Monday, June 28, 2021

ஒரு சுண்டுக் குரலும் உறங்காத பாலைகளும்-பொன்.காந்தன்

 


பேயனாராக
பாட்டுடைப்பொருள் வாய்த்தது
செம்புலமென சிலிர்த்த பாட்டன்
மாயோன் மேய
காடுறை உலகத்து கருவறையில்
மேயத்தொடங்கியது கனவு
ஆய்ச்சியரின் செய்யுளை எழுதுமினின்று
காட்டை சுற்றும் கருடனின் கண்ணில்
நேற்றைய காலங்கள் விரியும்
இடைச்சியர் தமிழில்
இலைகள் குளிர்ந்தனவாம்
இளவஞ்சியின் பார்வையில்
முல்லையின் பூக்கள் முகிழ்த்தனவாம்
கார்காலத்தில் பொங்கியது வனம்
காட்டாறாகியது பெருங்காலப்பாடல்
நெடும்பாலை நினைவில்
நேற்றைய பெடியனும் பெடிச்சியும்
நெடுங்காலக்கதை புதைத்து
பழைய முறிகண்டி பாண்டியன்குளம் பாலையடி
கோட்டைகட்டி தென்னியங்குளம்
வடகாட்டின் வழியெங்கும் வரிகளாய் கிளை
முறிகண்டியின் திருவீதியில்
ஒரு சுண்டுப்பேணியுடன் ஏங்கும் விழிகளுக்கு
இம்முறையும் முல்லைபொழுதின்
சித்திரை வைகாசி
சிலிர்த்துக் கொட்டியது பாலைப்பழமாய்
பட்டிணியறிந்த பாலைகள்
பருவம் தப்புதில்லை
காதில் வேப்பங்குச்சியுடன்
கானகத்தில் நுழைந்த காரிகைக்காக
பாலை
ஒரு கடகம் பழுக்காமல் விட்டதில்லை
பட்டாளமாய் பசங்களுக்காய்
கையெட்டும் கிளையில் கனிந்தன மஞ்சள்
கையிலொட்ட வாயிலொட்ட
பையில் நிரப்பி சிரிக்கும் பருவத்தில்
வல்ல பாலைகள்
வனங்களில் மகிழ்ந்தன
குமுழமுனைவரை கூட்டம் கூட்டமாய்
கொழுத்திருந்த குண்டு பழங்கள்
காட்டுத்தெருவின் விருந்தோம்பலுக்கு
கைநீட்டிக் காத்திருந்தன எப்போதும்
பாட்டை முணுமுணுத்தபடி
பாவாடைக்காரி
சேட்டைக்காரரை நோட்டம் விட்டு
நொடியில் எறுவாள் உச்சிக்கிளை
அவள் சேட்டத்தில் சிலிர்க்கும் பாலை
பாட்டத்தில்
பழுக்காமல் ஏமாற்றா கந்தவர்வம்
காத்திருந்திருந்தது
இப்பருவம் நெடுநாளாய்
காற்றடித்து கனிகள் கொட்ட
கண்ணீர் விட்டது
உச்சிக்கிளைவிழியால்
பனிக்கம் குளம்வரை பார்த்தது
பக்கக் கொப்புகள் நீட்டி
பரவியது விழிகளை புதுமுறிப்பு
கொக்காவில் முறிகண்டிவரை
ஆனையிறவேகும் பறவைகளிடம்
போனமுறை
பூநகரியில் பாலைப்பழம்விற்ற
அந்த பையனுக்கு தூதுதனுப்பியது
பருவம் தப்பாது வந்துபோகும்
பரம ஏழைகளின் முகங்களை
கண்டீராவென காகங்களிடம் கேட்டது
கருடன் வந்து சொன்னது
உருவங்கள் சிலதை கண்டேன்
உருக்குலைகின்றன
ஒரு உள்ளிருத்தல் பருவத்தால்
முல்லைத்திணையில்
பாலைகளின் கண்ணீர்
பாலைபழம் விற்று பசியாறும்
வயிற்றினை நினைத்து ஆற்றாமை
அகன்று பருத்த அசையாத பாலை
நெடும்பாலை
முதன் முறையாய் துவழ்கிறது காட்டில்
ஓராயிரம் சுண்டு பழுத்த கிளைகள்
முற்றம் வரை நீளாதா
ஆய்ச்சியர்களுக்கு ஆதாரமாய் இன்று

இராமசாமியின் சைக்கிள் -பொன்.காந்தன்



பெரிய கரியல்

பழைய சைக்கிள்
மகன் நடராசாவை மட்டும்
ஏத்துவதில்லை
என்னையும்
இன்னும் இரண்டு பேரையும்
ஏத்திப்போகும்
குளத்து மீன்பெட்டி கட்டும்
பெரிய கரியல்
பழைய சைக்கிளில்
ஊரில் மண்வாசம்
ஒட்டிக்கொண்டது
வீட்டடியில் இறங்கும்போது
ஒரு பக்கம் தாமரைக்குளம்
இன்னொரு பக்கம் சம்புக்காடு
சிலவேளை
வழம் மாறி ஏறினாலும்
வாழ்க்கை
இரண்டு பக்கமும்
அழகாகவே இருந்தது

