்புவேன் என்ற நம்பிக்கை மனிதனின் வாசல்
திறக்கப்படாமலே இருக்கிறது.

Saturday, November 30, 2019

வழிப்போக்கனின் தரிசனம்-பொன்.காந்தன்



எனக்கும் ஒரு முற்றம் இருந்தால்
இந்த பூக்கள்
இதைவிட அழகாக இருந்திருக்கும்
வழிப்போக்கனின் தரிசனம்
பட்டாம்பூச்சிகளை தடுமாறவிட்டது

வழிப்போக்கன் நினைப்பதென்ன
எவரும் கேட்பதில்லை
கேட்டவற்றில் சில மிக அழகானவை
பூமியில் இதுவரை இல்லாதவை

வழிப்போக்கனின் பெரும் சுமை
தோளில் அல்ல மனதில்
அதை இறக்கிவைக்க
அவர்கள் தேடுகின்ற இடம்
பூமி தொலைத்து விட்டிருக்கிறது

எல்லாச்சுவரொட்டியும்
வாசித்துப்போகும் அவனிடம்
எழுதுவதற்கென்று
ஏதேனும் வாசகம் இருக்கும்
பூமியின் தலையெழுத்தது

அவன் வழிப்போக்கன்
நீங்கள் அவனுக்கு யார்
அந்தப்பதிலில்
நீங்கள் இருக்கின்ற இடம்
வழிப்போக்கருடையதாக கூட இருக்கலாம்

வழிப்போக்கன்
உங்களுக்கு இட்ட பெயர்
ஏஞ்சல் மிருகன் பறவை மழை
இப்படியும் இருக்கலாம்
அதுவும் உங்களுடைய பெயரே...

வழிப்போக்கன் பார்த்தபடி போகிறான்
என்ன நினைக்கின்றானோ
என்னைப் பற்றியும்

உணரப்பட்ட திருநாள்-பொன்.காந்தன்



ஒரு இராட்சதனின் மென்மையான நாளில்
உன் உதடுகள்
மிச்சமின்றி இரசிக்கப்பட்டன
ஆயிரம் மதுக்குவளைகளுக்குள்
வழிய வழிய ஊற்றப்பட்டது உனதழகு
உன் கனவுத் தாம்பூலத்தை
அப்படியே மடித்து
ருசித்துக் கிறங்கியது இராட்சதம்
ஓரு குகைக்குள்
உன் விம்பத்தை கண்டெடுத்தாய்
பிரபஞ்சமெல்லாம்
உன் நிழல் நிரப்பியது போன்ற நிம்மதி
பாறையின் குளிர்ந்த ஊற்றில்
பாலைவனத்தின் விடாய்
பேரீச்சம் கனிகளை கொட்டி நிரவியது
அழுது தீர்த்திருந்த விழிகளை
உன்னிடம் இப்போது தவம் இல்லை
வரம் உண்டு

Wednesday, November 27, 2019

கிழவியும் நானும்-பொன்.காந்தன்,


உனக்குப் பிடிச்சதொன்று
கிணற்றடியில் உள்ளதென
கிழவி சொல்லியது
என் சின்ன வயதை
இத்தனை ஆண்டுகள் கழித்தும்
கிழவி மறக்கவில்லை
மகிழ்ந்து கொண்டேன்
என்ன
பூனைப் புடுக்கு கொடியோ என்றேன்
இல்லை போய்ப்பாரன்
மர முந்திரிகையாக இருக்கலாம்
நினைத்தபடி
பழைய சுண்ணாம்புக்கல்
உவர் கிணற்றடியை போய் பார்த்தேன்
நினைத்ததெதுவும் இல்லை
கிழவி தன் பேரனுக்கு
பிடித்தமான மலர்களையும்
முகத்தில்
புன்னகை பரவவிடும்
சிலரது பெயர்களையும்
கோபத்தை வரவழைக்கும்
சம்பவங்களையும்
இப்போது
கள்ளத்தீனிக்கு பதிலாய்
முடிந்துவைத்திருக்கிறது
நான் ஒன்றும் நடவில்லை
அது தானாகவே
கார்த்திகைக்கு கார்த்திகை
பூக்குது என்கிறது
கிழவியின் குரல்

