Tuesday, October 23, 2018

லாஓஜி-பொன்.காந்தன்


என் சிறிய வயது நினைவில்
சந்திக்கடையில்
அம்மா வாங்க அடிக்கடி அனுப்பும்
லாஓஜி தேயிலை மறக்கமுடியாது
அது சிறிய பைக்கற்தான்
அத்தேயிலையில் தரும்
தேனீரோடு ஏதாவது உணவோடும்
பள்ளிக்கு ஓடிவிடுவேன்
பிறகு பள்ளி பாடமொன்றில்
காக்கையாரே காக்கையாரே
எங்கே போனீங்க
காணாத இடமெல்லாம் காணப்போனேன்
கண்டு வந்த புதுமைகளை
சொல்லக்கேளும் பாடலை
அழகான ரீச்சர் பாடிக்காட்டினார்
அந்தப்பாட்டில்
காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை
கண்டிப்பக்கம் குளிரோ கடுமை
என்ற வரிகள் வந்தபோது
சூடான தேனீர் ஞாபகம்
அப்போதும் அந்த லாஓஜி
சிறியதாக அழகாகவே எனக்குத் தெரிந்தது
பிறகு வகுப்பேறிச்செல்லும்
என் மாணவர் பருவத்தில்
பண்டிதர் ஒருவர் பாடமெடுத்தார்
அவர்
சிவி வேலுப்பிள்ளையின் கவிதைகளை
சிலாகித்து வாசித்துக்காட்டினார்
விளக்கமும் சொன்னார்
அந்த நாளில் வீடு வந்தபோது
எனக்கு லாவோஜி பெரிதாகவும்
பாரமாகவும் தெரிந்தது
பிறகுபிறகு
மழை காலங்களில்
மழையுடன் சூறாவளி காலங்களில்
சற்சொரூபவதியோ
மயில்வாகனம் சர்வானந்தாவோ
வாசிக்கும் செய்திகளில்
மண் சரிவும் மரணமும் காதில்விழ
லாவோஜியின் மீது இரக்கம் வந்தது
அது பெரிய ஏழ்மையின் வடிவமாயிருந்தது
இப்போதும் ஒரு மழைகாலம்
தேனீரை அருந்திக்கொண்டு
செய்திகளை இணையத்தில் பார்க்கிறேன்
அடிப்படை கூலியை ஆயிரமாக்க
மலையகத்தில் போராட்டமாம்
ஓ லாவோஜி
நீ விடியாத ஓர் இரவின் பெயரா இன்று

தியின் கதை


தியின் கதை

யாழ்ப்பாணப்பேருந்துக்காக காத் திருந்தேன்
தரிப்பு நிலையத்தில் காத்திருந்த
பெண் பயணியின் கையில் குழந்தை
பற்கள் அரும்பா
அப்பசுமையின் உதட்டில் இருந்து
என்னை நோக்கி ஒரு புன்னகை

அச்சிறிய காத்திருப்பு சிநேகத்தில்
என்ன பெயரென
வார்த்தைகளை பூனைமயிரில் செய்த வினாவுடன்
அச்சிறு மழலையை நெருங்கினேன்
திலீபன் என்றாள் தாய்

A for Apple
B for Ball
Thi for Thileeban

உங்களின் யாருக்காவது
திலீபனென பெயர் இருக்கலாம்
அது உங்கள் பெற்றோர்களின்
சாத்திர நம்பிக்கையில்
தியில் தொடங்கி இருக்கலாம்
நீங்கள் என்ன செய்கிறீர்கள்
என்னவும் செய்து கொண்டிருக்கலாம்
நீங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டிய ஒன்று
தியிக்கு ஒரு உன்னத வரலாறு உண்டு
அது 1987 செம்ரெம்பர் 15ல்
நல்லூர் முருகனின் வீதியில் ஆரம்பிக்கின்றது

தியின் புனித உடல்
இடுகாடுகளை நோக்கி காவிச்செல்லப்படவில்லை
யாழ்ப்பாணத்தில் பாடம் செய்யப்பட்டு
அது ஈழக்கனவின் சடலமாய்
ஏமாற்றப்பட்ட அகிம்சையின் வடிவமாய்
ஈழத்தின் எல்லா எக்ஸோடசுகளின் போதும்
தியின் தோழமைகளால் சுமந்து செல்லப்பட்டது

ரிவர்ஸ் ஓவ் பாபிலோன் பாடலைப்போல
தியின் கதையிலும்
நிறைய ஏக்கத்தில் கூவும் குயில்களின் கீதங்கள்
பிரிந்து சென்று கொண்டிருந்த தியின் உயிரை
மறிக்க மன்றாடும் புலவர்களின்
கண்ணீரில் பின்னிய கவிதைகளால்
தியின் உடல் பாடம் செய்யப்பட்டது

பின்பொருநாள்
வெள்ளிகள் பூத்திருந்த
அச்சம் நிறைந்த இரவில்
கிளாலி கடலில் தியின் பயணமொன்று
மக்களோடு மக்களாக
தானுலவிய யாழ்ப்பாணத் தெருக்களை விட்டு
வன்னியின் வயல்கள் கானகங்கள்
பறவைகள் புளுதிகளால் ஆன தன்னுடைய
சுவாசத்தை தி ரசிக்க ஆரம்பித்தது
ஒரு தடவை குளிர்ந்த மரங்களின் கீழ்
அமைக்கப்பட்டிருந்த கொட்டகை
தியின் பேரால் நூலகமாக இருந்தது
தினமும் சென்று
பத்திரிகைளையும் சஞ்சிகைகளையும் படித்தேன்
அத்தருணத்தில்
பொலிவியாவுக்கும் ஸ்ரலின்கிராட்டுக்கும் கவானாவுக்கும்
தியன்பியன்பூவுக்கும் ராபன் தீவின் சிறைகளுக்கும்
நான் அழைத்துச்செல்லப்பட்டேன்

