Sunday, May 30, 2021

அசடுவழியும் முகம் வானம் முற்றம்-பொன்.காந்தன்


ஏதோ யோசனையில் முற்றத்தில்
அண்ணாந்தபோது
வானம்
என் புருவங்களை
வானவில்லாய் பார்க்கிறது
கிளிநொச்சி கடந்து
மாலைமங்கும் வேளையில்
ஆனையிறவுக்கு போகும்
நீர்க்காகங்களை
இமைக்காமல் பார்த்த விழிகளை
தொலைந்த நட்சத்திரமாய்
கண்டெடுத்த மகிழ்ச்சி அதற்கு
சீமெந்துப் பையவிழ்த்து
சேர்த்து கோர்த்து
முடிச்சிட்ட நூலிலும்
அம்மாவுக்கு தெரியாமல்
சிங்கர் மெசின்
பொவினுக்குள் உருவியதிலும்
விட்ட பட்டம்
தென்னையுயரம் பறந்தபோது
அடைந்த புளுகை
பெய்யாத மழைத்துளியாய்
மறைத்து வைத்திருக்கிறது
பிலாக்கொட்டை குருவிபிடிக்க
வேலிமரங்களுக்குள்
பதுங்கிய என்னை
நீல இளவரசியின்
செல்லப்பூனை தொலைந்ததாய்
சொல்கிறது வானம்
குளத்தடி மரங்களின்
சுற்றிக்கொண்டிருக்கும்
வெளவால்களின்
கொய்யாப் பழ வாசத்தை
மோப்பம் பிடிக்கும்
நினைவு கொத்தியாய்
நிற்க வைப்பதில் மகிழ்ச்சி
ஒரு பிறையாய்த் தேய்ந்து
துண்டுகளாய்
நிலாச் சோறிழந்து
குமிழிவிட்டுத் தவித்த
விண்மீனை தூண்டிலிட்டு
குனிந்து இமைக்காதிருந்தது
இன்று வானம்
மறுபடியும் குனிந்தேன்
தொலைபேசியின்
தொடு திரைக்குள்
புதையத் தொடங்கினேன்
ஒரு வேவு விமானம்
உனக்கு மேல்
ஓடிவிடு பதுங்குகுழியுள்
என் நாடி தொட்டு
தலை நிமிர்த்தி
சும்மா என்றது
மல்லிகை கொடியிடையில்
வானம்
அசடு வழியும்
முகத்தையும் பார்க்க
ஆசைப்பட்டிருக்கிறது