குரும்பட்டிகள்-பொன்.காந்தன்


வண்டுழுத முற்றங்களில்
தேர்ச்சில்லான குரும்பட்டிகளை
மீண்டும் தென்னங்குலைகளுக்கு
திரும்பிவிடக் கேட்கிறது மனது
அம்மம்மா குழலுக்கு அடம்பிடித்து
இழுக்கப்பட்ட
சேலைத்தலைப்பும்
மண்ணோடு உக்கிக் காலம் கடக்கின்றது
முற்றங்களில் கொடிகளில்
வரிசையாய் உலர்ந்து கொண்டிருந்த
சிறிய கைகளும்
பூப்போட்ட மேனியும்
சிறிய கழுத்துப்பட்டியும்
ஒரு வசந்த காலத்தின்
வரவின் முன் கட்டப்பட்ட
தோரணங்களாய் இருந்தன
பட்டாம்பூச்சிகளின் பின்னால்
ஓடியபோது
ஓட்டிக்கொண்ட புல் நுனிகள்
தொட்டாச்சிணுங்கிக் கீறல்கள்
கன்னத்திலோடிய வியர்வைத்துளிகள்
எல்லாவற்றோடும்
அணைத்துக் கொடுத்த முத்தங்கள்
யுத்த குருதிச்சேற்றுள் சிக்குண்டு கிடக்க
ஓவ்வொன்றாய்
கொத்தி எடுத்து அழகு பார்க்க துடிக்கிறது
நீண்ட அலகு கொண்ட பறவை
குழந்தைகளுக்கான ஒப்பாரியில்
அடைத்த குரல்களில் கத்தும்
அண்டங்காக்காவின் சொற்கள் கிடையர்து
முற்றத்துச் செவ்விரத்தையும்
பாவப்பிள்ளைகளும்
குரும்பட்டிகளும்
மணல் கும்பியும்
எதிர்பாராத தருணத்தில்
பறித்துச் செல்லப்பட்டிருந்தன
செல்லங்கொஞ்சிக் கொண்டிருந்த
சிறிய கடவுள்கள்
எங்கேயோ விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுவர்களின் ஓசையில்
எங்கள் முற்றங்களில் சில
விம்மித் தணியும்
பனித்துளிபோல்
கண்ணீரும் காய்ந்து கிடக்கும்

