Wednesday, November 4, 2020

தேரேறல்-,பொன்.காந்தன்



பதினெட்டாம் போர் நிறுத்தம்
முரட்டு தேகத்தின் இன்பவதையாய்
முகிழ்க்கும் பாலைக்கிளைகள்.
கிழக்கும் மேற்குமாய் விரிந்த காடு.
கூடை நிறையும் மஞ்சள் தேனாய்
கொழுத்துப் பழுத்துவிழும் பழங்கள்
இனிப்புத் தமிழாய்
எடுத்துண்ண இதழ்களில் ஒட்டும்.
பருவமற்ற பொழுதில்
பாலைக்கிளைகள்
கலவியில் திளைப்பதாய்
காது மடலுரசும் காற்றின் இரகசியம்.
ஆதிக்கதையோடு
அமர்ந்திருக்கும் பிள்ளையார்
அவ்வழி போறவரின் நம்பிக்கை.
காணிக்கையாய் என்றோ
வேரடி வீரர் கூட்டம்
வெற்றியை படைத்தனரவர்க்கு.
இப்போதும்
பேரூந்துச் சாரதியர் நிறுத்தி
அக்கல்லின் துதிக்கையில்
பயணத்தை ஒப்படைப்பர்.
நெடுஞ்சாலைகளற்ற
பெருங்காட்டில் இருளில்
மதங்கொண்ட களிறடக்கி
வேந்தர் சேனைக்கு
அருளாகி
அன்றமர்ந்த பெருமானார்.
இப்போது நிறுத்தத்தில்
கற்பூர ஒளியில் மிதந்தார்
காரிகையொருத்தியும்
பாதிமலரொன்று பக்தியில் பற்றி
நீள் கூந்தலில் பொருந்த
ஏறி அமர்ந்தனள் பேரூந்தில்
என்னருகில்
அவள் தோளுரசியது.
பாணங்களற்றிருந்த
வில்லுக்கு
படைகொண்டு வந்தது
ஒரு பூங்காற்று
தூரப்பயணம்தான்
காட்டின் நடுவிலொரு
வண்டறியாக் கிளையில்
பூத்தவளாய்
புதிதாயிருந்தாள்
புளுதித் தெருவொன்றில்
அவள்
புல்லனைய பாதங்கள்
உலவிப்பின்னேதான்
ஓடி வந்திப்பேரூந்தில் ஏறினள்
சடைத்த பாலையில்
பசிய கிளை நுனியில்
கொளுத்த பழமெனத்
தேன் வழிந்தவள் தேகம்.
மலர் கொத்திப்பறவையின்
கனவென கன்னங்கள்.
கடைக்கண்களுக்கு
ஒரு காட்டு நிலாவின்
நிழல்வரையும் ஓவியமாய்
தோன்றினள் மங்கை.
எப்படியோ
கொக்காவில் கடப்பதற்குள்
மான்கள் மேயும்
மழைத்துளிர்களில்
வனைந்த உதடுகளில்
கொடிகளில் உதிரும் பனியாய்
ஒரு புன்னகை.
காட்டுமலரோடு பேசலானேன்.
அவள் குரல்
கற்பூரப்புல்வெளிவரை
எப்போது யாரோ
கேட்ட குரல் போலவொரு
சங்கீதம் சரசம் சமர்வாசல்.
பழைய முறிகண்டி
பதினெட்டாம் போர்தான்
அவள் முகவரியே.
எங்கிருந்தோ அல்ல
அங்கேயே பிறந்தவளாய்
அக்காட்டின் குளிர்மையில்
கொட்டு மழைக்காலத்தில்
குறுக்கும் மறுக்குமாய் சீறும்
காட்டாற்றில் கால்கள் எற்றி
பருவம் வனைந்த பறவையது.
உடும்பின் பிடியாய்
உள்ளிருக்கும் கதைகளை
மெல்ல விடுவித்து
மின்னும் கண்களில்
என்னை அறிவித்து
வன்னித் தெருவின் பயணத்தில்
சொல்லும் கதைகள் கேட்டேன்.
கனகராயன் ஆற்றினோரம்
புரவிகளோடு
ஒரு வில்லேந்திய படையாகி
அவள் விழிகளில்
நடந்துகொண்டிருந்தேன்.
ஐயங்கன் குளத்தருகே
அமைந்த மாளிகையில்
அவளருகே அமர்ந்திருந்தேன்.
கோட்டைகட்டிய குளத்தில்
தடாகத்தில் நீராடி
தங்கத் தேரென சேடிகளொடு
அங்கம் திரண்டு மயக்க
அந்தப்புரத்துக்கு அவளை விழி
அழைத்துக்கொண்டிருந்தது.
இளவரசியொருத்தி
இளைப்பாறிய வாசத்தை
பெருமரத்து காற்று
சுவாசத்தில் பரவிவிட
அவள் மூச்சு என்னில்
பல்லாயிரமாண்டு வாயிலின்
பெருங்கதவை தட்டியது.
யாரங்கே!
பிறகு நான் மாந்தைவரை
புரவியெடுத்துப் பறந்தேன்.
புத்துவெட்டுவான்வரை
ஆடு சாய்த்துச் செல்வோம்
அக்காட்டினிடையே
நெல் சோழம் கடலையென
நிறைய பசுமைகாண்போம்
பரணறிவேன்
அரணறிவேன்
பறவைகளின் கனவறிவேன்
நதிகளின் கரைகளில்
நானும் தோழிகளும் மகிழ்வோம்
புதூருக்கும்
புளியம்பொக்கணை
நாகதம்பிரானுக்கும்
வண்டி கட்டிபோவது
அப்பப்பா கால வழக்கு
இப்போது
இப்படி பேருந்துகளில் போவோம்.
அடுக்கிக்கொண்டே போனது
அக்காட்டுத் தென்றல்.
ஓ!
நீ ஒரு இளவரசி என்றேன்
மஞ்சள் பூசிய முகத்தில்
ஏதோ சிவந்த கோடுகள்
அதில்
எதை எழுதினாலும்
ஒரு காவியத்தின் பூ மலரும்.
அந்தி சாயும் வேளையில்
சங்குப்பிட்டிப்பாலத்தை
பேரூந்து கடக்கும் போது
பாண்டியனின் மீனாய்
அவள் விழிகள் மின்னி
ஒரு கொடியாய் படபடத்தது
நல்லூரில் போயிறங்கும் போது
ஏதோ ஒரு
நம்பிக்கை படர்ந்தது
அதுவரை அவள் பெயரறியேன்
கேட்டேன்
குவேனி என்றாள்
அடுத்து என்னிடம்
அப்போது என்னிடம்
எந்த வார்த்தைகளுமில்லை
இரவு குவேனிக்கு
அழைப்பெடுத்து பேசினேன்
குவேனி கவனம்!
அலைகரைகள் கவனம்
ஆங்கு வந்தேறிகள் வருவார்கள்
எவரிடமும் பேசாதே
எந்த வார்த்தைக்கும் இணங்காதே
உன்னோடு நானிருக்கிறேன்
பதினெட்டாம் போரிருக்கிறது
நீ ஒரு இளவரசி

