Friday, February 15, 2019

நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை-மெல்லிய காதல்களும் புதைந்த ஈழநிலம்-பொன்.காந்தன்,


இன்று காதலர் தினம்.ஈழத்தின் பலவீதிகளில் இன்றைய தலைமுறை மன்மத பாணம் விட்டுக்கொண்டிருக்கின்றன.எவனோ ஒருவன் சொன்னதுபோல் எழுத்துப்பிழைவிட்டு எழுதிய புரட்சி வாசகங்களால் ஆன வலிமைமிக்க சுவரொட்டிகளும் கிறுக்கல்களும் அலங்கரித்த வரலாற்றை சுமந்த சுவர்களில் இன்று இதயங்கள் கீறப்பட்டு அம்புகள் பாய்ந்துகொண்டிருக்கின்றன.காதல் என்பது இனியும் என்றும் அழியாப்பேருணர்ச்சி.அடி நெஞ்சில் பரபரத்திருக்கும் அந்த பருவத்துடிப்பை வார்த்தைகளுக்குள் வடிக்க முற்பட்ட வரலாற்றுத் தோல்வி இன்றைக்கும் தொடரும் இனியும் தொடரும்.காதலுணர்ச்சி வாழும் காலம் முழுக்க வந்து கொண்டேதான் இருக்கும்.காதலில் எக்கணமும் பூமிக்குள் ஒரு புத்துணர்ச்சி சுற்றிக்கொண்டேதான் இருக்கும்.
இனத்துக்கு இனம் காதலின் பிரவாகத்தை கொண்டாடும் விதம் வரலாற்றின் தனி அழகை சூடியே வந்துள்ளது.காதலினால் வடிக்கபட்ட கல்லறை வாசகங்கள் வரை கண்ணீரோடும் கூட அழியாக்காதல் எனும் தெய்வீகமும் தொடர்ந்து வருகின்றன.காதலன் காதலிக்காகவும் காதலி காதலனுக்காகவும் என ஒரு காதல் பிரபஞ்சத்தை கட்டிவைத்துள்ளார்கள்.அந்த காதல் உங்களையும் என்னையும் கூட விட்டுவைத்தில்லை.அந்த உணர்ச்சி அற்ற மனிதன் ஆரோக்கியமற்றவன்.அந்த உணர்ச்சியை அழகுற இந்த உலக்குக்கு விட்டுச்செல்பவனும் அற்புதப்பிறவியே.காதலை காலத்துக்கு காலம் அழகாக்கிவிட்டு பூமியின் மடியில் புல்லரிக்க தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள் கோடி காதல் சித்தர்கள்.தமிழர்களின் காதல் மட்டும் என்ன குறைந்ததா.
போரும் காதலும் என்பது எங்கள் வாழ்கையின் வரலாற்று வாசகம்.வாளையும் ஈட்டியையும் எய்யும் வித்தை மட்டுமல்ல மடியில் சாய்ந்து தலைகோதி தழுவும் தாளாத இன்பக்காதலின் பேராறுக்கும் தமிழன் சொந்தக்காரன்.காதலில் சைவம் ஒன்று அசைவம் ஒன்றென வகைகாணும் இன்றைய கவிஞனுக்கு கைக்கிளை பெருந்திணை அன்பின் ஐந்திணை என காதலில் திளைத்து வகுத்துப்பிரித்து பாவாக்கிய பிரம்மர்கள் எங்கள் முன்னவர்கள் என்பது பெருமைதான்.இன்றைய லிவிங் ரூ கெதரை பக்குவமாய் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே பெருந்திணையென பகுத்துவைத்தவன் நம்மாள்.
.
'கண்டுஇ கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள' என்றும் 'பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி வால் எயிது ஊறிய நீர்' என்றும் 'காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாது செய்வேன்கொல் விருந்து' என்றும் 'காலை அரும்பிப்பகல் எல்லாம் போது ஆகி மாலை மலரும் இந்நோய்' என்றும் 'உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு' என்றும் 'ஊடற்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து கூடற்கண் சென்றது என் நெஞ்சு' என்றும் 'ஊடுதல் காமத்துக்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின்' என்றும் செம்புல பெயல் நீர் போலென்னும் அக்குவேறு ஆணிவேறாய் வடித்து விழியில் வழிந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என உறக்கமின்றி எங்களை பாடவைத்தது காதல்
.
'காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்' என்றும் பாட்டுக் கலந்திடவே- அங்கே ஒரு பத்தினிப் பெண்வேணும்' என்றும் 'காதலை வேண்டிக் கரைகின்றேன்' என்றும் 'காதலடி நீ எனக்கு காந்தமடி நானுனக்கு' என்றும் 'காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம் ஆதலினாற் காதல் செய்வீர் உலகத் தீரே!' என்ற காதல் குரலை எப்படி மறக்க
இப்படிப்பட்ட பெருங்காதலை தன் இன விடுதலைக்காக அர்ப்பணித்த காதலர்களை மண்ணுள் தாங்கி மௌனமாய் இன்று அழுகின்றது ஈழநிலம் அதன் காதல் முகாரி உங்கள் காதுகளில் கேட்கிறதா.வாய்விட்டு அழமுடியாமல் போரில் தன் சோடியை பிரிந்த ஒற்றைப்பறவையின் ஓலம் உங்கள் காதில் கேட்கிறதா நண்பர்களே.எம் மண் இருள் சூழ்ந்த நாளில் சொல்லிப்பிரிந்த காதலர்களின் சொல்லாமல் பிரிந்த காதலர்களின் அரும்பிய காதலை சொல்லமுடியாத போருக்குள் அவன் ஓரு திக்கிலும் அவள் ஒரு திக்கிலும் தூக்கி எறியப்பட்டுவிட கருகிய அந்த கந்தர்வ மலர் முகிழை மறக்க முடியுமா.வானில் ஆக்கிரமிப்பாளனின் விமானங்கள் ஊருக்குள் குண்டுகளை கொட்ட வந்தசேதியில் அவளின் உயிரும் பிரிந்ததாம் என்ற சேதியில் புரண்டழுது புளுதிகுளித்த காவியப்பாத்திரங்களைவைத்து கதை எழுதாமல் எங்கள் பேனாக்கள் பிறவி வரத்தை பெற்றுவிடத்தான் முடியுமா
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும் நம்தேசம் எங்கும் குண்டு வந்து வீழும். கன்னி மனம் மெள்ள மெள்ள மாறும் இவள் கையில்கூட ஆயுதங்கள் ஏறும்
நிலவு வந்து பொழியும்நேரம் நீ வரவில்லை நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை.
ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகுகாலம்
உறங்கி வெகுகாலம் நீ ஓடிவந்தால் போதும்
காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில்
ஒரு காதலென்ன மாலையென்ன இந்த வேளையில்
மீண்டும் ஈழத்தில் பிறந்த சங்க காலத்தின் செய்யுள் அது.காதலித்து வசந்தங்களை வாழ்ந்து முடிக்கவேண்டிய பருவத்தை தாய்நிலத்தை காக்கும் பயணத்தில் தாரைவார்த்துக்கொடுத்தனர்.ஒரு பெரும் இளமை பிரவாகங்கள்.நெஞ்சோடு உள்ள காதலோடு கந்தகத்தை உடலில் சுமந்து ஒன்றுமில்லாமல் உயிரை உடலை வெடிக்கவைத்தனர் வியக்கவைக்கும் வீரயுகத்தின் பருவ வயதினர்.ஒரு களமுனையில் காதலனும் இன்னொரு களமுனையில் காதலியுமாக காத்திருந்து இல்லற வாழ்வெனும் இனிமைக்குள் நுழையாமலே மண்ணுக்குள் விதைந்தவர்கள் ஈழத்தின் இணையற்ற துறவிகள்.காதலன் உடலுக்கு மண் போட்டு விதைத்துவிட்டு அந்த அன்பையும் சுமந்துகொண்டு களமாடி வீழ்ந்த காரிகையரை கண்ணிலொற்றிக்கொள்ளலாம் காதலர் தினங்களில்.ஈழத்தின் விண்ணின் மேல் இரவில் சிமிட்டிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் பாதி காதல் நட்சத்திரங்கள்.தாய் நிலத்தை காத்த தங்க விண்மீன்கள்.
இறுதியாய் முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணத்தில் காதலர்கள் காற்றுவாங்கியபடி கைகோர்த்து களித்திருக்கவேண்டிய தென்னந்தோப்புகளில் சுதந்திரபுரத்தில் தேவிபுரத்தில் காதலர்களை பிணங்களாக்கிக்கொண்டிருந்தது ஆக்கிரமிப்பாளர்களின் எறிகணைகள்.காதலர்கள் காதல் புதைய நடந்து ஸ்பரிசிக்க வேண்டிய நந்திக்கடற்கரை மணலில் காதலர்கள் இரத்தம் சொட்டச்சொட்ட உயிர்பிரிந்துகொண்டிருந்தார்கள்.காதலர்கள் உலவும் பாலியாறு தொட்டு கனகராயன் ஈறாக இரணைமடுவின் உடையார்கட்டின் நிதிக்கரைகளில் மட்டக்களப்பில் வாவியோரத்தில் குண்டுகள் தாங்கி ஈழத்தின் காதலர்கள் வீழ்ந்துகொண்டிருந்தார்கள்.ஆக்கிரமிப்பாளனால் உயிர் எடுக்கபட்ட இரத்தம் சொட்டு காதலனை காதலியும் காதலியை காதலனும் மடியில் வைத்து இட்ட ஓலத்தாலும் நிரம்பியிருந்தது முள்ளிவாய்க்கால் கேட்டுப்பாருங்கள் அந்த ஒற்றைப்பனைகள் அந்த பிரிவின் கதையை ஒவ்வொன்றாய் சொல்லும் விம்மும்.
ஈழத்தின் காதலர்கள் குண்டுகளால் புதைக்கப்படுவதை தாஜ்மகால் எனும் காதலின் சின்னம் இருக்கும் தேசமும் ரசித்துக்கொண்டிருந்தது.ரைற்றானிக்கை ரசித்து அதில் கரைந்து அழுதுகொண்டாடிய பூமியின் கண்களும் பார்த்துக்கொண்டிருந்தன.மேஜதாவின் ஒற்றை நொடிப்பார்வைக்காக காத்துக்கிடந்த கலீல் ஜிப்ரானின் தேசமும் பார்த்துக்கொண்டிருந்தது.ஈவாபிரவுனின் கைநகங்களுக்கு என்ன வர்ணம் பூசலாமென பல இரவுகள் சிந்தித்த கிட்லரின் தேசமும் பார்த்துக்கொண்டிருந்தது.சாந்திபேவின் கன்னக்குழியில் மூழ்கிய சாக்கிரடீசின் தேசமும் பார்த்துக்கொண்டிருந்தது.லைலா மஜுனுவின் தேசங்களும் கிளியோபட்ரா ஆண்டனியின் தேசங்களும் பார்த்துக்கொண்டிருந்தன ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் ஆக்கிரமிப்பாளனின் குண்டுகளில் காதலர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

