Thursday, July 16, 2020

பறிக்கப்படும் தல புராணம்-பொன்.காந்தன்,


நந்தியும் தெட்சணாமூர்த்தியும்
தன்சலில்
தடுமாறி நிற்கையில்
என் செய்வான் எம் பெருமான்
தன் தலத்தை
பன்சலையென
பறிக்கும் வெறி ஒலிக்கையில்
பரிவாரங்களை தேடுகிறார்
பாவம் கோணேசுவரர்
எம்பியாய் தவமியற்றியோர்க்கு
இரங்கினார்
பக்கத்தில் விகாரையெழ
பார்த்தார்
பாசுபதாஸ்த்திரம் பெற்றவர்கள்
கூடியிருந்தனர் கொழும்பில்
பன்சலைகள் தோன்ற
பட்ஜட்டுக்கு ஒத்துழைத்தார்
தடுக்கவில்லை எதையும்
வாடிப்போனார் பெருமான்
இப்போது
கோகண விகாரையெனும்
விதண்டாவாதத்தில்
பழைய தாண்டவக்கோபம்
கோணேசுவரருக்கு
நஞ்சுண்ட கண்டராயிருந்த
காலத்தை நினைத்தார் கடவுள்
முப்புரம் எரித்த நெற்றியை
ஒரு முறை தொட்டுணர்ந்தார்
பிட்டுக்கு மண் சுமந்த
பேரிரக்கமும் நினைத்தார்
எட்டுத்திக்கும்
காவலர்களாயிருந்த
குளக்கோட்டன் இராவணரை
எண்ணி மனம் மகிழ்ந்தார்
இளவல் கரிகாலன் வரவில்
எழுந்த தன் நிமிர்வை
எண்ணிச் சிலிர்த்தார்
தூக்கமற்ற கடவுளுக்கு
பள்ளியெழுச்சி எதற்கு
பறிக்கப்படும்
தல புராணத்தை பாடுகவென
தடுத்தாட் கொள்கிறார்
பாறைகளுக்கிடையில்
வீணையோடிருக்கும்
இராவணரை தேடுகிறார்
பல்லாயிரம் தலைகளோடு
அவனை மீண்டும் படைக்க
கோணேசருக்கு விருப்பம்
தன் கோபக்கனல்
பாயுமிடமெல்லாம்
குளக்கோட்டன் உதிக்க
சித்தங் கொள்கிறார்
குடமுழுக்கும் கும்பாபிசேகமும்
எப்படி அமையுமென
எல்லா ஆக்கிரமிப்பையும்
நெற்றிக்கண்ணால்
நோக்கியுரைக்க கூடும்
ஆதிமூலத்தை பிடுங்க
காவி தரித்தவன் நினைக்க
ஊழியொன்றை பெருமான்
உள்ளத்தில் நினைக்கிறார்
தட்டத்தனியே
கோணேசரை விடாதீர்கள்
பக்கத்துணையாயிருங்கள்

தேரேறல்-பொன்.காந்தன்,


பதினெட்டாம் போர் நிறுத்தம்
முரட்டு தேகத்தின் இன்பவதையாய்
முகிழ்க்கும் பாலைக்கிளைகள்.
கிழக்கும் மேற்குமாய் விரிந்த காடு.
கூடை நிறையும் மஞ்சள் தேனாய்
கொழுத்துப் பழுத்துவிழும் பழங்கள்
இனிப்புத் தமிழாய்
எடுத்துண்ண இதழ்களில் ஒட்டும்.
பருவமற்ற பொழுதில்
பாலைக்கிளைகள்
கலவியில் திளைப்பதாய்
காது மடலுரசும் காற்றின் இரகசியம்.
ஆதிக்கதையோடு
அமர்ந்திருக்கும் பிள்ளையார்
அவ்வழி போறவரின் நம்பிக்கை.
காணிக்கையாய் என்றோ
வேரடி வீரர் கூட்டம்
வெற்றியை படைத்தனரவர்க்கு.
இப்போதும்
பேரூந்துச் சாரதியர் நிறுத்தி
அக்கல்லின் துதிக்கையில்
பயணத்தை ஒப்படைப்பர்.
நெடுஞ்சாலைகளற்ற
பெருங்காட்டில் இருளில்
மதங்கொண்ட களிறடக்கி
வேந்தர் சேனைக்கு
அருளாகி
அன்றமர்ந்த பெருமானார்.
இப்போது நிறுத்தத்தில்
கற்பூர ஒளியில் மிதந்தார்
காரிகையொருத்தியும்
பாதிமலரொன்று பக்தியில் பற்றி
நீள் கூந்தலில் பொருந்த
ஏறி அமர்ந்தனள் பேரூந்தில்
என்னருகில்
அவள் தோளுரசியது.
பாணங்களற்றிருந்த
வில்லுக்கு
படைகொண்டு வந்தது
ஒரு பூங்காற்று
தூரப்பயணம்தான்
காட்டின் நடுவிலொரு
வண்டறியாக் கிளையில்
பூத்தவளாய்
புதிதாயிருந்தாள்
புளுதித் தெருவொன்றில்
அவள்
புல்லனைய பாதங்கள்
உலவிப்பின்னேதான்
ஓடி வந்திப்பேரூந்தில் ஏறினள்
சடைத்த பாலையில்
பசிய கிளை நுனியில்
கொளுத்த பழமெனத்
தேன் வழிந்தவள் தேகம்.
மலர் கொத்திப்பறவையின்
கனவென கன்னங்கள்.
கடைக்கண்களுக்கு
ஒரு காட்டு நிலாவின்
நிழல்வரையும் ஓவியமாய்
தோன்றினள் மங்கை.
எப்படியோ
கொக்காவில் கடப்பதற்குள்
மான்கள் மேயும்
மழைத்துளிர்களில்
வனைந்த உதடுகளில்
கொடிகளில் உதிரும் பனியாய்
ஒரு புன்னகை.
காட்டுமலரோடு பேசலானேன்.
அவள் குரல்
கற்பூரப்புல்வெளிவரை
எப்போது யாரோ
கேட்ட குரல் போலவொரு
சங்கீதம் சரசம் சமர்வாசல்.
பழைய முறிகண்டி
பதினெட்டாம் போர்தான்
அவள் முகவரியே.
எங்கிருந்தோ அல்ல
அங்கேயே பிறந்தவளாய்
அக்காட்டின் குளிர்மையில்
கொட்டு மழைக்காலத்தில்
குறுக்கும் மறுக்குமாய் சீறும்
காட்டாற்றில் கால்கள் எற்றி
பருவம் வனைந்த பறவையது.
உடும்பின் பிடியாய்
உள்ளிருக்கும் கதைகளை
மெல்ல விடுவித்து
மின்னும் கண்களில்
என்னை அறிவித்து
வன்னித் தெருவின் பயணத்தில்
சொல்லும் கதைகள் கேட்டேன்.
கனகராயன் ஆற்றினோரம்
புரவிகளோடு
ஒரு வில்லேந்திய படையாகி
அவள் விழிகளில்
நடந்துகொண்டிருந்தேன்.
ஐயங்கன் குளத்தருகே
அமைந்த மாளிகையில்
அவளருகே அமர்ந்திருந்தேன்.
கோட்டைகட்டிய குளத்தில்
தடாகத்தில் நீராடி
தங்கத் தேரென சேடிகளொடு
அங்கம் திரண்டு மயக்க
அந்தப்புரத்துக்கு அவளை விழி
அழைத்துக்கொண்டிருந்தது.
இளவரசியொருத்தி
இளைப்பாறிய வாசத்தை
பெருமரத்து காற்று
சுவாசத்தில் பரவிவிட
அவள் மூச்சு என்னில்
பல்லாயிரமாண்டு வாயிலின்
பெருங்கதவை தட்டியது.
யாரங்கே!
பிறகு நான் மாந்தைவரை
புரவியெடுத்துப் பறந்தேன்.
புத்துவெட்டுவான்வரை
ஆடு சாய்த்துச் செல்வோம்
அக்காட்டினிடையே
நெல் சோழம் கடலையென
நிறைய பசுமைகாண்போம்
பரணறிவேன்
அரணறிவேன்
பறவைகளின் கனவறிவேன்
நதிகளின் கரைகளில்
நானும் தோழிகளும் மகிழ்வோம்
புதூருக்கும்
புளியம்பொக்கணை
நாகதம்பிரானுக்கும்
வண்டி கட்டிபோவது
அப்பப்பா கால வழக்கு
இப்போது
இப்படி பேருந்துகளில் போவோம்.
அடுக்கிக்கொண்டே போனது
அக்காட்டுத் தென்றல்.
ஓ!
நீ ஒரு இளவரசி என்றேன்
மஞ்சள் பூசிய முகத்தில்
ஏதோ சிவந்த கோடுகள்
அதில்
எதை எழுதினாலும்
ஒரு காவியத்தின் பூ மலரும்.
அந்தி சாயும் வேளையில்
சங்குப்பிட்டிப்பாலத்தை
பேரூந்து கடக்கும் போது
பாண்டியனின் மீனாய்
அவள் விழிகள் மின்னி
ஒரு கொடியாய் படபடத்தது
நல்லூரில் போயிறங்கும் போது
ஏதோ ஒரு
நம்பிக்கை படர்ந்தது
அதுவரை அவள் பெயரறியேன்
கேட்டேன்
குவேனி என்றாள்
அடுத்து என்னிடம்
அப்போது என்னிடம்
எந்த வார்த்தைகளுமில்லை
இரவு குவேனிக்கு
அழைப்பெடுத்து பேசினேன்
குவேனி கவனம்!
அலைகரைகள் கவனம்
ஆங்கு வந்தேறிகள் வருவார்கள்
எவரிடமும் பேசாதே
எந்த வார்த்தைக்கும் இணங்காதே
உன்னோடு நானிருக்கிறேன்
பதினெட்டாம் போரிருக்கிறது
நீ ஒரு இளவரசி