குஞ்சியப்பு-பொன்.காந்தன்

ரொம்பக்காலமாக எனக்கு அவரின் பெயர் தெரியாது. எனக்கு தெரிந்த அவரின் பெயர் கார்குஞ்சியப்பு. அவருடைய அப்பா அம்மா அவருக்கு கார்க்குஞ்சியப்பு என்றுதான் பெயரிட்டார்களென சின்ன வயதில் என் அனுமானமாக இருந்தது அந்த வயதில் அதை ஆராயவேண்டும் போல தோன்றவில்லை.கிளிநொச்சியில் இருந்து கரவெட்டிக்கு போய்வரும்தெல்லாம் கன காலமாக எனக்கு கார்க் குஞ்சியப்புவாகவே இருந்தார்.அவரைவிடவும் குஞ்சியம்மா குஞ்சியப்புவும் இருந்தனர்.ஆனால் குஞ்சியப்பு ஒரு நல்ல உறவு முறைச்சொல் அந்த வார்த்தையில் அந்நியோன்யம் அதிகம்.அதில் பாசம் திரண்டிருப்பதுபோல ஒரு தோற்றம் இருக்கும்.பிறகு கொஞ்சம் நான் வளர்ந்த பின்பு ஏதோ ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் அவருடைய பெயர் கிட்டிணர் என்பது தெரியவந்தது.ஆனாலும் கிட்டிணர் என்பதை விட அவர் உயிரோடு இருக்கும் நாளிலும் இறந்த பின்பும் கார்குஞ்சியப்புவாகவே உறவினர்களுக்கு இடையில் எப்போதும் இருந்தார்.