ஆயுத பூசையும் அழகிகளும்-பொன்.காந்தன்


நேற்றுத்தான் ஆயுத பூசை
என் மடிக்கணனியையும்
ஏதோ நெடுநாளாய் இழுபடும் கைபேசியையும்
பட அறையில் வைத்து பத்திக்குச்சியை கொழுத்தினேன்
இறுவட்டை செருகி
சகலகலா வல்லிமாலையை இயக்கினேன்
ஒருவரும் இல்லை
நானும் அந்த அழகிகள் மூன்று பேரும்தான்
எதை வேண்டுவது
மறுபடியும் மறுபடியும்
என் தாய் மண்ணை பாடும் வரத்தை கேட்டேன்
மறுக்கப்பட்டதா ஏற்கப்பட்டதா
இதுவரை எந்தத் தகவலும் இல்லை
தேவிகளின் மௌனத்தை சாதகமென நினைக்கிறேன்
பாடுவதற்கு முதற்பொருளாய்
மாலதிதான் வாசலில் தோன்றுகிறாள்
காலவெளி பெரிதாகிற்று
அந்தக் கந்தர்வ தேவதையை கோப்பாய் வெளி தழுவி
நீள்விழியில் நெருப்பு சுமந்தவள்
காலவெளியில் இன்றிருந்தால்
அந்தக் கணக்கு எப்பிடி இருந்திருக்கும்
தாலி கட்டிய கழுத்தோடு
வேலிக்குள் இருந்து புறப்பட்டு
வெங்காயமும் பச்சை மிளகாயும் வாங்கி
ஒரு வரலாறு
இரவோடு முடிந்திருக்குமா
வட்ஸப் குழுக்களில்
மாலதி வெறும் வாயை சப்பி இருப்பாளா
அப்படி இருந்திருக்க மாட்டாள்
இப்போதும்
இருளுக்குள் ஒளிதேடும் பறவையாய்
சத்தியமாய் இருந்திருப்பாள் என்கிறது ஆட்காட்டி வெளி
கருவிலையே திருவுடையாள் என்கிறது காலமும்
அது எக்காலத்தில் வாழ்ந்தாலும்
தன் இயல்பை காட்டும் என்கிறது ஒரு அசரீரி
என்ன நம்பிக்கையில்
தன்னைக் கொடுத்தாள் மண்ணுக்கு மாலதி
கண்ணை கசக்கிப் பார்கின்றேன்
ஒரு கறுமாந்திரமும் இல்லை
ஒன்றையேனும் காட்டுவதற்கு அந்த உத்தமிக்காய்
பழையபடி மாலதிகள் படைத்த பிரபஞ்சம்
கைக்குட்டையாகி கசங்கிக்கிடக்கிறது
எங்கேனும் சில விழிகளுக்குள்
எட்டிப்பார்கிறாள் மாலதி
ஒரு பொழுதில்
அவள் தோளில் சாய்ந்து பெருமூச்சுவிட்டது
ஈழ சாம்ராஜ்ஜியம்
அந்தக் காதலில் புல்லரித்திருந்தது நிலம்
எங்கு தொட்டாலும் புதுமைப்பெண்
எவள் மனதில் இருந்தும் ஒரு தீராநதி
சமர்க்களங்களில இருந்தும் ஈழ மாதை
சந்தணமாய் ஏந்தி வந்தோம்
தீயின் விழிகளுக்குள்தான் ஒரு திளைப்பும் இருந்தது
இரங்குதல் இருக்கவில்லை
அவளே இறங்கினாள் கடலில்
அலையும் நுரையும் அவளே ஆனாள்
வரைய முடியாது பெண்ணை
வானத்துக்கு அப்பாலும் இருக்கிறாள்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அந்தத் திகைப்பையும் தித்திப்பையும்
மாலதிகளின் குரலின் திசையில்
ஒரு மரகதத் தேர் இழுத்துச்செல்கிறது என்னை
வாழும் வரை பாடுவதற்கு
மண்மீதான பெண்களின் இரகசியம் தேடி

