Wednesday, January 2, 2019

மீன்குஞ்சின் மார்கழி-பொன்.காந்தன்



இப்படி ஓர் மார்கழியில்
இப்படி ஓர் மழை பொழுதில்
அப்படியோர் இளஞ்சிட்டாய்
ஆங்கோர் உன் பாதையிலே
தேங்கிய நீருள்ளே
நீந்திய எனைக்கண்டாய்
புத்தகங்கள் நனைய
பொழிந்த அம் மழையில்
சித்திரக் கொப்பியில்
சிவப்பு மஞ்சள் பச்சையென
அத்தனை வர்ணங்களும்
கரைந்துன் உடை மாற
உனை மறந்தெனை ரசித்தாய்
குந்தியிருந்து
குனிந்தெனை பார்த்தாய்
குழந்தை உன் கைசேர்த்து
மறைவாக நினைத்த
எனை மறித்துப் பிடித்தாய்
நினைவிருக்கிறதா என்னை
நான் மீன்குஞ்சு
நினைத்திருக்க மாட்டாய்
நெடுங்காலம் பின்னே
உன் கனவினில் வருவேனெ
எத்தனை கனவுகள்
ஏதேதோ வந்திருக்கும்
சத்தியமாய் நானறிவேன்
என் வரவு உனக்கு ஆச்சரியம்
எத்தனை வயது உனக்கு
ஒரு நாற்பது இருக்கும்
நான்கைந்து வயதில்
என்னாடு நீ கொண்ட சிநேகம்
நீ மண்ணோடு போய்விடமுன்
மீண்டும் வந்து போவதில் மகிழ்வாயா

பின்னே வா
பிறகு என்னை நீ
கையிலேந்தி கடுகதியாய் நடந்து
வெள்ளத்தில்
விசாலமாய் இருந்த எனை
துள்ளும் இடம் சுருக்கி
ஒரு சோடா போத்தலில் நீர்விட்டு
நீந்த விட்டாய்
நெஞ்சம் மகிழ்ந்தாய்
வஞ்மில்லை உன் மனதில்
என் வாழ்கைச் சுதந்திரத்தை அறியாய்
கொஞ்ச நீருக்குள்
நான் குறுகித்துடிப்பது
குழந்தை மனதுக்கு
ஒன்றும் புரியாது
ஓரிரண்டு நாள் மகிழ்ந்தாய்
ஓர் நாள் இரவு
மூச்சுத்திணறி நான் முடிந்துவிட்டேன்
மறுநாள் காலை
மகிழ்வோடு எனை பார்க்க வந்தாய்
அசைவற்று என் சடலம்
செதிலடங்கிக் கிடக்க
கலங்கிற்று உன் கண்கள்
கடைசியாய் நீ உடைந்தழுதாய்
உன்னுள் இருந்து
கருணை உள்ளத்தால்
என் மரணம் கூட மகிழ்ந்தது
அந்நாள் முழுக்க
அழுத முகத்துடன்
உண்டாயா இல்லையா என்பதாக
உலவித்திருந்தாய்
மறுநாள்
பிறகும் பல நாட்கள்
அடுத்தும் பல மார்கழியில்
அப் பாதை கடக்கும் போதெல்லாம்
உன் நினைவில் நான் வந்தேன்
இந்த மீன் குஞ்சின் ஆத்மா
அப்போதெல்லாம் சாந்தி கண்டது
பின் நாளில்
உன் நினைவில் இருந்து
நெடுந்தூரம் போய்விட்டேன்
முடிவாய்
உன் கனவிலும்
நினைவிலும் நான் இல்லையென்றானேன்
உன்னால் என்னை நினைக்க முடியாது
நிச்சயம் முடியாது
நந்திக்கடலோரத்தில்
ஒன்றல்ல ஓராயிரமல்ல
ஒரு லட்சம் மீன்குஞ்சுகள்
கரையொதுங்கி கிடப்பதுபோல்
உன் உற்ற மனிதர்கள்
செத்துப்போன பொழுதினை
கண்டிருந்த உன்னிடம்
பொங்கி வழியும் அழுகையில்
இச் சின்ன மீன்குஞ்சும் வசிக்க
ஓரிடம் தா!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...