கார்குஞ்சியப்பு இளையபிள்ளையின் கணவர்.அண்மையில்தான் இளையபிள்ளை ஆச்சி இறந்திருந்தார்.குஞ்சியப்பு இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் றோயல் பிரிவில் சிங்கப்பூரில் கார் ஓட்டுனராக இருந்தார்.அந்தகார்தான் அவர் பின்னாளில் வடமாராட்சி வாழ்வியலில் இருந்து வன்னி மட்டக்களப்பு என விரிந்த வாழ்க்கை பயணத்தில் நீண்டு வாழ்வு முடியும்வரை பிரிந்துவிடாது ஒட்டிக்கொண்ட பெயராக இருந்தது.கார்க்குஞ்சியப்புவை போலவே நெருங்கிய உறவினர்கள் பலருக்கும் கார்களோடு பிணைப்பு தொடர்ந்தது.என்னுடைய பெரியப்பா குணமும் முதலில் கார் ஓட்டினார் பின்னாளில் சிரிபி குணமாக கிளிநொச்சியில் அறியப்பட்டார்.என்னுடைய தந்தையாரும் போக்குவரத்து சபை நடத்துனராக இருந்தார்.மாமா முறை உறவினர்களும் சாரதிகளாக மாறினர் .ஏன் சின்ன வயதில் பால்வாங்கபோனது றைவர் தங்கராசா வீடு .சக தோழி கெளசலாவின் தந்தை முத்துக்குமாரு கொண்டக்ரர் நோர்வேயில் இருக்கும் நம் ஊர்க்கார தம்பி பிரதீபனின் அப்பா கந்தப்பு பஸ் றைவர்.ஏதோ ஈர்ப்பில் இவை நிகழ்ந்தனபோலும்.
குஞ்சியப்பு தன் இளம்பருவத்தில் ஓட்டிய காரில் இருந்து அவருடைய வாழ்வு முடியும்வரையும் இரண்டு மூன்று தலைமுறை கார்கள் விதம்விதமாய் வந்துவிட்டன.இப்போது நான் என் சின்ன வயதில் பார்த்த கார்களை இன்று தெருவில் பார்ப்பது அரிதிலும் அரிது.சிலர் அந்த கார்களை பத்திரமாக தங்கள் வீடுகளில் ஒரு நூதன காட்சிப்பொருளாக வைத்திருக்கினர்.காரணம் காரின் மீதுள்ள தீராக்காதல்.கிளிநொச்சியில் என் சின்ன வயதுப்பருவத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய கார்கள் ஓடித்திருந்தன.அதுவும் எப்போதாவதுதான் காணமுடியும்.கார்கள் தெருவில் போவதும் கந்தசாமிகோவில் திருவிழா கொடியேறுவதும் இரண்டும் எங்களுக்கு சின்ன வயதில் ஒன்றுதான்.இன்றைக்கு சிக்னலுக்காக காத்திருக்கும் ஊர்திகளில் அதிகமானவை கார்கள்தான்.அதில் அழகு என்று தனித்து ஒன்றை என்னால் வர்ணனை செய்ய முடியிவில்லை.மாரியில் புறப்படும் ஊருபட்ட அட்டைகளைபோல அவை விளைந்துவிட்டன.இன்றைய கார்களுக்குள் கதைகள் தேடினால் பெரும்பாலும் ஒரே மாதிரிக்கதைகளாகத்தான் இருக்கும்.ஆனால் அன்று எங்கள் புளுதிவீதிக்கிராமத்தில் பள்ளம் திட்டிகளில் மெதுவாக கண்டிவீதியில் ஏறி பெற்றோல் நறுமணத்துடன் போகும் கார்களை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேன்.ஏனெனில் கார் புறப்பட்டு போகின்றதென்றால் அங்கே அழகிய கதையிருக்கும்.
சம்மந்தம் பார்க்கப் போவதற்கு அன்று வாடகைக்கு அமர்த்திய காரிடம் கதை கேட்டால் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.எத்தணை பவுண் காணி வீடு வளவு வயல் காணி பெட்டையின் அடக்கம் ஒடுக்கம் குலம் கோத்திரத்தில் இருந்து கார் அறிந்த கதைகள் ஏராளம்.புது மாப்பிள்ளை பொம்பிளைக்கு முதல் பயணம் அந்தக்காரில்தான் அது ஒரு அலாதியான அனுபவம். இன்றும் கார்களில்தான் புது மணத்தம்பதிகளின் பயணம் எனினும் அன்றைய காட்சி அற்புதம். ஏனெனில் அன்றைக்கு கைத்தொலைபேசி இல்லை.பத்திரமாய் வந்து சேர்ந்தோம் என்றும் அறிவிக்கவும் எப்போது மறுபடி திரும்பி வருவோம் என்று பதிலுரைக்கவும். ஆகவேதான் காரில் ஏறும்போது வழியனுப்புதல் ஒரு வாழ்க்கையின் நினைவழியா நெஞ்சக்கதையாக இருக்கும். அதில் கார் தேராகவும் சாரதி தேரோட்டியாகவும் இருப்பார்.இருவீட்டார் ஒப்புதலுடன் ஈடேறும் கலியாணங்களுக்காய் ஓடும் கார் ஒரு வீட்டோ இரு வீட்டோ மறுப்பால் கைகோர்க்கத் துடிக்கும் காதலர்களை ஆரும் அறியாமல் அர்த்த சாமத்திலும் ஏற்றி எட்டுக்கட்டைக்கு அப்பால் இதயங்களை இணைத்துவைக்கும் காரியங்களையும் செய்தன.அத்தோடு இருவீட்டார் சார்பிலும் சண்டியர்களை ஏற்றியிறக்கும் சமரக்களவேலைகளிலும் ஓழுங்கை மாறி ஒழுங்கை ஓடித்திருந்தன.
கிளிநொச்சியின் பழைய நினைவுகளில் ஒரு கார்மீது தீராக்காதல் எனக்கிருந்தது.ஒரு தலைக்காதல்தான்.கார் என்னை காதலித்ததா என்பது இன்றுவரை தெரியாது.முதலாம் இரண்டாம் வகுப்பு கிளிநொச்சி குளத்தடி பள்ளியில் படிக்கும்போது பள்ளிக்கு முன்பு ஒரு விடுதியில் ஒரு கார் நின்றது.என் சகபாடிகள் வைத்த பெயர் ஆமைக்கார்.அது ஆமைபோல இருந்தது.நீல நிறத்தில் இருந்தது.பள்ளிவிட்டு வாசலுக்கு வரும்போது நான் மட்டும்தான் காதலிக்கிறேன் என்று நினைத்தேன் என் சகபாடிகளுக்கும் அதன் மீது கண் இருந்தது.அந்த காருக்கு என்ஜின் பின்னே இருந்தது.பின்னே இன்ஜின் இருக்கும் காரின் பெயர் கூட தெரியாமல் காதலித்தோம்.அந்த தீவிரமான காதலுக்கு காரணம்.பெரும்பாலான சகபாடிகள் ஏழைகளின் பிள்ளைகள் நடந்தே பள்ளிக்கு வருகின்றவர்கள்.நடுத்தர குடும்பங்கள் சைக்கிளில் வருகின்ற சிலர்.பள்ளியில் சோதனைக்கு கைப்பணிக்கு மட்டுமே காட்போட்டில் கார் செய்து எல்லையற்ற மகிழ்ச்சியுடன் ஏந்திவரும் குடிசைக்கொழுந்துகள்.ஆனாலும் அந்த பள்ளிக்கு முன் நின்ற கார் ஒரு கனவை அந்த சின்ன மனங்களில் உருவாக்கியது என்பதுதான் நிஜம். பின்னாளில் நிஜமாக கார்களை ஓட்டிக்கொண்டு கிளிநொச்சி நகரில் போய்க்கொண்டிருந்தார்கள் சகபாடிகள்.
அன்றைய காலங்களில் எங்கள் பட்டணத்திலும் கிராமத்திலுமாக ஓரிருவர் கார் வைத்திருந்தார்கள் சில வைத்தியர்கள்.சில செல்வந்தர்கள்.எங்கள் வீட்டுக்கு முன் திருவையாறில் இருந்து துரையண்ணையின் கார் கடந்து போகும். முத்தையர்வீட்டிலும் கார் நின்றது.ஆயினும் முதன் முதலில் ஏற வாய்ப்புக்கிடைத்தது எங்கள் வீட்டுக்கு அயல் சந்தியில் இருந்த இராசையரின் மூத்த மகன் ராசண்ணன் வைத்திருந்த காரில்தான்.பள்ளிக்குப்போகும்வேளை அந்தக்கார் எங்களை கடக்கும்.அதில் இருந்து அற்புதமான வாசனை திரவியங்கள் மணக்கும்.எப்போதும் கார் பளிச்சிட்டபடி இருக்கும்.மெல்லிய ஒலியுடன் மிதந்தபடிபோகும்.
ராசண்ணன் அந்த காரில் எவ்வளவு காதல் வைத்திருந்தார் என்பது ஒரு நாள் வரும் வழியில் தானாக நின்று எங்களுக்காக கதவு திறந்து ஏற்றியபோதுதான் தெரிந்தது.அது காரே அல்ல கந்தர்வ வாகனம்.அதற்கு மகிழூந்து பெயர் வைத்தவர்கள் காரின் காதலர்கள் அன்றி வேறென்ன சொல்ல.குஞ்சியப்பு மறைந்தாலும் அவரோடு ஒட்டிய மகிழூந்து நினைவின் மகிழ்ச்சி அற்புதம்