வெறித்தனமும் வேற லெவல் வெங்காயமும்-பொன்.காந்தன்




இம்முறை மத்தாப்பு விடும் தீபாவளி
மனசு கனத்தபடி முடிந்திற்று
உடுப்போடு வெளியில் போனது
கடுப்பேத்தும் படியாய்
மேற் சட்டையின்றி மேய்ந்துவிட்டு வருகிறது
வேற லெவலில் விளைகிறது
இப்போது யாழ்ப்பாணத்து வெங்காயம்
நாலு நாளாய் குழியுள் நசியுண்ட மலரை
கைபிடித்து மீட்க முடியாத
கற்பனை கீறோக்களுக்காக
ஈழத்திலும் ஏதோ எங்கிருந்தோ வெறித்தனம்
நடுக்காட்டுப்பட்டியில்
நம் செல்லம் சுர்ஜித்தை மீட்க
ஒரு அம்புலிமாமா இல்லாத் தமிழகம்
சந்திராயன் தொலைந்தால் என்ன
தொலைந்தே போகட்டும்
கண்மணி சுர்ஜித் ஆம்ஸ்றோங்காயும் ஆகியிருப்பான்
கடிந்து கொள்ள எனக்கும் உரிமையுண்டு
இடிந்து போன கீழடியுள்தான்
என் பெத்தாச்சி பிறந்தாள்
தஞ்சைக் கோபுரத்தைகட்டிய தமிழனின் கர்வம்
ஆழத்துளைக்குழியில் வாழ்வற்று போயிற்று
மெல்ல மெல்லதமிழரின் உள்ளொளியை
மாய மயக்கமெனும் கறையான் அரிக்கின்றது
வெறும் வாயடிக்கின்ற மந்தைகளாகின்றோம்
மில்லருக்கு சிலையில்லை
பிரபாகரனுக்கு மணி மண்டபம் இல்லை
திலீபன் இருந்த இடம் வெறும் திட்டாய் கிடக்கிறது
தீருவில் மறந்து போயிற்று
மாலதிக்காக ஒரு மகா நாடு இல்லை
தனிநாயகம் அடிகளாரை பல தரித்திரங்களுக்கு தெரியாது
புலி பாய்ந்த நிலத்தில்
கட்டவுட்டுகளை பார்த்து கைதட்டுகிறது
தீபாவளி விசர்
காலியாய் போய் போகிறது தமிழன் கைப்பொருள்
ஆறேழு நாள் முன்பு
நாங்குநேரிக்கு இழுப்பட்டு விட்டேன்
நாடார் வாக்கு நமக்கே
சாதிய கோசத்தில்
பாதி வழிக்கு ஓடி வந்து பதறிப்போய்விட்டேன்
இன்னும்
ஈவேராக்கள் எத்தனைபேர் பிறந்தாலும்
நூலிழையில் தொங்கும் தமிழரை
ஏதேதோ குழிகளில் இப்போதைக்கு மீட்பு இல்லை
நாதியற்றவன் தமிழரென்று யார் சொன்னார்
நான்நம்பமாட்டேன்
கட்டவுட்டுக்கள் வந்து நாளை அவனுக்காக
காவலரணில் நிற்கும்
சைக்கிள் செயின்போதும் அதற்கு
எல்லை தாண்டும் எதிரிகளை
எட்டி ஒரே அடியில் வீழ்த்த
பட்டம் படிப்பு வேண்டாம்
கட்டவுட்டுக்களுக்கு பாலாபிசேகம் செய்தால்
நாளை அது காராம்பசுவாய் மாறி கறக்கும்
சட்டை கிழிப்பட்டு ரிக்கட் எடுத்தால்
தமிழர் சரித்திரத்தில் இடம் கிடைக்கும்
தியேட்டர் கதவை பிடுங்கி எறிந்து
திரைக்கு முன் விசிலடித்து
கதிரைகள் தாவி களேபரம் பண்ணினால்
உடனே வருவான் சயங்கொண்டான் மீண்டும்
இந்த பரணியைப்பாடச் சிலிர்க்க
சட்டையோடு படத்துக்குப் போய்
இடைவேளையில் யட்டியோடு வெளியில் வந்தால்
எட்டுத் தொகை பத்துப்பாட்டு யாத்த
எல்லாப்புலவனும் வருவான்
கெட்டுத்தொலையும் கிலிசு கேட்டை படைக்க
என்ன கட்டித்தூக்கி
காலடி நிலத்துள் புதைந்த ஈகங்களை காட்ட
பச்சை மட்டையும் பிரபாகரனும் இல்லை.
முற்றுப் புள்ளியை
இதைவிட வேறுமாதிரி வைக்க முடியவில்லை.