நகரத்து வாசிகளும் ஓரிரவும்-பொன்.காந்தன்

தொலை தூரத்து நண்பன் நேற்று

அழைப்பில் வந்தான்
லாக்டவுண் நலம் விசாரித்ததில்
கதை தொடங்கியது
எங்கள் சனத்துக்கு
ஒரு பானையும் அரிசியும்
இருந்தால் போதும்
எல்லாம் சமாளித்துக்கொள்ளும்
அவன் வார்த்தையில்
பழைய நாட்கள் தந்த நம்பிக்கை
இன்னமும் கலையாமல் இருந்தது
அந்த வார்த்தைகளில்
அப்பிக்கிடந்த புளுதியில்
திரும்பி நடக்க ஆரம்பித்தேன்
அவனும் நானும் சனமும் வாழ்ந்த
எங்கள் நகரம் நீண்டது
நெரிசலற்றதாயிருந்தது
நெடுங்காலமாய்
வாழைக்குலைகளும் வைக்கோலும்
ஏற்றிய மாட்டு வண்டிகள்
ஆறஅமர ஆடி அசைந்து
சாணமும் சலமும் விட்டு
சந்தைக்கு போக
பின்னால் எந்த வாகனங்களும்
நெடுங்காலமாய் காத்திருந்ததில்லை
கோண் அடித்ததில்லை
பின்னால் வந்த எவரும்
முட்டிவிடுவாரென
கைகாட்டியும் திரும்ப தேவையில்லை
லாண்மாஸ்டரின் ஓசை
அந்த நகரத்தை தனித்து நிறைத்தது
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும்
கருவாடும்
வெங்காயமும் புகையிலையும்
ஏற்றிய லொறிகள்
எங்கள் நகரத்து ஒரு திசையில்
பல மைல்கள் தூரத்தில் இருந்த
பதினெட்டாம் போர் ஏற்றத்தில்
முக்கி
தெருவை அழுத்தி உறுமும் ஓசை
பின்னிரவில்
தனி ஆவர்த்தனம் செய்தது
இரயில்களின் பயணம்
குயில்களின் ஓசை
நகரத்தின் ஓரத்திலிருந்த குளத்தில்
ரயரின் நீந்தியடி வலைகட்டி
மீன்களை ஒரு புறமாய் ஒதுக்க
கைகளால் தண்ணீர் அடிக்கும்
அந்தத் தாளங்கள்
நகரத்திலிருந்து கூப்பிடு தூரத்திலிருந்த
வயல்களில் மயில்கூட்டங்கள்
அகவும் ஓசைகள்
நகரத்து மரங்களில் நிரந்தரமாய்
தமது பூர்வீகத்தை ஆக்கிக்கொண்ட
வெளவால் எச்சத்தின் மணமும்
மாலையில் சிறகடித்து
மாந்தோப்புகளை
நோக்கியிடும் சத்தங்கள்
தனித்தனியே
நகரத்தின் அமைதியில் கேட்டுகொண்டிருந்தோம்
எதையும் எதுவும் குறுக்கிட்டதில்லை
காணாங்கோழிகளும்
சம்புக்காடும் நகரத்திலிருந்து
கிராமங்களுக்கு திரும்பும் தெருக்களை
இனியாக்கின
தினமும் இளமையாக்கின
நீண்ட நகரத்தில் சின்னசின்னதாய்
எல்லாம் இருந்தது
தேனீருக்கு அப்பு கடை
தெல்லியில் புத்தகசாலை
புடவைக்கடை
தாமரையிலையிலும்
வாழையிலும் உண்டு மகிழ சாப்பாட்டுக்கடை
நகரத்தின் மத்தியில்
பெரிய பெருந்திடல் மைதானம்
சின்ன சின்னதாய்
எல்லாம் இருந்தது
நான் எழுதிக்கொண்டிருப்பது
எங்கள் நகரத்தில்
சிவப்பு மஞ்சள்
கொடி பறக்கத் தொடங்காத காலக்கதை
அது பெருந்திடல்
அதில் விரும்பினால் விளையாடலாம்
புதனும் சனியும் சந்தை கூடலாம்
தேர்தல் காலத்தில்
கெலிகொப்ரர் இறக்கலாம்
ஜேஆர் ஜெயவர்த்தனாவும் வந்திறங்கலாம்
றோகண விஜே வீரவும்
மேடை போட்டு
நரம்பு புடைக்க பேசலாம்
மலேசியா வாசுதேவனும்
சவுந்தர்ராஜனும் கச்சேரி வைக்கலாம்
ஐம்பதிலும் ஆசை வரும்
பாட்டு பாடலாம் எங்கள் சனம் கேட்கலாம்
ஆணழகன் போட்டி நடத்தலாம்
அதில்
எங்கள் வேலாயுதத்தாரும் வெற்றியும்
எண்ணை பூசிய தேகத்தின்
மினுமினுப்பை காட்டலாம்
பயில்வான்வான் என்று பெயரெடுக்கலாம்
தனித்துப் போய் குந்தி
குளத்தில் இருந்து எழுந்துவரும்
குளிர்ந்த காற்றை அனுபவிக்கலாம்
எல்லாத்துக்குமாக அந்த மைதானம்
தன்னை கொடுத்திருந்தது
இன்னும்
அதில் ஏதும் கதைகள் இருக்கலாம்
என் முன்னவர்களுக்கு
அந்த திடல்
இன்னும் இனிப்பாயிருக்கலாம்
அதிகம் நடந்து போகும்
சனங்களையே நெடுங்காலம் கண்ட
பெருமைக்குரிய நகரமது
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில்
அது கமக்கார மக்களின் நகரமாக
கமக்காரர்களின்
அன்றாட கூலிகளின் பிள்ளைகளின்
பேராச்சிரியமாக அது இருந்தது
மரங்களுக்கு இடையில் கொட்டில்கள்
பள்ளிகளாய் இருந்தன
அபூர்வமாய் கற்களாலும் கட்டப்பட்டன
எங்கள் நீண்ட நகரத்தில்
ஓரிரண்டு
அடுக்கு தட்டு வீடுகள்
கடைகள் இருந்தன
அதில் பள்ளி சகபாடிகளும் இருந்தனர்
குடிசைக்கும் மாடிக்குமிடையில்
ஏற்றத்தாழ்வு இருந்ததில்லை
குடிசைக்குள் வந்து குந்தி
கஞ்சி குடிக்க தயராயிருந்தது
அடுக்குத் தட்டின் தங்க மனம்
கைபிடித்து அழைத்துப்போய்
படிகளில் ஏற்றி
மொட்டை மாடியில் ஏற்றி
அந்த நகரம்
தலை வாரியிருக்கும் அழகை
பார்க்கவைத்தது அன்று
இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னமே
எங்கள் நகரத்தில் இருந்த
நான் பாலர் படித்த பள்ளியின் முன்
பத்துப்பேர் சேர்ந்தாலும்
கட்டிப்பிடிக்க முடியாத மலைவேம்புகள்
வரிசையாய் நின்றன
அந்த நகரத்து வாசிகளின் பிள்ளைகள்
அந்த மரங்களுக்கு வைத்தபெயர்
பம்பரக்காய் மரங்கள்
எங்கள் நகரத்தில் மின்சாரம் இருந்தது
லக்சபானா என்று
எங்கள் நகரத்துகாரர் அழைக்கும்
மின்சார நிலையம் இருந்தது
நெடுங்காலமாயிற்று
நகரத்தை சுற்றியிருந்த சனங்கள்
மின்குமிழ்களின் ஒளி காண
அது பெரும் வரம்போல இருந்தது
ஆனால்
மின்சாரம் இல்லையே
ஏக்கம் இருந்தாய்
எனக்குத் தெரியவில்லை
அந்த ஏக்கங்களை மறைக்கும்
ஏதோ ஒரு மகிழ்ச்சி
எங்கள் நகரவாசிகளுக்கும்
அயல் கிராமங்களுக்கும்
நெடுநாளாயிருந்தது
பொழுதுபடும் பொழுது
கைவிளக்கு ஏறிவிடும்
மரங்களும் காற்றும் வயலும் நிறைந்த
அந்த நகரத்தின் எட்டுத்திசையிலும்
இராத்திரியை அழக்காக்கும்
அந்தக் கைவிளக்கு
குப்பி விளக்கு லாம்பு இப்படி
வசதிக்கு ஏற்றபடி
நகரத்தின்
எல்லைக்காடுகளை அண்டிய
சில கிராமங்களில்
இரவு பாலைக்கட்டையை மூட்டிவிட்டால்
விடியும்வரை அது விட்டு எரியும்
மறுபடியும் பம்பரக்காய் மரங்களுக்கு வருகின்றேன்
அண்மையில் நடிகர் விவேக் மறைந்தபோது
மரங்கள் பசுமை குளிர்மை என்ற வார்த்தைகள்
எங்கும் எழுந்து மறைந்தன
அப்போது என் நினைக்கு வந்தவை
எங்கள் நகரத்து பம்பரக்காய் மலைவேம்புகள்தான்
அன்றே அந்த மரங்கள்
அவ்வளவு பருத்து பெருத்து உயர்ந்தது எனின்
அது எப்போது நடப்பட்டிருக்கும் என்பதை
நினைக்கும்போது
நெடுங்காலத்துக்கு முன்
சொல்வதாயின்
என் அப்பாவும் அம்மாவும்
சிறுவர்களாகவோ வாலிபர்களாகவோ
இருந்த காலத்தில்
எங்கள் நகரத்தில்
மரங்களின் காதலர்கள் இருந்திருக்கிறார்கள்
நான் நினைக்கிறேன்
எங்கள் நகரத்து மனிதர்களின்
மரங்களின் மீதான
இயற்கை மீதான
புனிதக்காதலுக்கு வயது நூறுவரை
நாங்கள் நகரத்து பள்ளியில்
படிக்கும் காலத்தில்
பள்ளிவிடுமுறைக்கு முன்னதாகவோ பின்னதாகவோ
மலைவேம்புகளின் கீழ்
பனங்கொட்டைகள் கொட்டப்பட்டிருக்கும்
அந்த நினைவுக்கும் வயது
ஐம்பதுவரை
அதை கொட்டி பனை நடவைத்த
பெருமகனார் மில்க்வைற் கனகராசா
மறுபடியும் மின்சாத்திற்கு வருகின்றேன்
எங்கள் நகரத்து வாசிகளுக்கு
மின்சாரம் ஒரு கனவாக இருக்கவில்லை
வீட்டில் தொலைக்காட்சி இல்லை
வீட்டில் மரப்பெட்டியில்
அல்லது வேறு வடிவில்
வானொலி பெட்டி இருந்தது
அதற்கு இரண்டோ நான்கோ
எவெரடி பற்றரி போதுமாயிருந்தது
காலையில் பொங்கும் பூம்புனல்
மாலையில் பூவும்பொட்டும்
மங்கையர் மஞ்சரி
அப்துல்கமீதின்
லலிதாவின் பாட்டுக்கு பாட்டு
இரவு முகத்தார் வீடு
தணியாத தாகம் நாடகம்
ராஜேஸ்வரி சண்முகத்தின் குரல்
சிரிப்பதற்கு கோமாளிகள்
சற்சொருபவதியின் செய்தி
தேன் கிண்ணம்
தூக்கம் கண்ணைத்தழுவ
ஓலை அன்றேல்
புற்பாய் சாக்கு கட்டில்
திண்ணையில் படுக்கை
மின்குமிழ்களை
காணக்கிடைக்கும் நாட்கள்
இனம்புரியாத கிளுகிளுப்பு
அதுவும் நகரத்தின் மத்தியிலிருந்த
கோயில் திருவிழாவில்
பச்சை மஞ்சள் செவ்விளநீர் வண்ணத்தில்
தோரணம் வாழைகளோடு சேர்ந்து
ஒளிரும் ரியூப்லைற்று தரும்
பேரின்பத்தை நகரத்து வாசிகள்
ஆண்டில் ஓரிருநாட்கள் அனுபவித்தனர்
அனுபவத்தை தொடரலாம்.......

