Sunday, January 27, 2019

கேப்பாபிலவு பெண்டுகள்-பொன்.காந்தன்


கேப்பாபிலவு பெண்டுகளை பார்த்தேன்
பெண்டுகள் அல்ல
இன்றைக்கு ஈழத்தாயின் மார்பின் குண்டுகள்
திணைபுலத்தை காத்து
காட்டினிடை பட்சிகள் கலைத்தவளின்
தாய்வழி எச்சம்
கேப்பாபிலவில் படையினை துரத்தும்
குரலின் உச்சம்
நந்திக்கடல் மீனின்
வலிய செதில் அகற்றும்
அரிவாளின் கூர்மை அவர் பார்வையில்
வளவின் பின் புறக்காட்டில்
பூப்பெய்த முன்னிருந்தே
வெங்கணாந்திகளுக்கு நடுவில்
விறகு பொறுக்கி
முட்டியில் கொடுத்து ஒடித்து அடுக்கி
சுமந்து வந்து தீ மூட்டிய அழகியின்
அடிவயிறும் மார்பும்
ஆக்ரோச வார்த்தைகளில் குலுங்ககண்டேன்
மனதுக்கினிய அவளின்
கேப்பாபிலவு திணைபுலத்தின் நடுவில் நின்றால்
அவள் நித்திய அழகி
எள் செடிகள் பூத்துக்குலுங்கும் பனிப்பொழுதில்
தேவதைகளால் நிறைந்திருக்கும் அந்நிலம்
காட்டு வார்த்தைகளை கேட்டபடி
புலர்ந்த நாட்களை விடுவித்தகலச்சொல்கிறாள்
ஓடிவிடுங்கள் சிங்கள தேச பட்சிகளே
நாதியில்லையென
இன்னமும் அவள் நம்பவில்லை
யானைத்தடங்கள்போல
வயிற்றில் கரு உதைக்க
கனவில் உழன்றிடுவாள்
எருமைகளின் கொம்புகளாய்
நினைவுகள் வந்துவந்து மூசிச்செல்லும்
திணைபுலத்தை மண்டியிட்டுக்கேட்காத
குழந்தைகளை அவளினி ஈன்றுவிடக்கூடும்
மசக்கையின் போது
அவளின் திணைபுலத்தின்
மாங்காய்கள் அவளுக்கு இல்லையெனில்
நெருப்பை கொந்துவாள்
வயிற்றை தள்ளியடி நடந்துதிரிய
அவளின் வளவு அவளுக்கு இல்லையெனில்
ஒரு அகதியை பெற்றெடுப்பாள்
விடியவில்லையெனில்
சிங்கறெஜிமென்றுக்கு முன் வந்து குந்தி
முலைக்காம்பு திறந்து பாலூட்டுவாள்
அவளுக்காக வளராது குழந்தை
உங்களுக்காக வளரும் குழந்தை
ஓடிவிடுங்கள் விடுங்கள் சிங்களதேச பட்சிகளே
அவளின் திணைபுலத்தை விடுவித்து!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...