வேர்த்துக்கொட்டும் மாரியும் வேலிக்காந்தளின் ஆமோதிப்பும்-பொன்.காந்தன்



கார்த்திகை முற்றத்தில் இறங்குகிறேன்
பன்னீர் குடங்களை சுமந்தபடி முகில்கள்
என்னை ஏன் நாயென்றும் விசாரிக்கவில்லை
இன்னமும் நான் மாறவில்லை
இனியென்னவோ!
ஏனோ சில வெற்றிடங்கள்
நிரப்பப்படாதிருப்பதே அழகெனப்படுகின்றது
முள்ளிவாய்க்கால்வரை
உச்சி சிலிர்த்த ஒரு இந்திரப்புரவி
சித்திரத்தேரில் வைத்து ஈழத்தாயை இழுத்துச்சென்றது
அப்போது என் கவிதைக்கும்
பித்துப் பிடித்த குணமொன்றிருந்தது
பிறகு பேத்தைகளின் சவாரி தொடங்கியது
சாத்துவாயர்கள் எப்படி
சங்க காலத்தை உருவாக்க முடியும்
வெளியே மாரிக்குளிர்
உள்ளே ஊருப்பட்ட புளுக்கங்கள்
வேர்த்துக்கிடக்கிறது இதயச்சுவர்கள்
ஏரியாப் பொறுப்பாளர் பெடியன் ஒருத்தனின் முகம்
இரட்டை சடையை சேர்த்து முடிந்த
இளவழகியின் பார்வை
ஆனையிறவு ஆகாய கடல் வெளியில்
காயப்பட்ட ஒரு பிள்ளையின் முனகல்
ஒரு சிற்றூரவை கிழவரின் சிற்றுரை
முதல் முதல் பொய்க்காலொன்று
எனக்குள் ஏற்படுத்திய பெருவுணர்ச்சி
இப்படி என்னன்னவோ
என்னை பிடித்திழுத்திழுத்து
எங்கெங்கோ போய் வருகின்றன
நுளம்படிக்கக் கூட
இப்போது கையில் பலமில்லாதது போல்படுகிறது
முதன் முதல் ஊருக்கு நடுவில்
ஒரு போராளியில் உடலை பீடமொன்றில் வைத்து
தகனம் செய்தபோது
பள்ளிக்காற்சட்டை சேட்டோடு
ஒரு காவிய காலத்தின் தளிர்ப்பை
கண்கள் அப்படியே மூடிப்பத்திரப்பத்திக்கொண்டது
அம்மம்மா குழலுக்காகவும்
ஒரு ஐஸ் குச்சிக்காகவும் அடம்பிடித்து விட்டகண்ணீர்
வித்துடல் மேல் விழுந்து
ஒரு சத்திய வேள்வியில் சமர்ப்பணமாகும்
உன்னத தருணத்தை அடைந்தது எத்தனை பெருவரம்
என்னை மறந்து சில வேளைகளில்
சில நண்பர்களோடு சிரித்துக்கொண்டிருக்கும்போது
இந்த புன்னகைக்காக யாரோ
உயிர்கொடுத்து விட்டதையெண்ணி
உள் மன ஆத்துமம் ஓங்கி ஓலமிடுகிறது
இக்கணத்தில் வாழ்ந்துவிடு எனும் ஓர் கவிஞனின்
அர்த்தமுள்ள வாசகத்தைப்போல்
எல்லாவற்றையும் மறந்துவிடலாமென
கங்கணம் கட்டி இறங்கும்போது
என் கவிதைகளில் துர்நாற்றம் வீசுகிறது
கங்கையில் விடுத்த ஓலைபோல
மிச்சமின்றி
ஏதோ எல்லாவற்றையும் கொட்டி எழுதி
ஆற்றில் விட்டுவிடவேண்டுமென மனம் அங்கலாய்க்கிறது
கெமுனுவின் வரவு நடக்கின்றபோது
எல்லாளன் பெயரில்
ஏதும் எழுதாமல் இருக்கமுடியவில்லை
எவரேனும் ஒரு அன்னியன்
என்னை இம்சிக்கின்றபோது
கண்முன்னே வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகன்
நெஞ்சுக்குள் எழுவதை என்ன செய்ய நான்
நான் வஞ்சிக்கப்பட்டிருக்கிறேனா
தோற்கடிக்கப்பட்டிருக்கிறேனா
பாடங்கற்க பணிக்கப்பட்டிருக்கிறேனா
காலத்தோடு நித்தம் ஒரே கைகலப்பு
வாழ்வது ஆள்வது பற்றி
விண்ணிறங்கும் தேவதையிடம்
நான் சொல்லப்போவதில்லை
வேரும் விதைகளும் தமிழனுக்குள் சொல்லும்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ
அதையேதான் சொல்வேன்.
வேலிக் காந்தள் உன் ஓலை சரிதான் என்கிறது