கையறு நிலை-பொன்.காந்தன்

கள்ளன் என்றார்கள்

கதவுக்கு பூட்டுப்போட்டோம்
கடிநாய் என்றனர்
கல்லைத் தூக்கினோம்
பிடயன் என்றார்கள்
தடியெடுத்தோம்
எலித்தொல்லை
இரவிரவாய்
தேங்காய் சொட்டோடு
தீர்த்துக்கட்டினோம்
கத்தரிக்குள் பட்சிகளாம்
கடவாய் கிழிஞ்ச வெருளி
கட்டித்தூக்கினோம்
நீத்துப்பூசணி
நாவூறுக்கு
நாலைந்திடத்தில் கள்ளி
காணாதென்று
மதிலுக்கு பிசுங்கான்
உப்பு மிளகாய்ப்போட்டு
ஒவ்வொரு நாளும் எரிப்பு
கப்புக்கு
திருநீறு சந்தணம்
பத்தியிறக்கும்போதும்
பத்துச்சாத்திரி கூட்டிவந்தோம்
செத்தபிறகு
ஏழெட்டு கழிப்புக்கள்
செய்வினை சூனியமென்று
அங்கங்கு தேசிக்காய்
முட்டை தேடினோம்
ஆகமிஞ்சினால்
சாமியாரை கூட்டிவந்து
சாம்பிராணியோடு
ஓம்கிறீமென்று
ஓடவைத்தோம் பேயையும்
சாத்தான் பிடித்ததென்றும்
ஆத்தா
வந்திருக்கிறாரென்றும்
செபிச்சு மந்திரிச்சு
குழையை அடிச்சு
கோழியை அறுத்து குடிச்சு
ஆட்டை கிடத்தி
அறுத்துப் படைத்தும்
அடைந்தோம் ஏதொவொன்று
பத்துநாளுக்குள்
நல்ல செய்தி வருமென்று
இருபதுபேருக்கு அனுப்பினோம்
எதிலும் எவரிலும்
நம்பிக்கையில்லை
எல்லாம் பக்கமும் பூட்டினோம்
சிசிரிவி
படுத்துக் கிடந்தபடி
பக்கமெல்லாம் பார்த்தோம்
படையல் வைத்தோம்
பாதயாத்திரை போனோம்
நோன்பிருந்தோம்
கையில் கட்டினோம் நூல்
இடுப்பிலும்
ஒன்றை கட்டினோம்
உள்ளங்கையில் ஏந்தி
உள்ளும் கொஞ்சம் விட்டோம்
படுக்கையின் கீழும்
ஒன்றை வைத்தோம்
பல்லி சொல்லவும் கேட்டோம்
பாம்பு படமெடுக்கவும்
பாலோடு நெருங்கினோம்
இதற்கு பிறகும்
இப்போது கையை பிசைந்தபடி
கண்ணுக்குத் தெரியாக்
கறுமம் பிடிக்க
கையறு நிலையில்
கொல்ல வேண்டும்
கொரோனாவை
கோபத்திலுள்ளோம்
செய்யவழியின்றி
சுவரைப் பார்த்தபடி
தேங்காய் சொட்டுவைத்த
எலிப்பொறி
சிரிக்கிறது போல பிரமை

தவப்பொருள்-பொன்.காந்தன்

கொட்டில் பிள்ளையாரின்

வெள்ளிப்பொங்கலில்
வட்டுக்காய் அளவில்
வரிசையில் குந்தியிருப்போம்
கோயிலுக்கோ
கும்மாளமடிக்கவோ
அமரர் ஆகிப்போன
சம்மந்தரும்
தருமநாயகத்தாரும்
ஒரு பார்வை பார்க்கையில்
எங்கள் வாய்கள்
பஜனைக்கு ஆடும்
கும்பிடவரவில்லை
குறுக்கால போனதுகள்
கடவுளுக்கும்
அந்த படையலுக்கும்
நன்றாகத் தெரியும்
நெக்குருகிப் பூக்கும்
புன்னகையையும்
எங்களிடம்
கொட்டில் பிள்ளையாரும்
நிச்சயம் எதிர்பாரார்
பூசை முடிந்து
கடைசியாய்
ஐயரின்
மூன்று கைதட்டில்
அந்த வரிசை முழுக்க
புழுபடிய
குந்தியிருந்த
குறும்புகளின் புன்னகை
அப்போதுதான்
பிள்ளையாரை
தண்டிகையில் அழகாக்கும்
இப்போதும்
இந்த அகிலத்தையே
அழகு செய்ய
எல்லாம் முடிந்ததென்று
கைதட்டுக்கும்
அந்த
புன்னகைக்குமான யாசிப்பு
நிறைந்து போயிருக்கிறது
வெள்ளியிலிருந்து
அடுத்த வெள்ளிவரையும்
லாக்டவுணில்

Tuesday, May 25, 2021

பேரமைதி-பொன்.காந்தன்

 


