Sunday, January 27, 2019

குமரியின் மைந்தர்கள்-பிறைசூடியின் நினைவு அலைகள்-


அந்தக் கடற்கரையில் அந்த கறுத்த மணல் பற்றி கேள்விப்பட்டதுண்டு.அதை கையில் அள்ளி முத்தமிடும் வாய்ப்பு நேற்றுக்கிட்டியது.வெள்ளை மணலில் கால் பதிய நடந்து காதலையும் அதன் கவிதைகளையும் காற்றையும் பருகிய எனக்கு கறுத்த மணலின் அனுபவங்களும் இதயத்தில் எழுதப்படுகின்றது.கறுத்த மணலின் ஓரம் பரவியியிருந்த வாடிகளின் படகுகளின் மத்தியில் நடந்து கொண்டிருந்த ஊர்க்கார இளைஞர்களிடம் கறுத்த மணலின் கதை கேட்டேன்.சில ஆண்டுகளுக்கு முன் அந்த கடற்கரையோரத்தில் இருக்கும் தங்களது காணி ஒன்றை விலைக்கும் தரும்படி கேட்டார்கள்.அதில் ஒரு தொழிற்சாலை கட்டப்போவதாக சொன்னார்கள். அதில் ஊர்க்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் சொன்னார்கள் ஆனாலும் தாங்கள் அந்த காணியை விற்கவில்லை என்றான் அந்த இளைஞன்.பளபளக்கும் அந்த கறுத்த மண் இல்மனைற் என்பது அவர்களுக்கு தெரிந்துபோதும் அதன் உயர்வின் உச்சங்களை அறிந்து கொள்ளும் அளவில் அவர்கள் இருக்கவில்லை.ஆயினும் அந்த கறுத்த மணல் எங்கள் மண்ணின் திரவியம் என்பது அவர்களுக்கு தெரியும்.கொக்குளாய் நாயாறு அப்பால் ஈழத்தின் கடற்கரையோரம் அந்த கறுத்த மணலின் அழகில் அலைகள் உரசி வெயிலில் பளபளக்கின்றன.அலைகளில் இன்றைக்கு கரைகளில் மட்டுமே மோதமுடிகின்றன.ஒரு பத்தாண்டு முன் வரை அலைகளுக்கு கரையில் மோதுவது மட்டும் வேலையாய் இருக்கவில்லை.அது ஆயிரம் அர்த்தங்களை தினம்தினம் கொண்டு வந்து சேர்த்தது.
முல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில் உலகின் அழகிய சுற்றுலா மையமாககூட மாறலாம்.முல்லைத்தீவு பட்டணத்தை உரசும் கடல் அலைகளுக்கு முன் மணலில் வெண்மணலில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.சவுக்கு மரங்கள் காற்றில் அசைந்துகொண்டிருக்கின்றன.எம்மவர்களும் கூட இருக்கைகளில் இருந்தே கடலை இரசிக்க பழகுகின்றனர்.பழக்க தோசத்தை மறக்காத பலர் உடைகளில் மணல் ஒட்டிக்கொள்ள கைகளும் கால்களும் மணலில் புதைந்திருக்க சக்கப்பணியே இருந்து எங்கள் கடலின் காற்றை அழகை அனுபவிக்கின்றனர்.வட்டுவாகல் பாலத்தில் மீன் இறால் பிடிக்கும் இரவு அழகு இன்னமும் குறைவில்லை.வட்டுவாகல் பாலத்தில் இருந்து ஒரு மாலைப்பொழுதில் பெருங்கடலை பார்ப்பதும் அங்கே அலை வெண்நுரைகள் பொங்கிச்சரிவதும் இப்பால் நந்திக்கடலும் அப்பால் கிராமங்களில் ஒளிரும் மின்விளக்குகளும் அழகாய்த்தான் உள்ளன.வட்டுவாகல் பாலத்தை இப்போது கடக்கின்றபோது ஒரு புறத்தில் ஒரு படைக்காவலரண் அதில் துப்பாக்கி ஏந்திய படையாள்.இன்னொரு பக்கத்தில் கோட்பாயகப்பல் என பொறிக்கப்பட்ட பெரிய கடற்படைத்தளம்.அது கடலோடு அண்டிய பெரிய நிலப்பரப்பை விழுங்கிக்கிடக்கின்றது.சில கிலோ மீற்றர்களுக்கு வழி நெடுக வட்டுவாகல் பாலத்தை புதுக்குடியிருப்பு முல்லைசாலையில் பயணித்து கடப்பவர்களுக்கு உயரக்கோபுரங்களில் நந்திக்கடலை பார்த்தபடி காவலிருக்கும் படையாட்களை காணலாம்.இன்னமும் எதை தேடுகின்றார்கள் குமரியின் புத்திரர்களையா!