அங்கொரு பார்வை-பொன்.காந்தன்

கூப்பன்மாவும் பிட்டும்

முட்டைப்பொரியலும்
வாட்டி இலையில் மடித்து
வயிறு பாட்டு பாடி பசிக்காமல்
போயிட்டுவரும் வரும் வரை
தந்தனுப்பினாலும்
வீட்டுக்கு வரும் வழிக்கடை
வாய்ப்பனிலும்
ஒரு கண்ணிருக்கும்
வடிவாய்த்தான் உப்பிப்பெருத்து
உருண்டு திரண்டு
தப்பி ஓடிமுடியாமல்
தலையிலெறியலாம் போல்
அப்பு கடை சோக்கேசில் அதிருக்கும்
எப்பன் நின்று பார்த்து
ஏக்கம் தீர்த்தாலும்
அப்பனென்ன வேணுமென
அடைக்கேக்கோவென
மற்றதையும் சொல்லி
மனதில் ஆசையை தூண்டுவார்
கள்ளத்தீன் மீது காதல்
பள்ளிக்கும் போகும் வயதில்
படிப்படியாய் இப்படித்தான்
மெள்ள மெள்ள தொடங்கியது
பிள்ளை நல்லதென்று
வீட்டில் புளுகித் தள்ள
சில்லறைகள் சேர்த்து பிறகு
செற்றோடு சேர்ந்து
இப்போது
முள்ளுக் கரண்டியில் அள்ளி
முட்டைக்கொத்தும்
ஒரு முழுக்கொக்கும்
தள்ளிவிட்டுவிட்டு வந்து
தடம்புரண்டேவறை
தெல்லிப்பளை வரை கேட்டு
தெறித்து பூனை வெருண்டோட
சொல்லிக்கொள்ளாமல்
விட்டுப் பிடிபட்டாலும்
பல்லிவிழாமல் மூடி
பழஞ்சோத்தில் ஒரு திரணை
சுள்ளியாய் வெங்காயம்
கொச்சிக்காயோடு
கள்ளியவள் கைபட
கணகணப்புத்தானென்றாலும்
கண்ணொருக்கால்
எங்காலும்
கழன்றுபோய்த்தான் வருகிறது

பாற்கடலடைதல்-பொன்.காந்தன்

பனிக்கூதலில் கம்பளிபோல்

ஏதோ ஒரு வழமையை
இயல்பாகவே
போர்த்தியாயிற்று மறுபடியும்
இலையுதிர்ந்து
முட்கள் மேல்
பூந்திருந்தது செம்பூ
அதை இரசித்தபடி சாலையை
கடந்தாயிற்றென
தேற்றிக்கொண்டது
ஒரு மனம் அழுதும் சிரித்தும்
எதுவரையென தெரியாமலே
பருவங்களில்
காட்டாற்றோடு சேர்ந்தோடி
கடைசியில்
ஒரு வழிப்போக்கன்
மெய்மறந்து மயங்கும்
மாய நதியாக வளைந்து
வாழ்க்கை அடையத்துடிக்கிறது
ஒரு திருப்பாற்கடலை
அவ்வப்போது
அசட்டுத் துணிச்சல்களில்
அடித்தபோது
பாறைகள் உடைந்துவிட்டன
மந்திரங்கள் பலித்தனபோல்
தன் பாட்டிலும் நிகழ்ந்தன
இந்திரஜாலங்கள்
ஏழுமலையை
கடக்க வேண்டும் இப்போது
இந்த முகம் அதற்காகவா