ஒரு ஈழத்து சிறுமியின் இரண்டு முத்தங்கள்-பொன்.காந்தன்





இந்த தலைப்பை போடுகின்றபோது எனக்கு அந்த வியட்நாம் சிறுமி நினைவில் தோன்றுகின்றாள்.உலகத்தை உலக்கிய அந்த காட்சி இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் முட்களால் இந்த உலகத்தை தைத்துக்கொண்டிருக்கும்.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு நிறைந்த ஜெனிவா நகரின் தெருவில் குளிராடைகளை அணிந்தபடி ஈழத்துச்சிறுமி ஒருத்தி தன் தாயின் கைபற்றியபடி நடந்து வருகின்றாள்.அந்தத்தெருவில் எங்கள் தெருக்களைப்போல தலையசைத்தும் புன்னகைத்தும் செல்ல எவரும் இல்லைத்தான்.அரிதாக விடுமுறை நாட்களில் புலம்பெயரிகளை காணும்போதுதான் மனம் விட்டு பேசக்கூடிய மண்வாசனையிருக்கும்.இதுவே வாழ்க்கையின் இன்னொரு பண்பாடாக நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டது.ஜெனிவாவின் தெருவை சுவிஸ் கன்ரோனின் தெரு என்று சொல்வதை விட அது உலகத்தின் பிரதான தெரு என்று சொல்லிக்கொள்ளலாம்.கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு அதிகம் எங்களுரில் உச்சரிக்கபடாத ஒரு வார்த்தையாக ஜெனிவா இருந்திருக்கிறது.அது சிலர் மட்டும் அறிந்திருந்த வார்த்தையாக இருந்தது.அது ஈழத்தின் இருக்கின்ற தமிழர்களின் நாடி நரம்புகளில்லாம் கலந்திருக்கப்போகின்ற ஒரு சொல்லாக ஒருபோதும் எண்ணியதில்லை.ஜெனிவா என்பது எமக்கு எவ்வாறு தேவையாய் இருந்திருக்கும் ஊகித்துக்கொள்ளவில்லை.ஆனால் ஜெனிவா எமக்கு இன்றுதேவையான பெருவார்த்தையாயிற்று.பயணித்துக்கொண்டிருந்தபோது தவறவிடப்பட்ட பொருளை தேடுகின்றவர்கள் போல அந்த தெருவில் தேடுகின்றவர்களில் ஒருவராக நாமும் இசுலாமியர்கள் மக்காவிற்கு சென்று ஒன்று கூடுவதுபோல 2009ற்கு பிறகு ஜெனிவா யாத்திரிகர்களாக ஈழத்து மனிதர்கள் மாற்றப்பட்டுவிடார்கள்.அந்த தெருவில் அந்த சிறுமியின் கண்களும் அவளின் தாயின் கண்களும் ஓரிடத்தில் குத்திட்டு நிற்கின்றன.
அந்த சிறுமிக்கும் தாய்க்கும் மனதில் நிறைந்துபோன அந்த குருதி வழியும் முகங்கள்.குண்டுபட்டு பிணங்களான பழக்கபட்;டவர்களின் உடலங்கள்.இந்த உலகத்தால் கைவிடப்பட்ட நாட்களில் கொலைக்களத்தில் மரணவலியில் ஓங்கிக்குரலெடுத்து அழும் ஏதிலிகளின் கண்ணீர்.வியட்நாமியை சிறுமியை விடவும் அவலம் நிறைந்த போரில் சிதையுண்ட குழந்தைகளின் சடலங்கள்.பற்றி எரியும் அகதிக்கூடாரங்கள்.பாதுகாப்பு அகழிகளில் நிறைந்து கிடக்கும் தாயும் பிள்ளைகளின் பிணங்கள்எங்கும் எதிலும் சதைத்துண்டங்களும் சடலங்களும் காயங்களும் அழுகைகளும் அவலங்களுமாக சிதைந்த ஒரு நிலத்தின் காட்சிகள் புகைப்படங்களாக மீண்டும் அந்த ஜெனிவாவின் தெருவில்.மனித உரிமைக் கூட்டத்தொடர் நடக்கின்ற பருவப்பொழுதுகளில் எல்லாம்.அந்த ஈழத்து பேரவலப்புகைப்படங்களை ஜெனிவா முன்றலில் காட்சிப்படுத்தும் அந்த புலம்பெயரி அவர் பெயர் கஜன் என நினைக்கின்றேன் அவர் கூட நினைத்திருக்க மாட்டார் தான் வைத்திருக்கும் புகைப்படங்களில் ஒன்று இந்த உலகத்துக்கு ஈழத்துக்கதைகளில் இன்னொரு உணர்ச்சி மிக்க அவலக்கதையை சொல்லப்போவதை.ஆனால் அது அந்தக்கணம் அந்த ஜெனிவாத்தெருவில் நிகழ்ந்தது.அந்த ஈழத்து சிறுமியும் தாயும் புகைப்படங்கள் வைத்திருந்து கொட்டகைக்குள் நுழைகின்றார்கள்.ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டு வருகின்றார்கள்.அந்த எட்டு வயதாகின்ற சிறுமியும் தாயும் கூட நினைத்திருக்கமாட்டார்கள் தங்கள் கதையின் காலப்பயணம் பற்றி.அந்தப்பயணத்தின் உணர்ச்சிமிக்க தருணத்தை அக்கணத்தில் சந்தித்தனர்.ஒரு புகைப்படத்தின் முன் அந்த ஈழத்துச்சிறுமியும் தாயும் உறைந்துவிட்டனர்.சுவிஸ் தேசத்தில் கொட்டும் பனிமழையைவிட அந்தப்புகைப்படம் அவர்களை உறையவைத்திருந்தது.
அந்தப்புகைப்படத்தில் மிகவும் கொடுரமான மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருந்த ஈழநிலத்தில் மரணத்தின் ஆழத்தை தம்மை சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பது பற்றிய ஒற்றைப்பக்கத்தை கூட உணரமுடியாத ஒரு குழந்தை எறிகணைகள் பட்டு கொல்லப்பட்டுக்கிடந்த தன் தந்தையின் புன்னகை பறிக்கப்பட்ட முகத்தில் இறுதிமுத்தம் கொடுக்கும் காட்சி அங்கே புகைப்படமாக காட்சி தந்து கொண்டிருந்தது.உறைந்திருந்த கணம் விலக்கி தன் தந்தைக்கு இரண்டாவது முத்தத்தை ஜெனிவாத் தெருவில் அந்தச் சிறுமி கொடுக்கிறாள்.தாயின் கண்களில் தேவிபுரத்தில் தேங்கிய கண்ணீரில் மறுபாதி ஜெனிவாத் தெருவில் தேவிபுரத்தில் கொல்லப்பட்ட தன் கணவர் சத்தியமூர்த்திக்கு தன் இரண்டரை வயது குழந்தை முத்தமிடும் அந்த புகைப்படத்தின் முன் பொலுபொலுவென உதிர்கின்றது.

