Wednesday, January 2, 2019
பூவாலரின் புள்ளடி-பொன்.காந்தன்
முன்னொரு நாள் முதல் மாதம்
முழுநாடும் தேர்தல் என்று
வந்ததோர் சேதி கண்டு
வாய்நிறையச் சிரித்தபடி
இம்முறையும் தன்வீட்டின்
ஏழெட்டு வாக்குகளை
பரம்பரையாய் இட்டுவந்த
பனங்கொட்டை சின்னத்துக்கு
இடுவதற்கு வாய்த்ததென
இருமலுடன் செருமலினை
இறுமாப்பில் விட்டபடி
எவரெங்கள் வேட்பாளர்
எனும் புதினம் அறிவதற்காய்
பக்கம் எட்டின் அடிவரை
பத்திரிகை மொய்த்தபடி
பனசொனிக் வானொலியை
காதோடு தோடாக்கி
அட்டனக்கால் போட்டிருந்து
ஆறேழு சணல் மாத்தி
தொலைக்காட்சி முன்கிடந்து
ஒருவாறு பனங்கொட்டை
சின்னத்தில் தொகுதியிலே
அன்னத்தின் புருசனவன்
ஆலால கண்டன் என
அறிந்து விட்ட பூவாலர்
அதிர்ந்துவிட்டார் ஒருகணத்தில்
தெருக்கோடி திண்ணைகளை
ஒருபோதும் அறியாத
ஒருபோக்காய் இருந்தவனை
பனங்கொட்டை தலைவர்
இனங் கண்டதெப்படியாம்
என மனதுள் தளம்பிடினும்
அடியடியாய் அன்றுதொட்டு
வென்றதிந்த பனங்கொட்டை
விடியாத மூஞ்சைகளும்
வேட்பாளர் இதில் ஆனால்
முடிசூடி வாழவைக்கும்
வித்தையுண்டு என்பதனால்
குடிகாரர் கொள்ளையர்கள்
வெள்ளையடித்ததில் நின்று
வென்றகதை பல உண்டு
இனமானம் தன்மானம்
இளகாத கொள்கையென
வழிவழியாய் வாயடித்து
வாக்கெடுத்த தந்திரத்தால்
படியாத கூட்டங்களும்
படியேறி விழுந்தெழும்பி
பனங்கொட்டை சின்னத்தில்
ஒருவாறு இடம்வாங்கி
ஊர்வாக்கை எடுப்பதிலே
உற்சாகமாயிருக்கும்
எனகாலம் பலகண்ட
பூவாலர் இப்போதும்
ஆலால கண்டனுக்கும்
அடித்திருக்கு வெள்ளிதிசை
என்றுள்ளே எண்ணிக்கொண்டு
சந்திகள் கடைத்தெருவில்
சந்தையிலும் நின்றுகொண்டு
வந்துபோவார் பலரோடு
பனங்கொட்டைக்கிம்முறையும்
இனம்வெல்ல வாக்கினையே
இடவேண்டும் என சொல்ல
சிலபேர்கள் சிரித்தபடி
இனிமேலும் நாமதற்கு
இடமாட்டோம் வாக்கென்று
அறைந்தாற்போல்
கடந்தம் செல்ல
அடபோடா துரோகிகளே
எனவாய்க்குள் புறுபுறுத்து
திருவாயால் தினம்தினமும்
பனங்கொட்டை பரப்புரையை
இடைவிடாது அரங்கேற்ற
ஒரு மாலை அவர்வீட்டு
படலையை திறந்தபடி
பரமேசும் பரிவாரமும்
பாக்குவெட்டிச்சின்னத்தில்
வாக்குக் கேட்டுவந்தேன்
காக்கவேண்டும் பூவாலர்
கனவாக்கு வீட்டிலுண்டு
ஆட்டிவிட்டால் தலையினையே
அனைத்தும் எனக்காகும்
இறக்கும்வரை மறக்கமாட்டேன்
எனச்சொல்லி பரமேசு
பார்வையினால் இரந்துநிற்கு
இறந்துவிட்ட என்னப்பு
அவருடைய அப்புக்களும்
மறந்திடாமல் வாக்கிட்ட
பனங்கொட்டையை மறந்திடவோ
மினக்கெடாமல் இதில் நின்று
அடுத்த வீட்டை நாடிப்பார்
எடுத்தவுடன் உரைத்துவிட்டு
அடைத்துவிட்டு படலையை
ஆலால கண்டனின்
ஆளுயர பிரசுரத்தை
தன் வேலியிலே செருகி
விழாமல் இழைகோர்த்து
விடியவதற்குள் ஆறுமுறை
எழுந்தெழுந்து வந்துபார்த்து
எதிர்கட்சி கிழிக்காமல்