கற்பூரசட்டி நேத்தி காவடியும் இம்முறை கான்சல் கந்தா!-பொன்.காந்தன்



கற்பூரசட்டி நேத்தி
காவடியும் இம்முறை கான்சல்
எட்ட நின்றேயுந்தன்
எழில் கோலம் காண்பேன் கந்தா
மற்றும்படி வந்து
உன் மண்ணெல்லாம் உருண்டு
எப்பொழுதும்
என் பிரியமறிவாய்
என் சித்தத்தை மயக்கும்
சிறுக்கிகளை காட்டி
எத்தனை திருவிளையாடலுனது
ஆயிரம் வள்ளிகளை
உன் அரங்கத்திலறக்கி
தேருலா நாளில்
தீராக் கனவு தந்தாய்
பஞ்சாமிர்தத்துக்கு
பாவாடை கட்டி
என் பா வாடையாக்கினாய்
என்றாலும் கந்தா
நயன்தாரா சமந்தாக்களை
வரந்தாவென்று
வாசலுக்கு வந்துபோனவனுள்
ஒரு உயர்ந்தாளினை
ஒருபோதும் மறக்காது வைத்தாய்
உருக்கொண்டாடிய
ஒரு கரிய தேவதையை
காதலிக்க வைத்தாய்
வியேந்தேனடா
நீயும் ஒரு தமிழ் வீரனன்றோ
மறந்தேனா நான்
அந்த கருவேங்கையை
பிறந்தாளடா
அந்தப் பெருந்தேவி
கச்சான் விற்கும்
உன் வீதியின்
உத்தமி வயிற்றில்
ஒரு தேர் இழுக்கவேண்டும்
உன்னருகில்
அங்கயற்கன்னிக்கும் முருகா
வாக்கும் கேட்கவில்லை
வாய்சவடாலும் அடிக்கவில்லை
போனசும் கேக்கவில்லை
பொறுத்திருந்து
கதிரை பறிக்க
பூனையாய் ஆகவுமில்லையவள்
ஊர் மகிழ்ந்தால் போதுமென
உடலை வெடிக்கவைத்தாளே
நேற்றிருந்த நிஜங்களெல்லாம்
கனவானது எப்படி
எங்கள் திண்ணியதோளினை
திருட்டுக்காக்கினோம்
விரிந்த மார்பை
வெறும் வீறாப்புக்கு விற்றோம்
மங்கைகளின்
நெருப்பை மறந்தோம்
மணிக்கடையிலவளை
அம்மம்மா குழலாக்கி
அவலமாய்
குரெலெழுப்ப விட்டோம்
அங்கயற்கன்னி
மன்னிப்பாளா கந்தா
வன்னிக்காட்டில்
புலி உறுமுகையில்
உன் வடிவும் திமிரும்
வயிற்றை கலக்கியது
வல்லசுரர் கூட்டத்துக்கு
அங்கயற்கன்னி வெடிக்க
உன் தண்டிகை
தணல் பூவாலிருந்தது
தம்பியின் படையிருக்க
உன் கோபுரம்
வெள்ளை மாளிகைவரை
வெளிச்சமாய் தெரிந்தது
உண்மையில் பெருமானே
இப்போது
நீ கும்மிருட்டில்தானுள்ளாய்
உன் உள்ளக்குமுறலறிவேன்
எல்லாம் மறைத்தபடி
எல்லோருக்கும் சிரிக்க
கொள்ளி வைப்பாரால்
குட முழுக்கு காலமிது
நல்லையம்பெருமானே
என்றாலும் தேரேறு
இரவுண்டேல்
நிச்சயம் பகலுண்டு
நீ வரம் தரப்பிறந்தவன்
வழி காட்டத்தெரிந்தவன்
புலியாகி திரிந்தவன்
புயலாகி மறைபவன்
புதிராகி இருப்பவன்
அருளாகி நிறைப்பவன்
அதனால்தான் நம்புகிறேன்
இருள் மூடியுள்ளே
ஒரு சூரியன் செய்வாய்
அழகான தேருக்கு
அடிநாதம் விதைப்பாய்
அதன் மேல நீயும்
அடியானாய் நானும்
ஒரு நாளில் மகிழ்வோம்
உருமாறும் காலம்