Wednesday, February 6, 2019

சொல்லக்கூடாத கதை-பொன்.காந்தன்




இப்போது சீனி உருளைக்கிழங்கு முட்டை வாழைப்பழம் சவர்க்காரம் சாம்பூ என்று கடைகளுக்கு ஒரு கிலோ அரைக்கிலோ காக்கிலோ ஒரு லீற்றர் என கணக்குகளை போட்டபடி ஒரு பக்கத்தில் வந்து நிற்கின்ற கவிதையை ஒதுக்கிவிட்டு மனசுக்குள் ஒரு பட்டியலை காவிக்கொண்டு கடைக்குள் சென்று நெரிசலுக்குள் சிட்டை போடுகின்றவரின் முகம் என்னை பார்த்து என்ன வேண்டுமென்று கேட்காதோ என்று எட்டி தலையை நுழைத்தபடி நிற்கின்றபோது தாய்மார்களோடு தந்தைமார்களோடு வருகின்ற சிறிய இன்னமும் பேச ஆரம்பிக்காத மழலைகள் என் மனசை இழுத்து சிறிது நேரம் தங்கள் கால்களுக்குள் கடவுளின் வாகனம் போல சிவனின் கழுத்தில் பாம்புபோல தலையில் பிறையைப்போல ஆக்கிவிடும்.எனக்கு பிறகு வந்தவர்கள் பொருட்கள் வாங்கி வீடுகளுக்கு போய்ச்சேர்ந்தாலும் என் பொருட்களை அப்பொழுதுதான் சரைகளில் கட்டிக்கொண்டிருக்கின்ற அனுபவம் எனக்கு மட்டுமல்ல உங்களில் பலருக்கும் நேர்கின்ற ஒன்றுதான்.
கடைகளுக்கு தாய்மார்களோடு வரும் மழைலைகளின் கைகள் காட்டுகின்ற திசைகளை பார்த்தால் அங்கு மனதை கவரும் நிறத்தில் ஏதோ தொங்கிக்கொண்டு இருக்கும் அது சிலவேளை மிளகாய்ப்பொடி பையாக கூட இருக்கலாம்.மழைலைகளின் கைகள் மனசு தேடுகின்றவை அழகிய வர்ணங்களும் அழகிய பொதிகளும்தான்.சில மழலைகள் கடைக்குப்போனால் எப்போதும் காட்டும் ஏதோ முட்டாயை கடைக்காரர் முந்திக்கொண்டு எடுத்துக்குடுத்து மழலைகளின் கனவு நாயகன் ஆகிவிடுவார்.கடைசிவரை மனதில் அழிந்துபோகாத நினைவுகளை தரக்கூடிய கடைக்காரர்களும் ஊருக்கு ஓரிண்டுபேர் இருக்கத்தான் செயவார்கள்.இல்லாவிட்டால் ஒருவராவது இருந்தால் நல்லதுதான்.அநேகம் கடைகளில் திருவிழாக்களில் பேரூந்து பயணங்களில் கண்களில்படும் மழலைகள் என்னையும் என் மழலைக்காலத்துக்கு அழைத்துச்செல்லும் சில கணப்பொழுதுகள் இனிமையானவை.நானும் இவ்வாறு சிறுவயதில் கைகாட்டியிருக்கின்றேன்.அநேகமாக இன்னமும் நினைவில் அழியாத நான் கைகாட்டியதில் ஒன்று நெக்டோ சோடா.
அநேகமாக அந்த மழலை வயதில் கடைக்கு அழைத்துச்செல்லப்படும்போது என் கண் குத்திட்டு நிற்பது நெக்டோவில்தான்.என்னவோ தெரியவில்லை.நான் நினைக்கின்றேன் அதன் நிறம்தான் என்னை கவர்ந்திழுத்துள்ளது.அதன் சுவை பற்றி அறிய நெடுநாட்கள் ஆயிற்று.பின்னாளில் கவர்கின்ற நிறங்களுக்கு பின்னால் உள்ள தத்துவார்த்தங்களையெல்லாம் அனுபவத்தில் கண்டவனாகிவிட்டேன்.கடையில் இருக்கின்ற நெக்டோ அத்தனையையும் குடித்தால் என்பதுபோல அந்த அவா அன்று இருந்தது.ஆனால் எனக்கு கிடைத்ததோ ஓரேஞ் பார்லிதான்.வீட்டில் அப்பருக்கு வாயில் பாடமான ஒரே சோடா ஓரேஞ்பார்லிதான்.அம்மா ஒரு மிடறு குடித்துவிட்டு குடி என்பார் என்னை நானும் ஒரு இரண்டு மிடறு குடித்துவிட்டுகொடுப்பேன்.மிகுதி அப்பரின் அண்ணாக்குக்குள் முடிந்துவிடும்.பேருந்தில் கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு பருத்தித்துறையில் போய் இறங்குவதற்குள் அன்றைய சிரிபி பேரூந்தின் டீசல் புகைமணத்தில் எப்படியோவது கொடிகாமம் போவதற்குள் இரண்டு முறை அப்பாவின் வேட்டியில் சத்தி எடுத்துவிடுவேன்.கொடிகாமத்தில் அப்பா இறங்கி கையில் ஓரேஞ்பார்லியோடும் வடையோடும் வருவார்.பிறகு தட்டி வானில் பயணம் தொடரும்.
பேருந்துப்பயணத்தின்போதும் எப்போதாவது காய்ச்சல் வருகின்றபோதும் இடைவிடாத சத்தி எடுப்பது எனது தேசிய குணமாய் இருந்தது.அதனால் பேரூந்து பயணம் என்று வீட்டில் சிறுவயதில் புறப்பட்டாலே எம கண்டம் போவதுபோல இருக்கும் சிலவேளை ஒரு நெக்டோ சோடாவோடு ஏறியிருந்தால் சத்தி எடுத்திருக்கமாட்டேனே என்னவோ.காய்ச்சல் வருகின்றபோது என்னுடைய கசக்கும் வாயக்கு வழமைக்கு மாறாக நெக்டோவின்மீது அதிக வேட்கை தோன்றும்.ஆனாலும் நெக்டோ கிடைக்காது.பிளேன் சோடா வரும்.அதைவிட ஓரேஞ்பார்லி மேல்.ஆனால் காய்ச்சலின்போது அதுவும் கிடைக்காது.அது குடித்தால் சத்தி வருமாம் என்று எனக்கு பிளேன்சோடாவே சிபார்சு செய்யப்படும்.சரி நெக்டோ பைத்தியமே எப்போதுதான் நெக்டோவை குடித்தாய் என்று நீங்கள் என்னை கேட்டே ஆகவேண்டும்.
ஆம் என் கனவு பானமான நெக்டோவை என் பழலை பருவத்தின் முடிவை நோக்கிய நாட்களில் எங்கள் அயல்வீட்டு அக்காவின் சாமத்தியவீட்டில் பரிமாறியபோது அருந்தினேன்.அந்த முதல் அனுபவத்திற்கு வார்த்தை இல்லை.இன்று என் வார்த்தைகளில் அதை எழுதுவது ஆனால் வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட விழாவில் இந்திரலோக மங்கை ஒருத்தி அந்த தேவபானத்தை எடுத்து வந்து முன்னே நின்றாள் என்றே எழுதவேண்டும்.இப்போதும் நெக்டோ கடைகளில் பெரிய இறப்பர் போத்தல்களில் என்றெல்லாம் வந்துவிட்டன.நான் பார்த்த அந்த நெக்டோ யானைப்போத்தல்.இப்போது செத்தவீடுகளில் சுடலையில் பிரேதத்தை எரித்தவிட்டு திரும்புகின்றபோது உரித்துக்காரர்கள் வந்தவர்களுக்கு சோடா வழங்கும் பண்பாடு ஒன்று நிலவுகின்றது.சுடலைக்கு போகும் சந்தர்ப்பங்களில் இப்போதும் என் கண் சிறிய நெக்டோவை தேடி எடுக்கும்.இருந்தும் அந்த மழலை வயதின் நெக்டோ இது இல்லை என்பதுபோலவே இருக்கும்.
இந்த நெக்டோ கதையை எப்போதாவது கடைகளில் மழலைகள் கைநீட்டக்காணும் போது அறிமும் இல்லாவிட்டாலும் அதன் தாய்க்கோ தந்தைக்கோ ஒரு புன்னகையை உதிர்ந்துவிட்டு என் நெக்டோ ஆவல் கதையை சொல்லிச்சிரிப்பேன்.எனினும் ஒருநாள் நிறைய தாய்மார்கள் இருந்த சந்தர்ப்பத்தில் குளிர்பானங்கள் பரிமாறப்பட்டபோது அந்த சாமத்தியவீடுபோலவே நெக்டோ வந்தது எடுத்து அருந்திவிட்டு என் நெக்டோ கதையை என்னையறியாமலே சொல்லிச்சிரித்தபோது அருகில் இருந்த தலையில் நரை தழுவிய தாயின் கண்களில் கண்ணீர்.என்னுடைய கடைசிக்கும் இந்த சோடா எண்டால் பைத்தியம்.எங்க இருக்குதோ என்ர பிள்ளை என விம்மத்தொடங்கினாள் அந்த தாய்.அவளின் கடைசி மகனை காணவில்லை என உணர்ந்தேன்.போரின் பின் சொல்லக்கூடாது கதைகளில் என் நெக்டோ கதையையும் சேர்த்துக்கொள்கின்றேன்.