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கண்டங்கள் சிதைந்து குமரிக்கண்டம் உருவானபோது அதன் மூத்தகுடிகளாகவும் ஆண்ட குடிகளாகவும் தமிழர்களே இருந்திருக்கின்றார்கள்.அந்த பரந்த தமிழ் கண்டத்தில் இருந்து எட்டுதிக்கும் கடற்கலங்கள் ஓட்டி கண்டங்களை தங்கள் செல்வாக்குக்குள் கொண்டு வந்து கொடியேற்றிய குலமாக தமிழர்கள் இருந்ததை குமரியின் வரலாறு எமக்குச்சொல்கின்றது.கடலால் குமரி காவு கொள்ளப்படும்வரை தமிழர்கொடி எட்டுத்திக்கும் பறந்தது.தமிழரின் கடல் ஆட்சியும் பரந்ததாய் புகழ் மிக்கதாய் வீரம்மிக்கதாய் இருந்தது.வெள்ளிகளை நட்சத்திரங்களை வழிகாட்டிகளாய் வானசாத்திரத்தை படித்து கப்பலோட்டிய பரம்பரை இந்த உலகத்தில் முடியிழந்து தவிப்பது எத்தனை சோகமானது.கடற்கரையில் நடக்கும் போதெல்லாம் குமரியின் மைந்தர்கள் எப்படியெல்லாம் மாறிக்கொண்டிருக்கின்றார்கள் என சிந்தனை போர் செய்கின்றது.தாம் யார் என்பதை சந்ததி மறந்துவிடுமோ என்ற அச்சமும் குடிகொள்கின்றது.எங்கள் இனத்தின் கடலின் கதையை சொல்லாமல் மௌனிகளாய் இருந்து விடுவார்களோ என்ற ஏக்கம் நெஞ்சில் தொற்றிக்கொள்கின்றபோது அண்மையில் தமிழ்நாட்டில் காலமான பிறைசூடி என்ற கப்டன் டேவிட் எனற் ஈழத்திருமகனின் மரணம் எமது கடலின் கதையை மீள நினைபடுத்திற்று.பிறைசூடி என்பவரை அநேகம்பேர் அவரின் மரணத்தின்போதுதான் அறிந்திருப்பார்கள்.எமது இனத்தின் கடலின் கதையில் பிறைசூடியும் பெருமையுடன் போற்றப்படவேண்டிய நாயகன்.பிரபாகரன் என்ற குமரியின் மைந்தன் வல்வெட்டித்துறை கடலோரத்தில் பிறந்து கடலை நிலத்தை வானை இழந்த தமிழினத்தை தட்டி எழுப்பி புதிய புறநானூற்றை எழுதத் தொடங்கியபோது பிரபாகரன் எழுத நினைத்த ஈழக்கடலின் கதைக்கு சுக்கானாய் மாறியவர்தான் கப்டன் டேவிட் என்ற பிறைசூடி சிங்கள மொழிச்சட்டம் கொண்டுவந்தபோது தன் அரசபதவியை தூக்கி எறிந்துவிட்டு தமிழீழக்கனவோடு வாழமுனைந்தவர் பிறைசூடி என்பதால் பிரபாகரனின் தூரநோக்கான பார்வையில் பிறைசூடி ஒரு ஈழக்கடலில் ஒளிரும் விடிவெள்ளியாய் தென்பட்டார்.தன் மூத்த போராளிகளை அனுப்பி பிறைசூடியின் கையை பற்றிக்கொண்டார்.மீண்டும் குமரியின் புத்திரர்களின் கப்பல்கள் கடல்கள் தாண்டி கண்டங்கள் தாண்டி திரவியங்களோடு பயணிக்கவேண்மென கேட்டுக்கொண்டார்.நான்கு தசாப்பதங்களுக்கு முன்னமே கடலில் சோழன் என்ற வணிகக் கப்பலை பிரபாகரனின் கட்டளையில் இறக்கினார் பிறைசூடி கடலினில் கடற்புறா பயணங்கள் போனது என்ற பாடல்கள் எங்கள் வாய்களில் உச்சரிக்கப்பட்ட காலங்களில் சோழன் கடலில் அலைகளை கிழித்து ஈழ விடுதலை போராட்டத்துக்கான தன் கடமையை செய்யத்தொடங்கியது அதன் முதலும் முன்னவருமாக பிறைசூடி திகழ்ந்தார்.பின்னாளில் சர்வதேச கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் கப்பல்களை வழி மறித்தார்கள் தாக்கினார்கள் ஆயுதங்களை கப்பல்களை இறக்கின என்ற சேதிகளெல்லாம் தோன்றி உலக வல்லரசுகளையெல்லாம் தமிழனின் புகழ் ஆச்சரியப்படவும் அச்சப்படவும் வைத்தன எனில் அந்த ஆணிவேர்களில் பிறைசூடியின் நாமம் இருக்கின்றது.பிறைசூடி அவர்கள் ஒரு மாமனிதர்.அதைவிடவும் உயர்;ந்த மதிப்பிற்கு உரியவர் என்று சொன்னாலும் ஈடாகாது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வீழந்துபோன குமரியின் கடலின் கனவை மீட்டவர்களின் பிறைசூடி முன்னவர்.ஈழத்தின் கரையோரங்களில் காற்றுவாங்கிக்கொண்டிருக்கின்ற படகெடுத்துச்செல்கின்ற கடலை நெடு நேரமாய் பார்த்தபடி இருந்துவிட்டு மௌனமாய் மணலில் கால்புதைய விடைபெறுகின்ற குமரியின் மைந்தர்களுக்கு பிறைசூடியின் கடலின் கதை காதோரம் சொல்லிச்செல்கின்ற கதையில் மீண்டும் ஆழக்கடலெங்கும் சோழமகராசன் ஆழலாம் தமிழீpழ கடலெங்கும் எங்கள் கரிகாலர்கள் ஏறலாம்!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...