Thursday, August 22, 2019

காவியுடுக்கிறது நாவற்குழி தாயை விற்கிறது தமிழ்த் தேசியம்-பொன்.காந்தன்


பனைகளிடையே இருந்த பரவசரம் ஒன்று பறிபோகிறது
சரித்திர நிலம் சங்கிலியன் இராச்சிய வாசலில்
தரித்திரம் ஒன்று பற்றிக்கொள்கிறது
காவியுடுக்கிறது நாவற்குழி
கவிஞனின் கண்கள் கலங்குகின்றது
கண்ணுக்கு முன்னே தன்சல் உண்டு
தாயை விற்கிறது தமிழ்த்தேசிய மூதேவிகள்
அத்திபாரமிட்டு கட்டியெழுப்பி சம்புத்தி சுமண திறப்பென்று
அழைப்பிதழ் அடிக்கும்வரை
எட்டி உதைக்காத இழிகுலமாயிற்று தமிழர் நிலம்
கட்டிக்காத்து நாவற்குழிக்காக
எத்தனை மறவர்களின் இரத்தம் சிந்தின
பொன்னம்மான் கேடில்ஸ்கள் கொத்தாய் வீழ்ந்த புனிதர்கள் கதையை
அடிமனதில் தாங்கும் ஆன்ம நிலமல்லவா நாவற்குழி
ஆயிரம் விகாரைகள் அமைக்கும் பட்ஜட்டுக்கு
கை உயர்த்திவிட்டு வரும்
சூடு சுரணையற்றவரோடு வாழ்கிறது நல்லூர் இராசதானி
சந்திரசிறீ கூட்டி வந்து குந்தவைத்தான் சிங்களவர்களை
சஜித் காணி உறுதி குடுத்து கட்டி எழும்பி
தமிழர் பூர்வீகத்தை கபளீகரம் செய்து நிற்கிறது ஒரு விகாரை
சட்டதிட்டங்களுடன் கட்டப்பட்டதாம்
அக்கம் பக்கத் தமிழ்த் தேசியம்
அத்தனை ஓட்டைகளையும் பொத்திக்கொண்டிருக்கின்றது
முப்பது வருட புரட்சியை எந்தச்சட்டத்தை வைத்து
எழுச்சியாய் நடத்தினான் பிரபாகரன்
சிட்டுக்குருவிக்கேதடா சிறீலங்கா யாப்பு
உரிமையை விட்டுக்கொடுக்காதவனுக்கு சட்டங்கள்
சட்டையில் படும் புளுதியை தட்டுவதுபோன்றது
ஆரியகுளப் புத்தர் போதாதா
உல்லாசப்பயணியாய் வரும் தென்னிலங்கைக்காரன்
ஒண்டுக்கு இருக்கும் இடத்திலும்
ஒரு புத்தர் சிலையை வைக்க நினைக்கிறான்
கண்டி இராச்சியத்தின் கிளையாய் மாறுகிறது வடக்கு
கண்ணுச்சாமியிடமிருந்து பறித்தனர் கண்டியை
இன்று
சிங்களப்பேரினவாதிகளுக்கு முண்டு குடுக்கும்
பச்சோந்திகளால் பறிபோகிறது நாவற்குழி
இன்று நாவற்குழி இனி அடுத்து வட்டுக்கோட்டை
தொடர்ந்து கோப்பாய் உடுப்பிட்டி
இப்படியே நல்லிணக்கப்புத்தர்கள் முளைப்பர்
நாம் பேரினவாதம் தோற்று விடாமல் பார்க்கும்
அடிவருடலை அழகாய் செய்திருப்போம்
உதட்டு வருத்தத்தில்
அடிக்கடி போராட்டம் வெடிக்குமென புலம்பும்
தமிழ்த்தேசிய தரகரிடம்
அந்த தேதி இடத்தை கேட்டு சொல்லுங்கள்
அந்தப் பேரதிசயத்தை பார்க்க ஆசையாய் இருக்கிறது
நல்லூரடிச் செல்லப்பா செப்பியது போல
எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்
இனி என்ன நாவற்குழியில் இருந்து
பிரீத்தின் ஒலி கைதடி அரியாலை என்று காற்றிலேறிவரும்
வேறென்ன தமிழரால் இனி செய்யமுடியும்
எத்தனை கட்டை என்று பார்த்து
சுருதி பிடித்து நாமும் பாடக்கற்றுக்கொள்வோம்
அதுவும் ஒரு நல்லிணக்கப் பாடலாய் ஆகி
எங்கள் நாட்டுக்கூத்துக்களும் செத்து
செம்மணியில் எரியும் போது சம்புத்த சுமண விகாராதிபதியை
வெள்ளை விரித்து இருத்தி
நல்லபடியாய் மேலோகம் போக பிரார்த்திக்க கேட்போம்
இப்போதுதான் ஆயிரம் விகாரையில் ஐந்தாறு கட்டப்பட்டுள்ளது
இன்னும் தொள்ளாயிரத்துக்கு இடமுண்டு வடக்கிலும் கிழக்கிலும்!!