கறுப்பு நாளுக்கு அடுத்த நாள்-பொன்.காந்தன்


அது ஒரு காலம்
அந்த அறிவிப்பு எங்கிருந்தோ வரும்
பழைய குடைச்சீலையை கிழித்து
கறுப்புக்கொடி கட்டிய காலம்
பேரூந்துகள் ஓடாது
அன்றன்று சீவியப்பாட்டுக்கு கொடுக்கும்
கிடுகுக்கடையை கூட கிழவன் பூட்டியிருக்கும்
வீதி வெறிச்சோடியிருக்கும்
நாய்கள் அன்றைக்கு சாகவாசமாய்
வீதியில் படுத்துக்கிடக்கும்
ஊளைகளும் இடும்
நிசப்தமான வீதியில்
பொலிஸ் ஜீப் உறுமிச்செல்லும்
ஒரு பரபரப்பு தோன்றி மறையும்
ரயர்கள் எரிக்கப்பட்டதாய்
வானொலி செய்தி சொல்லும்
கர்த்தால் பகிஸ்கரிப்பு
என்ற சொற்களின் பின்னால்
அடக்கப்பட்ட ஒரு இனத்தின்
உணர்வு வெளிப்பாடு அழகாக இருக்கும்
அது எதிரிகளுக்கு ஒரு அச்சத்தை அறிவிக்கும்
அடுத்து ஏதும் நடக்கப்போவதான
ஒரு கதையை சொல்லும் வல்லமை
அந்த நாளுக்கு இருந்தது
அதற்கு பின்னால்
ஒரு உன்னதமான கொள்கை
அடைகாத்துக்கொண்டிருந்தது
கர்த்தாலுக்கு அடுத்தது என்ன
அதற்கு அடுத்தது என்னவென்று
உணர்கின்ற ஒரு காலத்தில்
எதற்கும் தயாரான ஒரு வேட்கை
எல்லோரோடும் பயணிக்க தயாரானது
எல்லோரும் அதோடு
பயணிக்கவும் தயாரானார்கள்
அது ஒரு காலம்
அக்காலத்தில் கர்த்தால் என்பதை உணர
முற்றத்தில் இறங்கி
வேலிப்பொட்டால்
வீதியை பார்த்தாலே போதுமாயிருந்தது
இன்றைக்கு
இன்று கறுப்பு நாள் என்பதை உணர
நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருந்தது
எனது நிலத்தின் ஒரு ஊரைவிட்டு
இன்னொரு ஊருக்குக் கூட போகவேண்டியிருந்தது
வெகுதூரத்தின் பயணத்தின்போது
இன்று கறுப்பு நாள் என்பதை
எதுவும் உணர்த்தவில்லை
பேக்கரி வான்
நேற்றுப்போலவே ஒலிஎழுப்பி சென்று கொண்டிருந்தது
துணிக்கடைகளில்
பெண்களும் ஆண்களும் நிரம்பி வழிந்தார்கள்
பேரூந்துகள் வழமைபோலவே
ஒன்றை முந்தி ஒன்று ஓடிக்கொண்டிருந்தன
வழமைபோல
சில இடங்களில் வாகன நெரிசலிருந்தது
கோட்டல்களில்
நேற்றுவந்து படப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன
நான் அடித்துச்சொல்வேன்
ஒரு குடைச்சீலை கிழித்த நாளாக இது இல்லை
எங்கள் கறுப்பு நாளை சொல்ல
எங்கள் வாசலில் இருந்தும்
நெடுந்தூரம் போகவேண்டிதாயிற்று
கறுப்பு நாளுக்கு அடுத்த நாளை
என்னால் சொல்லமுடியவில்லை