மரமும் மனமும்-பொன்.காந்தன்,


இப்படித்தான்
போன இரண்டு பருவத்திலும்
பூத்துக்குலுங்கியது மரம்
சிட்டுக்கள் சிறகை
அகல விரித்து சுற்றின
பார்க்கும் போது
சொர்க்கத்தில் நட்டதுபோல
அத்தனையும் காயானது
அடியடியான வீரியம் போல
எல்லாக்கிளைகளிலும்
ஏகப்பட்ட பிஞ்சுகள்
எல்லாம் பழமாகும்
இனிக்கும் வருங்காலம்
என்ற நம்பிக்கை தெரிந்தது
ஒரு நாள்
ஓரிரண்டு கீழே விழுந்தது
எடுத்துக் கடித்தால் வெம்பல்
பிறகு தினமும் இரவு
வெளவால் வந்து போயின
காலையில்
காய்கள் சில இல்லை
ஒரு நாள் உச்சிவெயில் நேரம்
நிழல் சுகத்திற்கு
நிலத்தில் நிமிர்ந்து படுத்தால்
பச்சைபோலும்
பல கிளைகளில் குருவிச்சை
கவலைதான்
கத்தி எடுத்து வெட்டியும்
ஒட்டிக்கலந்துவிட்டது மரத்தோடு
வெம்பலானது போக
எஞ்சியது முற்றிப் பழுக்கட்டும்
பஞ்சாமிர்தத்துக்கும்
படையலுக்கும் வாய்க்கும்
உள் மனம் சொல்லிக்கொண்டது
ஒரு நாள்
ஒவ்வொன்றாய் நெருங்கி
கனியுமோவென கவனித்தால்
ஏகப்பட்டதிலும் புளுக்குத்தல்
கடைசியில்
ஒன்றிரண்டு தப்பி பிழைத்தது
ஒரு நாள் பிட்டோடு
வெட்டிச் சாப்பிட வாய்த்தது
எனினும் பருவத்துக்கு பருவம்
இது இப்படித்தான் பூத்திருக்கும்
கனவு பொய்த்துவிடும்
கடைசியில்
முற்றத்தில் கொட்டிய
இலைக்குப்பைகள்தான் மிச்சம்
வெட்டி எறிந்துவிட்டு
நல்ல விதையில் முளைத்ததை
நட்டுவிட மனம் சொல்கின்றது
மண்ணில் குறையில்லை
முன்பு அப்பாவின் அப்பாவும்
நட்டு
நல்ல கனி பறித்ததாய் கேள்வி
பிறகும்
சில காலம்
தம்பியன் வளவிலிருக்கையில்
நல்ல வீரியம் விளைச்சல்
இப்போதுதான்
சில பருவங்களில்
பலத்த ஏமாற்றமும் நட்டமும்
நேற்று கிளைகள் முழுக்க
குரங்கு கூட்டம்
நாளைய நாட்களில்
பேரப்பிள்ளைகளுக்கு
பிடுங்கிக் கொடுக்க
வெம்பல் சூத்தை புளுக்குத்தல்
எதுவும் இல்லாத
நல்ல கனிகள் வேண்டும்
வேறு வழியில்லை வெட்டுவதைவிட!

மிதிபலகையின் முகம்-பொன்.காந்தன்,


ஒரு காலத்தில்
எங்கள் புளுதி தெருவில்
ஆச்சரியப்படும் வேகத்தில்
பறக்கும்
பேரூந்துகள் பிக்கப்கள்
திரும்பி வரும் போது
காயப்பட்டவரை ஏற்றிவரும்
உயிர்களை காப்பாற்றின
அந்த ஓட்டை வண்டிகள்
பள்ளங்களேயான தெருவை
பஞ்சணையாக்கிய சாரதி
சாமியை ஏற்றும்
சகடைகள் தேர்களைவிட
சில வேளை
ஓலைகள் குழைகள் கட்டி
ஆனையிறவுக்கோ பூநகரிக்கோ
ஓடித்திரியும்
டீசல் வண்டிகளுக்கு
எங்கள் தெருக்கள்
நிறைகுடம் வைக்குமளவில்
கடவுளின் கடாட்சமிருந்தது
சொகுசு ஆசனமில்லை
எந்த டூயட்டுமில்லை
கிளிநொச்சிக்கும்
ஆனையிறவுக்குமான
அந்த சேவையில்
ஓய்வும் இருப்பதில்லை
சாரதிக்கு சிலவேளை
மீசைகூட முளைத்திராது
மிதிபலகையில்
நிற்பவனின் முகம்
உள்ளேயுள்ள
ஓராயிரம் காவியம் பேசும்
வாகனங்கள் மீதும்
அதை ஓட்டியவர்கள் மீதும்
நம்பிக்கை வைத்து
ஒரு தேசமே
அடிக்கடி
பயணங்கள் செய்தது
இப்போதும்
அந்த நம்பிக்கையோடுதான்
தெருவின்
வாகன இரைச்சல்களை
கேட்க விரும்புகிறது மனம்