கெரோயினும் கிளிநொச்சியானும்-,பொன்.காந்தன்


நான் ஒரு கரவெட்டியான்
கார்த்திகேசு சிவத்தம்பி கற்ற பள்ளியில்
ஒதுங்கவேனும் இடம் கிடைத்தவன்
அயலிலே கரிகாலனின் ஊர்
வயல்களில் இறங்கினால்
குறுக்கே ஒரு கொஞ்சத்தூரம்
இந்த பாதிக்கர்வம்
என் பக்கத்திலேயே என்னோடிருக்கும்
மீதி கிளிநொச்சியான் என்ற திமிர்
ஊதி புழுதி தட்டி
உட்கார்ந்து விளக்கில்
பாதி வாழ்க்கை கழிந்த தொட்டிலது
ஆதி தமிழரின் இராச்சியம்
அழகுறப் பூத்துக்கிடக்க
ஏறிய கொடியை பார்த்து
கைகள் விரித்து பறந்த கிளிநொச்சி
நிழல் அரசை
நெற்றிக்கு நேரே தரிசித்து
உலகெல்லாம் வந்துபோக
உயிரெலாம் காந்தளாய் மலர்ந்தது
கதியில்லை என்ற தமிழருக்கு
கைவிளக்காய் அல்ல
கதிரவனே முன்னே
நடந்து திரிய
என் தலைமுழுக்க
நட்சத்திரம் பூத்த ஊர்
எது தமிழன் புகழென
பூமிக்கு நேற்று முரசறைந்த ஊரில்
இளைய தலைமுறை
இழுத்தாராம் கெரோயின்
இடிவிழுந்து போயிற்று என் மனம்
அதன் பிறகுதான்
என் பதினாறுப் பருவத்தில்
என்ன செய்தேன்
அவ்வினிய ஊரிலென்று
எழுதலானேன்
இது என் தேசத்தின் இளவல்களுக்கு
அனுபவிக்க நிறையவுண்டு
சில்லறைகளும் இல்லாத
காற்சட்டை பருவத்தில்
நாமெல்லோரும் சிரித்ததெப்படி
எதுவுமே இல்லாத காலத்தில்
எப்படி சொர்க்கத்தை கண்டோம்
சொல்லியே ஆகவேண்டும்
சிலவேளை கால்களில
செருப்பும் கூட இருக்காது
அம்மா தரும் சில்லறைக்கு
அலுவா புல்டோ சுவிங்கம்
சத்தியமாய்
இதுதவிர எம் வாய்க்குள்
எந்த கெட்டதும் போனதில்லை
பள்ளிக்கு முன்பு
ஒரு அப்பு கடை
பகல் இடைவேளையில்
பணிசுக்காய் போவோம்
சிலவேளை
அங்கு களவும் எடுத்து
அப்புவுக்கு
அதற்காக காசு கொடுக்கும்
சத்தியத் திருடராயிருந்தோம்
அப்புவின் திட்டுக்கள்
இன்று எனக்கு கவிதை
மீசை அரும்பும் வேளையில்
நான் மினக்கெட்டதெல்லாம்
பரந்தனிருந்து வரும்
ஒரு பவளக்கொடிக்காக
அவள் பார்வையில் எழும்
அந்த படபடப்பு
இன்னும் நெஞ்சைவிட்டகலா
நிரந்தர சங்கீதம்
எனக்கு போதையே அவள்தான்
கரடிப்போக்கில் விரியும்
வடக்குத் தெருவில்
விஞ்ஞானக்கல்வி நிலையம்
அது விட்டபின்
ஒரு கும்பல் ரம்பை ஊர்வசிகள்
மரியதாஸ் வாத்தியாரின்
சிலமனை பார்த்தபடி
திருவையாறு தெருநீளம்
தேவதைகளை
வீடுவரை சாய்த்து
இரணைமடுவை எட்டி திரும்பும்
வாலிப முறுக்கின் சுகம்
எந்த கெரோயின் கொடுக்கும்
சோதிநாதன் அதிபரை கண்டதும்
ஒதுங்கிச் தலைசொறிவதும்
விந்தன் சேரை கண்டால்
வெடவெடத்து குனிவதும்
மோட்சலிங்கம் வாத்தியார்
மெல்லிய புன்னகையோடு கடப்பதும்
மனோகரி ஆசிரியையை
எப்போதும் கொண்டாடுவதும்
கனகமகேந்திராவின்
பார்வைக்குள் அடங்குவதும்
என் பதினாறு வயதில்
பலமாக இடப்பட்ட கொங்கிரீட்
இப்படித்தான்
என்னை ஒத்த பதினாறுகளுக்கு
வரமும் திறமுமாய் வாழ்க்கை கிடைத்தது
பதினாறில் காதலி
அதை விட வேறு போதையில்லை
பதினாறில் படி
அதைவிட வேறு பாதையில்லை
நான்
அப் போதையில் மிதந்தேன்
பல நூறு குமரிகளின் விழிகளில்
கவிதைக்கு கரு தேடினேன்
மிதி வண்டி கூட இல்லாத
எங்கள் பருவத்தில்
இந்திரலோகம் வரை போய்வந்தோம்
அந்த பதினாறுக்குரிய
அத்தனை குறும்புகளோடும்
என்னை படைத்தவனுக்கு நன்றி
கஞ்சா கெரோயின் வார்த்தைகள்
எப்போதுமே
செவிகளில் விழுந்ததில்லை
றீற்றா மேரி சுமதி மல்லிகா சுகந்தி
இப்படித்தான் ஏதும் செவிகளில்
நண்பர்கள் தட்டும்
படலையின் ஓசைதான்
எங்கள் ரிங்ரோன்கள்
காதலுணர்வுக்கும்
கவிதைக்கும்
அப்போது இட்ட அத்திபாரம்
இப்போதும் பலம்தான்
ஆயிரம் மலர்களை
ஆகாவென ரசிக்க
இந்த விழிகள் இப்போதும் தயார்
கன்னத்தில் சில நரைகள்
கதவுகளை முதுமைக்கு
திறந்த வைத்தாலும்
எண்ணமெல்லாம்
இன்னமும்
மின்சாரம் இல்லாத தெருவில்
மின்மினிகள் பூத்துக்கிடக்க
திருவிழாவொன்றில்
இதயத்தை உருவியெடுத்து
ஓடிப்போய்விட்டவளை
அருகில் இருத்திப் பேசும்
எங்கள் பருவத்தை கேள்மின்
இளவல்களே
ஆனையிறவுக்கு மேல்
ஆமிக்காரர் அடிக்கும்
பரா ஒளிக்குப் பிறகு
சிலவேளை
சண்டைச்சத்தங்கள் கேட்கும்
அங்கிருந்த ஆட்லறிகள் முழங்கும்
என் நண்பர்கள் பலரும்
பங்கருக்குள் படித்தவர்கள்தான்
குப்பிவிளக்கு
கொஞ்சம் மண்ணெண்ணைய்க்கு
எத்தனை கடை ஏறியிறங்குவார்
இன்று எல்லோரும்
வைத்தியர்
எக்கவுண்டன்ற் பொறியிலாளர்
மற்றும்படி
நான் ஒரு ஓட்டைகள் கீறல்கள் விழுந்த
ஒரு மரம்போல
இருந்தும் கிளிகள் கிளைகளில்
மலர்கள் பனியினில்
கிளிநொச்சியான் ஒவ்வொருவனின்
பால்யப் பருவங்களை
பாடமாகப் படியுங்கள் இளவல்களே
எதற்கந்த கெரொயின்
பள்ளி ஆடையுடன்
பதினட்டாம் போர்
கொக்காவில் காட்டுக்குள்
பாலைப்பழம் சாப்பிட்டுவிட்டு
வருகின்ற வழியில்
கனகாம்பிகை குளத்தில்
குத்திக்கரணம் அடித்து
கும்மாளம் அடித்துவிட்டு
வீடு வரும் இன்பத்தை
கஞ்சா வேறு கறுமாந்திரங்கள் தருமா
அருந்திய
கள் வெறியிலும்
முழங்கு சங்கேயென
புலம்பிய கிழவர்களால்
பூரித்திருந்தது தெரு
ஒரு காலம்
அந்த நிலத்தில்
ஆவலோடு நட்டவைகளின்
நாரி சவளக்கூடாது
வீரியம் வீழக்கூடாது
கட்டழகியின் பின்னே
கண்டாவளை போ
காரியமில்லை
கசிப்பு கெரோயின் கஞ்சா
எட்டியும் பார்க்காதீர் இளவல்களே
பருவத்திலேயே
பட்டமரமாகாதீர்
அனுபவிக்க நிறையவுண்டு
அழகிய கிளிநொச்சி
உங்களுக்காய் காத்திருக்கிறது
படிக்கிறவரைபடி
காதலி கவிதை எழுது
கனவை கலங்கலின்றி காண்!