நான் ஞானம் பெற்ற இரவு-பொன்.காந்தன்


இரவு முழுக்க மேசைக்காலோடு
விலங்கு பூட்டி என்னை கட்டிப்போட்டிருந்தார்கள்
திரும்பியோ புரண்டு படுக்கமுடியாதபடி
விலங்கு அவதிப்படுத்தியது
சிங்களவர்களை புரிந்து கொள்ளவும்
சிங்களவர்களை பற்றி சிந்திக்கவும்
சிங்களவர்களை பற்றி
வரலாறுகளில் படித்தவற்றை
சரியா தவறா என நிதானித்துக்கொள்ளவும்
அந்த இரவு எனக்கு வரமாகவும் இருந்தது
புத்தர் என்ற சித்தார்த்தனும்
அவ்வாறான ஒரு இரவில்தான்
எழுந்து நடக்கத் தொடங்கினார்
புத்தரை வணங்குபவர்கள்
எழுந்து நான் நடந்துவிடாதபடி
எனக்கு விலங்கு பூட்டியிருந்தார்கள்
காலையில் நான் காலைக்கடன் கழிக்கும்போது
ஒரு சிங்களவன் காவலிருந்தான்
பிறகு ஒரு மூலையில் குந்தியிருந்தேன்
ஆண் பெண்ணென என்னை பார்த்துக்கடந்தார்கள்
அவர்கள் பார்வையில்
ஒரு சகோதரனை பார்ப்பதுபோல இருக்கவில்லை
ஒரு மிருகம் இரையை பார்ப்பது போல இருந்தது
பிறகு இன்னொரு அறைக்கு நடக்கச்சொன்னார்கள்
அங்கு குந்தியிருந்தேன்
அங்கு என்னோடு சகோதரனாக பழகுவதற்கு அல்ல
என்னை பற்றி அறிவதற்காக
தமிழ் கற்ற ஒருவன் விசாரணையை தொடங்கினான்
அவன் என்னை தள்ளிவிழுத்தி
சப்பாத்துக்கால்களால்
என் நெஞ்சில் ஏறி மிதித்து தாக்கினான்
சுற்றி நின்று ஆண்களும் பெண்களும்
அவர்களது மொழியில் பேசி சிரித்தார்கள்
அதனால் சிங்களமும் கூட
எனக்கு ஒரு சகோதர மொழியாய் அல்ல
எதிரியின் மொழியாய் தெரிகின்றது இன்றுவரை
பிறகு சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டேன்
மறுநாள் எனக்கு ஆவணம் ஒன்று தந்தார்கள்
அதில்
புலிகளையும் பயங்கரவாதத்தையும்
நான் தூண்டுபவனாக சித்தரிக்கப்பட்டிருந்தேன்
1979ம் ஆண்டின் பயங்கரவாத சட்டத்தின் கீழ்
2009ன் பின் நான் சிறை வைக்கப்பட்டிருந்தேன்
சிறீலங்காவின் எழுபத்தோராவது சுதந்திர தினத்தில்
அறுபத்தைந்தாவது சுதந்திரதினத்தில்
சிறையில் இருந்ததை நினைக்கின்றேன்
அன்று கிரிபத் தந்தார்கள்
தமிழர்களை சிறையில் வைத்தபடி
அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்
இன்றும் அப்படித்தான்
அநேகம் நான்
சிறையில் என்னை சப்பாத்துக்கால்களால்
மிதித்து தாக்கிய
அந்த சிங்களவன் ஊடாகவே
சிங்கள மக்களையும் பார்க்கிறேன்
என்னை அவ்வாறு படைத்திருப்பதும் அவர்களே!
இவ்வாறு நான் மட்டுமா!

Saturday, February 2, 2019

பனிக்காட்டு பனைகள்-பொன்.காந்தன்


சனி மாற்றம் நல்லதென்று
சாதகத்தில் சொல்லக்கேட்டு
பாதகமில்லையென்று
பறந்தாயன்று பனி நாடு ஒன்றுக்கு
கடன் பட்ட பணத்தை
திருப்பியுடன் தருவேனென
உடன் பட்டுப்போயங்கு
உழைப்புத் தேடினாய்
தமிழ் மட்டும் தெரிந்த நீ
திடங்கொண்ட மட்டும்
திக்கிதிக்கியொரு மொழியை
தினமொன்றாய் விழுங்கி
கைப்பாசையோடு முன்
ஒரு காலத்தை தொடங்கி நின்றாய்
சறங்கட்டி வெறும் மேலில்
தண்ணிவார்க்கும் உனக்கு
பனங்கட்டி போல் அளவில்
பனிவிழும் தேசத்தில்
அடங்கிப்போய் ஆடைக்குள்
ஆள் மாறலானாய்
வெண்கட்டி வயல்களாய்
வீதியெங்கும் குவிந்த
பனிக்கட்டி சறுக்கி
பழுவில் அடிபட்டால்
சுடுதண்ணி வைத்து
ஓத்தித் தடவுதற்கும்
ஒருவரும் கிடையாது
அப்புவின் பனந்தோப்புள்
அதிகாலை போய்க்குந்தி
பப்பியும் தின்ன
பழகிய உனக்கு
பொத்திய அறைக்குள்
புதுவிதமாய் குந்தி
ஒருவிதமாய் கழுவி எழும்ப
பத்தியப்படாமல்
பல நாளாய் அவதிப்பட்டாய்
முத்திய மாசி
பனியொன்றே குளிரென்று
சித்தியின் கவுணை
தலையில் போட்டபடி
புல்லுக்குள் கால் குளிர
போய்வந்த உனக்கு
பல்லுக்குள் இரத்தம்வர
படுகுளிரை காண்கையிலே
சன்னியொன்று வந்து
சமாளித்து நிமிர்ந்து நின்றாய்
கன்னியொன்றை ஊரில் கண்டு
காதலை சொல்வதற்காய்
எண்ணிய நாட்பொழுதில்
வன்னியிருந்து புறப்பட்டு
வாழ்க்கைமுறை வேறாகி
குந்தி இருந்து யோசித்தாய்
கூடியிருந்து மதவில்
கும்மாளம் அடித்துபின்
ஏழெட்டு மணிக்கிரவு
புட்டும்முட்டைபொரியலுமுண்டு
கட்டிலில் புரண்ட உனக்கு
தட்டி எழுப்பவும் ஆளின்றி
தடுமாறி எழும்பி
வெட்டியாய் இருக்க வழியின்றி
ஒரு வேகத்துள் தொலைந்தாய்
மொட்டையும் தலையில் விழ
முகமும் வெளிறிப்போக
பெட்டையள் இனி விரும்புவாரோவென்று
கட்டிளங் கனவு கவலையுற
வட்டியோடு சேர்த்து
பட்டகடனை தரட்டாமென
கெட்ட சகுனங்களாய் கடிதங்கள் வர
கையிலுள்ள வேலையொடு
இன்னொன்றையும் இழுத்துப்போட்டு
உழுத்துப்போனது உன் இளமை
பார்க்க அழகான
பழுத்த இலைகள் மத்தியில்
எடுத்த படமொன்றை
ஊருக்கு அனுப்பிவிட
குந்தியிருந்து அயலும் சேர்ந்து
கொழுத்திட்டான் பெடியன் என்றும்
குண்டாகிவிட்டான் என்றும்
பெண்சாதி ஒன்றை உனக்கனுப்பாமல்
பிரமச்சரியத்துள் உழலவிட்டு
மண்ணாங்கட்டி கதைகதைக்கும்
மனசுகளை நினைத்து நொந்தாய் நீ
பள்ளி நண்பன் பற்குணம்
வள்ளியம்மையின் பெட்டையோடி
பெற்ற பிள்ளைகளில் ஒன்று
பெரிய பிள்ளையாகியிட்டுதாம் என அறிய
நல்ல தண்ணிக்கிணற்றடியில் உனைக்கண்டு
நாணிப்போன நாமகளை தவறவிட்ட
எண்ணம் வந்து வதைத்துக்கொல்லும்
எப்பவேனும் இருந்து எடுக்கப்படும்
ஊர் போனில்
அக்கா சின்னக்கா அம்மா குரல்களைவிட
அலாதியாய் கேட்கும் அண்டங்காக்கா
கோழிச்சத்தம்
குக்குறுப்பான் கோயில் மணி நாதஸ்வரம்
அன்று முழுக்க உன் வயதை
அரைவாசியாய் குறைத்து
சின்னதாய் ஒரு கவிதை எழுதவும் வைக்கும்
பட்ட கடன்கள் அடைத்தபின்
பஞ்சலிங்கம் அவர்தான் உன் அப்பா
ஆண்டுக்கொன்றாய் ஆயத்தம் செய்த
அக்காமார் நான்கை
நல்ல இடத்தில் கட்டிவைத்து
பக்கோ போட்டு பழைய வீட்டையுடைத்து
பக்கம் முன்பின் வேலிகளை
கிடுகை பிடுங்கி எறிந்து மதிலாக்கி
பெயின்றும் அடிக்க முயன்ற உன் வாழ்க்கையின்
பத்திருபது வருடங்களை
குத்துவெட்டாய் பார்த்தால்
நீ ஒரு ஓ பொசிற்றிவ் ரகம்
சாதகத்தில் சனி பாதகமில்லையென
பறந்தது என்னவோ
வீட்டுக்குழைத்து விட்டு வந்து
ஊரில் இருப்போமென்றுதான்
இருந்தும்
ஈன்ற மண்ணின் போராட்டம்
ஏங்கி நின்றபோது
வாங்கியுண்ணுவதை உடுப்பதை
பாதியாய் குறைத்து
தாங்கிநிற்க தோளையும் கொடுத்த
கொள்கையால் நீங்கிவிட்டது
வேறு பல கனவுகள்
இன்னமும் நீ உழைக்கின்றாய்
ஓ வென்று கொட்டுகின்றது பனிக்கட்டிகள்
தாங்கிக் கொள்ளப் பழகிவிட்டாய்
நீ தமிழனாச்சே
உன்னிடம் இன்னமும் வாங்குகிறார்கள் ஊரில்
அதில் அரைவாசி
சேங்குகளாய் வளரும் இளசுகளின்
கஞ்சா போதைக்கும்
காவலி வேலைகளுக்கும்
சென்று சேர்வதை எண்ணினால்
உன் கொதியில்
அப்பனியுருகிப் பாயும் பேராறாய்!