Friday, June 11, 2021

கேள்விகள்-பொன்.காந்தன்

 

அவனுக்கு இப்போது
மனதுக்கு
ஒரு பெரிய கவசம் தேவைப்பட்டது
இந்நாட்களில்
ஏகப்பட்ட கேள்விகள்
துளைக்க ஆரம்பித்துவிட்டன
எவரையோ நோக்கி
போகவேண்டிய கேள்விகள்
அவனை நோக்கி பாய்ந்தன
பதிலுக்காய்
இராப்பகலாய்
எங்கோ குடைய வேண்டியவை
இவனைக் குடைந்தன
முகத்துக்கு
கவசம் போட்ட நாளில்
மனதில்
முதலாவது தொற்றியது கேள்வி
இருந்தும்
பதிலற்றவர்களோடு
கூட்டத்தோடு கூட்டமாயிருந்தான்
சொர்க்கம் நரகத்திலிருந்து
தொலைவிலிருந்தது
அவன் வீடு
பட்டணத்து பேருந்திலிறங்கி
பற்றைகள் அடர்ந்த
பாதையிலிறங்கி
மணல் வெளி கடந்து
இரண்டு சிற்றாற்றில்
கட்டுமரம் வலித்து
குளத்து அணையில் ஏறி
குச்சொழுங்கைகளில் நடந்து
ஒற்றையடி வழியில் போய்
ஒரு வேம்பு நிழல் விழும்
கடப்பை அவிழ்த்து
அவன் குடிசைக்குள் வாழ்பவன்
திருவிழாக் கோவில்
அடுத்த ஊரில் இருந்தது
குளத்தடி வைரவரில்
எவரும் அதிகம் கூடுவதில்லை
உல்லாசப் பயணிகள்
ஊர் சுற்றிகளும் வருவதில்லை
மக்கள் முண்டியடிக்கும்
மலிவுக்கடையும் அருகில் இல்லை
மனதுக்கு
ஒரு கவசம் தேடுவதற்கு
எல்லா நியாயமும் இருந்தது
கைத்தொலை பேசிக்கு
கவரேஜ் இல்லை
குளத்துக்கு இடதுகரை ஏற்றத்தில்
சிலவேளை பேசுவான்
இரவின் அமைதியில்
ஊருக்கே கேட்கும் இரகசியங்கள்
சந்தைகளில் கொரானோவாம்
மீனை கைவிட்டுவிட்டான்
பேக்கரியிலும் தொற்றான்
பாணை வாங்காமல் விட்டான்
பேருந்தில் போனவர்களுக்கும்
பிடித்துவிட்டதாம் கிருமி
எப்போதாவது போகும்
பட்டணம் பயணமும்
நிறுத்திப் பல காலம்
கள்ளுக்கடையிலும்
ஒருவருக்கு இனங்காணப்பட்டதாம்
ஒரு மாலைநேர
பேரின்பத்தையும் இழந்தான்
புடைவைக் கடையிலும்
பிசிஆர் எடுத்ததில் பொசிற்றிவ்
நல்லவேளை
அவன் அணிவதற்கு
ஐந்தாறு துணிமணிகளுண்டு
அடங்கிக்கிடந்தான்
படலைக்கும்
வளவுப் பின் வேலிக்குமிடையில்
சுற்றிச் சுழன்றான்
பறவைகளோடு சேர்ந்து பாடினான்
மலர்களை
ஒவ்வொரு இதழ்களாய் இரசித்தான்
அயல்வீட்டுக்காரியின்
காதில் வேப்பம் குச்சி கண்டு
தங்க நிறத்தில்
ஒரு காம்பு துளிர்க்க
கனவு கண்டான் இரவு
கிளிகளை கூண்டிலடைக்காதவன்
மீன்களை
தொட்டியில் சிறைப்படுத்தாதவன்
பாம்புகளை துரத்திவிடுபவன்
எறும்புகளுக்கும் குருவிகளுக்கும்
மிச்சம் வைத்து சாப்பிடுகிறவன்
நிலவை ஆராயாதவன்
அதற்காய்
முருக்கை உச்சியிலும் ஏறாதவன்
ஏன் பூக்கின்றன
ஏன் கூவுகின்றன
ஏன் பெய்கிறது
ஏன் பாய்கிறது
ஏன் குளிர்கிறது
ஏன் கிளிகள் பச்சை
கொக்குகள் வெள்ளை
காகம் கறுப்பு
வானம் நீலம்
எந்த சந்தேகமும்
கேள்விளுமின்றி
கரைந்திருப்பவனுக்குள்
இந்த நாட்களின் கேள்விகள்
பெரிய கிருமிகள்தான்
அவனுக்கு முகவரியுமில்லை
மேற்பார்த்து
அடுத்த தெருக்கடைக்கு
கடிதங்கள் வரும் என்றேனும்
மலேரியா வந்தது
அவனுக்கு வரவில்லை
குளிசைகளின் பெயர்கள் தெரியும்
அம்மை வந்தது
அதுவும் அப்படித்தான்
அவனை அண்டவில்லை
கடிசொறி சிரங்குக்கும்
அவனை தெரியாமலிருந்தது
அறியாப்பருவத்தில்
போலியோவுக்கு
ஊசி போட்டிருக்கிறார்கள்
அவன் கைமூட்டில் தழும்பிருந்தது
கைதியாகவோ
குற்றவாளியாகவோ
இருக்க விரும்பாதவன்
அடுத்தவனை நிழலாலும்
ஆக்கிரமிக்க ஆசைப்படாதவன்
இப்போது
முடக்கப்பட்டிருக்கிறான்
அவனை மீறும்
கேள்விகளில் இருந்து
தப்பிக்க முயல்கிறான்
எவரையோ நோக்கி
ஒரு கேள்வியை
கேட்க வேண்டும் போலிருக்கிறது
அறிவிக்கப்படுகிறது
தொலைவில்
அதை தடுக்க
ஊசி ஏற்றிக்கொள்ளும்படி
யாருடைய நோய்க்கு
எனக்கு ஊசி
அடியும் நுனியுமற்ற
மரத்தில் ஏறுவது போலவும்
இருளும் ஒளியுமற்ற
பாதையில் புறப்படுவது போலவும்
பதிலற்ற கூட்டங்களில்
ஒருவனாய்
பலகேள்விகள் துளைக்கும்
நோயாளியாய் அவன்