Tuesday, July 7, 2020

ஆறுதல் பரிசு-பொன்.காந்தன்,


தஞ்சக்கேடேன்று முந்தி
தலையை தொங்கிவிட
இஞ்சிச் சோடாவரும்
இளநீலப் பெட்டியில்
கொஞ்சமாய் உமிய
குளுக்கோசும் கூட வரும்
அஞ்சல் ஓட்டத்துக்கு முன்
ஆவென வாயை பிளக்க
பின்னால ஓடிவந்து
பிரி ரீச்சர் உசாவும்
பேரம்பலம் மாஸ்ரரும்
தம்பிகள் கேளுமிங்கே
உங்களை நம்பித்தான்
மஞ்சள் கவுசெங்கள்
மானம் உள்ளதென்று
ஒரு பெட்டி குளுக்கோசை
உடைத்து இழுத்தீய்த்து
வாயால் கிழித்து
வாய்க்கால்
மணல் கும்பியாய்
உண்டென கொட்டி
உமியத் தந்துவிட
கன்னம் கொடுப்பு வரை
வண்ணம் பூசி
அப்பி அயல் பார்க்க
தப்பி தடவி நக்கி
பென்சன் ஜோன்சன்
பெரிய ஒலிம்பிக்
உசைன் போல்ட்டாய்
பில்டப் நூறு விட
பச்சைக் கவுசுக்கு
உள்ளூர ஒரு பதட்டம்
எச்சில் காய்ந்தபடி
இல்லம் நீலத்துக்கு
ஒரே இடிக் கலக்கம்
கடைசியில் நடந்தது
ஐநூறு மீற்றரோடு
ஐயகோவென்று
பச்சை சிவப்பு நீலம்
பாய்ந்து
முந்திக் கடக்க
நொய்ந்து நூலாகி
பைய பைய நடந்து
என்னவோ இன்று
அங்க பிடித்திற்றென்று
அனுதாப வாக்கெடுத்து
பள்ளத்தில் விழுந்த வசுவாய்
வில்லுத்தகடு கழன்று
விலாப்பக்கம் சரிந்த
மஞ்சள் கவுஸ் காரர்
எங்கள்
மரியாதை கெட்ட கதையில்
தஞ்சக் கேடெண்டிருக்க
வம்புக்குட்டி சிலது
அன்பு மிகுதியினால்
கொஞ்சம் வாயிலிடுங்கோ
என்று தந்த பையில்
அப்பச் சோடா பாரும்
அறுவார் செய்தவேலை
இப்ப நினைக்கச் சிரிப்பு
இல்லை அதனால்
தஞ்சக்கேடும்
அஞ்சல் ஓட்டத்துக்கு
இன்று ஒரு ஆறுதல் பரிசு

விடைபெறுதல்-பொன்.காந்தன்,


ஒன்றும் பேசாமல்
எழுந்து போய்விட்டாய்
ஏன்
ஒன்றும் பேசவில்லை
எங்கு போகிறாய்
எதற்குப் போகிறாய்
எப்போது வருவாய்
இந்த கேள்விகளுக்கு
அக்கணத்தில்
பதிலில்லாத போதும்
இன்று உனக்கு
இக்கணத்தில்
ஒரு கோடி முத்தங்கள்
உன்னைப்போல
விடைபெறுவது
எளிதல்ல வாசலில்
இந்த வாசலில்
இப்போது
பலபேர்
வந்து போனார்கள்
உன்னைப்போல
ஒரு முகத்தின்
பேராச்சரியம்
உலகில் ஏதுமில்லை

தட்டிவானாய்த்தான் இருந்தோம் தளம்பவில்லை-பொன்.காந்தன்,


வல்லை வெளிகடக்கும் போது
உள்மூச்சுக்குள் உரப்பேறுகிறது
வைரசுகள்
வடமராட்சி வரவேற்கிறதோடு
இடறித் தடுமாறி ஓடுகிறது
வடலியும் தோப்புமாய் பனைகள்
வசந்தனை போலுளது
மூத்தவிநாயகனுக்கு முதல்
முழு மனதையும்
மில்லர் ஆட்கொண்டருள்கிறான்
வாடுவதில்லை காற்றிலவன்
வரலாற்றில் தோற்றிலன்
நேற்றுப் போலிருக்கிறதெலாம்
நெல்லியடி அபிசேகத்தில்
தன்னுடலை பிழிந்து
தாய்க்கீந்த தனயனவன்
பாயிழைக்க மட்டுமா ஓலை
பகையறுக்கும்
வாளையும் பூக்கும்
வடமராட்சி பனம் பாளை
வல்லிபுரத்தாழ்வாரின்
வானுயர்ந்த கோபுரமே
சொல்லுக திக்கெட்டும்
ஆபத்பாந்தவனுக்கு
அடுத்தும் ஒரு பெயருண்டு
சிறுத்தைக்குலத்தின் மில்லரென.
ஒரு காலத்தில்
தட்டிவானாய்த்தான்
ஈழத்தமிழன் இருந்தான்
பள்ளம் புட்டி பாய்ந்தபோதும்
குஞ்சாத்தையின்
கடகமும்
கதையும் தளம்பவில்லை
வெற்றிலை எச்சிலும்
விழுந்த இடமும்
சன்னம் பாய்ந்தது போலிருக்கும்
எந்தப் பிசிறலும் இல்லை
இப்போது
குறுந்தாடித் தந்திரிக்கும்
கோழிக்கள்ளனுக்கும்
வேறு பாடு தெரியாமல்
நாவுளறுகிறது நமது தரித்திரம்
அனைத்தும் ஈயவும்
அகலத் திறந்த தமிழரிதயம்
கதவு மூடி
கள்ள வாசல் திறந்திருக்கிறது
தேசியத்தின் தலையில்
தேசியக்காய் தடவி
கிணற்றடிக்கு இழுத்துப்போக
எவனினி வருவான்
தமிழர் தழும்புகளுக்கு
தைலம் வாங்கப்போனவன்
கொழும்பிருந்து திரும்புகையில்
கோமாவிலிருக்கிறான்
அல்சைமர்சில் அவதிப்படுகிறார்
அரசியல்வாதிகள்
பூக்கள் புயலான வேதம்
எப்பிடி இவர்கள் புத்திக்கேறும்
வாயில் சனியன் பிடித்ததுகள்
வாசலில்
இப்போது எங்கள் தலைவர்கள்
இல்லாத பூர்வீகத்துக்கு
ஏம்பலிக்கலாமா தமிழர்
எல்லாவலயின் எதேச்சதிகாரம்
நல்லவேளை அவனில்லை
சொன்னவாய்
சோறு தின்ன இருந்திருக்காது
தன்சல் தாம்பாளத்தில்
மின்னல் முழங்கியிருக்கும்
மண் மட்டுமல்லவே
காற்றும் அலையும் வானும்
எங்கள் கல்வெட்டுக்களின் இடம்
கரும்புலிகளின்
கால்கள் படர்ந்த கானகத்தில்
சொல்மேயும் மான்களாய்
உள் மனம் ஓடித்திருகின்றது
கொட்டியா நிலமாய்
கொழும்பைக் கலக்கியது
இன்று
வட்டிக்காரனுக்கு மறைந்தும்
வறுமையில் தூக்கிட்டும்
வெறுமையாய் ஓலமிடுகிறது
வெடியர்களை நம்பி
பேரப்பெடியன்
கிழவியை தூக்கிச்சென்று
இட்டான் வீட்டுக்கு புள்ளடி
வென்றவர்கள் இன்று
பல கோடிக்கு அதிபதி
இனி எவன் கதி
இந்த ஏமாந்த தமிழர்களுக்கு
மாற்றங்களை நோக்கி
பயணிக்காதவர்களும்
ஒரு வகை
மன நோயாளிகள்தான்
என்ன செய்வது
சித்தப்பு கேக்கிறார்
கிலுக்கிட்டி சின்னத்திலென்று
கண்ணை மூடிக்கீறினால்
காலம் தமிழரை காப்பாற்றாது
கள்ள வாக்குப் போட்டேனென்று
ஒரு காலத்தை
களங்கம் செய்யும்
கழுதைக்கு வாழ்க்கை பட்டால்
இளவு அறிவித்தல்தான்
இனி நமக்கு எழுந்துவரும்
மனசு தளம்பாமல்
மறுபடியும் மறுபடியும்
கடலேறிப்போய்
ஒரு நாள் வெடியானாளின் நிலம்
ஏழைத்தாயின் புதல்வி
அங்கயற் கண்ணியால்
நாளை விடியுமென
நம்பிக்கையோடிருந்த நமதீழம்
கைக்கூலிகளான
வேலி ஓணான்களால்
அதற்கு விமோசனம் கிடையாது
கந்தக நினைவுகளால்
இதய அறைகளில்
எட்டி
எல்லாம் பூஞ்சணங்களையும்
தட்டி
பெட்டியில் கட்டிக் கொழுத்துங்கள்
வானேறிப்போய்
வாழ்வை தந்த
எங்கள் ஈழ நட்சத்திரங்களால்
காலத்தை காணுங்கள்
உலக மையத்திலிருந்து
ஒழுங்கையை வரையுங்கள்
வாக்குகள் எடுத்து
கொழும்பு
மூத்திர ஒழுங்கையிலிருந்து
முண்டு குடுப்பார்களை
தண்டு வேராடு அறுத்து தாழுங்கள்
தமிழரெனும்
இனமாய் எதிர்கொள்ளுங்கள்
வல்லையிலிருந்த வீசுங்காற்றும்
வாவியருகே
ரங்கன் விட்ட மூச்சும்
போர்க்கும் யாழினி டாம்போக்கள்
மின்னி முழங்கிய நிலமும்
என்னை எழுதச்சொன்னது
இது என் வரிகள் கிடையாது