கனியின் காய்-,பொன்.காந்தன்


நாவல் பழ சீசனில்
ரேணு நினைவில் வருகிறாள்
யூலை ஓகஸ்ட்டில்
அவள் உதடுகள்
நாவல் வண்ணத்திலிருந்தது
கிளைகளுக்கு
நான் எறிந்த தடிகளில்
தப்பிக்கொண்ட கனியில்
தேவதைகளுக்கும்
படைக்கப்பட்ட
அமிர்தமுமாய் உணர்ந்தேன்
வளவு மூலையில்
இரவு வெளவால்களின்
ஆரவாரத்திடையே
மெல்ல மெல்ல
அவள் உதட்டிலிருந்து
ஒரு காலத்தின் சாயம்
வெளிறிப்போவதாய்
எனக்குள் இப்போது தவிப்பு
மருதோண்டி
விரல்களில்
பருவகாலங்கள் கொட்டியவை
எல்லாம்
புளுதிகள் மேல்
உதடுகளற்ற முகமாய்
உணர்ச்சியற்றுக் கிடக்கின்றன
மொட்டை மாடியிலிருந்து
பார்க்கும்போது
இனந்தெரியாத பட்சிகள்
தேவதைகளின் உதடுகளை
என் வார்த்தைகள் புலம்ப
கொத்திச்செல்கின்றன
இப்போது
யூலை ஓகஸ்டுகளில்
நாவல் கனியிடையே
ஏதோ ஒரு தனிமை
வெறிச்சோடல்

பட்டதாரி பெட்டை-,பொன்.காந்தன்


காலிங் பெல் அடிக்க
கதவைத்திறக்க மாமி
கூலிங்கிளாசோடொருத்தன்
குறிப்புத் தெரியாமல்
இடத்தை மாறியாரோ
இங்க வந்தார் என்று
கணக்குப் போட்டுபிறகு
கண்ணை சுருக்கிவிரிய
என்னைத் தெரியலையோ
என்று பெடியன் செப்பி
முகத்து கவசம் கழற்றி
மூஞ்சை முகறை காட்ட
கொளுத்துப் போனாயடா
கொரோனா தீன்கள்போல
கையை கழுவிப்போட்டு
உள்ள வாடா இங்க
என்று மாமி அன்பால்
அழைக்கத் தேனினிக்க
கள்ளத் தீன்கள் பல
கடிக்க தந்த வீட்டுள்
இன்று மனம் தாவ
வெள்ளை ரோசாவென
விடலைக் காந்தமென
கள்ளின் சோலையென
கனவின் கரகமென
முல்லையொன்றை மாமி
முகிழ்த்த காரணம்தான்
கண்ணை ஓடவிட்டால்
காணவில்லை அவளை
பின்னே பனையொன்று
பழுங்கள் விழுத்தும்நேரம்
வந்தாய் நீயும் இன்று
பின்னேரக்கையாய் நின்று
பணியாரம் சுடத் தின்று
முன்னிரவாய் போவனடா
நினைக்க மாமி சொல்ல
வடக்கும் கிழக்கும் திரும்பி
வாசல் அறையை பார்த்து
அடக்க முடியாமல் உன்னி
அவள் எங்க மாமியென்று
அன்பு வெள்ளம் வழிய
மெல்ல கேட்க மாமி
செப்பலானாள் நீளம்
பட்டதாரியல்லோ
வெட்டுப் புள்ளி கடந்து
வெளிக்கிட்டவள் நிற்க
வட்டிக்கெடுத்தவளை
வாசிற்றிக்கு அனுப்பி
எட்டுப் பேரவளை
லவ்வு பண்ணக்கேக்க
கட்டன்றைற்றாய் கழற்றி
கடவுளுக்கு நேத்திவைத்து
பட்டம் பெறும் மட்டும்
பட்ட பாடு ஒண்டோ
விட்டுத்துரத்தியவளை
வில்லன் மாதிரி சிலது
கள்ளன் மாதிரி பலது
கடப்பு மட்டும் வந்து
இடுப்பை கிள்ளுமாற்போல்
மடக்க பாத்ததுகள்
நல்லகாலம் ஏதோ
நடக்கயில்லை ஒன்றும்
பிள்ளையவள் பின்னே
ஒரு பிஏ எழுது மட்டும்
நெஞ்சிடிதான் எனக்கு
வன்னி போர்கடந்து
வந்து ஏதோ நிமிர்ந்து
இண்டைக்கு மிச்சமில்லாம்
பட்டதாரி பெட்டையவள்
படித்து நிமிர்ந்ததுதான்
இருந்தும் வேலைக்கு
இழுபாடு எவ்வளவு காலம்
வருசம் பல கடந்து
வாசல்களும் பல போய்
தெருவிலிறங்கி கேட்டும்
தேயத்தேயத் திரிந்தும்
வருது வருது என்ற
வேலை நியமனத்தின்
கடிதம் எடுத்துபிறகே
நேற்றவள் முகத்தில்
நிலவு போலச்சிரிப்பு
இருந்தும் முடியயில்லை
எந்தன் நெஞ்சிடிப்பு
பயிற்சியாம் பிறகுமேதோ
பாக்கவும் போகேலாதாம்
பாய்படுக்கை தலைகணி
கறுப்பு சப்பாத்துமாம்
நைற்றுக்குமாய் உடுப்பாம்
ஏதோ இளவு பொட்டமாம்
பிறகு ரீசேட்டாம்
பட்டியலோடு போனாள்
பட்டணத்தில் வாங்க
இத்தியடி பிள்ளையாருக்கு
இன்னுமொரு நேத்தி
பத்திரமாய் வந்து
பட்டதாரிப் பெட்டை
எட்டு மணிக்கு வேலைபோய்
எவர் கண்ணும்படாமல்
கட்டிக்குடுக்கு மட்டும்
காக்கவேணும் கடவுளே!