மன்னிக்கவேணும் மாடாசாமி-பொன்.காந்தன்

ஆடே வேணுமென்று

அடம் பிடிக்கும் சாமிகளால்
மாடே அளவில் வளர்த்து
மயிர் மூடிச் சடையால்
காடேவெட்டி கைத்தீனாக்கி
கழுத்து முகம் அதைத்து
சேவேயெடுக்காத
செம்மறியாய் கொழுத்து
சிலிர்த்துச் செவிபுடைத்து
அடைத்துக் கோடியில்
அவிட்டும் விடாமல் வைத்து
ஒடித்து சீமைக் கிழுவை
உதிர்ந்து முற்றம் பரவும்
ஒற்றைப் பலாச்சருகு குத்தி
தவிட்டிலும் சேர்த்து
தடவிப்புண்ணாக்கும் தீத்தி
அவிட்டும் பூவரசும் ஆலும்
அங்கங்கு வேலிகள் தாவி
கெவிட்டிலும் முறித்து
கிளைகளில் தொங்கியுலாஞ்சி
இருட்டிலும் தெரியாமல்
இரவில் வேலியிலும் பிடுங்கி
எங்கு போய் வந்தாலும்
ஏதேனுமொரு இலைசரையோடு
அகட்டியும் கயிறுகட்டாமல்
அடுத்தவன் காண்பானென
நகர்த்தியும் வெளிகாட்டாமல்
நசுக்கிடாமல் வளர்த்தெடுத்து
உசத்தியாய் ஒன்றைபின்
ஊரே வியந்து விழிபிதுங்க
உடுக்கும் பறையும் முழங்க
அடுக்குகளாய் ஆட்டுக்கூட்டம்
கொடுக்கு இறுக்குக் காட்டி
கோயிலுக்கு வந்துநின்று
அடக்குமுடியாமல் ஒருத்தர்
ஆடி உருவேறிப் புரண்டு
ஓடியங்குமிங்கும் பாய்ந்து
மாடனோ மலைச்சாமியோ
காடனோ கறுப்பனோதான்
கலையேறி வந்தானென்று
சூடம் கொழுத்தி காட்டி
சுத்திக் காவல் வைத்து
குங்குமம் மஞ்சளெல்லாம்
கொழுத்த தேசிக்காய்களும்
அஞ்சலா மார்க் பத்தியும்
ஆட்டுமொச்சைகளும் கூடி
தஞ்சக்கேடில்லாமல்
தலையை ஆட்டிக்கொண்டு
கெஞ்சினாலும் விடாமல்
கிழக்கு மேற்குத் திசை
எட்டும் எழும்பி கிளம்பி
திரும்பி கிடந்து பார்க்க
முழக்கும்பறையும் சேர்ந்து
வேள்வி காணும் ஊர்கள்
காளி கோயில் பக்கம்
காலெடுத்தும் வைக்காமல்
ஊழி வந்தாற் போல்
உலகை ஆட்டிவைக்கும்
கோவிட்டென்று பதுங்கி
கோயில் பூசையெல்லாம்
போயிற்றென்றோ கண்டீர்
புதினம் பூசை புதிது
பேடைத் துரத்திக் காலை
பேட்டை நடத்திச் சூட்டை
வாடி கறுப்பியென்று
வசதியாய் மடக்கியமத்தி
ஏறித் தணித்து விட்டு
பாதித் தவனத்தில்
பக்கத்து வீட்டு சிவப்பி
கேரி அழைத்துக் குடுக்க
கிறக்கம் மயக்கம் தவனம்
உறக்கம் உல்லாசச் சேவல்
இருக்கும் திசையில்மாடன்
முடக்கம் போட்டு ஊர்கள்
முழுசும் காலம் தன்னில்
பழக்கம் மறக்காதவராய்
படையல் கேட்டாராமே
உடுக்கு அடித்தாலுடன்
ஊரே அறிந்து பரவும்
பறக்கும் கமராவிலும்
பார்த்துப் பிடிப்பார்களாம்
கரப்பில் கவிழ்த்துமூடி
கவச முகங்களோடு
உரத்துச் சேவல் கத்தி
ஊரைக் கூப்பிடாமலும்
அமத்தி வைத்து பூசை
ஆளும் ஆளுமாய் அறிய
கழுத்தறுத்து மாடன்
கவலைத் தீர்க்கும்படி
அடுக்கெடுத்து நேற்று
அரங்கேறிற்று நேத்தி
மஞ்சள் குங்குமம் சூடம்
மற்றும் சந்தணம் பத்தி
பின்னுமாம் ஒரு புதுமணம்
அந்த நாள் மாடனார்
அகலவாய்ந்து படையல்
வெந்துசூடாறாமுன்னமே
விழுங்கிச் செமிக்கின்றவர்
இந்த நாள் படையலை
இவ்வளவு நேரமாய்வைத்து
மந்தமாயொரு முகத்துடன்
மன்னிக்கவேணும் மாடாசாமி
நைவேத்திய சேவலையின்று
நான்கு தடவை நாங்கள்
சனிடைசரில் நீராட்டினோம்.