ஒரு வழமை இருக்கிறது
அப்பொழுதுகளில்
பூச்செடிகள் முறிந்திருப்பதில்லை
கிளாஸ் உடைவதில்லை
எதையும் தொலைத்து
தேடி அலைவதில்லை
சட்டையில்
பொத்தான் அறுந்திருப்பதில்லை
மின்வெட்டு இல்லை
காத்திருப்பு ஏமாற்றுவதில்லை
பேருந்து தாமதாவதில்லை
மனேஜர் திட்டுவதில்லை
மேசையில்
எந்த உணவும் புறக்கணிப்பில்லை
எவரும்
முகத்தை சுழிப்பதில்லை
சாலை நெரிசலாயிருப்பதில்லை
கெட்ட கனவுகள் ஏதுமில்லை
நினைவுத் தொல்லையில்லை
ஏதோ ஒரு நாள்
ஒவென அழுகையும் அதிர்ச்சியும்
பெரிதாக ஒன்றுமில்லை
பூச்சாடி உடைந்துவிட்டது
வழமையில்
அது நடந்ததில்லை
நினைத்துப் பார்த்தால்
எவ்வளவு நடந்தேறிக்கிடக்கிறது
முதல் நாளில் இருந்த
வீடும் முற்றமும் தெருவும்கூட
மறுநாளில் இருந்ததில்லை
பூஞ்செடிகள்
முறிந்திராத ஒரு நாள்
எவ்வளவு பேரமைதியானது

கொசப்பு-பொன்.காந்தன்

கிடுகு வேலிக்குள் இருந்து

குமருகள் போயினர்
மதவடியில் கொசப்பென்று
மறுபடியும்
கதவடிக்கு திரும்புகையில்
கதைத்தபடி வந்தனர்
இளவயதுக் குறும்பென்றும்
ஏற்கவும் மறுத்தது
அந்நாளில் நம் ஊர்கள்
ஒரு பெடியன் சிரித்தாலே
சீசீயென்று சினந்ததும்
செருப்பெடுத்து காட்டியதும்
ஒழுக்கத்தின் உயர்வென்று
ஊருப்பட்ட கோடுகள் வட்டங்கள்
கொசப்பின் அர்த்தம் என்ன
விசிலடிக்கும்
விடலைப் பெட்டைகளுக்கு
நொட்டைவிடும்
படலைவரை
கன்னிகளை துரத்திவந்து
திரும்பி
நுரைதள்ள சைக்கிளோடும்
மடலை எழுதிவைத்து
மதவடியில்
மணிக்கணக்காய்
மாதக்கணக்காயும் காத்திருக்கும்
கடைசிவரையும்
காதல் கடிதம் குடுபடாமல்
கசங்கியும் கருகியும் போகும்
குட்டைபாவாடைக்கு
நக்கல்விடும்
கொண்டைக்கும்
குமரியின் நடைக்கு பாட்டும்பாடும்
இதுவெல்லாம்
வயதுக்கோளாற்றின்
வர்ண ஜாலங்களாய்
கண்டு கடக்காதன அன்றூர்கள்
கொசப்பின் சிரமங்கள் என்னவாம்
வீட்டில் விழுங்கிவிட்டு
வெளிக்கிட்டுப்போய் சந்தியில்
மதியச்சாப்பாடுவரை
தெருவைப் பார்க்கவேண்டும்
இடையில் ஐயா
அவர்தான் அப்பா வந்தால்
எழும்பி ஓடிப்போய் ஒளியவேண்டும்
இன்னும் மதவடியில் கண்டு
அதை காவிச் சென்று
மூட்டிவிடும்
சகுனிகளின் கண்படாமல்
சமாளிக்கவேண்டும்
அடிக்கடி தலைவாரச் சீப்பும்
சின்னச்சரையில் பவுடரும்
எப்பவும் செருக வேண்டும்
கனவிலும் வரும் காரிகையின்
முகவரி தேடிப்பிடிக்க
எதுவரை அவள் போகிறாளோ
அதுவரை தொடரவேண்டும்
நாய் துரத்தும்
நாலுபேர் நாக்குவளைக்க
சகிக்கும் பெருமனமும் வேண்டும்
இரவுச்சாப்பாட்டுக்கு முன்
எருமை செம்மறியென
ஏகப்பட்ட மிருகங்களை அழைத்து
புறுபுறுப்புக்களை
கேட்டுப் படியவேண்டும்
சாட்டுக்கு அம்மாவுக்கு
நாலு விறகு கொத்தியும்
இரண்டு வாளி
தண்ணியள்ளியும்
ஆட்டை அவிட்டுக் கலைத்தும்
ஆலாபனை செய்யவேண்டும்
வேறுமுண்டு
ஊர்த்திருவிழாவில்
குருத்து வெட்ட
கொசப்புக்கள் ஓடித்திரியும்
செத்தவீட்டில்
பந்தலுக்கு கிடங்கு கிண்ட
முதலாளாய் அது நிற்கும்
பாடை தூக்குவதிலும்
நாலுபேர்களில் ஒருவராயும்
கொசப்புக்களுக்கு
மதவடியில்
ஊருக்கு காவலர்களாயும்
பசிதூக்கம் மறக்கவும் தெரிந்தது
அடக்கமும்
ஆறுமணிக்குள் வீடடைந்து
விடியவிடிய படிப்பும்
கிடுகு வேலி ஆக்கிவைத்த
பருவ வயதிலக்கணம்
இன்றென்னாச்சு
மதிலுக்குள் மாறிற்றாம்
வேலிக்குள்
வேலியில்லை
வெட்டரிவாள் வேறு கஞ்சா
கட்டற்று ஏதேதோ
இப்போது கதையில்லை
விசிலில்லை நொட்டையில்லை
கட்டையும் பொல்லும்
கத்தியும் செயினும்
சுத்தித் தெரிகின்றன தெருவில்
நினைத்தால்
கொசப்பென்பது
எவ்வளவு மதிப்பான ஒரு சொல்
மறுபடியும்
கிடுகுவேலிக்குள் பெட்டைகள்
கொசப்புகள் என்று திட்டும்
வார்த்தைகள் இனிக்காதோ
ஏங்கும் இதுதான்
இன்று எமதூர்