என்னை விழுங்கும் தேவதை-பொன்.காந்தன்



நட்சத்திரங்களில் சிக்கிக்கொண்ட
அவள் கூந்தலில்
பிரபஞ்சத்தை காவல் செய்ய
ஒரு நாய்க்குட்டி
முதன்முதலாய் கண் விழித்தது
பால்வெளியில்
உருட்டிவிடப்பட்ட சந்தணக்குடம்
பன்னீரில் நனைந்த பொழுதுகளை
கொட்டிக்கொள்ள
முகூர்த்தம் ஆரம்பமாயிற்று
தலையணையின் கீழ்
ஒளித்து வைக்கப்பட்ட இரகசியம்
மந்திரக் கோதுகளை உடைத்து
மானின் புள்ளியாகி
ஓடி விளையாடுகின்றது
தேருலா வீதியில்
வகுப்பறையில் நுழைகின்றார்
வாத்யாஸனர்
சர்ப்பமென விழுங்கும் தேவதையின்
பக்கங்களை விரித்து
வாசிக்கச் சொல்லிய கணத்தில்
பிரபஞ்சத்தை காவல் செய்யும்
நாய்க்குட்டி
காற்றுக்கு முன்
சோதனைச் சாவடி போட்டிருந்தது
பித்துப்பிடித்த குளத்தில்
ழூழ்கி எழும் ஓசையில்
வற்றிக்கிடந்த எல்லாப்பொய்கையிலும்
ஊற்றுக்கண்கள் திறந்தன
மற்று இனி
அவள் கூந்தலை கோதிய கணத்தில்
நட்சத்திரங்கள் கொட்டிக்கிடந்தன
ஒருக்களித்துக் கிடந்தது
பூரித்த நிலவு வானவெளியெங்கும்
நாய்க்குட்டி
முதன் இனிய தூக்கத்துக்காய்
விழிகளை மூடிக்கொண்டிருந்தது

