Sunday, January 6, 2019

சீதேவி-பொன்.காந்தன்

வட்டிக்கெடுத்தும்
வங்கியில் ஈடுவைத்தும்
வெட்டி கொடுப்போமென
வேளைக்கு நீர் விட்டும்
தட்டி கொடுப்பதாய்
பெட்டியில் எடுத்தெடுத்து
உரமெறிந்தும்
தளை நீக்க மருந்தடித்தும்
தத்து வெட்டியான் பூச்சி
புளு அண்டாது பார்த்தும்
பட்டி  மாடுகளை 
கட்டி வைக்கும் படி
கட்டளை இட்டும்
காய் காய் கூய் கூய் என
விடலையில் கண் வைத்து
குடலை உருவ
கும்பலாய் வரும்
குருவிகள் துரத்தியும்
நெட்ட நெடு வெளியில்
பச்சை காடென
பள பளக்கும்  வயல் வரம்பில்
பச்சை பெருமாளும் 
சம்பா
மொட்டை கறுப்பன்
பாசுமதியும்
நட்டவரை பார்த்து
நாடியில் கையெடு
கூடிய விரைவில்
பாடியபடியே
படை படையாய் மூட்டை
பலனாய் கிடைக்கும் என
பார்வையால் பரிமாற
சீவிய பாட்டுக்கு
இச் சீதேவி இல்லையெனில்
நாதியற்று கிடந்து வாழ்க்கை
பாதியில் முடிந்து
பல ஆண்டாயிருக்கும்
பச்சை அரிசியோடு
பத்து கறி எதுக்கு 
செத்தல் இடித்து
ஒரு முட்டுக்காய் தேங்காய்
சம்பலுடன் பிடி பிடித்தால் 
செத்த  பிணமும் 
மோப்பம் பிடித்தொருமுறை
கவளம் தாவென  கை நீட்டும்
கைகுத்தரிசி எடுத்து புடைத்து
பேட்டுக்கும் குறுநல் போட்டு
மாட்டுக்கும் தவிடு  வைத்து
ஆட்டுக்கும் கிளைஞ்ச தண்ணி
கிள்ளி  தெளித்து 
அள்ளி உலை போட்டால் 
கஞ்சி போதும்
கால் வயிறு நிரப்ப
தள்ளி உள்ள வீட்டு
புள்ளி  புள்ளி பேட்டுக்கு
திறந்து விட்டால்
ஓடிபோய் உன்னி ஏறும்
தறு   தலை  சேவலை
தட்டி  ஒரு கறியும்
கொஞ்சம் உற்சாக பானமும் என்றால்
கச்சியப்பர்களின்
கதா காலேட்சபமும் 
வைரமுத்து நற் குணத்தில்
வண்டாய் மயங்கியோரின்
மயான காண்டமும்
பத்தியப்படுத்திய வயல்
நாசியில் இனிதாய்
நரம்புகள் வரை ஊறி
நம்பிக்கை தந்த வாழ்வில்
இம்மாரியும் வந்தது 
நாரி வளைந்து நின்று
இராபகலாய்  கொட்டும் மழையில்
தேறி மீண்டும்
அழகுடுத்த கற் பிணியாய்
அசைந்து ஆடி
கூடும் செழிப்பென
குடையும் பிடித்து வரம்பில் நிற்க
முழங்கால் ஏறி
முழுதும் ஆள் மூட மூசி
வெள்ளம் படர்ந்து பொங்கி
அடங்காமல் மழை பெய்து
முடங்கி  மூச்சிழந்து 
முற்றும் கதிர்  சாய்ந்து
சற்றும் எதிர் பாரா
சாவில் போய் முடிய
விட்டம் வரைக்கும்
வெட்டி அடுக்கி விட்டு
நட்டமில்லை
நல்ல விளைச்சல் 
நாள் வரட்டும் பொங்கல்
கட்டி புதிர் கொண்டு
காண்போம்  மகிழ்வென்பான்
அட்டை ஒன்றுடன்
அணியில் நிற்கின்றான்
கொழும்பு நிவா ரணத்தில் 
பத்து கொத்தரிசியும் பருப்பும் வாங்க!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...