வீட்டின் கதை-பொன்.காந்தன்



நம் தெருக்களில்

பெண்கள் சிலர்
பதாதைகளை ஏந்தி நின்றார்கள்.
இப்போது நம் தெருக்களில்
பதாதைகளுடன் நிற்பது
தெருவின் மின்சாரக்கம்பம் போல
பேருந்து தரிப்புபோல
ஒரு நிரந்தர அம்சமாகிவிட்டது
பல வாசகங்களுக்கு
இன்னமும் தீர்வில்லை
பல கேள்விகளுக்கு பதிலில்லை
பதாதைகளுக்கு இடையில்
பகலில் பெண்ணொருத்தி
பிடித்திருந்த பதாதை
இரவு கடந்தும்
என்னை தொடருவது போல உணர்வு
சத்தியமாய்
நானொரு வாக்குறுதியும் அளிக்கவில்லை
பழைய புராணங்களில்
நாயன்மார்களை இறைவர் தடுத்தாட்டுகொண்டு
பாடியருளச் சொல்வது போல
அந்தப் பதாதையின் வாசகங்கள்
எனக்கு
அடியெடுத்துக்கொடுத்திருக்கிறது
வெயிலில் வாடிய அவள் முகத்தினாள்
பிடித்திருந்த பதாதையின்
வாசகம் இதுதான்
பழைய வீடும் இல்லை
புதுவீடும் இல்லை
நடுத்தெருவில் நிற்கிறேன்
போரில் மண்மேடாகிப்பொன ஊரில்
இந்த வாசகத்தை
அவ்வளவு எளிதில் கடந்துவிடமுடியாது
எங்கள் ஊரின்
பழைய மண்வீட்டிலிருந்து
கல்வீட்டுக்கு போன கதை நீங்கள் அறிவீர்.
ஒரு விடியற்காலையில்
செல்லத்துரை சாத்திரியை கூட்டிவந்து
நிலையம் எடுப்பதில் தொடங்கும்.
செல்லத்துரை சாத்திரியை
காலை பிடிக்காவிட்டால்
பிறகு மாலை வரை ஆகாது.
ஆயினும் சந்தித்தாலும்
செல்லுத்துரையர்
தண்ணியில் தள்ளாடி மிதப்பார்.
ஆனாலும்
செல்லுத்துரையர்தான்
நிலையம் எடுக்கவேண்டும்
ஆள் கிணற்றுக்கு
வீட்டுக்கு நிலையம் எடுத்தால்
எதுவும் பிசகாது என்பது
ஊரின் நம்பிக்கை
நிலையம் வளவின் முன்னாக
வாழைகளுக்கு நடுவிலோ
மரவள்ளிகளுக்கு இடையிலோ
கூனி அடித்த பின்பு
முதலில் காட்டுக்கல்லு வந்திறங்கும்
செம்மண் ஒட்டியபடி
வெள்ளையும் சிவப்புமாய்
ஒரு குவியல் காணியில் தோன்றும்
சிலவேளை கல்லு வந்திறங்க
சில மாதங்கள் ஆகலாம்.
மணலும் வந்திறங்கும்
மணற்குவியல்
சில வளவில் தோன்றும்
சிலவேளை மணல் வரவும்
சில மாதங்கள் ஆகலாம்
நல்ல கொத்தனாரை
தேடி அலைதல்
கொத்தனாரும்
முட்டாள்களும் வருதல்
சீமெந்து பைகளை
பட்டணத்துக்குபோய்
ஒரு லாண்ட் மாஸ்ரர் அல்லது மாட்டுவண்டிலில்
ஏற்றிவந்து இறக்கி
நாட்டாமைக்கும் கூலிகள் கொடுத்து
கல்லறுக்கும் காலம் தொடங்கும்
மணல் குவியல் மெலிய
கல்லறுத்து
அடுக்கிய காட்சிகள் தோன்றும்
கல்லு இறுக
கிணற்றில் கப்பியில் அள்ளி
காவிவந்து தண்ணி ஊற்றுவது
காய
கருக்கு தட்டி அடுக்குவது
மண் வீட்டில் இருந்து
கல்வீட்டுக்கு மாறும் காட்சி
வானில்
சந்திரகிரகணம் பார்ப்பதுபோல
ஒவ்வொரு வீட்டிலும் புதுமையானது
இந்தப் புதுமைக்கு பின்னிருப்பது
சிறுகசிறுக
ஒரு மண்வீட்டுக்குடும்பம்
சேர்த்த பணத்தின் செழிப்பு.
அது கடன் காருக்கு
கை கட்டி நிற்காதது.
மண்வீட்டில் இருந்து கொண்டு
தோட்டம் வைத்தும்
விழுகின்ற தென்னை ஓலைகளை பின்னியும்
அரியதாய்
அரச உத்தியோகம் பார்த்தும்
இன்னொரு வளவுக்கு
கூலிக்கு போயும்
வாழைக்குலை தேங்காய் விற்றும்
நூறாய்
இருநூறாய் சேகரித்த பணத்தை
ஊருக்குள் சீட்டுக்கட்டி
தாச்சிவரை காத்திருந்து
கடைசிச்சீட்டு எடுத்து
அதில்
காணும் பல்லாயிரங்கள் கொண்டு
மெல்ல மெல்ல
ஒவ்வொரு கற்களாய் அடுக்கி எழுப்பிய
கனவின் வடிவங்கள்தான்
எங்கள் ஊரின் பழைய வீடுகள்
சில வீடுகளில்
ஆண்டுக் கணக்காகவும்
அடுத்து ஒரு கல்லை வைப்பதற்கு பணமின்றி
எத்தனையோ மழையில்
அத்திபாரம் கிடந்து நனையும்
புற்களும் மரங்களும் கூட அதில் முளைத்துவிடும்
இத்தனைக்கும்
வீடு கட்ட வைத்த பணம்
துரதிஸ்ட வசமாய்
வீட்டில்
யாருக்கும் வருத்தம் வந்தபோது
உறவுக்குள் யாரும்
மரணம் அடைய கையிலிருந்து கரைந்துவிடும்
மறுபடியும்
பணம் சேமித்து வரும்வரை
அத்திபாரம் காத்திருக்கும்
எங்களும் ஊருக்குள் எவரும்
திடீர் பணக்கார் ஆனதில்லை
அப்படியான
திடீர் செல்வந்தர்களின் பின்னும்
ஒரு நல்ல கதையுண்டு
ஊருக்குள்
அநேகம் பேர் தோட்டக்காரர்
மிளகாய் வெங்காயம்
இப்படி பயிர்கள் நீளும்
இப்போது
மஞ்சள் விலையேறியதுபோல
ஒரு முறை மிளகாய் விலை
பவுண் விலையாக ஏறியது
எதிர்பார்த்திராது ஒன்று
மிளகாய்த் தோட்டம் நட்டவர்களுக்கு
ஒரு இரவில்
சில பகலில் அடித்தது யோகம்
தங்கமாய் மிளகாய் விற்றார்கள்
அடுத்து என்ன நடந்திருக்கும்
என்ன நினைக்கின்றீர்கள்
ஸ்கூட்டியோ சொகுசு வாகனமோ
மிளகாய் முதலாளிகள் எடுக்கவில்லை
அவர்களின் மண்வீடு
பார்த்திருக்க பெரிய கல்வீடு ஆனது