மலைக்குறிப்பு-பொன்.காந்தன்,


சறுக்கீஸ் விட்டு கிழிந்த
காற்சட்டை ஓட்டைக்குள்
கைவிட்டால்
இமயமலைக் காற்றை
இதயம் தொடும்
லூர்த்தம்மா வளவு
வேலியோரத்தில்
இமயமலை தோன்றியபோது
என் செல்லப்பெயரும்
குசினியிலிருந்து பரந்தது
இமயமலையின்
நதிகளின் சத்தத்தில்
அம்மாவின் மகிழ்ச்சியிருந்தது
தூர்ந்து போயிருக்கும்
கிணற்றிலிருந்து
எழுந்து வர முடியாதிருக்கும்
இமய மலைத்தும்பியின் சிறகு
நாணல்களினால்
வருட நினைப்பது
வியர்த்துப் போய்வந்து
விழுந்து படுக்கும்
செல்போன் மண் திட்டுக்களை
பிக்கான் போடும்போது
எழுந்த
மணியண்ணையின்
வெளிமூச்சை
என் இமய மலை
எங்கெங்கிருந்தோ
பெருமூச்சாய் விடுகிறது

தேவமலர்-பொன்.காந்தன்,


விறாந்தை சுவருக்கிடையில்
யானைகள் உலவின
கமக்கட்டுவரை
நண்டுகள் ஊர்ந்தன
தவளைகள்
ஏணைக்குள் உறங்கின
நிலாவில் பாட்டி
உலக்கையோடு நின்றாள்
இரண்டு
கிடுகுத் தாழ்வாரத்திடையே
ஒரு ஈசிசெயார்
அதில் குணத்தார்
கொரட்டையுடன்
சரசு குசினுக்குள்
படத்தடியில்
ஒரு குத்துவிளக்கு
வாசலில்
கம்பியில் லாம்பு
குசினிக்குள்
போத்தில் விளக்கு
பூனையின்
யானை போன்ற நிழல்
முருங்கையை கடந்த
ஸ்புட்னிக்
இடையிடையே
கூட்டுக்குள் அடைக்கோழியின்
கீழ்த் ஸ்தாயியில்
ஒரு கரகரப்பு
கோடிக்குள் ஆடு
குழை கடிக்கும் சத்தம்
காற்றில் மிதக்கும்
துளசி மணம்
அப்பம் முப்பழம்
மனனம் செய்தபடி
பிள்ளையாருக்கு மேலேயே
படுத்துவிட்டேன்
தட்டி எழுப்பியபோது
முன்னே
முட்டைப்பொரியலும் பிட்டும்
இந்த இரவு விடியட்டும்
முற்றத்தில்
வளைந்த செவ்விரத்தையில்
ஒரு தேவமலரை
உனக்கு பறித்து தருகிறேன்
காத்திரு
காலம் பின்னேயும் போகும்

தப்பியவனின் புன்னகை-பொன்.காந்தன்,


ஒரு நாள்
என் படபடப்பில்
திணறிய காற்று
ஓய்வாய்
பூவரசுகளில்
இன்று பார்த்தேன்
தப்பியவனின்
புன்னகையொன்றை
அதன் மீதுதிர்ந்தேன்
குழந்தைகளில் வாழ
ஆசைப்பட்ட காற்றை
இதயமற்றவர்கள்
துரத்தியபோது
பொம்மை விழிகளின்
பிசுபிசுப்போடு
தாழைப்பூக்களோடு
துயர் பகிர்ந்தது
நந்திகடலிலும் ஓர் நாள்
மாந்தைக் குமரிகளின்
கூந்தல் கலைத்து
மென் விரலிடையில்
ஊர்ந்தபடி
மறுபடியும்
பாலியாற்றங்கரைக்கு வர
கனவிலிருந்த காற்று
வளையல் சிதறிய
ஓசையேந்தி
ஒற்றை பனையில்
ஓலமாயானது ஓர் நாள்
ஓர் காதலனின்
வார்த்தைகளோடு
அலைபேசிக்கிடையில்
ஆனந்த நடனமாடி
குச்சவெளிக்கும்
நிலாவரைக்குமாய்
சாமம் கடந்தும்
முணுமுணுத்திருக்க
காத்திருந்த காற்றின்முன்
வார்த்தைகள் இழந்தபடி
ஒருத்தியின்
மூச்சின் முடிவில்
வீழும் மெல்லிய இலையை
ஏந்த திராணியற்று
பெருவிருட்சத்தின் அடியில்
தோற்றது ஓர் நாள்
காற்று இறுமாப்பெய்த
இப்போது
ஓர் குகையில்லை
வெண்கலக்குரலாய்
ஏந்திச்செல்ல
ஒரு வீரப்பிரசங்கமில்லை
வீரர்களின் காலிலெழும்
புளுதியும் வாசமுமில்லை
எந்தக்கட்டளைகளுமில்லை
மாடங்களுமில்லை
காற்றசைக்க கொடியுமில்லை
என்னிடம்
தப்பியவனின் புன்னகை
காற்றுக்குத் தெரிந்த
அந்த படபடப்பு
ஏதோ
சொல்ல நினைக்கிறேன்
இந்த காற்றுக்கு
என் அழைப்பை ஏந்திச்செல்
எங்கிருந்தாலும்
வரச் சொல்
காத்திருக்கிறேன்