அம்பிலாந்துறை கிழவி-பொன்.காந்தன்,


அம்பிலாந்துறை கிழவி
உன்னிடம் யாரும் கதை இப்போது கேட்பதும் இல்லை
நீயும் சொல்வதுமில்லை
கொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈசுவரனை
கும்பிட்டு கடந்து போகிற பலருக்கு
உனக்குள் உள்ள ஊருபட்ட கதை தெரியாது
எங்களின் கதையை சொல்லாமல்
பல கிழவிகள் போய்ச்சேர்ந்துவிட்டார்கள்
கிழவிகளிடம் கதை கேட்காவிட்டால்
எனக்கென்றெரு கதை இல்லை
என்னுடைய கதையை தொடங்கவேண்டிய இடத்தை
கிழவிதான் சொல்லும்
அம்பிலாந்துறை கிழவி நீயும் சொல்லிச்செல்
மட்டக்களப்பின் வர்ணனையை
வாவியில் இருந்துதான் தொடங்க பழகிவிட்டோம்
கிழவிகளிடம் இருந்து தொடங்கலாம்
கிழவிகள் எங்கிருந்தோ இருந்து
ஒரு ஊரின் கதையை தொடங்கும்
அது தான் உண்மையான மட்டக்களப்பு
அம்பிலாந்துறை கிழவி
நீ பலமுறை வாழ்நாளில்
உன் வீட்டில் இருந்தது கிடையாது
உன்னை உன் வீட்டில் இருக்க
சிங்களப்படை விட்டதும் இல்லை
வயல்களுக்குள் ஓடி ஒழித்து இருந்தாய்
பின்பலமுறை
அவங்கள் வாறாங்கள் என்றவுடன்
வயல்களை கடந்து காட்டுக்குள் போய் மறைந்திருந்தாய்
உனது வீடும் ஊரும் சுற்றிவளைக்கப்பட்டபோது
வயல்கள் காடுகள் குன்றுகள் ஆறுகள் வெளிகள் எல்லாம் கடந்து
நாதியற்று நடுநடுங்கி ஓடினாய்
அகப்பட்டால் கற்பழித்து விடுவார்கள்
சுட்டுவிடுவார்கள்
கைதுசெய்து கொண்டு சென்று சித்திரவதை செய்வார்கள்
நிர்வாணப்படுத்தி கொடுமை செய்வார்கள்
வெட்டுவார்கள்
ஒவ்வொருமுறை ஓடும்போதும்
இந்த எண்ணங்கள் உன்னை கொடுரமாக துரத்தின
நீ திரும்பி வந்த காலங்களில்
ஒரு முறை உன் வீடெரிந்திருந்தது
இன்னொரு முறை உன் அயல் வீட்டு நண்பி
கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்
பிறிதொருமுறை உன் கணவன் சுட்டு எரிக்கட்டிருந்தார்
முடிவாக உனது ஊரே எரிக்கப்பட்டிருந்தது
ஊரில் பாதிப்பேர் கொல்லப்பட்டிருந்தனர்
ஆண்கள் இல்லாத ஊராக மாறியிருந்தது ஊர்
நீ எல்லாத்துயரும் சுமந்த கிழவியானாய்
இப்போது உனது ஊரின் கதையில்
நீ இல்லாது இருக்கிறாய்
நீ இல்லாத கதையில்
உனது ஊரும் இருக்காது
நீயில்லாத ஊரின் கதையில்
அழகான வாவியும்
இப்போது செல்போன் கோபுரங்கள் உயர்ந்திருக்கும்
அந்த வயல்களும்
வருவோரை வழியனுப்பி வைக்கும்
அரிவி வெட்டுக்காலத்தின் பின் தொடங்கும்
கூத்தாட்டப்பொழுதொன்றில்
ஊரிழந்த கதையை சலங்கைகளுக்கு சொல்
உனது கதை இன்றில்லையெனினும்
வாளேந்திய மன்னவனின் தாளத்துக்கு
தாளக்கட்டின் தாகமாக ஒருநாள் மாறும்

