சொலிசன் மணமும்
சொறியை தேய்க்கும் அரமும்
அங்கங்கு கொழுப்பப்பி
அழுக்குப் படிந்த சறமும்
வழுக்க வழுக்க பிடிக்கும் குறடும்
வரும் வழியில் காணும்
பொருக்கு வெடித்த ரயரும்
பூட்டிக்கொண்டு சண்முகத்தார்
பொழிகின்ற பகிடிகளும்
நீட்டி முழக்க நிறையவுண்டு
ஆட்டிப்பார்த்து பக்கிளெடுத்து
அறுந்த செயின் பொருத்தி
அடைப்பெடுத்து வால்கட்டை
அடித்துக் காத்து
வளைத்தமத்த பேசனுக்குள்
கல்லிடி கறள்பிடித்த ஆணி
பெல்லடிக்க விலத்தாமல்
பெரிய நான்பனொன்று
முன்னடியில் முரண்டு நிற்க
கண்ணிமைக்கும் பொழுதில்
காண்டில் தடுமாறி
அன்னமலர் வேலிக்கம்பி
ஐந்தாறு பதம் பார்த்து
எல்லாப் பக்கத்திலும்
எழுந்தோடும் காத்து
இருந்தாலும் பேனாவால்
ஈரத்துக்குள் வட்டமிட்டு
அருந்தாமல் தேனீராற
அலுக்காமல் தினமிருந்து
அத்தனை ஓட்டைக்கும்
சத்திர சிகிச்சை செய்யும்
சைக்கிள் டொக்ரர் சண்முகத்தார்
எத்தனை வியாதியில் வரும்
இளந்தாரிக் குணத்தில்
எழும்பி உழுக்குகையில்
தழம்பி பிறிவீலால்
தம்பிக்கு அடி விழுந்து
கும்பிட்டேனென்று வந்து
குந்தியிருக்கும் சிலது
கெந்தியோடிப் பிறகு
கிளப்பி சீற்றுக்கேற
சந்தியில் நிற்கும் சில
தங்கச்சி உழுந்தோவென்று
தாழிச்சு கிண்டல்விட
வம்புக் குட்டிகளால்
வரப்போக முடியவில்லை
இரண்டிஞ்சி கொஞ்சம்
இறக்கி பதிப்பதற்கும்
தஞ்சமடைந்தும் சில
காருக்கு பூட்டும் கோணும்
கலர்கள் ஏழிலும்
ஏகப்பட்ட பல்புகளும்
குஞ்சங்கள் ஸ்ரிக்கரும்
குடத்துக்கு பூக்களும்
மின்னும்படியாகவும்
இன்னும் பலதும்
கொண்டு வந்து நின்று
கொழுவித்தாருமென
குழைந்து நிற்கின்ற
வளர்ந்து ஐந்தாறு மீசை
வாலிபத்தை பார்த்து
மலருக்கோ மைதிலிக்கோ
மையலுக்காய் இந்த
மைனரின் ஆசையென்று
மனதுக்குள் நினைத்தபடி
சண்முகத்தார் தொட
சப்பறமாய் மாறும்
லுமாலாக்களும் சில
பெல்லுக்குள் பிரச்சனை
பின்னுக்குமேதோ உரஞ்சல்
கண்ணைக் குத்துதாம்
கவிழ்க்க வேணும்
கெட் லைற்று
நட்டுக்கள் சிலதாடுது
நாலைஞ்சு போல்சில்லை
அச்சுக்கு ஆயுள் முடிஞ்சுது
ஆடுது கம்பிகள்
பாடுது செயின் கவர்
கட்டுக்குள் நிற்காமல்
கையில் வழுக்குது
கையோடு பிறக்கையும்
கவனிக்க வேணும்
மட்டில்லா வருத்தத்தோடு
வந்து போகும் பலது
கொம்படி ஓமந்தைக்கு
உயிலங்குளம் ஊரியானுக்கு
பெண்டில் பிள்ளை
பிறகும் பத்துப்பேர்ஏத்தி
புத்துவெட்டுவான் ஏத்தத்தில்
கற்பூரம் மண்ணெண்ணை
களவாகவும் சில சாமான்
வண்டிலாய் ஏத்தி
வழியெலாம் முக்கி
கண்டுபிடித்தவன் சைக்கிளை
கனவிலும் நினைக்காதபடி
கொண்டு காவியாக்கி
குண்டு குழியில் ஓடி
குலுங்கி நெளிந்தவற்றை
அன்பினால்
அருள் கூர்ந்து கழுவிப்பூட்டி
இங்கிதமாய் உருள
இன்புற கிறீஸ்வைத்து
இரங்கவேண்டும் எனப்பெரிய
கரியல் வைத்தும்
காத்திருக்கும் பல.
ரியூசனுக்கும் போகும்
பெடிபெட்டை இறங்கி
காத்தடித்து ஒரு ரூபாய்
கைநீட்டப் பலவேளை
இருக்கட்டும் வேண்டாமென
அப்புளுதித் தெருவிருந்த
அழகிய ஞாபகமாம்
சண்முகத்தார் சைக்கிள் கடை
இன்றும் நாசியிலே
இருக்கிறது சொலிசன் வாசமாய்