இந்திரப்படலை-பொன்.காந்தன்,


நம்பமுடியவில்லை
மாட்டுச் சாணக்கும்பல் முன்
உளுத்துக் கொட்டிய
பிணைச்சல் மரம்
மூலஸ்தானத்தில் நின்றது
இந்திரப்படலை திறந்து
ஊஞ்சல் பாட்டு
பள்ளியெழுச்சி யாவும் கூடிய
வசந்த மண்டபத்தில்
கந்தசாமி அமர வைக்கப்பட்டார்
அபிசேகம் தொடங்கிற்று
பிச்சை காசு துண்டை
கெட்டியாய்ப் பிடித்திருந்தார்
விதானையின்
கைபேசியை மனனம் செய்தார்
மெய்மறக்காதிருக்க
அடையாள அட்டையை
நெஞ்சோடு அழுத்தினார்
கடனுக்கு சாமான் தரும்
கடைக்காரனை நினைத்தார்
லீசிங்கை
நினைந்து ஏங்கினார்
சாம்பிராணி சூடங்களுக்குள்
கந்தசாமியின்
கதவற்ற
கக்கூசு வாசம் தொலைந்தது
பொருக்குவெடித்த உதடும்
நடக்கச்
சவளும் கால்களும்
மரத்துப் போன விரல்களும்
கடவுளுக்குமாக
கந்தசாமி
எழுந்தருள வைக்கப்பட்டார்
பரிவாரங்களும்
அழைத்து எழுந்தருளின
கந்தசாமியோடு
மொத்தம் பத்து வாக்குகள்
அத்தர் பன்னீரென
அடுக்கடுக்காய் வந்தன
கந்தசாமி யாவுமறிவார்
நிரந்தரம்
தனக்கு கோவணம்தான்!
எனினும்
இந்திர படலை திறந்து
இடவருவார் புள்ளடி
இது அவர் தலைவிதி

முனி அடிக்கும்-பொன்.காந்தன்,


கோடி ஆண்டுகள் வாழ்கவென்று வாழ்த்த நினைத்தால் என் நகரத்தின் புளியமரத்தையும் சுமங்கலியை வாழ்த்துவது போல வாழ்த்துவேன்.முனி அடிக்கும் என்ற கதையிலிருந்த புளியமரம் எனது பருவங்களில் தேவதையாக மாறிற்று.எங்கள் மண்வீட்டு அடுப்பில் கறி சமைக்கும் போது குழம்புக்கு பழப்புளியை சிரட்டையில் கரைத்துவிட்டு சக்கையை அப்படியே தடி வரிச்சலால் கோடிக்குள் அம்மா அடிக்கடி எறிவார்.சில வேளைகளில் கோடிக்குள் சிறுவயதில் எந்த அங்கவஸ்த்திரமும் இன்றி ஓடிப்போய் பெய்யும்போது முளைத்து நிற்கும் புளியின் அழகிய பசுந்தளிர்களில் மழைத்துளிபோல் விழுவதை பார்த்து இரசித்ததுண்டு.ஆனாலும் புளி பற்றிய பழமொழிகளால் எங்கள் கோடிக்குள் ஒரு புளிகூட வளர்ந்து உயர்ந்து பெருத்து சடைத்து விரிந்து புளியங்காய் காய்த்ததில்லை.கோடிக்குள் ஒரு புளி நின்றிருந்தால் பின்னாளில் புளிப்பு என்பதும் எனக்கு இனிப்பாய் இருந்திருக்குமோ என்னவோ.ஆனாலும் சிறுவயதில் குளத்தடி பள்ளிக்கு போகும் வழியில் குளம் வான் பாயும் ஐந்தடி வான் மண் புட்டியில் ஒரு பெரும் புளியமரத்தை தினமும் கடந்த சென்றேன்.அந்த புளி காய்த்துக் கொட்டியிருக்கும் புளியங்காய்களை கடித்தபடி வாய்கூசியபடி வீடுவந்த ஏராளம் நாட்களுண்டு. எங்கள் கல்லெறிகளையும் தடியடிகளையும் தாங்கிய பெருந்தாய் போல அந்தப்புளியின் காலத்தை கடந்தேன்.
பள்ளிப்பருவங்கள் முடிந்து பரீட்சை முடிவுகளும் வந்து சில வேளை நொந்து இனி அடுத்து என்று பயணிக்க ஆரம்பிக்கும் பருவத்தில் அநேகமானவர்களின் வாழ்க்கையில் ஒரு புத்தகம் வானொலிப்பெட்டியின் பாடல்கள் ஒரு நூலகம் வாசிகசாலை நாற்சந்தி ஒரு பெட்டிக்கடை நகரத்தின் மத்தியிலோ ஓரத்திலோ நிற்கும் ஒரு பெரிய நிழல்மரம் பூங்கா கடற்கரை இப்படி ஏதேனும் மறக்கமுடியாதபடி நிச்சயமாக இருக்கும்.எனக்கும் முனிக்கும் பூர்வஜென்ம பிணைப்போ என்னவோ தெரியவில்லை.பள்ளிக்காலங்களின் பிறகு ஒரு புளியமரத்தின் கீழ் கொட்டிலில் நான்கு பேருக்கு பாடங் கற்பித்தேன்.பிறகு முள்ளியவளை தண்ணீரூற்று சந்தியில் நிற்கும் பெரிய புளிய மரத்தடியில் மாலை வேளைகளில் காற்று வாங்கிக்கொண்டு உலவிக்கொண்டிருந்தேன்.பிறகு மீண்டும் கிளிநொச்சி நகரத்துக்கு அங்கும் ஒரு புளிய மரம்தான் எனது மற்றும் எனது சகபாடிகள் பலரின் காலை மாலை இரவுவென எப்பொழுது என்று சொல்லமுடியாதபடி முப்பொழுதும் ஒட்டிக்கொண்டது.
அது நகரத்து மத்தியில் சாலை ஓரத்தில் நின்ற புளியமரம்.அந்த புளியமரத்தின் கதையை வெறும் வார்த்தைகளால் மென்றுவிட முடியாது.எரிக்சொல்கெய்ம் கிளிநொச்சிக்கு முதன் முதலில் வரும்போது என்ன நிற சேர்ட் அணிந்திருந்தார் என்பது அந்தப்புளிய மரத்துக்கு தெரியும்.ஜோன் வெஸ்பேர்க் வந்த உலங்கு வானூர்த்தி எப்போது எத்தனை மணிக்கு முற்றவெளியில் இறங்கியது அந்த புளியை கேட்டால் சொல்லும்.யசூசி அகாசியின் கண்ணாடி பார்வையை அந்தப்புளி கவிதையாகவும் எழுதும்.விடார் எல்கிசனை இந்த வீதிப்புளி மறக்காது .பாலா அண்ணையை பார்க்கும் போதெல்லாம் கிளைகள் சிலிர்த்து நின்ற புளி அது.தளபதிகளையும் போராளிகளையும் போகவும் வரவும் பார்த்து பூரித்துக்கொண்ட புளி.அந்தப்புளியின் கிளைகளை உலுப்பினால் ஓராயிரம் உணர்ச்சி மிக்க அழிக்கப்பட்ட இராச்சியத்தின் கதையை கொட்டும்.கூப்பிடு தூரத்தில் காவியத்தலைவனை கண்ணெதிரே பார்த்து பரவசமான ஒரு பரணிக்குரிய புளியமரம் அது.இன்னும் வஞ்சகத்தோடும் தன் கண்ணெதிரே வானூர்தியில் வந்திறங்கி பரவிப்பாஞ்சானுக்கும் ராங் வியூ ஹோட்டலில் விருந்துக்குமாய் வந்து போனாரை சபிக்கும் அந்த புளி.
ஒரு குறுநில ஆட்சி நடந்துகொண்டிருந்த தமிழ் நிலமாயிருந்த கிளிநொச்சி நகரத்தில் நின்ற மேன்மைக்குரிய புளிய மரத்தடியில் காவாலிகளாகவும் பலர் பரிகசித்துப்போன நானும் என் சகபாடிகளும் முப்பொழுதும் நின்று மகிழவும் அதை பின் எழுதவும் வாய்ப்பும் ஒரு வசந்தமும் கிடைத்தது.ஒரு பொழுதில் சுதந்திரத்தின் வாசம் எனக்கு ஒரு புளியம்பூவிலிருந்தும் வந்தது.யாரும் எவரும் ஏன் என்று எப்பொழுதும் என்னை கேட்டதில்லை.அப்புளியடியில் விழுந்து புரண்டு உருண்டாலும் எவரும் கேட்கார் என்னும் துணிச்சலும் நகரத்தின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் உரிமையும் உவகையுமிருந்தது.என் உதட்டின் நிறத்தை அதிகம் இரசித்தது காதலியை விட புளியங்கிளைகள்தான்.சிலவேளைகளில் புளியங்கிளைகள் வரவர உன் உதடுகள் கறுக்கின்றது என்று கடிந்துகொண்டதும் உண்டு.தள்ளாடிய சிலவேளைகளில் நீ திருந்த மாட்டாய் என்று திட்டியதும் உண்டு.சில வேளைகளில் நீலங்கலந்த ஒரு சீருடை அணிந்து காவற்றுறையாகி ஒரு பார்வை பார்க்கும்.ஆனாலும் எங்கள் புன்னகையிலும் நிலத்தை பாடும் இனிமையிலும் மயங்கிப்போகும்.மின் விளக்குகள் இல்லாத சாலையில் வடை வண்டில் காரனின் விளக்கொளியில் இரவு அழகாய் விரியும் பொழுதில் புளிய மரம் ஒரு இராச்சியத்தின் கனவை சுமந்த அந்த நகரத்தை இரசித்துக்கொண்டிருந்தது.வானமெங்கும் பறந்துகொண்டிருந்த புலிக்கொடிகளை தன் உச்சிக்கிளைகளால் தரிசித்து தன்னுள் நிமிர்ந்தது அந்தப்புளி.
அந்தப்புளியடியில் நின்று நெடுநேரமாய் பேசுவோம்.சாமங்கள் கடந்த உரையாடல்கள் பல.சில வேளை கொத்துரொட்டி சாப்பிட ஆசைவரும் ஒவ்வொருவரும் சட்டைப்பையில் இருந்ததை எடுத்துச் சேர்த்து சேரனுக்கு புறப்படுவோம்.புளியமரம் வழியனுப்பும்.சேரன் சுவையூற்றில் ஆவி பறக்க பெரிய தட்டில் வரும் கொத்துரொட்டியின் வாசம் இன்னமும் நாசியில் .அது போல ஒரு சுவையான திருப்தியான பொழுதை இதுவரை பிறகு அனுபவிக்க முடியவில்லை.சில வேளைகளில் குளிராக ஏதேனும் குடிக்கவேண்டும்போல இருக்கும் பாண்டியனுக்குப் போவோம்.எங்கள் சக பாடிகளில் சிலர் பாண்டியனுக்கு போக முந்துவதற்கு சுவையான குளிர்களியை விட அதை பரிமாறும் அழகிகளோடு ஓரிரண்டு வார்த்தை பேசி அடுத்த வாரம் அதையே கனவாய்க்காண.சில வேளைகளில் இளந்தென்றலுக்கும் இன்னொரு வன் நைன் ஓய்வு விடுதிக்கும் போவோம் அங்கு குடித்த முட்டை சூப்பைபோல உணவுகளை போல இப்போதெல்லாம் கிடைப்பது அரிதிலும் அரிது.ஏனெனில் அந்த நகரம் அப்பொழுதில் உலகம் பார்க்கின்ற தமிழர்களின் தலைநகரமாயிருந்தது.அத்தலைநகரத்தில் ஒரு புளியடி மைந்தர்களாய் நாமிருந்தோம்.
ஒரு தமிழர் இராச்சியக்கனவு அடை வைக்கப்பட்டிருந்த ஒரு அழகிய மெய்சிலிர்க்கவைக்கும் பரணிகளால் ஆன நகரம் பேரிருள் சூழ்கின்ற கடைசி நாட்களின் ஆரம்பித்ததிலிருந்து அந்த புளியடியில் நின்று எல்லாவற்றையும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம்.முன்பொரு முறை அந்த நகரம் வீழ்ந்தது அன்னியர்களிடம் மீண்டும் எழுந்தது.பல முறை வெறிச்சோடியது மீண்டும் செழித்தது.வீழ்ச்சியிலும் எழுச்சியிலும் கலந்திருந்தோம்.இறுதி நாட்களில் இராச்சியத்தின் நகர மாடங்கள் ஒவ்வொன்றாய் விமானங்கள் குண்டு வீச தகர்ந்துகொண்டிருந்தது.ஆழப்பரந்த புளியின் வேரைப்போல எமக்கு நம்பிக்கையுமிருந்தது.ஆனாலும் ஒரு இராச்சியத்தின் கனவு கண் முன்னே இடிந்து கொட்டிக்கொண்டிருந்தது.புளியின் அருகிலும் குண்டுகள் சரமாரியாய் வீழ்ந்தன.தேவதையாய் இருந்த புளியில் பழைய கதையில் வருவதுபோல முனிகள் இனி தொற்றிக்கொள்ளுமோ என ஐயுற்றோம்.விடைபெற்றோம்.அப்புளியமரம் கோடி ஆண்டுகள் வாழ்க. வஞ்சகத்தால் ஒரு நிலம் வீழ்த்தப்பட்ட கதையை சொல்லவேண்டும்.ஆனால் இப்போது புளிடியில் முனி அடிக்கும் அதனால் நான் போவதில்லை