ஆம்புலன்ஸ் அலறலும் அமைதி தேவதையின் பாடலும்-பொன்.காந்தன்

 

படலை திறந்து
பக்கமிரண்டையும் பார்க்கிறேன்
வெக்கத்தில் நெளியும்
விடலை கட்டுடலாய் வீதியழகு
நெட்டி முறித்துப் படுத்திருப்பதாய்
நிம்மதியாய் இருக்கிறது தெரு
நெடுமூச்செறிந்து நித்திரையும்
கலைபடும் பேரூந்துக்கிடையில்
நெரிபடும் நெஞ்சுக்கு
ஒத்தடமாயும் லாக்டவுண்.
உச்சா போகிறவரிடமிருந்து
தப்பித்துக் கிடக்கிறது தார்ச்சாலை.
கொப்புநிழல்களும்
குறுக்குத் தெருகளும்
கட்டிப்பிடித்து கலக்கின்றன.
எவருமில்லாச்சாலையும்
இலவச வைத்தியம் இதயத்துக்கு.
கண்டி யாழ் நெடுஞ்சாலை
கள்ளமண் பட்டியல் தருகிறேன்
கவிதையாக்கு என்கின்றது.
கஞ்சா அடித்தவரின் கால்படுகையில்
கவலையில் கிடந்ததாம் வீதி
கண்ணால் மயக்கித் திரும்பும்
காதலர்களை இழந்ததாம் முடக்குகள்.
தன்னால் மறக்க முடியாமல் இருப்பது
தறுதலைகளின் ஓட்டமும்
தடம்புரண்டு முடிந்த ஆட்டமுமாம்.
பின்னால் வருகின்றவன்
முந்தக் கூடாதென்று
முறுக்கிறதை சபிக்கிறது தெரு.
கொடி காமத் தட்டிவானின்
குலுக்கலில்லாமல்
வரணித்தெருவுக்கு வாழ்வு கசக்குதாம்.
எருமண வண்டிலை தொலைத்து
ஏதோ செய்கிறதாம் மனசு.
திருமணத்துக்கு பிடிக்கும்
ஏபோட்டியின் உரசல் இதமாமன்று.
கடத்தலுக்கு வாழ்க்கைப்பட்டதாய்
இன்று கண்ணீர்விடுகிறது சாலை.
குடத்தனை மண்ணை
குழறகுழற கொண்டு போனாராம்.
கொக்காவிலிலும்
குடைந்தெடுத்து பறக்க
அங்கங்கு தப்பி
சிலது அழுது கொண்டும் நின்றதாம்.
கௌதாரி முனையான்போல்
கந்தர்வ வெள்ளை தெரியாமல்
கடத்தினவாம் மூடி கழுசறைகள்.
பென்னாம்பெரிய கதையோடு
பேச்சுவராமல் தவிக்கிறது தெரு.
காடழிப்பவன் போகிறான்
காலிடற வைக்க கனவு காண்கிறது.
கள்ளமண்காரரே
கல்குற்றி காற்றுப் போக கடவாயாம்.
ஓரங்களில் மரங்கள் நடும்
உள்ளங்கள் சில
பட்டுக்கம்பளமாய் மாறி
பாதங்களை வருட வரவாம் தெரு.
பாலைப் பழச் சிறுவனுக்காய்
பஞ்சணையாய் மாறுமாம்
நாவல் மரத்தடியில்
காவல் இருக்குமாம் கலகலப்புக்கு.
ஆவல் மேலிட சாலை
ஆம்புலன்சுகளின்
அலறலின்றி
அமைதி தேவதையின் பாடலோடு
நீண்டு விரிந்திருக்க தவம்.
காற்றுக்கும் ஓரத்தில்
கடைதிறக்கும் நாளின்றி
வீட்டுக்கு வீடிருந்து
நல்ல சுகம் நாமென்று
தீட்டும் தேவ மடலே வரமாம்.
செண்டுகளாய் சரிந்த கிளைகள்
செங்கனி விருந்தோடு
எங்ஙணும் காணத் தெருவுக்கு அவா.
எப்போது நிலவிரவில் நடந்து
நெடுவழியில் மகிழ்வாய்!