விண்ணில் கச்சேரியாம் -,பொன்.காந்தன்,



விரைந்திற்று எம் வீட்டுக் குயில்
விண்ணில் கச்சேரியாம்
விரைந்திற்று எம் வீட்டுக் குயில்
ஏற்க மறுக்கும் ஒரு பிரிவு
இதோ
அந்திமழை அழுதபடி பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
எஸ்பிபி எனும் ஸ்வரத்தின் முகம்
கைகுட்டையாய் கண்ணீரை ஒற்றிய
கந்தர்வக்குரல்
காலப்பயணத்தை தொடங்கிற்று
மண்ணில் இந்த காதல் இன்றி
உதடுவரை வந்து
உருண்டு விழுகிறது இதயத்தில்
அரும்பு மீசைப்பொழுதில்
திரும்பி பார்த்த விழிகளுக்கு
தீர்த்தமாக்கிய தேவகானமே
கரும்பு வில்லோடு நின்றார்க்கு
வசிய பாணமான வளையோசையே
நதியோரம் ஆடிய நாணலுக்கும்
வளைந்து கொடுத்த
வானவில்லின் மறுபிறப்பே
முரட்டுக்காளைகளுக்கும்
முறுக்கேற்றிய மின்னல்ரசமே
வரட்டு கௌரவம் இல்லாத
வாத்தியங்கள் கைகோர்த்த
கான நந்தவனமே
அரங்கமே வெறிச்சோடிற்று
தொடங்க மாட்டாயோ
உன் சங்கரா பரணத்தை
இயற்கை என்னும் இளைய கன்னி
பொத்தி வைத்த காதலை
பொன்னுலகொன்றில் சொல்ல
பூட்டினளோ உனக்கொரு தேர்
அந்த வானமழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
இப்போ இந்த பூமி அழுதாத்தான்
அந்த வானமே சிரிக்குமா
வானமகள் நாணும்
பொன்மாலை பொழுதில்
நீயில்லை என்ற வருத்தம்
வேறு உடை பூணுகின்றாள்
கறுப்புத்தானாம் இன்று பொருத்தம்
மலர்கள் முதன் முதலாய்
மௌனம் கலைத்த நாளிது
துயரின் மொழியோடு தேடுகின்றன
வானொலிப்பெட்டிகளை
தேன் குடமாக்கிய இசைமாமுனியே
காதல் ஊற்றில்லா கற்பாறைக்கும்
தேனை செவியில் ஊற்றி
தீராக் கனவில் மிதக்கவைத்தவனே
சங்கீதக் கற்காமலே
காலடி எடுத்துவைத்து
இங்கிதக்குரலாய் உலகாண்டோனே
தங்கிடக் கோடிபேர் இதயங்களிருக்க
எங்குபோகிறாய் எஸ்பிபி
மகாதேவன் மெல்லிசை மாமன்னர்
இட்ட கட்டளைக்கெமை பிரிந்தீரோ
கண்ணதாசன் வரிகளோடு
காத்திருக்கிறாரா
வாலி வா வா என்றாரா
காவிரி ஆறும் கைக்குத்தரிசியோடு
வாலிப முத்துக்குமாரும்
வரவேற்றானோ உன்னை
பட்டுக்கோட்டைக்கு பரவசமா இன்று
இனி என்ன மெட்டு
எப்படித் தொடங்கும் வரிகள்
ஏழுலகும் மயங்கும் இராச்சியத்தில்
மன்னனாய் ஆனதோ தெம்மாங்குயில்
காது குத்துச்சடங்கிலும்
ஓரமாய் உன் குரல் இருக்கும்
பாதிவெறியோடு
வீதி தெரியாது தடுமாறுகிறவனுக்கும்
காதில் ஒலித்த உன் பாடல்
கடைசிவரையும் மறப்பதில்லை
பாலுவின் பாடலைப்பாடியே
காதலில் விழவைத்து
வாழ்வை ருசித்தவர் பல்லாயிரம்
எங்கள் வாலிபத்தில்
உன் சுரங்கள்தான் எங்கள் சுகம் வரம்
இடைக்காலப்பாடல்களை கேட்டபடி
எத்தனை இரவுகள் இன்பமாகின
மழைக்காலத்தில்
எஸ்பிபி பாடல்கள்தான் கம்பளி
இராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் கண்ணோ
இதைவிட என்ன வேணும் இளவயதுக்கு
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
இதைவிட என்ன வேணும் இதயத்துக்கு
கான நதியே
உனக்கும் பின்னால் எனில்
ஓடியே வந்திடலாம் போல
இந்த உலகத்தை விட்டு
நாடுகள் கடந்தும் கனிந்த மழையே
வீடுகள் தோறும் விரிந்த
செங்கரும்பே
பொங்கியெழுந்த கடலலைக்கும்
ஈழப்புயலுக்கும் கூட வாய்த்தவனே
சங்கமம் ஆகினாய் எங்கும்
தேன்சொரிந்த கூடாய்
இசை பிழிந்த காடாய்
அசைவற்று கிடந்தது அமுதக்கடல்
விடைபெற்றீர் எஸ்பிபி
விண்ணுலகுக்கு வழியனுப்ப
பாட்டின் அடிமைகள் கோடி முன்னே
பாபநாசத்தை பஞ்சு அருணாசலத்தை
பாலசந்தர் பாலுமகேந்திராவை
பாலமுரளி கிருஸ்ணாவை சந்தித்து மகிழும்
மாலையில் யாரோவென
வேளை தவறாது புலம்பும்
ஸ்வர்ணலதாவின்
விசிறிகளின் விம்மலை சொல்லிவிடும்
ரிகே பட்டமாளையும்
கேபி சுந்தராம்பாளையும்
பாட்டு வயல் நாற்றுக்கள்
மீட்டியபடியே இருக்கின்றன
சீர்காழியின் குரலின்றி
சிலிர்க்குமோ கும்பாபிசேகம்
கந்தனை குளிர்விக்க
இன்னமும் ரிஎம்எஸ்
இசைக்கு அழிவில்லை
எஸ்பிபிக்கும் மரணமில்லை
இது ஒரு மறுவுலகப்பிரவேசம்
ஆளுக்கொரு தேதி வைத்து
ஆண்டவன் அழைப்பான்
யாரழுதால் அவனுக்கென்ன
காரியம் முடிப்பான்!

