Wednesday, January 2, 2019
வலம்புரியின் பாடல்-பொன்.காந்தன்
வலம்புரிச்சங்கில் கடலை பாடிக்கொண்டிருந்தேன்
மணலும் அலையும் சேர்த்து
கட்டுமரங்கள் ஓடங்கள் வலைகள் காத்திருப்பால்
அம்பா செய்தேன்
ஆண்கடலென்றும் பெண்கடலென்றும்
அடையாளம் வைத்து பா வாடை தைத்தேன்
கரையெலாம் கால்புதைய
கைகோர்த்தவளுடன் காதலை எழுதிவைத்தேன்
சிப்பிகளின் இரகசியத்தை
கிழிஞ்சல்களின் அழகை
பொத்திவைத்து அவளுக்கு பரிசளித்தேன்
நட்சத்திர மீன்களோடு விளையாடினேன்
நானே கடலின் இளவரசனென இறுமாந்திருந்தேன்
வசுதேவனுக்கு வழி விட்ட கதையில்
வாசுகிப்பாம்பை கயிறாக்கி கடைந்த புராணத்தில்
மோசேயும் அவர்தம் சனமும் கடந்த விவிலியத்தில்
புயலில் நடுவில் தோன்றிய அமானுஸ்ய கருணையில்
கடாரத்தை வென்ற சோழனின் மகிழ்ச்சியில்
அன்னபூரணி பாய்விரித்து பரந்த சிலிர்ப்பில்
என்னை மறந்தேன் என்பது உண்மைதான்
வ.வோ.சிதம்பரனாருக்கும் ஆழிக்குமரனுக்கும்
குற்றாலீஸ்வரனுக்கும் வசியப்பட்ட சமுத்திரத்தின் கரையில்
பெருமிதம் பொங்க காற்று வாங்கிக்கொண்டிருந்தேன்
காந்தரூபனும் அங்கயற்கன்னியும் வாழுகின்ற கடலென
ஒரு கோயிலாயும் வணங்கினேன்
காளைகள் பூட்டிய நெடுவல் காங்கேசன்
சலங்கை பூட்டிய இரட்டை திருக்கை வண்டிலாய்
சொல்லுக்கேட்ட நாணயத்தை
அலைகளுக்கும் பிணைத்து பிடித்திருப்பதாய்
கரையில் நடந்து கொண்டிருந்தேன்
எனக்குள் இருந்த மிடுக்கை
தொடுவானத்தை பாடச்சொல்லி கட்டளையிட்டேன்
கடல் கன்னியின் உதட்டில்
ஒரு முத்தத்தை பெற தவமிருந்தேன்
வாஸ்கொடகாமா கொலம்பசின் பாதையில்
யாருமற்ற தீவில் வீடு ஒன்று கட்ட
கனவுகள் கண்டேன்
கடலின் அடியில் மடியில்
வஞ்கங்களையும் மறைத்து வைத்தார்கள்
அங்கமெலாம்
அங்குலம் அங்குலமாய் கணக்கிட்டார்கள்
ஒரு நீர்குமிழி கூட
தம் கட்டளைக்கு மீறாது என்பதாய் ஆனார்கள்
கடலின் ஊழி பற்றி ஒருபோதும் நினைத்திலேன்
முத்துக்கள் மீன்களொடு
பொன்னந்தி கதிர்களொடு
மென் நிலவு நிழல்களொடு
மேனி சிலிர்க்கும் தென்றலொடு
ஊழியொன்றும் உண்டென பாடிவிடு புலவாவென
ஒரு பொழுது கசக்கி எறிந்து ஒரு காகிதமாய்
கடல் என்னை வீசிற்று
ஐயோ வென
அயலில் சொல்ல
ஆங்கேணையின் குழந்தையை
தூக்கிச்செல்ல
நினைப்பதன் முன்
மெய்யோ இதுவெனும்படி முடித்திற்று எல்லாம்
முடித்திற்று எல்லாம் கடல்
கரையெலாம் அழும் ஆயிரமாயிரம் சிப்பிகளால்
கடலினை பாடினேன் இன்று
அதுபோலொரு ஊழியை இனியும் தராதே கடலே!
நிலவின் நிழல் போதும்
அலைதரும் வருடல் போதும்
நுரைபோதும்
நுரைதரும் கவிதைபோதும்
மணல்போதும்
மணல்மேல் என் அமைதி போதும்
ஆம் என அசைத்து சவுக்கை
உன் அன்பை சொல் கடலே!
Subscribe to:
Post Comments (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...
No comments:
Post a Comment