Sunday, January 27, 2019

வீரவணக்கம்-பொன்.காந்தன்,

பாலால் வந்தோர்க்கு பரிமாற நினைத்தபடி
வாலால் நுளம்படித்து வைக்கோலை நன்னுமவள்
தாராள முலைபிடித்து தடவிப் பால் கறக்க
நீராலே செம்பலசி நிறைத்தபடி நீர் கொண்டு
தீராமல் சுரக்கின்ற நெடுமுலையை கைபற்ற
காலால் தந்தாளவள் கவிழ்ந்தேன் செம்போடு
போடா தொடாதெயென புடைத்த வகிடுடையாள்
வாடா பார்ப்பமென வைத்தகண் குணமிருக்க
மாடா நீ மனுசருக்கு தோதாகத் துணையாக
காதோடு தத்துவங்கள் களஞ்சி வைத்துசொல்லி
நாளாகநாளாக தானாக எழும்பி தரும்படி பாலை
வரும்படிக்கும் சேர்த்து மடியை திறந்துவிட்டாள்
பட்டிபொங்கலுக்கு கட்டிமாடுகளை கழுவியலங்கரித்து
லிவ்ஸ்ரிக்கும் ஐபுறோவும் ரிப்பனும் கூட கொண்டு
கொம்புகுஞ்சம் குவிந்தவகிடு அங்கமெலாம் அழகாக்கி
அதோடு சேர்ந்து செல்பிகளும் சிறப்பு நிகழ்ச்சிகளுமாக்கி
புல்லுக்குமேல் இன்று புல்போட்டு வள்ளல்களாய் மாறி
சல்லிக்கட்டுக்கும் சறத்தை தூக்கி கட்டி நின்றோம்
செத்துப்போன கணவனின்றி சீரழிந்த பெண்கண்டு
பத்துலீற்றர் பால்கறக்கும் பசுவொன்றை கருணையுளர்
வித்துப்போடாமல் வீட்டில்கட்டி விடியமாலை பாலெடுக்க
கொட்டில் ஒன்றும் போட்டு கொண்டுவந்து கொடுத்துநிற்க
அத்துமீறிப் புகுந்தகள்ளர் பங்கு போட்டு பாடையிட்டார்
சுத்துமதில் கட்டி சீசீரிவியொடு பட்டியடைக்கும்காலமிது
வட்டமிட்ட பொம்மர்கள் வந்து பதிந்து குண்டுபோட்டு
கொட்டியா பத்துப்பேரை குறிவைத்து கொன்றோமென
குரைத்தன்று லங்காபுவத் குவித்த செய்திகளில்
பட்டியில் குண்டு விழுந்து பலதிக்கும் மடிந்தவைகள்
பட்டிக்காளை பனங்காய்மயிலை பசுங்கழுத்தான் பால்வெள்ளை
இன்னபிற இப்பிடித்தான் இங்கு அவர்கள் பெற்றவெற்றி
எங்கள் மேல் குண்டுவிழ ஏழெட்டு ஊர்கடக்க
எங்கெங்கும் இருந்து எழுந்துவரும் எறிகணைகள்
பங்கத்தை விளைத்து பறித்தெடுக்க உயிரை
பலியிடாமல் காக்கும் பங்கருக்குள் வராதவராய்
மறைச்சிவலை குத்துக்கொம்பன் பணங்காரி சிந்துவென
செத்துவீழ்ந்த மாட்டுக்கென் பட்டிப்பொங்கல் வீரவணக்கம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...