தேவனாய் இருத்தல்-பொன்.காந்தன்

இரவு முழுக்க

பஞ்சவர்ண குதிரைகளில் பயணித்து
எப்படியோ
இந்த காலையை அடைந்தேன்
முட்டுச்சந்துக்குள் சூரியன் தெரிகிறது
அதிகாலையாயிருக்கலாம்
தேரிலிறங்கி
பன்னீர் குளத்தடியில் காற்றுவாங்கினேன்
வழிவழியாய்
தேவகன்னியரின் பானங்களில்
விருந்துண்டு களித்திருக்கிறேன்
அந்த தேஜசை
வேறு வழியில்லை
புணில்களுக்கு காட்டிக்கொண்டிருக்கிறேன்
புறப்படும்போது
மாடங்கள் திறந்து மயிலிறகோடு
தோகையர்கள் நிறைந்தனர்
நாய்கள் படுத்திருக்கும்
வெறிச்சோடியசாலைக்குள்
எப்படிப் புகுந்தன புரவிகள்
எவரோ சகுனி முனி சபிக்கிறான்
முந்த நாளும் இப்படித்தான்
புட்பகத்தில் சகியின் மார்பில் புதைந்து
முகில்களை பிசைந்து
புதிய வானவில் செய்யத் தொடங்கினேன்
கடைசியில்
ஒரு ஊசி அறிவிப்பு காதில் குடைந்து
கைபதறிவிட்டது
கலைந்தன அவள் குழலிடையில்
குவிந்த முகில்கள்
சென்றவாரமும்
ஏவாளோடு ஒரு காட்டில்
கனிகளை உண்டு மகிழ்ந்தபடி இருந்தேன்
காட்டுத்தீபோல
ஓரத்தில் பற்றிய காலை எதிர்பட்டது
தேவனாயிருக்க
சம்மதிக்கிறது முழு இரவும்
ஏழு குதிரைகளையும்
தினமும் காலை எருமையாக்குகிறது

நாம்-பொன்.காந்தன்

 

இலையாகவோ
மரமாகவோ
மழையாகவே
வெள்ளமாகவோ
குளிராகவோ
போர்வையாகவோ
கற்களாகவோ
சுவர்களாகவோ
விளக்காகவோ
பூச்சிகளோவோ
இந்த நகரத்திலேயே
வாழப்பழக்கப்பட்டு விட்டது
இப்போதும்
ஒட்டியுலர்ந்த வயிறாகவும்
கருணைபொழியும்
விழிகளாகவும்
கண்ணீராகவும்
ஆறுதல் முகங்களாகவும்
பிரிவதாகவும்
தடுப்பதாகவும்
உதிர்ந்துவிடாமல்
கிளையில்
மெல்லிய காம்பிலசையும்
வசந்தமாகவும்
நாளைய நகரத்திலும்
நாமிருப்போம்
ஏதோவொன்றாய்

ஒரு இரவு -பயணங்கள்-பொன்.காந்தன்


படுக்கையில்
புலம்பினார் பரமர்
வார்த்தைகள் எல்லாம்
தண்ணீர் பந்தலொன்றில்
முண்டியடிப்பதாய்
மோர் கேட்டுக் கொண்டிருந்தார்
புளியம் பொக்கணை
புதூராயும் இருக்கலாம்
எப்படியோ இந்த இரவில்
ஆயிரம் பேரோடு
அவர் பயணம் போனார்
காவடிச்சத்தத்தோடு
காலும் கூட ஆடலாம்
கட்டிலும் சடசடக்கலாம்
கச்சான் கடையடியிலும்
அன்னதானப் பந்தியிலும்
கதைகள் நீளலாம்
இன்னும் லாக்டவுண் முடிய
மாதங்களாகலாம்
ஏதோ இரவில்
மடுவுக்கும் போகக்கூடும்
தட்டியெழுப்பவில்லை
யாரும் பரமரை
எல்லோரும்
எங்கயோ போகிறார்கள்
இளையமகன்
வயது பதினெட்டு
பறந்து கொண்டிருக்கிறான்
பட்டாம்பூச்சிகள் சூழ
மகள் தோழிகளோடு
காற்றில் கூந்தல் பரவ
நெரிசல் பேரூந்தில் மிதக்கிறாள்
மனைவி
லீசிங் வார்த்தைகளில்
மயங்கி தொலைந்தபடியிருந்தாள்

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...