பிறந்த நாள்-,பொன்.காந்தன்


தம்பிக்கு பிறந்த நாள்
மங்கிய ரோச்சையெடுத்து
மயில்வாகனத்தார் முழித்து
மனிசிக்கும் கிள்ளியெழுப்பி
முன்னிரா முடியும் வேளை
முகத்திலும் கொஞ்சி கிள்ளி
முடியையும் கோதி விட்டு
பதினெட்டுக் கடக்குமவனை
பதினாறும் பெற்று வாழ
மனதார மகிழ்ச்சி பொங்க
முதலுமாய் வாழ்த்துரைக்க
பன்னிரண்டு மணிபோல
படுக்குமவன் அறைப்பக்கம்
பல்பின் சுயிச்சை போட்டு
பார்த்தால் காணோம் தம்பி
படலையும் திறந்திருக்கு
பல்சரையும் காணவில்லை
பழைய காலம் போல
விடியப்பெடியள் எழும்பி
விளக்கை கொழுத்திவைத்து
குளித்து முழுகிப் பிறகு
அளவு எடுக்க ரெயிலர்
அங்கயிங்க நெளிஞ்சு
இக்பால் கடையிலெடுத்த
இரண்டு துணியில் தைச்ச
அச்சா உடுப்புப் போட்டு
கச்சான் அலுவா கிண்டி
மச்சாள் மாமன் சித்தி
அயலட்டையுடன் கூடி
கட்டை மூன்று தள்ளி
கமலா ஸ்ரூடியோபோய்
பிளக்கன் வைற்றிலெடுத்து
சொக்கும் ஐசுப்பழங்களோடு
நக்கி நடையை கட்டி
அன்று முடியும் பிறந்த நாளோ
இன்று தம்பி பேத்டேக்கள்
பலாலி நடுத் தெருவில்
பன்னிரண்டு மணிசாமம்
பசாசு படையலுக்கென்று
பத்துவித பண்டம் வைத்து
நீத்து பூசணிக்காய் பிளந்து
நிறமும் சிவப்பாய் வெருட்டும்
கழிப்புச் சந்திக் கருகில்
அராலி ஆவரங்கால் நல்லூர்
சக பாடியெல்லாம் சேர்ந்து
தம்பியை நிற்க வைத்து
கவட்டு ஸ்ராண்டை தெண்டி
சவட்டி பல்சர் நிமித்தி
பெற்றோல் ராங்கில் கேக்கு
பிறந்த நாளுக்கு வைத்து
ஐபோன் லைவை தட்டி
ஆபிரிக்காவரை பாத்து
அப் பழங்குடி கூட வியக்க
அள்ளி அப்பி கேக்கை
அவடம் எல்லாம் பூசி
செல்பி நூறு எடுத்து
பின்னால் மாடும் தெரிய
பேயின் நிழலும் இருக்க
ஏழெட்டு நாயும் கிடக்க
எண்பது கிட்சு இந்த
இன்பம் அறியுமோவென
தம்பிகள் சட்டிங் பண்ணி
இனிப்புக் கேக்குப் பட்டு
எறும்பு மொய்க்க உடுப்பை
கழற்றி ஊறப் போட்டு
பழைய லுங்கி கட்டி
படுத்து எழும்பும் வேளை
ஓரமாய் ஒதுங்கி நின்று
ஒரு காலப் பிறந்த நாள்
உடுக்க ஒன்றும் இன்றி
ஓடி ஒளியக் காண்மின்

வெண்மணற்சுவடு-,பொன்.காந்தன்

 


வல்லிபுரத்தாழ்வார் தீர்த்தம்
வண்டி கட்டி வயல் வெளிகடந்து
உண்டி சுருக்கி விரதமிருந்து
ஊரே திரளும் காலமும் கடந்து
இன்றும் மண்டியிட்டம்மணலில்
மதத்தினைக் கடந்தும் ஓர் பழக்கம்
எங்கிருந்தும் எழுந்தோடி வந்து
இரையும் கடலிறங்கி தீர்த்தமாடுவது
பண்டையது மாறாதெனும் திமிர்
வல்லிபுரத்தாழ்வார் முன்தோன்றும்
பதிகம் பக்தியென்றில்லாவிடினும்
வெற்றி மேனியுடன் இக்காலத்திளவல்
கட்டிப் பட்டு வேட்டி பளபளக்க திரிதல்
வெட்டும் கொத்தும் வாளு மென்ற
புத்தி கெட்ட சமுதாயத்தை மூடும்
புல்லரிக்கும் குமரிகளின் சேலை
இனியும் வாழும் தமிழர் மண்ணின்
திண்ணிய கொடியாய் பறந்தாடும்
அப்புவும் ஆச்சியும் ஆழவூன்றியதோர்
கொப்புக் குலையுமான பாரம்பரியம்
தப்பிக்க முடியாத் தலை முறையிலும்
சிப்பிக்குள் முத்தாய் விளைந்துமின்று
ஒப்பிலாத் திருவாய் உயர்ந்த கற்பகதரு
தோப்பிலே வாழும் வடமராட்சிப்பதி
கட்டிக்காத்தலை கடற்தீர்த்தமுரைக்கும்
ஓயாக் கடலலை மீது ஆழ்வாரிறங்க
உயர் பண்பிலா ரெனும் கதை முடிக்க
நம் ஊரான் திரண்டிரையு மிதுவுமோர்
ஈழத்தானடி எழில் மிகு தரையிறக்கமே
நீளக்கிடக்கும் வெண்மண லெங்கும்
நிலைத்திருக்கும் தமிழர் சுவடுகளில்
காணக் கிடைக்கும் காலமெல்லாம்
வாழத் தமிழர் பண்பாடு மோருயிர்
எனக் கொண்டாடும் அலையின்றும்