பின்னல் உதடு கனவு-பொன்.காந்தன்,


கிழக்கே தலைவைத்து
கிடத்தி இரவு விட
உழற்றி உருண்டு தள்ளி
உரிந்தும் புரண்டு திசை
வடக்கே தலை கிடக்க
வாங்கிலில் கால் தொங்க
தலைக்கு வைத்த பஞ்சு
தாறு மாறாய் ஒதுங்க
எழுந்து கிணற்றடிக்கு
இளங்காலை குளிரடிக்க
நடக்க வைப்பதில் முன்
இனிப்பும் கலந்திருக்கும்
இளஞ்சிவப்பு பற்பொடியும்
வெளுக்கும் வானத்தில்
விடிகாலையப் பொழுதில்
இழுக்கும் மையலினை
பழக்கி வைத்தெம்மை
அழைக்கும் மாயத்தை
ஆங்கே செத்தைகளில்
மறைந்தும் மறையாமல்
மனதை மயக்கி நிற்க
தினமும் எடுத்தெடுத்து
தின்னும் ஆவலுடன்
உள்ளங்கை நடுவே
ஓரங்கள்வரை குவித்து
ஒற்றை விரல் நீட்டி
பற்றி பாதியை நாவில்
நல்ல இனிப்பென்று
நக்கியும் சாப்பிட்டு
மிச்ச சொச்சத்தை
பல்லில் கொஞ்சமும்
பக்கம் கடைவாய் ஓரம்
அக்கம் பக்கமெல்லாம்
அள்ளிப் பூசி தட்டி
பல்லுத் தீட்டி முடியும்
பருவம் கொஞ்சம் வளர
மெல்லியதாய் கண்
மல்லிகாவின் பக்கம்
மயங்கி கிறங்கும் நேரம்
என்ன மாயமது
பின்னலங்குமிங்கும் ஆட
கன்னங்களுக்கிடையில்
ஓர் கனியாய் சிவந்தவள்
சின்ன உதடுகளில்
சிரிப்பு மலர்ந்த பரவ
அழுத்தி உதடு தேய்த்த
அண்ணா பற்பொடியும்
பழுத்த உதடுகளின்
பருவ இரகசியங்கள்
இறுக்கி அணைத்தாலும்
எங்கும் ஒட்டாது
எவர் களவும் பிடிபடாது
கிணற்றுக் கட்டடியில்
ரூ இன் வண்ணாயிருந்து
மறக்க முடியாமல்
மறுபடியும் மறுபடியும்
மறுநாள் விடியும்வரை
இரவெல்லாம் கனவில்
இழுத்து வைத்தேதோ செய்த
மல்லிகாவின் உதட்டின்
மாயமந்திரத்தை
இன்றும் தேடியோட
கல்சியும்
குறைப்பாட்டுக்கொன்று
கழன்று விழும்
பல்லுக்கொன்று
முரசு கரைந்தாலொன்று
முன் சூத்தைக்கொன்று
அடுக்கப்பட்டது எங்கும்
பிதுக்க பிதுக்க வரும்
பின்னல் மல்லிகா உதடு
கனவு ஒருபோதும் வராது