முத்துக்குமார் எரிந்த மாதம்-2009.01.29-பொன்.காந்தன்




முத்துக்குமார் எரிந்திருக்ககூடாது.இரக்கமுள்ள தீவிரமான கொள்கையுடைய ஒரு இனப்பற்றாளன் இருந்திருக்கவேண்டும்.அப்பாவித்தனமான ஆனால் ஆழமாக தன்னினத்தின் மீதுள்ள நம்பிக்கையில் தன்னை தீயில் அணுஅணுவாக கருக்கிக்கொண்ட ஒருவனை போற்றுவதற்கும் அவனது மகத்துவத்தை சொல்வதற்கும் வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கின்றேன்.முத்துக்குமார் எரிந்த இந்த ஜனவரியில் 2009ல் முத்துக்குமாரை ஏந்தி நின்று புகழந்தேத்த எனக்கு அவகாசம் இருக்கவில்லை.ஜனவரியில் ஒரு அதிகாலை கிளிநொச்சி பட்டிணத்துக்கு மிக நெருக்கமாக சரமாரியான துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டுக்கொண்டிருந்தன.சன்னங்களும் என் முற்றத்திற்கு மேல் காற்றை கிழித்து சீறிச்செல்வதை உணர முடிந்தது.முன்னைய இரவில் எறிகணைகள் அதிகமாக பரவலாக கிளிநொச்சி பட்டிணத்தை அண்டி வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன.அநேகமாக இரவு முழுவதும் பதுங்குகுழியின் வாசலிலேயே குந்தி இருக்க வேண்டியிருந்தது.வேவு விமானங்கள் இடைவிடாது சுற்றிக்கொண்டிருந்தன.குண்டு வீச்சு விமானங்கள் இரணைமடு காட்டுப்பகுதிகளை இலக்கு வைத்து வெளிச்ச குண்டுகளை பாய்ச்சி குண்டுகளை பொழிந்து கொண்டிருந்தன.நாய்கள் அலமந்து குரைத்துக்கொண்டிருந்தன.கிளிநொச்சியில் இருந்தும் மக்கள் வேறு ஊர்களுக்கு போகும் பொழுதுகள் ஆரம்பித்து விட்டதை அந்த இரவுகள் எனக்கு உணர்த்தின.
கிளிநொச்சியை நான் இழந்துவிடுவேன் என நான் கனவிலும் நினைத்தது இல்லை.கிளிநொச்சி கட்டிடங்களால் அல்ல புலிகளின் மக்களின் நம்பிக்கையால் எழும்பியிருந்த வீழ்த்தப்படமுயாதது எனும் பட்டணமாக மாறியிருந்தது.கிளிநொச்சி உலகின் முக்கிய நகரங்களின் ஒன்றாக மாறியிருந்தது.பிரபாகரனின் நிழல் அரசாங்கத்தின் நிர்வாக மையங்கள் திரண்ட பட்டிணமாக இருந்தது.தமிழனுக்கு என்ற ஒரு நாடு இருப்பதுபோலவே எல்லாம் நடந்துகொண்டிருந்தது.நானும் பிரபாகரன் கட்டியெழுப்பிய தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறையில் பணி செய்து கொண்டிருந்தேன்.எனது தமிழீழ அரசாங்கமே என்பதான நம்பிக்கை என்னையறியாமலே என்னில் ஊறிப்போயிருந்தது.அரசாங்க உத்தியோகம் என்ற ஒன்று பற்றி நான் நினைத்தது இல்லை.இந்த தருணத்தில்தான் முத்துக்குமார் எனது பட்டிணங்களில் நாங்கள் கொல்லப்பட்டிருக்கின்றோம் என துயருற்று தமிழகத்தில் எரிந்துகொண்டிருந்தான்.
சேரன் சோழன் பாண்டியன் மருதம் நெய்தல் இளவேனில் இளந்தென்றல் வன்னியன் சுவையூற்று நடுவப்பணியகம் மடுவம் ஆயம் பணியகம் பணிமனை போக்குவரவு கழகம் காவல்துறை நீதித்துறை எழிலகம் கலையகம் இவ்வாறு பல பொற்காலப்பெயர்களால் நிறைந்திருந்த கிளிநொச்சி பட்டிணத்தை நான் இழந்துகொண்டிருப்பதுபோல உணர்வு தொற்றிக்கொண்டது.பட்டணம் வெறிச்சோட ஆரம்பித்திருந்தது.அந்த பொழுதுகளில் ஒரு மாலையில் ஊடகத்தின் செய்திப்பகுதியில் அன்றைய செய்திகள் செய்தி ஆசிரியர்கள் தொகுப்பாளர்களுடன் பேசிக்கொண்டு பணியில் இருந்தபோது அதிகாலை கேட்ட வெடிச்சத்தங்களுக்கு காரணம் அறிவியல் நகருக்குள் ஏறிய படையினருடன் புலிகளுக்கு வெடித்த கடும் சமர் என்பதை அறிய முடிந்தது.அதுவரை படையினர் மிகத்தொலைவில் நிற்கிறார்கள்.எறிகணைகள் ஆனையிறவில் இருந்து வீசப்படுகின்றன என்ற நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது.பிறகான நாட்களில் கிளிநொச்சிக்கான முற்றுகை சமர் உக்கிரம் பெறத்தொடங்கியது.
முத்துக்குமார் எரிந்துகொண்டிருந்த 2009 ஜனவரியில் கிளிநொச்சியை விட்டு நடக்க விரும்பாத என் கால்களின் நடையின் கதையையும் கிளிநொச்சி எனும் நம்பிக்கையை இழக்கவிரும்பாத எனது மனத்தின் கையறு நிலையின் கதையையும் காவிக்கொண்டு எனது அகதிக் கதை தொடங்கியது.பரந்தனை கடந்துபோய் முரசுமோட்டை வயல் கரையில் குந்தி இருந்து கொண்டு கிளிநொச்சி பட்டணத்திசையில் பார்த்தேன். பட்டணத்தில் மேல் வட்டமிட்டு குண்டுகளை கொட்டும் விமானங்கள் பதிந்து எழுந்துகொண்டிருந்தன.விமானங்களை நோக்கி புலிகளின் விமான எதிர்ப்பு படையின் சன்னங்கள் பாய்ந்துகொண்டிருந்தன.கிளிநொச்சி பட்டிணத்தின் மேல் புகை மண்டலம் நிரம்பி இருந்தது.இரவு கிளிநொச்சி பட்டணத்தின் மேலான வானம் தீப்பிழம்புளால் நிரம்பி வழிந்தது.தமிழர் இழக்க விரும்பாத ஒரு பட்டணத்தின் சமரை பார்த்துக்கொண்டிருந்தேன்.தைபொங்கலில் எனது கிளிநொச்சி பட்டணத்தின் முற்றங்களில் குண்டுகள் வீழ்ந்துகொண்டிருந்தன.வயல்களில் எறிகணைகள் வகைதொகையின்றி வீழ்ந்து எரிந்துகொண்டிருந்தன.தெருக்களின் மாடுகள் கால் நடைகள் செத்துக்கிடந்தன.வளர்ப்பு நாய்கள் அலமந்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன.எடுக்கக்கூடிய எல்லாவற்றையும் ஏற்றிச்சுமந்து காவிக்கொண்டு மீண்டும் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் கிளிநொச்சி பட்டிணத்தை மக்கள் இழந்திருந்தனர்.கிளிநொச்சி படையினரிடம் வீழ்ந்துகொண்டிருந்தது.
முரசுமோட்டையை கடந்து கண்டாவளையில் பயணித்தபோது கண்டாவளைச்சந்தியின் விமானங்கள் தாழ்வாக பறந்து குண்டுகளை வீசிச்சென்றன.அந்த சந்தி சின்னாபின்னப்பட்டு விட்டது.அச்சந்தியில் வழமையில் இருக்கும் கிராமத்து வாசனைமீது கந்தகமணம் பரவியது.அந்தச்சந்தியும் வெறிச்சோடத் தொடங்கியது.
முள்ளிவாய்க்காலை நோக்கிய பயணம் தொடங்கியது.முத்துக்குமார் எரிந்து கொண்டிருந்தான்.முத்துக்குமார் தன்னுடலை தீயிற்கு இரையாக்க முன் எழுதிய அவனது இறுதிக்கடிதம் ஒரு தற்கொலையாளியினது அல்ல ஒரு மிக உன்னதமான தற்கொடையாளனது என்பதை உணர்த்துகின்றது.குற்றுயிராக வைத்தியசாலைக்கு கருகிய அவனைஎடுத்துசென்றபோது அவனிடம் நீ புத்திசாலியாக இருக்கிறாய் ஏன் இவ்வாறு எரிந்தாய் எனக்கேட்டபோது அந்த மகத்தான பிறவி அளித்த பதில் ஈழத்தில் தமிழினத்தின் புத்திசாலிகளும் பற்றாளர்களும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களை விடவா என உயிர் மேலாது என பதிலுரைத்தது.
இன்றைய நிலையின் முத்துக்குமார் நினைத்த புத்தி சாலிகளாக ஈழத்தமிழினம் நாம் இருக்கிறோமா

