வெள்ளிக்கிழமையும் அதுவுமாக வண்டியைக்கிளப்படா தென்னமரவாடி பக்கமாக என்று புறப்பட்டு பரந்தன் முல்லைவீதியில்பறந்தது வண்டி.இது சூடடிக்கும் காலம்.அக்காலம் மனசுக்கு இதமானது.என்ன இப்பொழுது வயல் நிறைய பெண்களும் ஆண்களுமாய் நின்று அரிவி வெட்டி தலைசுமந்து அடுக்கி போரடிக்கும் காட்சிகள் கிடையாது.வயல்களில் வெட்டுமிசின் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தன.வெட்டுமிசின் ஒன்று எடுத்தால் நல்ல உழைப்பு என்றான் நம் வண்டி ஓட்டுனர்.வெட்டுமிசின் உழைப்பு ஒருவனுக்கே.வெட்டுமிசின் இலகு நேரவிரயம் இல்லை.சேதாரம் இல்லை.உரைப்பையை விரிச்சுப்பிடிக்கின்ற வேலை ஒன்றுதான் என ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் வயலில் பெண்கள் ஆண்களின் சேட்டை போட்டு பாவாடைகளுக்கு மேல் சறத்தையும் கட்டி அரிவாளோடு ஆண்களோடு அணிவகுத்து வெட்டும்காட்சிக்கு நிகரில்லை.இந்த அழகெல்லாம் வயல்களை விட்டுப்போய் பல காலம் ஆகின்றது.ஏன் முன்பு வீட்டுக்கு வீடு வைக்கல் கும்பி இருக்கும் இப்பொழுது அந்தக்காட்சிகள் அரிது.முன்பு படங்குவிரித்து இரவிரவாய் சூடடிப்பது ஒரு சுகம்.இன்று தார்ச்சாலையில் பாதியில் நெல்லை பரவி காயவிட்டுள்ளார்கள் கடந்துபோய் கொண்டிருக்கின்றேன்.
அநேகமாய் வயல்களால் சூழப்பட்ட சாலையும் சாலையில் இருந்து பார்க்கும்போது நெடிய வயல்களுக்கு பின்னால் புகாராய் தோன்றும் அடர்ந்த காடுகளும் இடைக்கிடை குறுக்கறுக்கும் குளங்கள் ஆறுகள் பாலங்கள் வன்னிவளத்தை நினைத்து மனதை சிலிர்க்க வைக்கும். இடைக்கிடை எருமை மாட்டுக்கூட்டங்கள் கடக்கின்றன.பருத்த பெரிய கொம்புகள் உடைய கறுத்த எருமைகளும் வன்னியின் பெருவளம்.எருமைகள் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும் என்னைப்போல முறாய்த்த முகமாய் இருந்தாலும் அதற்குள் ஒரு அமைதி இருக்கின்றது.எருமை மாடுகளை உந்துருளியில் கடந்துபோகின்றபோது எனது நண்பர் ஒருவர் சொன்னார் எருமைகள் அவ்வளவு இலகுவில் கோபப்படாது.என் பெயர் மாணிக்கம் எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு என்றமாதிரி எருமைகளின் கன்றுகளை யாரும் சீண்டினால் எருமைகள் பாட்சாவாக மாறிவிடும் என்றார்.உண்மைதான்.நானும் பலமுறை எருமைக் கூட்டங்களை கடந்திருக்கின்றேன்.ஒரு முறையேனும் அவை கோபப்பட்டதை பார்த்ததில்லை.பல முறை அவற்றின் முதுகுகளை தடவியபடியே சாலையில் உந்துருளில் கடந்திருக்கின்றேன்.
வண்டி நாயாறு கொக்கிளாயை அண்மித்தபோது தம்பி கடற்கரைக்கு விடுமாறு சொன்னேன்.அந்தக்கடற்கரையில் கறுத்த மணலில் தொடங்கும் புதினத்தை குமரியின் மைந்தர்கள் என்ற தலைப்பில் எழுதலாம் என நினைக்கின்றேன்.அவருக்கு வயல்புலமென்று ஏகப்பட்டவை உண்டு என்று சிலர் அடிக்கடி சொல்லக்கேட்டதுண்டு.அந்த வயல்புலம் என்ற வார்த்தைக்குள் அடக்கவேண்டிய அத்தனைவளமும் அழகும் முல்லையை நோக்கி அதனை கடந்து செல்லும் கொக்குளாய் நாயாறு அளம்பில் செம்மலை என விரியும் ஊர்களில் காணலாம்.மிக உயர்ந்த தென்னந்தோப்புக்கள் விரிந்த பெரும் வயல்கள்.பரந்த ஆநிரைகள் எங்கும் நிறைந்திருக்கும் கானகம்.கடல் சிறுகடல் அடுக்கிக்கொண்டே போகலாம்.வண்டி செம்மலையை கடக்கின்றபோது நிறுத்தச்சொல்லிவிட்டு ஏற்றத்தில் எழுந்தருளியுள்ள கடவுளை கும்பிடலாம் என நினைத்தேன்.
எங்களின் மிக முந்திய தலைமுறைகளை சிலர் இப்பொழுது அப்பத்தா என்கிறார்கள் நான் எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி என்பதில் அதை உணர்ந்து கொண்டேன்.பாட்டன் பூட்டன் என பலவாறு பழம்பெருமைக்கு பொருள் குறித்துள்ளார்கள்.அந்த தலைமுறைக்கு ஒருகுணம் அதிலும் கானகத்தை அண்டிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள் காட்டுவீதிகளில் போகும்போது இடையில் ஒரு கல்லை வைத்து காட்டுகறுப்பு அண்டாதிருக்க பயணம் இடையூறின்றி அமையவென கும்பிடுவது.அந்தக்கற்கள்தான் பின்னாளில் இன்று எமது பூர்வீகத்துக்காக வாதாட சாட்சியங்களாக மாறிநிற்கின்றன.அந்த கற்கள் காளிகளாய் பிள்ளையார்களாய் சிவனாய் வைரவராய் என பல அவதாரங்கள்.அப்படி காட்டுவழி ஏற்றத்தில் எழுந்தருளியுள்ள கடவுளை வணங்குவதில் மனம்மகிழத்தான் செய்யும்.நீராவியடி ஏற்றத்தில் ஏறினேன்.அருகில் சென்றபோதுதான் விபரீதம் விளங்கியது அங்கே கடவுளை அப்பனே பிள்ளையாரே என தொடங்கி புத்தபெருமானே என வணங்கவேண்டிய குழப்பம் உள்ளதென.சுற்றும் பார்த்தேன் அப்பால் என்னை பச்சையுடைகள் படமெடுத்துக்கொண்டிருந்தன.பறவாயில்லை செம்மலை நீராவியடி ஏற்றத்தில் எனக்கு காட்டுவழிப்பிள்ளையாரை வணங்கும்போது இப்படித்தான் சகுனங்கள் என்றால் என்னதான் செய்ய.பிள்ளையரப்பனின் திரையை விலத்திப்பார்த்தேன்.பக்கத்தில் அத்திபாரம் போட்டு ஒரு பெரிய புத்தரை கட்டியெழுப்பும்வரை எங்கோ படுத்துக்கிடந்துவிட்டு இப்ப என்ன மசிருக்கு வந்திருக்கிறாய் என்பதுபோல் பிள்ளையார் என்னை பார்ப்பதுபோல இருந்தது.
No comments:
Post a Comment