முதலிரவுக்கான பின்னணி இசை-பொன்.காந்தன்,


கடந்த ஆண்டு ஏதோ ஒரு நாளில் ஒரு ஓய்வான இராத்திரியில் தனியே எனது மடிக்கணணியில் இறுவட்டை செருகி அலாடினை பார்த்தேன்.இந்த அலாடின் பேராச்சரியமாய் இருந்தது.எனக்கு முன்னே காலம் கடகடவென மாறிவந்திருப்பதை அலாடினும் கூட எனக்கு நினைவுபடுத்துகின்றன.அலாடினை திரையில் பிரம்மயை ஊட்டும்வகையில் அனிமேசன் தொழில்நுட்பம் அது இன்றைய காலத்தின் ஒரு தனிக்காட்டு இராஜா.அரபுக்கதைகளில் அலாடினை அறிந்திருந்தாலும் அலாடின் அவ்வப்போது ஒவ்வொருவரின் எண்ணத்தில் தோன்றியிருக்கிறது.அதை பார்க்கும் ஒவ்வொரு தருணத்திலும் அலாடின் ஆச்சரியமாய் இருந்தது பார்த்தவர்களுக்கு.இங்கே அலாடினைப் பற்றி நான் ஒரு பேருரையாற்றப்போவதில்லை.ஏனெனில் அலாடினை அறியாதவர்கள் கிடையாது.ஆனால் எனது காலத்தின் ஒரு கதை சொல்லிக்கு இந்த அலாடின் தேவைப்படுகின்றது.உண்மையில் சொல்லப்போனால் ஒரு அற்புதவிளக்கு என்னிடம் இருந்தால் நன்றென தோன்றுகின்றது.இருள் மண்டிய இராச்சியம்.ஏதேதோ பறிபோக.அமானுஸ்ய தேவதைகளையும் இப்படி அற்பு விளக்குகளையும் மனம் அங்கலாய்க்கின்றது.
அலாடினை அலாவுதீனும் அற்பு விளக்குமாய் பார்க்கும்போது எனக்கு ஆறேழு வயதிருக்கும். சிடி லப்ரொப் என்ற வார்த்தைகளை எங்கள் தெருக்களில் கனவிலும் இல்லை.ஏன் ரிவியைக்கூட எங்களுக்கு ரூபவாகினியாய்த்தான் தெரியுமே தவிர.அது ஒரு அலைவரிசை என்ற அறிவு கூட தோன்றுவதில்லை.ரூபாவாகினி என்றால் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி மனதில் தோன்றிய காலமது.எங்களுரில் கிராமங்களில் இருந்து தொலைவில் நகரத்தில் மூன்று திரையரங்குகள் இருந்தது.அவைக்கு ஈசுவரன் பராசக்தி சண்முகா என்ற பெயர்கள்.எனக்கு இப்போதுதான் அவை பற்றிய ஒரு ஆச்சரியமான புதினம் தோன்றுகின்றது.திருவாளர் சிவபெருமான் குடும்பம் எங்களுரில் மூன்று படமாளிகைளுக்கு பந்தமாய் இருந்திருக்கிறார்கள்.ஈசுவரனும் பராசக்தியும் பட்டணத்தில் அடுத்த ஒழுங்கையில் இருந்தன.சொல்லப்போனால் சிவனும் பார்வதியும் அருகருகேதான் இருந்தார்கள்.அந்தோ சண்முகா எட்டத்தான் இருந்தது.மாம்பழ விவகாரம் தியேட்டர் கட்டுவது வரை தொடர்ந்திருக்கிறது பாருங்கள்.போர்கள் உக்கிரம் பெறுவதற்கு முன்னான நாட்களில் ஈசுவரனில் பைலட் பிரேம் நாத்தும் பராசக்தியில் சுவரில்லா சித்திரமும் பார்த்தேன்.ஈசுவரனையும் பராசக்தியையும் படமாளிகைகள் என்று அழைத்தால் நான் சண்முகாவை படக்கொட்டகை என்றுதான் அழைப்பேன்.சொல்லப்போனால் மாம்பழப் பிரச்சனையில் பழனி ஆண்டியான கதைபோலவே சண்முகா படக்கொட்டகையின் கதையும்.ஈசுவரனும் பராசக்தியும் நல்ல குளிர்ந்த சிற்றாறோடும் வயல்களுக்கு அருகிலும் ஒரு சில்லென்ற லொக்கேசனில் இருந்தன.அந்தோ சண்முகா இரயில் தண்டவாளத்தின் ஓரமாய் இருந்தது.அதுவும் அதன் சுவர்களுக்கு பதிலாய் மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருந்தது.பூகம்பம் அடிக்கடி வரும் நாட்டு வீடுகளை போல.ஆனால் சண்முகாவுக்கென்றொரு அடியார் கூட்டம் இருக்கத்தான் செய்தது.ஓடைகள் இரயில் தண்டவாள ஓரங்கள் ஒளிவு மறைவுகள் இருந்ததால் ஒரு கால் பாதியை விட்டுவிட்டு சண்முகாவுக்குள் நுழைந்து குந்தி திரையில் எழுத்துக்கள் தோன்றும்போது விசிலடிக்க சண்முகாவுக்குள் ஒரு சுதந்திரம் இருந்தது.
பகலும் இரவுமாய் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமாய் யாழ் தேவியும் சரக்கு அஞ்சல் இரயில்களும் மாறி போய்வர அநேகமாய் எம்எஸ்வியோ இளையராஜாவோ இரசித்து சுவைத்து பின்னணி இசை வழங்கியிருந்தாலும் .பலவேளைகளில் இரவு காட்சியில் முதலிரவுக்கும் பகல் காட்சியில் தாலிகட்டும் வேளைக்கும் பிஜிஎம் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கான இரயில் ஓசைதான் சண்முகா படக்கொட்டகையில்.அந்தோ அந்த சண்முகாவில்தான் அலாடினை நான் முதன் முதலில் ஆறேழு வயதில் அலாவுதீனும் அற்புத விளக்காய் பார்த்தேன்.அலாவுதீனும் அற்புத விளக்கை பார்க்கப்போன கதையோ பெரிய கதைதான் அதுவும் ஒரு மெல்லிய இனிய படத்திற்கு கதைதான்.அப்போது குளத்தடிப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.அந்த நாட்களில் எங்கள் பள்ளியில் ஒரு பழக்கம் இருந்தது.காலைப்பிராத்தனையின்போது தேவாரங்கள் செபங்களோடு முடிவதில்லை.அந்தக் காலை வேளையை சில வேளைகளில் யாரோ வெளியில் இருந்துவரும் மாயவித்தைகாரரால் அழகு படுத்துவார்கள்.அவர் கைக்குட்டையில் இருந்து புறாக்களை பறக்கவிடுவார்.சில வேளைகளில் ஒருவர் எக்கோடியனோடு வந்து சில மணித்துளிகள் மயக்கிவிட்டுப்போய்விடுவார்.சில வேளை குழுக்களாயும் வருவார்கள் கிற்றார் டிரம்ஸ் என்று செவிகளில் சிட்டுக்களுக்கு தேனை தந்துபோவார்கள்.அசத்தப்போவது யாரு மிமிக்ரி எல்லாம் எங்கள் பள்ளி பெரிய பலாமர நிழலின் காலைவேளையில் என்றோ நடந்து முடிந்து வயிறு குலுங்கச்சிரித்தோம் இப்போதும் என் உதட்டில் எஞ்சியிருக்கும் புன்னகையில் கொஞ்சம் அங்கிருந்துதான் முளைத்தவை.
இப்படி எங்கள் பள்ளியில் பட்டணத்திரையரங்குகளில் ஏதாவது பள்ளிப்பிள்ளைகள் பார்க்கத்தக்க படங்கள் ஓடினால் வருடத்தில் ஓர் நாள் அழைத்துச்செல்லும் வழக்கமுமிருந்தது.
அந்த நாள் இனிமையானது.அதிலும் கிராமத்து பிள்ளைகளுக்கு ஒரு திருவிழா நாள்தான்.ஏழைப்பிள்ளைகள் குடும்பத்துடன் பட்டணத்து பட மாளிகைளுக்கு போகும் அளவுக்கு சம்பாத்தியம் இருப்பதில்லை.ஆனால் இந்த ஒரு நாளுக்காக ஏதோ தங்கள் பிள்ளைகளுக்காக அன்றாடக்கூலிகள் சேமித்து ஒரு சிறு தொகைகளை கொடுத்தனுப்பி இந்த நாளில் படம் பார்க்காமலே அலாவுதீனின் அற்புத விளக்கின் பிரகாசத்தை ஆச்சரியத்தை அந்த நாளில் தங்கள் பிள்ளைகளில் கண்டு மகிழ்வார்கள்.புத்தகம் கொண்டு போகாமல் கை வீசிக்கொண்டு எங்களை மறந்து பள்ளிக்குப்போன அரிதான நாட்களில் இந்த திரையரங்குக்கு பள்ளியே போகும் நாள் அற்புதமானது.அந்த நாட்களில் அநேகமாய் ஆசிரியர்களும் பிரம்புகளையும் கண்டிப்புக்களையும் சற்று தள்ளி வைத்துவிடுவார்கள்.அவர்களும் எங்களோடு மகிழ்வார்கள்.சிறிய செம்மண் தெருக்களின் வழியே இருவர் இருவராக கைகோர்த்தபடி சண்முகாவுக்குப் போவோம்.போகும் வழிகளில் கட்டிடங்கள் மரங்கள் வாகனங்கள் இப்படி இரசித்தபடி எங்கள் நீண்ட வெள்ளை வரிசை செல்லும்.சண்முகாவில் அலாவுதீனும் அற்புத விளக்கை பார்த்தோம்.அப்படத்துக்கும் ஆச்சரியம் தோன்றும் காட்சியில் பின்னணி இசை யாழ்தேவிதான்.
இப்போது எல்லாவற்றையும் நினைத்துப்பார்க்கிறேன் ஒரு அற்புத விளக்கு நிஜமாய் கையில் இருந்தால் நல்லதுதான்.அடுத்த கவளத்தை உண்ண அடம்பிடிக்கும் போதும் கூப்பிடவா என்று அம்மா சொன்ன பூதமும் நிஜமாய் இருந்தால் நல்லதுதான்.அரிவரி படிக்கும் அஆ முழுதும் எழுதாவிட்டால் படிக்கப்போன வீட்டில் வளர்த்த மைனா கொத்தும் என்று சொன்னார் வாத்தியார் .மைனாவுக்காக தமிழின் உயிரெழுத்துக்களை படித்தேன்.சொல்லப்போனால் அந்த மைனாவும் இருந்தால் நல்லதுதான்.இதுவரை நீங்கள் வாசித்ததும் மைனாவின் தமிழ்தான்.