Saturday, September 28, 2019

அவனை தவிர வேறெவராலும் தரமுடியாது அந்தச் சிலிர்ப்பை- பொன்.காந்தன்



புல்லரிப்பு இல்லாமலேயே பொழுதுகள் விடிகின்றன
ஏதேதோ கண்டாறிவிக்குள் என் வாழ்வு
வாடிக்கையாளனை கவர
ஆடைகளை மாத்தி ஆடிப்பார்க்கிறது ஒரு நடனம்
ஆயினும் ஏதோ ஒன்று
கிறக்கத்திலிருந்து இழுத்து எழுப்பி நிமிர்த்துகின்றது
இப்படி ஒரு பொழுதை நினைத்துப்பார்த்ததில்லை
இப்போதெல்லாம்
எனக்கென ஒரு நாடு பிறந்திருக்கவேண்டும்
அப்படித்தானே
அந்த அற்புத நாட்கள் கடந்தன
எப்பவோ தேசியக்கொடி தயார்
இப்பவோ அப்பவோ என விடியல்
வாசலை எட்டிப்பார்த்த தருணத்தில்
செண்பகமும் வாகையும் காந்தளும்
கண்களுக்கு முன் கிடந்தன
தட்டுத் தாம்பாளத்தை எடுத்து
பொட்டுப் பிறையோடு வாசலில் நில்லடி
என் சகியை தட்டி எழுப்பி
தலையில் தண்ணியை வார்த்து
சில்லென்று அல்லவா இருந்தேன்
மல்லாந்து எவனும் படுத்துக்கிடந்ததில்லை
வில்லன்களை களத்தில்
கரிகாலனின் முப்படைகள்
உள்ளங்கையில் தமிழீழத்தை வைத்துக்கொண்டு
ஓட்டிக் கலைத்துக்கொண்டிருந்தார்கள்
வன்னி சிலிர்த்து
என் கவிதைகள் புல்லின் நுனியில் குந்துவதும்
பூநகரி மணலில் புரள்வதும்
நிலாவரையில் குளிப்பதும்
மட்டக்களப்புக்கு ஓடித்திரிவதும்
கோணமலை சிகரத்தில் கொடியை கனவு காணுவதுமென்று
நிற்க நேரமின்றி
ஒரு தேசக்கனவில் நீந்திக்கொண்டிருந்தது
இப்போது நினைக்கின்றேன்
அத்தனையும் அவனே தான் தந்தான்
அவனை விட எவராலும் தரமுடியாது அந்தச் சிலிர்ப்பை
பிரபாகரன் காலத்தில் பிறந்ததை விட
வேறென்ன பேறெனக்கு வேண்டிக்கிடக்கிறது
ஆண்டியாய்க் கிடந்த தமிழனுக்கு
ஆடை கொடுத்து
அம்மணங்களை எல்லாம் ஒவ்வொன்றாய் மறைத்து
மாண்டு கிடந்த தமிழர் இராச்சியத்தை
மீண்டும் காட்டிய அந்த மின்னலை
நான் என்ன சொல்லிப் பாடுவேன்
வண்ணக்கனவென்பது
வாழ்வதற்கான ஒரு தேசத்தை மீட்பெதன
சொல்லில் அல்ல
முள்ளிலும் தானும் நடந்தே காட்டிய தேவன்
வல்வையில் பிறந்த தமிழர் வல்லரசு
முள்ளிவாய்க்காலுக்கு பிறகு அவன்
எல்லோருக்குள்ளும் அவதாரமெடுத்த
அதிவீரம் ஆகிவிட்டான்
ஏதோ ஒரு விதத்தில் எதிரிகளும்
பிரபாகரனெனும் பேரை
நாளாந்தம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்
நல்ல வீரனுக்கு அழிவில்லை
வல்வையில் அல்லாமல்
எல்லை தாண்டி சில வேளை பிறந்திருந்தால்
எல்லா வல்லரசுகளுக்கும்
பிரபாகரனே பெரும் தளபதியாயிருப்பார்
ஈராக் போல
ஈழம்  எண்ணெய் வயலாயும் இல்லைத்தான்
இந்த சமுத்திரப் பிராந்தியத்தில்
இன்னமும் தமிழர்களை
வஞ்சகத்தோடு பார்க்காத நல்லவர்களும் அதிகமில்லை
வன்னியெனும் சின்ன நிலத்துக்குள்ளிருந்து
விண்ணிலே பறந்து
கொழும்புவரை புட்பகத்தில் புறப்பட்டு வந்ததும்
எல்லை கடந்து
பலருக்கு ஒரு குமைச்சலாக இருந்திருக்கலாம்
பிரபாகரனை
உலகின் ஒப்பற்ற தலைவனாய் உச்சரிக்க
இதுதான் பலபேருக்கு இடைஞ்சலாய் இருக்கலாம்
எல்லா வல்லரசுகளும்
ஈழத்தின் முள்ளிவாய்க்காலில்தான்
தங்களுக்கு முதுகெலும்பு இல்லையென்பதை
வரலாற்றில் எழுதவேண்டுமென விதியென்றால்
என்னதான் செய்வது
கொஞ்சம் பின்னடைவுதான் ஈழத்தமிழருக்கு
சந்ததி என்று ஒன்று உண்டல்லவா
எல்லா இனத்துக்கும்
அது நித்திரை கொள்ளுமா என்ன
தர்மத்தின் வாழ்வுதனை  சூது கவ்வும்
தர்மமே ஒரு நாள் நிச்சயம் வெல்லும்
பிரபாகரன் தர்மம்
தமிழரின் தாரக மந்திரம்
வீழாத விடிவெள்ளி
தாழாத தன்மானம்
தமிழனின் அடையாளம்
வாழ்க அந்த பெருவீர வரலாறு