கிளிக்காவல் பார்த்திருந்து
ஒருவாறு தேர்தல்நாள்
வந்திற்று வாக்களிக்க
அதிகாலை எழுந்து
அனைவரையும் எழுப்பி
குளிர்காலதண்ணீரில்
குளித்து முழுகிவிட்டு
முதலாளாய் போயங்கு
பனங்கொட்டைவெல்ல
பதியவேண்டும் வாக்கென்று
மொத்த குடும்பத்துக்குள்
பத்துத்தடவை சொல்லி
பட்டு வேட்டி எடுத்து
பக்கம் கரைபார்த்து
இடுப்பில் .இறுக்கி
எட்டடி சால்வையை
இழுபடாமல்
இரண்டாய் மடித்து
எடுப்பாய் தோளிலிட்டு
முதலாளாய் போய்
மீசையை தடவிக்கொண்டு
பனங்கொட்டைக்கிட்டார்
பூவாலர் வாக்கு
மனங்கொண்டது மகிழ்ச்சி
மறுபடியும்
பனங்கொட்டையே வென்றது
ஆலாலகண்டனின்
வாயிலே வந்த வாள்களை நம்பி
பாயிலே கிடக்காமல்
கோயில்குளமெல்லாம் ஏறி
ஆயுளே போனாலும்
அடுத்த ஒரு தெரிவில்லை
பனங்கொட்டையே விருப்பென
இனம்பட்ட பாட்டை
பனங்கொட்டை மாற்றுமென
மலையாய் நம்பினார்
பனங்கொட்டை சொல்வது மந்திரம்
செய்வதெல்லாம் ராஜதந்திரம்
கண்ணைமூடிக்கொண்டே
கற்பனையில் மிதந்தார்
காட்சி மாற்றமொன்றை
கடுதிகதியை கண்டார்
ஆட்சிக்கட்டிலில் ஆட்டங்கண்டு
நேற்றுவரை கூற்றுவனாயிருந்த
வேற்றவன் சிங்காவுக்கு
ஆலாலகண்டன் காலாகமாறி
காப்பாற்றி நிற்க
பாம்பான படுகுழியில்
வேம்பான உறவாய்
விடிவுக்கு குறுக்காய்
வீம்பான சிங்காவும்
சிங்காவின் சில்வாக்களும்
தெம்பு பிறந்தேறினர் ஆட்சி
பூவாலர் இட்டவாக்கால்
புஞ்சி பண்டாவுக்கு அமைச்சு
அவனீன்ற மஞ்சுளவோ
இராவிடுதியில்
கன்னிகளிடை அணைச்சு....
மண்ணதன் மானமென
பூவாலர் இட்டவாக்கு
ஆலாலகண்டனாய் ஆச்சு
அவன்கொடுத்த ஆதரவால்
மீண்டது சிங்காவுக்கு மூச்சு
அவன் செல்லம்
சித்திராங்கனிக்கும் ஓர் அமைச்சு
அவளுத்தம புருசனின்
கள்ளக் கடத்தலுக்கும் பலமாச்சு
பாக்குவெட்டிச்சின்னத்தில்
பாத்திரங்கும் பூவாலென
நீத்துப்பூசணிக்காய் தாங்கும்
நிலைடியில் நின்று
நெடுநேரம் கெஞ்சிய
பரமேசுவின்
ம க கூ தலைமைக்கும் அமைச்சு
அவர் மச்சான்களின்
கஞ்சா தூள் குடுவுக்கும்
இனி நல்ல காலம் பிறந்தாச்சு
நாலைந்து நாள் நல்ல மழை
எல்லா இடமும் தண்ணி
இருந்து பார்த்தார் பூவாலர்
எழும்பவேண்டிதாயிற்று
கடந்போய் பள்ளியொன்றில்
பாய்விரித்தார்
புள்ளிவிபரத்திற்கு
பூவாலரும் பெயர்கொடுத்தார்
பெயர்களை அழைத்தனர்
வரிசையில் போய்நின்றார்
வந்தவர்கள் யாரோ எவரோ
கையிலொரு பொட்டலம் வைத்தனர்
ஒரு போட்டோவும் பிடித்தனர்
வந்து பாயில் குந்தி
அவிழ்த்தார் பொட்டலத்தை
சன்லைட் லக்ஸ் இரண்டிரண்டு
பெனடோல் காட் ஒண்டு
சீனிபருப்பு தேயிலை சமபோசா...
ஆலாலகண்டன் அலரிமாளிகையில்
ஐயா பூவாலர் அடைமழையில்
தந்த விசுக்கோத்தை
கொந்திக்கொண்டிருக்கின்றார்
Subscribe to:
Post Comments (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...
No comments:
Post a Comment