நாற்பத்தெட்டின் சுதந்திரமும் நாலுவகைப்படி கலியாணமும்-பொன்.காந்தன்


இன்னமும் நாதியற்ற குரல்களோடு விடிகின்றது காலை
சேதி ஊடகங்கள் பாதியில்
ஆதிவாசி முறைப்படி அவிட்டு எறிந்துவிட்டு
அறுவானின் கடைசி
கலியாணம் கட்டாத முறை மட்டும் மிச்சம்
மொங்கோலியா முறைப்படி
முதலிரவுக்கு ஆசையென்கிறான் முருகேசின் பெடி
பங்காளி அற்புதம் என்கிறான் இன்னொருவன்
தமிழ்ச்சாதியாம்
அந்த தரித்திரம் பிடிப்பார்க்கு பெண் கொடுத்தவர்கள்
பிரித்து மேய்கின்றனர் செய்திகளில்
டிஸ்கவரி தோற்றுவிடும்
சுன்னத்து முறைப்படி நடந்திருந்தால்
கட் பண்ணுவதை கலர் படங்களில் போட்டு அசத்தியிருப்பர்
உரிந்து ஆடையில்லாமல் நின்று
இதுவும் ஒருமுறையென்று செய்தால்
பறந்து பறந்து படமெடுத்து திறந்து காட்டப்பலபேரிங்கு
கூதிப்பயல்கள் குலவினால் நமக்கென்ன
எருமை மாட்டுக்கு இளவரசி தேடுவதுதான் எமக்கு முக்கியமா
நெத்துக்கு விட்டால்தான் என்ன
பத்தரை மாத்துத் தங்கங்களா
பக்கம் பக்கமாய் படம்போட்டு
முதலிரவில் முள் குத்தியதை முகப்புச்செய்தியாய் போட
வெக்கமில்லை எங்கள் சில வெங்காயங்களுக்கு
பத்தி எரிவார்
பால்வடியும் பிஞ்சுகளுக்கு வாய்க்கரிசு போட்டவனின் வாரிசுக்கு
அட்சதை போட அவதிப்படும் சென்மங்கள்
தமிழினத்தில் எதற்கு செத்தே போகலாம்.
முள்ளிவாய்;க்காலில் செத்துப்போனதில் பல
உயிரோடு இருந்தால்
செல்வச்சந்திதியிலோ மடுமாதா முன்னிலையிலோ
கோணேசரின் கொலுமண்டபத்திலோ
தாலி எடுத்து கட்டி தம்பிப்பாப்பா பெத்திருப்பார்கள்
எங்க விட்டார்கள் அந்த இளவுவிழுவார்
தனிக்கட்டையாய் கிடந்து தவிக்கின்ற பலரின் கண்ணீருக்கு
அந்த கொலைகார குடும்பம்தானே காரணம்
சிரந்தி கூட சொன்னாளா தன் கணவரிடம்
பாவம் அந்த தமிழ் பெண்களை கற்பழித்து
கையை கட்டி ஆடை களைந்து
சுட்டுப்போடாமல் பக்குவம்காக்க கட்டளையிடும்படி
செத்து எங்கள் செம்பருத்திப்பூக்கள் ரத்தத்தில் மிதக்க
பத்தி எரிவார் பால்சோறுண்டு கொண்டாடியதை மறக்கலாமா
நாற்பத்தெட்டில் இருந்து எங்கள் சனம் அழுகிறது
கேப்பாப்புலவில் காணியை விடு எனும் கூப்பாடு கேட்கிறது
சாப்பாடு இல்லாமல் அந்தச்சனம்
சரிந்து கிடக்கிறது தெருவில்
கபாலத்தை பிளந்து தமிழனுயிர் குடித்த வெறியர்களுக்கு
பீல்ட் மார்சல் புறமோசன்
மிளகாய் தூள் அடிப்பவனுக்கு மினிஸ்ரர் தகுதி
பிறகு உள்ளுரில் நீதி உண்டா தமிழருக்கு
ஒரு வாய்ப்பாடு போலாகிவிட்டது காணாமல் போனோரை தேடுவது
எங்கள் வீர வரலாறு ஓய்ந்து பத்தாண்டு ஓய்கிறது
பயங்கரவாத்தை பாடையேற்றியதாய் பறை அடித்தவர்
இன்னமும் நந்திக்கடலோரம் கம்பி வேலி போட்டு காவல் இருக்கிறார்
தம்பி வந்தாலுமென்று தளம்புகின்றனர்
விம்மி உயிர்கள் இலட்சம் அடங்கிய நிலத்தில்
ஒரு விசுவரூபம் ஒன்று கெம்பி எழுமென
ஓர் அசரீரி அவர்களுக்கு கேட்கிறதுபோல்
இன்றில்லையெனினும்
ஈழத்தமிழனுக்கு இழைத்த கொடுரங்களுக்கு
எங்கள் சந்ததி முன் கைகட்டி நின்று
கருணையற்ற குலத்தின் வாரிசுகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்
நாம் மண்ணோடு மண்ணாக போய்விடுவோம்
அங்கும் போய் ஆன்மாவாய் மாவீரர்களுக்கு விளக்கேற்றுவோம்
விண்ணில் இருந்து
தாயகத்தில் வேங்கைக்கொடி பறப்பதை காண்பம்
இன்று மட்டுமென்ன
நமோ தாயே என சிங்கக்கொடியேற்றும்போது
கிளைமாக்ஸ் காட்சியில்
செக்கர் நிறத்திலே வேங்கை நடுவிலே ஏறுதுபார்கொடி
இப்படித்தான் அநேகமாய் ஈழத்தமிழினத்தின் ஏக்கம்
ஒருபோதும் ஒட்டாது சிங்கக்கொடி
ஓரத்தில் ஒரு மெல்லிய கோடாய் இருக்க நாம் தயாரில்லை
ஒரு தாய்நில விடுதலைக்காக உருக்கொண்டாடிய ஒரு இனம் நாம்
ஊன் உறக்கமின்றி வா பகையே பொருதலாம் என புலியாகி நின்றது
ஏன் இப்படி ஆயிற்று என இப்போதும் சிங்களபேரினவாதம் சிந்திப்பதில்லை
என் எம் பெரேரா சொன்னதையும் எடுத்துக்கொள்ளவில்லையன்று
அடிவாங்கிப்புலிகளிடம் அடங்கி வந்து அமர்ந்து பேசியபோது
அன்ரன்பாலசிங்கம் சொன்னதும் ஏறவில்லை
கையாலாகாத தமிழர் தலைவர்களோடு கண்ணாம்பூச்சி விளையாடி
பந்தியில் இருத்தி வடை பாயாசத்தோடு
கதையை முடித்து எல்லாம் சுபம்
சமஸ்டியை
அமத்தி வாசியுங்கள் ஆலோசனை உரைத்து
நரி ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடுகின்றது.
தமிழர் கோட்டைக்குள் நிலத்தை ஆட்டையை போட்டு
அரச மரத்தை நாட்டுகிறார் பிக்கு
வேட்டை ஆட புலி இல்லையெனும் துணிச்சல்
வேலிக்குள் வந்து நின்று சேட்டைகள் செருமல்கள்
பல்லியைக்கூட மிதிக்காத மெல்லிய குரல் என்றாலும்
சொல்லில் நாணயமுள்ள ஒரு செல்வாகூட இன்றில்லை
வல்லமை மிகுந்த பிரபாகரனை வழியில் தவறவிட்டோம்
சொன்னவைகள் எதுவும் அப்போது ஏறவில்லை
சோத்துப்பார்சலும் தண்ணீரும் தந்து
வட்டுவாகலில் வசுவில் ஏற்றி விசுவமடு கடக்கும்போது
சன்னல்வழியாக எட்டி சரித்திரங்கள் சல்லடையாய் கண்டபோதுதான்
கனபேருக்கு கனவு கலைந்து கறுக்கென்றிருந்தது இதயம்
அளக்கமுடியா பெருங்குழிக்குள் விழுந்த கதையது
இப்போது பள்ளிப்பெடியனும் தண்ணியடித்து ஆட
தடுமாறிப்போய் நிற்கின்றோம்
தப்பித்தவறி
கடிதம் குடுத்த சோடிகளை கண்டாலே
பறுவம்போல கதையை வளர்த்து காவடியாடிய ஊரில்
களுவா வந்து கஞ்சா விதைத்து கதகளியாடவிட்டு
ஒடுங்கி குறண்டி படுத்து எழும்புகின்றோம்
அப்பனே முருகனே என எழுப்பினால்
ஆண்மையை பெருக்க ஐந்துவழிகள் என
முகநூலில் முன்னுக்கு நிற்கிறது
நெடுநேரம் நிண்டுபிடிக்க வழிசொல்லும் வைத்தியரோடு
உறங்க அனுப்புகிறது ஊருப்பட்ட இணையங்கள்
எப்படி எல்லாம் எங்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது
வெண்டிக்காய் சாப்பிட்டால்
நல்ல முட்டை சத்தென்று சொல்ல
ஒரு ஊர்த்திண்ணையில் ஒருவரில்லை
கண்டிக்கவும் கன தரம் யோசிக்கின்றனர் பலர்
சண்டித்தனமாய் சாலச்சிறந்த கல்வி சித்திகளோடு
நின்று நிலைத்த இனம்
இன்று மண்டியிடுகின்றது பல மாயங்களுக்கு
மார்தட்டி சொல்லும்படியான மலைத்த புகழுக்குள்
இழுக்கு நேரும்படி
அழுக்குகளை கொட்டியுள்ளான் அடக்குமுறையாளன்
அவனுக்கு அதில் ஆயிரம் நன்மையுண்டு
இனி பல்லாயிரம் காலத்துக்கும் எழுந்துவிடமுடியாதபடி
ஈழத்தமிழினத்தை விழுத்திப்புதைக்க விளைகின்றான்
எல்லாளன் பண்டாரவன்னியன் பிரபாகரன் எந்த
வல்லாதி வல்லனும் தமிழினத்துள் இனிப்பிறக்க முடியாதபடி
தம்மால் முடிந்த எல்லா வித்தைகளையும் செய்கிறார்கள்
சுதந்திரம் என்ற பெயரில் எம்மை சுற்றி இருள்
சூரியனை சுற்றி கரிக்கட்டிகளின் கர்ச்சனை
அர்ச்சித்து ஆயிரமாயிரமாய் உயிர்படைத்த
இரத்த வரலாறு எம் பின்னே
கண்ணை செருகும்பொதெல்லாம்
காலத்தை தமிழக்குலமேயென கையெடுத்துக்கும்பிட்டால்
யாவும் சித்திக்கும்
அணைகட்ட முடியாத ஆழியின் பிரவாகங்கள் நாம்
அடிவேரில் நாம் ஆளப்பிறந்தவர்கள் என்றே சாசனம் எழுதப்பட்டிக்கிறது
எங்கள் ஆழவிடாய்க்கு இங்கெவனும் அரசியல் யாப்பு எழுதமுடியாது
ஆதி நிலத்தை கொடு அவ்வளவுதான்!
முதலும் முடிவுமாக திரும்ப திரும்ப இதையேதான் கேட்கவேண்டும்
தளம்பினால் எங்கள் தலைவிதி நிரந்தரமாய் இருளாகும்!

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...