மண்கிணறும் கற்கிணறு ஆனது
தட்டிப்படலை
தகரத்தில் ஆனது
ஆனால் அந்த கல்வீட்டுக்காரர்கள்
அந்த பழைய
பெரிய கரியல் சைக்கிளை
ஒரு போதும் கைவிடவில்லை
மறுபடியும்
அதில் இரண்டு வாழைக்குலை கட்டி
சந்தைக்கு கொண்டுபோய்க்கொண்டிருந்தார்கள்
எங்கள்
பழைய வீடுகளின் கதையில்
மண்வீட்டில்
எப்போது கல்வீடு கட்டுவோம்
என்ற ஏக்கத்தின் முடிவில்
எடுக்கப்பட்ட சில முடிவுகளில்
வீட்டில் மூத்தவனை பிடித்து
தாயின் மகளின் காதில் கிடந்த
நகை நட்டு எல்லாவற்றையும் விற்று
ஏதோ ஏமாற்றாத ஏஜென்சியை பிடித்து
வெளிநாடு அனுப்ப
அந்த இயந்திரம்
தலையில் மயிர்கள் கொட்டி
தேய்ந்து அனுப்பிய பணத்தில்
கட்டிய கல்வீடுகளின் கதை.
அந்தக்கல்வீட்டை மகளுக்கு
சீதனமாய் குடுத்துவிட்டு
மீண்டும் பழைய மண்வீட்டுக்குபோன
அம்மா அப்பாக்களுடனும்
சேர்த்து சொல்லவேண்டியதுதான்.
எமது பழைய வீடுகள்
உழைப்பின் வடிவமாக
நிம்மதியில் இருப்பிடமாக இருந்தது
அந்த வீட்டில் வைத்த
கதவுகளை திறக்கும்போது
முற்றம் துளசியும் மல்லிகையுமாய்
அழகாக இருந்தது
தெருவில் போகும் எவரையும் பார்த்து
அச்சப்படதேவையில்லாமல் இருந்தது
சாளரங்களில் வழியே
அயல்வீடுகளில் முற்றமும்
கொடியில் காயும் ஆடைகளும்
குறுக்கு வேலிகளில் பூத்திருந்த பூநாறிகளும்
மண்வீட்டில் இருந்து
கல்வீட்டுக்கு போன கதையில்
மனதுக்கு நிம்மதியும் பூரிப்பும் தந்தன
இப்போதும்
அவள் பிடித்திருந்த
பதாதையின்
பழைய வீட்டின் கதை முடிந்ததா
இல்லை
அதில் இருந்த பழைய வீடு வேறு
அது கனவின்
உறைவிடமாய் இருந்த வீடுகள்
போரில் மண்மேடாகி
கையில்
ஒரு சல்லிக்காசும் இல்லாமல்
அகதிகள் ஆகி
முகாம்களுக்குள் சிதிலமுண்டு
நிவாரணத்துக்கு ஏங்கும்
ஊர்களான பின்பு
கட்டநினைத்த வீட்டின் கதை
இந்த புதிய வீட்டின் கதையில்
எந்த இடத்திலும் பூரிப்பு கிடையாது
புன்னகை கிடையாது
இந்த வீடுகள் ஏதுமற்றவர்களுக்கு
கொடுக்கப்பட்டது
கையேந்தப்பட்டது
எங்கள் ஊர்க்காரரின்
பழைய வீடுகள் இருந்த மண்மேட்டில்
எவரோ
புதிய வீட்டை தீர்மானித்தார்கள்
அதற்கு தற்காலிக வீடு என்று பெயர்
தற்காலிக வீட்டிலிருந்து
நிரந்தர வீட்டுக்கு போவதற்கு
பல சோதனைகளும் பரீட்சைகளும் புள்ளிகளும்
முன்னுரிமைகளும்
பின்னுரிமைகளும்
முதற்கட்டங்களும்
இரண்டாம் கட்டங்களும்
தனியாளுக்கு வீடு வேண்டுமா
அதை
எந்தக்கட்டத்தில் கொடுப்பது
முதலில்
தனியாள் என்பது ஒரு உயிரா
அல்லது பிராணியா ஜந்தா
அது
மழை வெய்யில் பாம்பு பூச்சி
கறையான்
யாவற்றையும் எதிர்கொண்டு வாழும்
புதிய சீவராசியா
அந்த புதிய சீவராசிக்கு
எப்போது புதிய வீடு
அது எப்பிடியான வீடு
ஒரு அறையா அல்லது கூடாரமா
ஏதாவது பொந்தா
சருகுகளால் பொருத்தப்படுவதா
தடிகளால் பிணைக்கப்படுவதா
அவள்
பதாதையில் இருந்த
இரண்டு வரிகளுக்கு பின்
ஆயிரக்கணக்கான
பக்கங்கள் கொண்ட
காவியங்களும் இருக்கிறது
வீட்டுத்திட்டங்கள் என்பது
கட்டிக்கொடுத்து
அழகு பார்ப்பதைவிட
அழுகையை பார்க்கும்
துரதிஸ்டங்களுமான கதையும்தான்.
புதிய வீட்டில்
தங்கள் கனவுகளை
எங்கள் ஊராரால் நிரப்பமுடியவில்லை
அத்திவாரத்திலிருந்து
இறுதியில் சாளரங்கள் கூரை வரை
கையேந்திய
ஒரு சிலைபோலவும் புதிய வீடுகள்.
ஆசைகளை அடுக்கி
அதிலேறி வளையில்
கயிற்றில் தொங்கிய கடனாளி வீடுகளும்.
நிவாரண வீடுகளில்
தேர்தலில் வாடைகள்
சன்னலை திறக்க காத்திருந்தன
கதவுகளை
நுண்கடன் மாயம்
அகலத்திறக்க காத்திருந்தன
செல்வாக்குகள்
வர்ண்ணம் பூசி நின்றன
முடிவாக
காலனும் குடியேறக் காத்திருந்தான்
வீடு கட்டி ஏமாந்தவர்களும்
வீடுகட்டலாம் என்று ஏமாந்தவர்களும்
வீடுவீடாய் வந்துபோவதற்கு
வீட்டுக்கடன் குடுத்தவர்களும்
வீட்டுக்குள் வெளியே போகாதவரும்
வீட்டுக்குள் மறைய இடம்தேடுபவரும்
வீடு என்றால் என்னவென்று
பெருங்கேள்வியோடு ஆனவருமாய்
வீடு
வீட்டில் இருக்கவிடாமல்
தெருவில் நிற்கவும் வைத்திருக்கிறது
பழைய வீடும் இல்லை
புதிய வீடும் இல்லையென
எப்படி இருந்தோம்
செத்தையில் சாய்ந்தபடி எத்தனை இனிய கதைகள்
பழைய வீட்டில் இருந்து
ஒரு நூலை பொறுமையாய்
வாசிக்கும் அவகாசத்தை
இந்த புதிய வீடுகள் தராது
என்பதுதான் உண்மை
வாசலில் லீசிங் காரர்
அழைப்பு மணி அடிக்கலாம்
அதையும் மீறி
இந்த வீட்டின் கதையை
நீங்கள் இறுதிவரை வாசித்திருந்தால்
பழைய வீடு எங்கோ இருக்கிறது.