முள்ளில்படுக்கை -பொன்.காந்தன்



இப்போது தான் புட்டும் முட்டைப்பொரியலும்
இறுக்கி ஏப்பம் விட்டு விட்டு
உன் பட்டிணி பற்றி எழுத குந்தினேன்
மன்னித்துக்கொள் திலீபா! மாமகனே!
உண்மையை சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்கின்றேன்
துக்கம் போல முகத்தை வைத்து விட்டு
படலை கடந்தவுடன்
கெக்கட்டம் விட்டும் சிரிக்கும் வித்தை எனக்கு தெரியாது
ஒரு நேரப்பசி பொறுக்க முடியாத
இந்த தசைப்பிண்டம்
நீருமின்றி நீறாகத் தொடங்கிய
உன் உயிர்கூட்டு நாட்களை நினைத்து
ஒரு வார்த்தையும் வராமல்
மீன் கொத்தி போல
பட்ட மரத்தில் குந்தியபடி பார்க்கிறது நிலத்தை
இப்போதுவரை எனக்குள்ள உலகப் பேராச்சரியம்
நீ மட்டும்தான்
சித்தர்கள் ஞானிகளால் கூட செய்ய முடியாததை
செய்து முடித்தாய் பார்த்தீபா
அப்படி ஒரு உன்னதமான உன்னுடைய ஆத்துமா
இங்கேதான் எங்கோ வாழ்கிறது
உயிரீகம் பற்றி உலக வரலாறு ஆயிரம் கதை சொன்னாலும்
நீ தனி ஒருவன்
உனக்கொரு உவமை இல்லை
ஆயிரம் ஆண்டுகள் கடந்து பின்பு
நீ உருவ வழிபாட்டுகடவுளாகிவிடுவாய்
எப்போதோ ஒரு நாள்
நீ முருகனோடு சேர்த்து மூலமூர்த்தியாகி
எல்லாத்திருவிழாக்களிலும்
தேரில் வைத்து இழுக்கப்படுவாய்
உன்னைப்போல தாய் மண்ணுக்காய்
இரங்கிய ஈரமும்
வறண்ட பாலையும்
வரலாற்றில் இல்லை
இப்போதும் வல்லரசுகளுக்கு வயிற்றை கலக்குவது
அப்பிராணி போல போகும்
ஈழத்தமிழனுக்குள்
திலீபனென்றும் மில்லரென்றும்
அபார சக்திகள் இரண்டு ஆன்மத்தில் உண்டு என்பதால்.
நிச்சயம் உன் வழியில் உட்கார்ந்தால்
மின்னலடிக்கும் மழை கொட்டும்
மறுபடி மண்ணுக்கு வசந்தம் திரும்பும்
எனக்கொரு சந்தேகம்
ஈழ மண் விடுதலைக்காகவா
கால தூதனாக கடவுள் உனைப் படைத்தான்
இத்தனை தாமதமாகிறது
நீ சொன்ன மக்கள் புரட்சிக்கு
அதிலும் பல மாறாட்டங்கள் உண்டு.
தொண்ணூறிலேயே
உன் தூரநோக்கு பலித்திருந்தால்
எப்படி இருந்திருக்கும்
நாவற்குழி கடந்து நசிந்து விழுந்து
தொண்ணூற்றைந்தில்
கூடு கலைந்து குழறியிருக்கத் தேவையில்லை
வாடி மச்சியென வளைத்து
ஒரு மொத்து மொத்தி
சத்தமில்லாமல்
தமிழீழத்தை பிரகடனம் செய்து விட்டு
பலாலியில் இருந்து
இப்போது
பகிரெயினுக்கும் ஓமானுக்கும்
சுகமான பயணம் போயிருக்கலாம்
சுங்கத்தில் எங்கள் ஆக்கள் தான் இருந்திருப்பார்
சிங்கத்துக்கு பதிலாய்
பாஸ்போட்டில் புலி இருந்திருக்கும்
என்ன சொல்ல திலீபா
முள்ளில்படுத்திருக்கிறோம்
உன் சொல்லுப்பறைச்சல் கேட்டிருந்தால்
இந்த நிலை வந்திருக்காது.


பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...