பிறகு அந்த கொட்டகை இருந்த ஊரிலும்
எறிகணைகள் குண்டுகள் வீழ்ந்தன
தியின் பேரால் இருந்த
எனது ஒரு அமைதியான வாசிப்பை இழந்தேன்
அகதி வாழ்வு மீண்டும் மீண்டும் தரப்பட்டது
அலைந்தேன்
பிறகொரு பொழுதில்
எனக்கு அக்கராயனில் மலேரியா பீடித்துவிட்டது
மருத்துவம் எனக்கு அருகிலேயே வந்துநின்றது
அந்த ஊர்தியில் தியின்பேரால் மருத்துவசேவை
தியின் கதை பெருத்துச் சென்றது
தியின் நாட்கள் சடங்கு போலாயிற்று
அதில் நம்பிக்கைகள் துளிர்த்தன
அந்த நாட்களில்
எங்கள் வீரர்கள் போர்களங்களை திறந்தனர்
அழகிய மங்கைகள் சலங்கைகள் ஒலிக்க
அரங்குகளை திறந்தனர்
இன்னும் சிலர் தங்கள் குருதியை தானம் செய்தனர்
புலவர்களும் பாடகர்களும் சேர்ந்து இசைமீட்டினர்
உடுக்குகள் முழங்கின பறைகள் ஒலித்தன
ஆனந்தம் திருக்கோணமலை முகடுவரை பரந்தது
யாழ்ப்பாணக்கோட்டையில் புலிக்கொடியை ஏற்றினர் வீரர்கள்
தியின் கதை பிறந்த நாட்கள் சுபநேரமாயிற்று

மதுரை மாநகராட்சி வார்டு இல 21 க்கு
திலீபன் தெருவென பெயரிடப்பட்டதை
ஒரு தடவை
தமிழக பயணத்தின்போது கண்டேன்
பெயர்பலகைகள் நடப்படலாம்
பிடுங்கியும் எறியப்படலாம்
தியின் உண்மைக்கதையை காவிய நெஞ்சுகள்
உலகமெல்லாம் பரந்துவிட்டன
தியின் கதை முள்ளிவாய்க்காலிலும்
முடியாத கதை

இப்போது தியின் கதையில்
எல்லாம் இழந்தவர்களின் தடுமாற்றமும்
வன்மமும் நடிப்பும் நிறைந்திருக்கிறது
தியின் கதை பிறந்த இடத்தில்
கட்சிகளுக்கு இடையில் மோதல்கள்
தியின் மூல நிலம் அவமானத்துக்கு உள்ளாகின்றது
இப்பொழுது தியின் பொருளை நான் தேடவேண்டியதாயிற்று
தியின் பொருளை தொலைத்துவிட்டேன்
அதற்கு
வேறொரு அர்த்தத்தை திணித்துக்கொண்டிருக்கின்றார்கள்

யாழ்ப்பாணப் பேரூந்து நிலையத்தில்
இறங்கியபோது
திலீபன் தன் தாயின் தோளில்
நல்ல உறக்கத்தில் இருந்தான்
அவனது முகத்தை பார்த்தேன்
அவனது பிஞ்சுவிரல்களை
தொட்டுப்பிரிகின்றேன்
தள்ளாடிச்செல்லும் இளைஞனை கடந்து செல்கிறேன்
மது வாடை கலந்த காற்று
ஒரு முறை திரும்பிப்பார்த்தேன்
பங்காளி என என்னை அழைத்தான்
பதிலுக்கு நானும் பங்காளி என்றேன்
பங்காளியின் பெயர் என்னவாம் என்றேன்
சொல்ல மறுக்கிறான்
சொல்ல மறுக்கும் பெயர்களும்
தியின் கதையில் இருக்கலாம்

பண்ணைக்கடலில்-தியின் கதை,


பண்ணைக்கடலில் காற்று வாங்கியபடி
முன்னிரவின் வாசலில் நின்று
கோட்டையை பார்க்கிறேன்
அதில் எங்கள் கொடி இல்லை

காற்றில் எங்கோ கரைந்து
பதுங்கியிருக்கும்
அந்த புரட்சியாளன் திலீபனின் பிரசங்கம்
மீன் கொத்தியின் அலகில்
என்னை கொத்திச் சென்று
தீவுகள் போகும் வழியின்
கண்டல் பற்றைகளில்
காலிடுக்குகளில் வைத்திருக்கிறது

என்னிடம் கொடிக்கான பதிலை
சரியாக சொல்லத் தெரியவில்லை
மனச்சாட்சியில் இருந்து
வஞ்சகமும் பச்சோந்தியின் வர்ணங்களும் சிந்த
இதயத்தில் கொத்திக்கொண்டிருக்கின்றது

சேறுமண்டிக்கிடக்கும்
ஆரியகுளத்தின் அடிநாற்றத்தை
கடந்து செல்லும் தாமரைகண்களின்
ஆழத்தில் புதையுண்டிருக்கும்
கொடியின் சிதிலமடைந்த வர்ணங்களை
தூண்டிலிட வைக்கும் பட்சியின் பார்வை

பண்ணைக்கடலுக்கும் கோட்டைக்குமிடையில்
அந்தரிக்கும் எனது பார்வையில்
மண்ணள்ளி சாபமிடும்
மூதாட்டியின் விரல்களில்
அன்றவன் நெற்றியில்
நீறள்ளி பூசி அனுப்பிய கனவின் வர்ணம்

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...