சுயசும் சசி ரீச்சரும்-பொன்.காந்தன்



எட்டாம் வகுப்பில்

கிராமத்துப் பள்ளியில்
உலக வரைபடத்தில்
ஒரு சிறுபுள்ளியை காட்டி
சசி ரீச்சர்
இதுதான் சுயஸ் என்றார்
முப்பது ஆண்டுக்கு முன்
சிற்றெறும்பும் சிக்கிவிடும்
எங்களது சுயஸில்
இலங்கை மப்பிலும்
பல கோடுகள்
புள்ளிகளை காட்டினார்
மகாவலி கங்கை
பேதுருதாலகால மலை
நக்கிள்ஸ்
மலைத்தொடரென்றார்
எமக்கு
சுயஸ் நைல் அமேசன்
எவரெஸ்ட் எல்லாமே
வெகுகாலம்
கோடும் புள்ளியும்தான்
சசி ரீச்சர் எங்களை
சுயசுக்கு அழைத்துப்போக
கனவு கண்டிருக்க கூடும்
கோடு
நதியாய் மாறும் புல்லரிப்பை
புள்ளிகள்
மலைகளாகும் அதிசயத்தை
நாம்
இரசிக்க முடிந்ததில்லை
ஊருக்குள் இருந்த
ஆனையிறவு நீரேரியே
எமக்கு வரைபடகோடுதான்
ஆனையிறவு
ஒரு போர்க்களமாயிருந்தது
வன்னி வரைபடத்தை வைத்து
படைகள்
புள்ளிகளும் கோடுகளுமிட்டன
சசிரீச்சரும்
எங்கள் சமுகக்கல்வி வகுப்பும்
அதற்குள்தான் இருந்தது
நாங்களும்
எங்களூரும் பள்ளியும் கூட
புள்ளிகள் கோடுகளாய்
குண்டுகளின் இலக்குகளாய்.
சுயசும் கப்பல்களும்
வன்னியை தாண்டமுடியாமல்
எங்கள் கிராமத்து பள்ளி
வரைபடத்தில்
அன்றே சிக்கிக்கொண்டன
சசிரீச்சர்
தனது சொந்த ஊரான
ஆனையிறவுக்கு அப்பாலிருந்த
யாழ்ப்பாணத்தை
வரைபடத்தில் மட்டும் பார்த்தார்
தனது முற்றத்தையும்
ஒழுங்கையையும் குறித்துவைத்தார்
பெருமூச்சுக்கள் எறிந்தபடியே
எங்களுக்கு முன்
உலக வரைபடத்தை விரித்தார்
சுயஸ் கால்வாயை குறித்துக்காட்டினார்
நேற்று அதில்
பெருங்கப்பலொன்று சிக்கிக்கொண்டது
தேசமற்ற
ஒரு ரீச்சரும் மாணவர்களும்
குறித்துக்கொண்ட சுயசும்தான் அது

அன்னார்-பொன்.காந்தன்


செத்துப் பார்த்தார் சிற்றம்பலம்
ஒப்பாரியை எதிர்பார்த்தார்
ஒருவருக்கும்
அது தெரியவில்லை
பெண்சாதி அருகில் நின்று
பெரிதாய்க் குழறினாள்
ஐந்தாறு தள்ளி
அனுங்கி சிணுங்கின
சொல்லாமல் போனதாய்
குற்றங்கள் சுமத்தின
இந்நேரம் நேற்று
இருந்து விறாந்தையில்
நல்லாய்த் தொடர் பார்த்தவர்
இரவு படுக்கையிலும்
இளந்தாரிகள் இருக்கும்
வருத்தப்படாத சங்க
வாட்ஸப் குறூப்பிலும் போய்
வாயடித்தவர்
வேளை வந்ததென்று
வேலிக்குள்
நாய் ஊளையிடயில்லை
வேறொரு அசுமாத்தமுமில்லை
ஆளிப்படி
அசையாமல் இருக்கிறாரே
சோலி முடிந்த கதையை
சொல்லிக்கொண்டிருந்தன
பாட்டியிருந்திருந்தால்
பழசெல்லாம் இழுத்திருப்பாள்
இவளை
கூட்டிக் கொண்டோடி வந்தது
ஏபோட்டிக்காரில் போய்
இழுபடாமலுடன் தாலிகட்டி
உழைப்பு பிளைப்புக்கு
ஒரு கிழமை போகாமல்
உளுத்தங்களியும்
ஒடியல்மாவில் பிட்டும்
முகங்கழுவாமல்
முட்டைக்கோப்பியோடு
மூடிக் கதவை திறக்கத்தான்
மூத்தவள் பிறந்தவள்
ஆத்தை இருந்திருந்தால்
கால்மாட்டில் இருந்தின்று
கழுவி ஊத்தியிருப்பாள்
இளைய வயதிலென்
எடுப்பு முறுக்குகளை
எடுத்து விட்டுப் புலம்ப
எவர்க்கும் எண்ணமில்லை
நெஞ்சிலிடித்து
என் நெற்றியழகையும்
நிமிர்ந்த நடையையும்
கொஞ்சு தமிழில் குழறும்
குறுக்கு கட்டிய கிழவியும்
போன பஞ்சமியில் போயிற்று
கொஞ்சம் பொறுங்கள்
மடக்கி பிடித்துப்போனில்
ஒருவன் படத்தை எடுக்கிறான்
எழுத்துப் பிழைவிட்டு
என் பெயரை
சீற்றம்பலமென்று சிதைத்து
முகநூலில் எனக்கு
முடிவு கட்டுவான் போலும்
இலாச்சியை இழுத்து
இளையது ஏதோ தேடுகிறது
என்
ஏ ரி எம்மாய்த்தான் இருக்கும்
கறந்தெடுத்ததில்
கட்டுப் பணத்துக்கெடுத்தவைக்கு
வட்டியோடு சேர்த்து கட்டி
வாசலுக்கு தினம்
வராமல் பண்ணியாச்சு
பெட்டிக்கு செலவழிக்க முன்
பிரேதத்திலிருந்து மீளவேண்டும்
கட்டை வைப்பது காடாத்து
கொள்ளிச்சட்டியிலிருந்து
எல்லாம் விலை
இருந்தும் செய்தியறிந்து
ஓடிவந்தவர்களில்
பாடையிலிவன்
ஏறுவான் எப்போதென்று
காத்திருந்த கனவானுகளும்
மாலையோடு வந்து
மனுசிக்கு முன்
கண்ணீரும் இருசொட்டுவிட்டு
போனபின்னர்தான்
பொறுமையோடு
இன்னும் கொஞ்ச நேரம்
பிரேதமாய் இருந்தால்
வேலிக்கு உள்ளும் வெளியும்
சிற்றம்பலத்துக்கிருந்த
சீத்துவங்களை பார்க்கவும்
ஆசைகள் தோன்றிற்று
பிரேதமாயிருக்கிறார் சிற்றம்பலம்
ஸ்பீக்கரில் கேட்கிறது
மரண அறிவித்தல்
அன்னார்......