1991 நாட்குறிப்பு-,பொன்.காந்தன்


ஆயிரத்து தொளாயிரத்து
தொண்ணூற்று ஒன்று
காற்சட்டை நிறம் கறுப்பு
கையிலொரு கைசியோ
மாட்டின் சேட்டொன்று
மாற்றியுடுக்கவொரு
மண்ணிறத்தில் டாங்டாங்
காற்றுக்கு பறக்கும்
ஒரு பறட்டைத் தலை
கடப்பவர் திரும்ப வைக்கும்
கமக்கட்டுள் சாளிச் சென்ற்
கறுப்பை ஒரு மாதத்தில்
எலுமிச்சை நிறமாக்கி
இழுத்து மயக்குமாம்
மங்கையரை எனநம்பி
பான்சி கடை தடவி
வாங்கித் மெழுகிய
பெயாரன் லவ்லி
பொக்கற்றில் றெனோல்ட்
அக்கம் பக்கத்தில் சிலர்
அணிய ஆசையிலோடி
வாங்கிக் கொழுவிய
சோலாபுரிச் செருப்பு
பக்கத்து வகுப்பு
பருவக்குமரியில் காதல்
படுக்கையில் இரவு
அவளை சுற்றிய கனவு
ஆனையிறவில் வெடிச்சத்தம்
அவ்வப்போது ஆட்லறி
ஊருக்குள் வரும்
ஸ்பீக்கர் பூட்டிய வானில்
ஓ! வீரனே எங்கள் மண்ணில்
உன் பெயர் எழுதிவைக்கப்படும்
செல்லப்பாவின் குரலில்
இறுகிப் போன இதயம்
சங்கர் படிப்பகத்தில்
அந்திப்பொழுதில் சிலவேளை
சகபாடிகளோடு சேர்ந்து
இரணைமடுவரை
ஒரு உல்லாசப் பயணம்
எப்போதும் கூடவரும்
கறுப்பு லுமாலா
கரியலில் செருகிய
பாடக் குறிப்புக்கள்
எப்போதாவது
அப்பாவின் விருப்பத்தால்
வீட்டுக்கு வெளியில்
மஞ்சளில் பிரட்டி
மணக்க உண்ட விரால்
முன்னிரவில்
வீட்டுக்கு வீடு இலாம்பு
தணித்து வைத்துறங்கும்
சாமங்கள்
முள்முருக்கு பூத்த தெருக்கள்
முதுகு வரை அடித்த
மழை காலச் சேறு
சன்லைற் மணக்கும்
அநேக கிணற்றடிகள்
அடித்து துவைக்கும் ஓசைகள்
மருத மரங்களில்
வெட்டி எழுதப்பட்ட இதயங்கள்
துருசு திறந்த வாய்க்காலில்
இலைகள் ஒடித்துப் போடும்
ஊரின் சிறுவர்கள்
நாட்குறிப்பின் கோடுகளை
நிரப்பி வைக்க
இலையுதிர் காலமும்
ஒரு எதிர்பார்ப்புமான
ஒரு காலம்
இன்று!
எதை எழுதி வைக்க!

கோவிட்டுக்கு முதல்-,பொன்.காந்தன்,



கோவிட்டுக்கு முதல்
குடித்த கள் நினைவாய்
ஆகிட்டுப் பல மாதம்
வேகிட்டு கிடந்த
வெயில் தகிப்பில்
விழுந்தடித்து போய்
வெறும் நிலத்தில் குந்தி
ஆளிடைவெளி
ஒரு அறுப்பும் இன்றி
ஆளாளாய் கூடியிருந்து
ஆயிரம் கதையளந்து
வாயில் வந்து முட்டும்
வண்டு பூச்சி எறும்பு
கண்டும் காணாமல்
நிண்டு கொண்டும்
நிறுத்தாமல் ஒரு மூச்சில்
கண்ணை மூடியிழுக்க
கடவாய் சொண்டு
கள்ளில் குளிக்கும்
கதை பல பிறக்கும்
முண்டு குடுத்தெழும்பி
கொண்டைக்கடலையும்
கொழுத்த யப்பானும்
பொரித்து வைத்தங்கு
மண்டிவரை இழுத்து
மசமசக்கும் வாய்களுக்கு
உண்டு மகிழ்ந்துறிஞ்ச
உபசரிப்போனிடம்
ஒரு இரண்டு துண்டு
பொரியல் வாங்கி
திண்டு திண்டந்த
தேவாமிர்தம் அருந்த
செண்டுபோனாலவள்
சிணுங்குவாள் மறந்து
முதல் ஒண்டு வாங்கி
முடித்தும் அடங்காமல்
இரண்டு வாங்கிப்பிறகு
எதுவும் ஏறாமல்
மூண்டு நாலுவாங்கி
முள்ளு மிளகாய்க்காம்பு
கொண்டைக்கடலையின்
மிச்சக் கருவேப்பிலை
ஒண்டுவிடாமல்
வழித்துக் கொறித்து
அடித்து முடிக்கும்போது
அக்கரும்பனை
கற்பகதருவெனும்
எம் தல விருட்சம்
எப்பன் இந்தக்
கண்ணை மயக்கி
காலை பின்னிவிழுத்தி
முன்னே ஆளோமரமோ
ஆருடம் பார்க்கவைத்து
வன்னித்தெருவயலில்
வாய்க்கால் காற்றிதத்தில்
மெல்லியதாய் உதட்டில்
பாட்டும் தத்துவமும்
பழைய காதலியின்
பிரிவுத்துயரும்மேவ
அன்றந்த அந்தியை
அழகாக்கும்
முன் நிலவை இதமாக்கும்

தறித்தல்-,பொன்.காந்தன்


செடிகளை பிடுங்க
பிரச்சனை இருக்காது
அப்போதும் கூட
விரல்களில் கீறல்கள்
சிராய்ப்புகள்
வானுயர்ந்த மரங்களை
வெட்டும்போதும்
விழும்
நிச்சயமாக விழுத்தலாம்
எங்குவிழும்
நட்டேன் என்பதற்காக
கண்ணை மூடிக்கொண்டு
தறித்தால்
தலையிலும் விழலாம்
நிழல்களில்
கிளைகளின் பாரமும்
முட்களின் கூர்மையும்
ஒருபோதும் உணரப்படா
சிலர்
நிழல்களை
தறிக்கும் கோடாரிகளோடு
மரங்களை தறிப்பவர்கள்
நிறையத் தறித்தவர்கள்
வீழ்ந்தன
ஏராளம் வீழ்ந்தன
தலைகளிலும் ஏராளம்
நல்ல மரங்களை நட
தெரியாதவர்களின்
காடும் வளர்கிறது

வார்த்தைகள்-,பொன்.காந்தன்,



ஓரிரு வார்த்தைகள்
போதுமானதாயிருந்தது
அந்த நாள் முழுக்க.
மேடைகள் இல்லை
கரகோசங்கள் இல்லை
தோளுரசியபடி
காதோரம் மூச்சுரச
முன்னிலவு முற்றத்தில்
நீ சொன்னவை
ஓரிரு வார்த்தைகள்
சொல்ல
ஓரிரு வார்த்தைகள்
கேட்க
இன்னமும் காத்திருக்கும்
ஓராயிரம்
பூமியின் இதயங்கள்
ஒவ்வொன்றாய்
அடுக்கிச் செல்ல
எதுவுமில்லை
ஒவ்வொன்றுக்கும்
இன்று வேறு
நாளை வேறு
அர்த்தங்களுமில்லை
உன் உதடுகளில்
தயக்கமின்றி
வந்து விழும்
மயக்கிவிடும்
ஓரிரு வார்த்தைகள்
ஓரிரு வார்த்தைகளில்
தூங்கி எழலாம்
ஒரு வார்த்தையை
கனவு எனலாம்
மறு வார்த்தையை
மலர்கள் எனலாம்
ஓரிரு வார்த்தைகளில்
ஏறிச்செல்லலாம்
ஒரு வார்த்தையை
வானவில் எனலாம்
மறுவார்த்தையை
தாரகை எனலாம்
ஓரிரு வார்த்தையில்
கரைந்தும் போகலாம்
ஒரு வார்த்தையை
முத்தமெனலாம்
மறுவார்த்தையை
மோகமெனலாம்
உனது
ஓரிரு வார்த்தைகளில்
இன்றைக்கு
ஒன்று காத்திருப்பு
மற்றையது கண்ணீர்