இராச்சியத்தில் விளையாடுதல்-பொன்.காந்தன்,


அது மகிழ்ச்சியான நாள்
கள்ளுண்டிருந்தேன்
தள்ளாடும் பெரு மயக்கம்
கௌதாரிமுனை மணலிலேறி
அரியாலையை பார்த்தேன்
புகார் மண்டியிருந்தது
யாழ்ப்பாண இராச்சியம்.
மணல் மலைகளிலிருந்த
போராளிகளின் புன்னகை
சோழ நாணயங்களின்
திருமுகமாய்த் தோன்றியது
மணலுச்சியிலிருந்து
அடிவாரம் வரை
அங்கப்பிரதிட்டை செய்தேன்
முப்பது வயது
எந்த வெட்கமும் கிடையாது
அது சோழனின் வாரிசு
இராச்சியத்தில் மகிழுதலது
ஆயிரம் இளவரசிகளை
கற்பனை செய்தேன்
அதிலொரு பேரழகியுடன்
மாளிகை தூபமாய் கிடந்த
மணலில் சல்லாபித்தேன்
பல்லாயிரம் குதிரைகளை
கற்பனை செய்தேன்
அதிலொரு வெண்புரவியேறி
நாகதேவன்துறை ஏகினேன்
திரண்டு வரும் யானைகளை
அதிலொரு
மதங்கொண்ட களிற்றில்
மண்ணித்தலை சிவனிடம்
நீலாம்பல்கள் ஏந்திப்போனேன்
வாயிற்காவலனின் சேதிக்காகவே
மணலில் புரண்டேன்
ஒரு ஆட்டு மந்தைக்கிழவன்
என்னை இரசித்தான்
கௌதாரிமுனை பனையின்
கள்ளில் கட்டுண்டவனின் கனவுக்கு
கிழவன் முடி சூட்டினான்
கண்ணுக்கு எட்டும்வரை
கடலில் சோழக்கொடியுடன் படகுகள்
பாட்டன் வடை சுடவில்லை
காகம் களவெடுக்கவுமில்லை
ஈட்டி பாயும் எல்லையெங்கும்
இராச்சியங்கள் விரிந்தன
ஒரு ஈட்டி எல்லையில்
இந்தக் கௌதாரிமுனை
அந்த மணலின் நிறமாயிருந்தேன்
கல்லிலும் முற்றத்திலும்
எழுதப்பட்ட அகரத்தின்மேல்
பனைகள் முளைத்தன
நிலத்துக்கு கடலுக்குமாய்
ஒரு இனிய காற்று
கலசங்களின் மேல்
கலவியில் விம்மிப்புடைத்த
இளவரசியின் மார்புகளாய் மணல்
இராச்சியத்தில்
ஒரு நாள் முழுக்க விளையாடினேன்
எனது பூர்வீகத்துள்
கிடந்து கரைந்தெழுந்தேன்
ஆட்டுமந்தைக்கிழவன்
பால் கறந்து தந்தான்
அந்திப்பொழுதில்
மீண்டும்
அரியாலையை பார்த்தேன்
யாழ்ப்பாண இராச்சியம்
இருள் மண்டிக்கொண்டிருந்தது
மணலில் காவலிருந்த
போராளியின் புன்னகை
சோழ நாணயங்களெங்கும்
நிலவாய் பட்டுத் தெறித்தது
முன்னிலவில் புறப்பட்டேன்
கிழவன் முகம்
மந்திரியின் தோரணையாயிருந்தது
எதிர்காலம்
மிகக் கவனம் என்பதுபோலிருந்தது
உண்மைதான்

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...