திருப்தி-பொன்.காந்தன்

 

வெள்ளத்தில்
ஐந்து வயதில் கடந்த பள்ளம்
பாலத்துடன்
கொட்டில் பிள்ளையார்
கோபுரத்துக்கு மாறினார்.
குப்பிவிளக்கு தெருவுக்கு தெரு
மின்சாரக்கம்பங்கள்
கிடுகு வேலிகள்
மதில்களாகி
கத்தரித்தோட்டமும்
வெருளிப்பொம்மையுமாய்
கிடந்த வளவுக்குள்
அகலக்கால் விரித்தபடி
தொலைபேசி கோபுரம்
திருப்திப் பட்டுக்கொள்ள
தெருவில்
சுற்றி ஓடி விளையாடிய
எறிந்து பழங்கள் விழுத்திய
இரண்டு நாவல்களை
இன்னமும் தறிக்காமல் விட்ட
ஊர்க்காரரின்
ஏதோ ஒரு
மெல்லிய மனம் மட்டும்

சாந்தியின் சமையல் குறிப்பும் சகலமும் உணரும் வரமும்-பொன்.காந்தன்

 

பால் கோப்பியுடன் பத்திரிகை
ஊகித்தபடி ஊருப்பட்ட செய்திகள்.
தாலி அறுப்பு
தகப்பனை மகன் கொன்றான்
திருகினார் கிழவியை
தீர்க்க தரிசியாக்கிவிட்டது
ஊரின் நடப்பு.
இன்னதென்று
முன்னதாயே சொல்லும் வரம்
எப்படி வாய்த்ததென்று
இன்ரவியூ தரவியலா.
இது சாபம்
பூபாலசிங்கத்தில் போய்
பூந்தி லட்டும் புரியாணி செய்யும்
சாந்தியின் சமையல் குறிப்பும் போதுமாயிற்று இந்நாள்.
கத்துக்குத்தும்
கஞ்சாச் செய்தியும் பார்க்க
எதற்கு
ஐந்து ரூபாய் குற்றி நான்கை
அநியாயமாக்குவான்
நாலு இடியப்பும்
நல்ல சொதிக்குமான காசு.
வெட்டுக்கொத்து செய்தி பார்க்க
விழுந்தடித்து போய்
விடிய வேணுமா ஒரு பேப்பர்.
இரண்டு காட் வாங்கிநிரப்பி
இருந்தபடி உரசினால்
குக்வித் கோமாளி
வனிதா வடை சுடுவது எப்படி
தனிய இருந்து தடவிப்பார்த்துவிடலாம்.
சீ காலிவரையும் தெரிந்து
காறித்துப்பும் அளவில் ஊர்வேலிக்குள்
அருவி வெட்டும் நிலத்தில்
ஆள் வெட்டும் அருவருப்புக்கதை.
தரவரிசையில் எகிறுகின்றது
கிளிநொச்சியென்ற சரித்திர கதையூர்.
படிப்புக்குறைந்து
வெடித்து வெம்பி திரிகின்றது
குடியும் குத்தும் வெட்டுமென்றொரு கூட்டம்.
செடிகளுக்கு நீர் செத்து வார்த்தாரே
இதற்காகவே
எருமை மாடுகள் இங்கு புரளவா
அதுவும் கூட
வயலை பண்படுத்தும் பக்குவப்பிராணி.
எதற்குப் ஒப்பிட
எங்கள் ஊர் இளவுகளை.
அது ஒரு காலம்
அடிநெஞ்சில் இருந்து அருவியாய் பாய்கின்றது
பிடிக்காதவர் வீட்டுக்கு
பின்னேரக்கையாக வேவு பார்த்து
கல்லால் எறிந்து இரண்டு ஓட்டை
கழற்றுவதைவிட
உயர்ந்த குழப்படியிலா விடலையூரிது.
பட்டப்பெயரை
படலையில் எழுதிவிட்டு
கெட்டித்தனத்தின் உச்சியில்
கூத்தாடியது இளமையன்று.
மடலை எழுதிவிட்டு
மயக்கத்தில் ஓடிப்போய்
மடியில் ஒன்றுடன் வர எல்லாம் சுபம்
ஏகப்பட்ட மகிழ்ச்சி.
எல்லாம் மறைந்து இருள் சூழ்ந்துள்ளது.
அடித்துக்கொலை
அம்பாள்குளத்தில் சடலம்
கஞ்சாப்பொதிகள் மீட்பு
கைது செய்யப்பட்டவருக்கு வயது பதினேழு.
எங்கே போகின்றது
எங்கள் ஊர்கள்
எதிர்ப்படும் முகங்களை கொண்டே
குழப்படியின் வகை
குடுவா கஞ்சாவா குத்துவெட்டா
எல்லாமே கணிக்கலாம்
இரவு என்ன நடக்குமென்றும்.
பிறகெதற்கு பத்திரிகை
ஓலை கட்டி ஊர்தி போனால்
உலர் உணவு சேர்த்துத் திரிந்தால்
காலத்தை கணித்து
எங்கள் ஊர்கள் கதைத்த செய்தி
நேரெதிராய் தேய்ந்து
பாழடைந்து பட்டுக்கருகிக்கிடக்கிறது.
தலைவர்களோ பதவிக் கனவில்
படுத்தெழும்புகிறார்.
நம் தலைமுறையோ
தடுக்கி பாழ் குழியில் வீழ்ந்து
திருத்த யாருமின்றி
தெருவில் போதையில்
கொலையாளிகளாய் சேதியில்.

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...