எட்டாம் பூசை-,பொன்.காந்தன்



எட்டாம் பூசை எமக்கு
பள்ளிக்கூட காலம்
பத்மா ரீச்சர் பொறுப்பு
வல்லி மாலை பாடும்
காலம் வந்தால் போதும்
மல்லிகைப் பூக்கூந்தல்
மணக்குமிதம் காற்று
மற்றும்படி பின்னியதில்
அள்ளி வார்த்த நீரின்
அழகினை சுமந்தபடி
மெல்லிதாய் சொட்டும்
மேனியில் துளிகள்
மேகமாய் விரியுமது
கண்ணே படும் படி
கலைவாணி யாரென
சின்னதாய் தடுமாற்றம்
மொத்தமாய் வகுப்பில்
ஒரு முப்பது நாற்பது
வெள்ளியும் திங்களும்
விசிற்றிங் எலக்சராய்
அம்மம்மா வாட்டில்
அடிக்கடி காய்ச்சல்
நொண்டிச் சாட்டோடு
நோ எக்ஸ்கியூஸ் என்று
கண்டிப்போக வாங்கும்
சக பாடிகளும் சேர்த்து
எம் வகுப்பு மொத்தம்
குருட்டு இலக்கில்தான்
கூறவும் வேண்டும்
விளையாட்டு போட்டி
விழா கலாதியென்றால்
விடாமல் வருமொரு
அலாதிகளும் உண்டு
எங்கள் வகுப்பு பூசை
இடமில்லை வாங்கிலில்
இடாப்பெல்லாம் பிறசன்ற்
எட்டாம் பூசையை
எவரும் செய்யாதபடி
திட்டங்கள் போட்டு
திகைக்க செய்துவிட
வட்டங்களாய் கூடி
வடைமோதகம்அவல்
வகுப்பு மற்றதறியாமல்
இன்னும் சில ஐட்டங்கள்
வட்டமாய் நீளமாயென
வகையறாக்களும் சில
ஆளுக்கு இவ்வளவென்று
காசு சேர்க்கவொரு
கையாடாப் பெயர்வழியை
கண்டெடுத்தும் பிறகு
வேறு வேலைகளுக்காய்
பெட்டை பெடியளை
பிரித்துப் பொறுப்பாக்கி
பத்மா ரீச்சரின்
பார்வைக்கும் ஆக்கி
பரபரப்பாய் இருக்க
எட்டாம் பூசை
ம் மென வந்து விடும்
கும்பம் வைத்ததிலிருந்து
கொண்டைக்கடலையை
தாழித்த இரண்டாம்பூசை
மிளகாயில் குறைகண்டு
கிண்டலடித்தவர் நாம்
கண்டல் வாழைப்பழத்தோடு
கலைவாணியை ஏமாற்றிய
மூன்றாம் பூசைக்காரரிடம்
வண்டி திருத்துவோரிடம்
ஒரு பண்டி வேலியடிக்கும்
பாரச்சுத்தியல் வாங்கினால்
இரண்டு அடி அடித்திந்த
முப்பழத்தில் ஒன்றை
முண்டியேனும்
முயன்று பார்ப்போமென
சொண்டை நெளித்து
சொறிந்தவரும் நாமே
கஞ்சல் கூட்டம்
கையளவு அவல்
கெளபியில் கடுகில்லை
கடித்துண்டு மகிழ
ஐந்தாறு கற்கண்டுகூட
அள்ளித்தராதவரென
ஐந்தாம் உபயத்திற்கு
அடிக்குறிப்பிட்டதும் யாமே
பட்டுப் பாவாடை
பட்டைதீட்டிய நெற்றி
முற்றிய மாங்கனியென
முகத்தில் கன்னம்
முன்தோளில் சாயும்
கனகாம்பர மாலை
சக்கப்பணிய
சாந்தசொருபியாய்
பக்கச் சுருதி சேர்த்து
பணிய இருந்தபடி
ஒற்றைத் தொடையில்
தாளம் தட்டி
உள்ளக்கோவிலில்
உறைந்த கலைவாணியை
மெல்லிய தேனாறாய்
மிதக்கவிடும் மேனகாவை
எங்கள் மனமினிக்க
பாடவைக்கா பூசையென
பரிகசித்தோம் ஆறாவதை
எட்டாம் பூசை நாளைக்கு
இரவு முழுக்க
நித்திரை இல்லை

வீடும் மரமும்-,பொன்.காந்தன்,


அஷ்ரப்
ஒரு மரத்தை நட்டார்
நிழல் தருமென நம்பினார்
கதீஜாவின் பிள்ளைகள்
காலகாலமாய்
விழுதிலும் அமர்ந்து
விளையாடக் கனவு கண்டார்
வேருக்கும் தெரியாத
கிளைகளும் உண்டாமோ
அம்மரத்தில்
பாவக்கனிகளும்
பழுத்திற்று காணீர்
சாத்தானின் வேதத்தை
மரத்தடியில்
ஓதிடக் கேள்மின்!
செல்வா
ஒரு வீட்டை கட்டினார்
மல்லிகை பந்தல் முற்றம்
உறவுகள் கூடி
உண்டு உறங்கிப் பேசி
அண்ணன் தம்பி தங்கைகள்
பலமெனத் திரண்ட மிடுக்காய்
வாழத் தகுதியாகுமென
அவ்வீட்டில் கனவு கண்டார்
அத்திபாரம் அறியா
அறைகளும் உண்டோ
அங்கு புற்றெடுத்துப் பாம்பு
சீறிடக் காண்மின்
முற்றத்தில் யாரோயிருக்க
வீட்டுக்காரர்களை
விரட்டியது விசர் நாய்கள்
நல்லது
ரொம்ப நல்லது
இன்னொருவன் சிரிக்கிறான்
இன்று நேற்றில்லை

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...