ஆல்பத்தை எடுத்து அவளை முத்தமிட்டேன் வேறு எவராலும் அந்த புல்லரிப்பு இல்லை!!-பொன்.காந்தன்


ஆண்டுக்காண்டு வருகிறது நல்லூரான் திருவிழா
நல்ல சனவெள்ளம் இந்நாட்களில்
எங்கிருந்தோ இருந்தெல்லாம்
அழகிகள் திரண்டு விடுகின்றார்கள் அந்த வெண்மணல் வீதியில்
எதை பார்ப்பதென்று
தவித்துப்போய் விடுகின்றார்கள் பால்ய வயசுப் பயல்கள்
ஏன் ஏறிய வயதுகளும் கூட
ஒரு முறை ஓரகண்ணால் உறிஞ்சி விடுகின்றன
இப்போது கைத்தொலைபேசியும் கையுமாய்
பூங்காவனத்துக்குள்
ஒரு மாம்பழத்தின் மனசில் இடம்பிடித்து
வாங்கிவிட வேண்டும்
முகநூல் வட்சப் ஐஎம்வோவென்று அலைகின்றன
பருவ வயதுப் பரபரப்புக்கள்
ஆயினும் இந்நாளை
அந்த ஈழத்து அழகியை போல
எவராலும்
புல்லரிப்பால் அலங்கரிக்க முடிந்ததில்லை இதுவரை
அழகிகளின் ஆல்பத்தில்
முதற் பக்கத்தில் இருக்கும் அவளின் நிழற் படத்தை எடுத்து
நெஞ்சருகே வைத்து
ஒரு முத்தம் ஒன்று கொடுத்தபோது
முத்தி கிடைத்து விட்டதுபோல மயிர்கால்கள் குத்திட்டன
தாய்நிலமெனும் தமிழ் தாய்க்கு தன்னுயிரால்
தண்டிகை கட்டினாள் அந்த அங்கயற்கண்ணியெனும் அணங்கு
என்ன சொல்ல அவளை பற்றி
அவள் சொன்ன ஒரு வார்த்தைக்காக
கச்சான் விற்கும் அம்மாக்களை காணும்போதெல்லாம்
ஒரு சரை வாங்கிப்போக நினைக்கும் மனம்
அங்கயற்கண்ணியின் எச்சமென்று எங்கள் கல்வெட்டில் எழுதும்போதுதான்
நிச்சயம் எங்கள் ஆத்மா ஈடேற்றம் பெறும்
கடித முகவரியோட கிடந்த தமிழனுக்கு
காலத்தால் அழியாத காவிய முகவரியை
எழுதிச்சென்றாள் அந்த கடற்கரும் தமிழ்
யாரை யாரையெல்லாம் நம்பி ஏமாந்த இனத்தின்
வேரை காக்க
ஒரு ஏழைத் தாயின் மகளால்தான் முடிந்தது
இதுதான் வரலாறு
இன்று பாளிமென்றில் தமிழர்கள் பட்டி மன்றம் செய்கிறார்கள்
நொடிக்குள் வெடித்து வேலை முடித்து
எதிரிகளை வியர்க்க வைத்தாள்
வியக்கவும் வைத்தாள்
எங்கள் பிள்ளை ஒரு நாள் கடலில்
நாளை நானிருக்க மாட்டேன்
இந்த வானம் இருக்கும் இந்த மலர்கள் இருக்கும் என
மரண யதார்த்தம் எண்ணாத
மங்கைகளுக்கு அரசி அங்கயற்கண்ணியை
கோர்த்து அணியுங்கள் மார்பில் உரசட்டும் அந்தத் தாலி
கற்பழிக்க நினைப்பவெனுக்கெல்லாம்
பெண்ணுக்குள் அங்கயற்கண்ணியும் உறைகிறாள் என்ற
அந்த உண்மை தெரிந்தால்
நினைத்த மாத்திரத்தில் எல்லாம் சோர்;ந்துவிடும்
மாதர்களுக்கு கிடைத்த மாமருந்து ஈழத்து மகள் அங்கயற்கண்ணி
வந்தவன் போனவனெல்லாம்
சிரைத்து விடலாம் ஈழத்தாயை என நினைத்தபோது
அவளின் சேலை சரிசெய்து
மார்பை மறைத்து
ஆழமாய் பதிந்திருந்த நகக்கீறலுக்கு மருத்திட்டு
நான் காப்பேன் என்று
ஒரு கறுப்பிதான் கையுயர்த்தினாள் ஈழத்தில்
யானையை அடக்கிய அரியாத்தையாய் இருந்த ஆச்சரியம்
பி.ரி உசாவாய் பிரமித்து நின்றபோது
ஐம்பூதங்களையும் கடந்து நின்றது அங்கயற்கண்ணி எனும் பேராச்சரியம்
கடல் அலை நுரைப்பூக்களைக் கூட
எட்டி நின்று பார்த்தே ஏம்பலித்த பெண்களுக்கு
நாற்பது கடல்மைல்
தனியனாய் நீந்தி காட்டினாள் எங்கள் நிமிர்வின் பிள்ளை
நெஞ்சு கனக்கிறது அங்கயற்கண்ணியெனும் கந்தர்வ காரிகையே
இப்போது அடை வைத்தால்
ஒரு அக்கினிக்குஞ்சு கூட பொரிப்பதாய் இல்லை
கூழாகி கொழும்புவரை மணக்கின்றன
நாளைக்கு அங்கயற்கண்ணிக்குப் பிறகு
நான் ஒரு தமிழன் என்று தலைநிமிர்த்த
எந்த மயிர்க்கூச்செறிய வைக்கும் மனிதர்களை காண முடியவில்லை
மன்னித்துக்கொள் மகளே
நாளை எந்த சிங்களப் பேரினவாதிக்கு வாக்கிடலாம் என்றொரு
டிஸ்கசன் இருக்கிறது வருகின்றேன்!

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...