கோழிக்கு தவிடு வாங்க
குஞ்சு போய் வா என்பாள் அம்மா
ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன்
ஆக்கினை தாங்கேலாமல்
ஆமோதிப்பாள்
கோணிப்பையுடன்
இராசையர் கடை தாண்டும் போது
இரண்டு நாவல் மரங்கள்
சீசன் இல்லாத காலமென்றால்
கிளைகளை கண்கள் மேய்ந்து கடக்கும்
தாமோதரம் பிள்ளையின் நாய்
படலைக்கு வெளியில் நின்றால்
பத்து இருபது நிமிசம் தாமதமாகும்
அது வேலிக்கு கிளப்பி சலம் விட்டு
பிறகு புளுதியை கிளறி
தன் வீரப்பிரதாபத்தை காட்டும்வரையில்
பாவட்டை வேலியோடு பதுங்கிவிட்டு
பயணம் தொடரும்
தவிடு வாங்க இவ்வளவு பாடோ
மணியத்தாரின்
நாம்பன் எதிர்ப்பட்டால்
யாரும் தெருவில் வரும்வரை
காத்திருந்து காப்பெடுத்து
அந்த கொம்பையும்
குவிந்த ஏரியையும்
மனா குறி சுட்ட
கொளுத்த மேனியையும் கண்டு
தவிட்டுப் பையோடு தறிகெட்டு
கடப்பது என்பது
ஆனையிறவு தடை முகாமுக்கு முதல்
மணியத்தாரின்
மாடு தந்த அனுபவம்
மனசுக்குள் அதைப் பற்றி
ஒரு கடித்து குதறும் மிருகம்போல
கற்பனை பண்ணினாலும்
அதை பொய்யாக்கி
போக வருவோர் தடவிப் போகவுமாய்
இடப வாகனமென
இடம் பிடித்து விட்டது மனதில்
அடுத்து ஒரு பாலமும் வாய்க்காலும்
பாலத்தின்
ஒரு பக்கத்தில் இலையொன்றைபோட்டு
மறுபக்கத்தில்
அது போவதைப் பார்க்காவிட்டால்
மில்லடி பயணம் இனிக்காது
பாலத்தின் ஒரு பக்கமாய்
வாய்க்காலில்
சரிந்த மரக்கிளை மறைவில்
ஒரு முதலைப்பாளி இருப்பதாய்
அந்த வாய்க்காலில் சிறியவர்கள்
இறங்காமல் இருப்பதற்காக
ஊரார் எழுதி வைத்திருந்த
புனை கதையை நம்பி
முதலையின் முதுகு
எங்காவது தெரிகிறதா என்று
தண்ணீரில் மேல் கண் ஆராயும்
பட்ட கட்டை மிதந்தாலும்
முதலையாகத்தான் இருக்குமென
மனம் முடிவெடுத்து
வாய்க்கால் வீதியில்
பயணம் தொடரும்
இதைவிட கோணிப்பையை
பள்ளித் தோழிகள் கண்டால்
என்னவாகுமென்ற
ஒரு வெக்கமும் கூடவே
இதயத்தை கூச வைத்திருக்கும்
மில்லடிக்கு
இன்னும் கன தூரமா
இல்லை வந்து விட்டோம்
அருகில்தான்
ஏனென்றால் தூள் மணத்தில்
பலர் தும்மிக்கொண்டு போனார்கள்
சிலரது தும்மல்
வாய்க்கால் கரைகளில் பட்டு
தெருவில் எதிரொலித்தது
அந்த சத்தத்தில்
கைலாச பிள்ளை வீட்டு கடி நாயின்
தூக்கம் கலைந்துவிட்டது
கடவுளே ஓட வேண்டியதுதான்
ஊருக்குள் இருந்த ஒரே ஒரு மில்
ஊருப்பட்டவர்கள்
குத்த அரைக்க உடைக்க
வந்து போகுமிடம்
எப்போதும் அந்த மெசின் சத்தங்களே
அந்த சூழலின் சங்கீதம்
தூள் அரைக்கும் போதும்
அரிசி குத்தும் போதும்
அவற்றின்
ஆரோகணம் அவரோகணங்கள்
தியாகராஜ சுவாமிகளுக்கு பிறகு
கிளிநொச்சி திருவையாற்றின்
நித்தக் கீர்த்தனைக்கு வாய்த்தவை
பொரியரிசி உளுத்தம்மாவின் மணம்
மில்லைவிட்டு
அவ்வளவு இலேசாய் புறப்படவிடாது
பொரியரசி சாப்பிடவேண்டுமென்ற
போதையை கிளப்பிவிடும்
மில்லுக்கு பின்னணி
உமி மலைதான்
உமி கோழிகள் கொண்டாடுமிடம்
நாங்களும்தான்
இல்ல விளையாட்டுப்போட்டியில்
நீளம் உயரம் பாய்தல் கிடங்கில்
மண் கவ்வுவதற்கு பதில்
உமி கவ்வுவதையும் பார்க்கலாம்
மில்லில் இரகசியம் பேசினால் ஆகாது
உச்சஸ்தாயியில்தான் எல்லாம்
உதட்டுக்குள் முணுக்க முணுக்க
அரசி குத்தும் மெசின்
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வராது
மில் முதலாளி மேனியில்
தவிடு உமி அரிசி மா
மார்பு உரோமம் மீசை தலை
அங்கமெலாம் அலங்கரித்திருக்கும்
மில் முதலாளியென்றால்
நினைவுக்கு வருவது
அந்த தூசி படிந்த தோற்றம்தான்
அதற்குள் சகித்து இயல்பான
ஒரு மனிதர்தான் அவர்
மெசின்களின் பேரொலி தூசி
நின்றபடியும் நடந்தபடியும்
அரைக்கும்போது
இயந்திரங்களோடு சமரசம் செய்து
பொதி செய்து
அரைக்கக் குடுத்தவர்களின்
பைகளின் அடையாளங்கள் பார்த்து
மில்லில் நின்று பார்க்கும் போது
அந்த முதலாளி
வாழ்நாளில்
ஏதோ நிறைய இழந்து
அர்ப்பணிக்கிறார் என்று தோன்றும்
அவரை நம்பியிருக்கும்
குடும்பம் சொந்த பந்தங்களுக்காக
அந்த தூசிபடிந்த அவதாரம்
அவர் இறந்தும் நெடுங்காலம்
இருந்தும்
மில் முதலாளியின் உண்மையான
மாவும் உமியும் தவிடும் படாத
அந்த உருவத்தை
ஒரு போதும் பார்க்க
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை
இந்த பிறவியில்
ஒரு மனிதரை தூசிபடிந்தவராக மட்டுமே
பார்த்திருக்கிறேன் எனும்போது
ஏதோ ஒரு நெருடல்
மில்லில் இருந்தும் திரும்பும் வழி வேறு
மில்லுக்கு முன்
வாய்க்காலுக்கு குறுக்கே
ஒரே ஒருவர் மட்டுமே
போகும் மரப்பாலம்
அது உடைந்து விடுமோவென்ற பயம்
கீழே பாயும் தண்ணி
விழுந்தால் தவிடு என்னாகும்
மீன்கள் என்ன செய்யும்
சில வேளை அந்த புனைகதை முதலை
நிஜமாக உயிர்த்தால்
இப்படி பல பாலத்தைக் கடக்கு முன்
குறுக்கே நின்றாலும்
பாலத்துக்கு அப்பால் நின்ற
கொட்டங்காய் மரம்
எனக்காகவே
பத்து சிவந்த காய்களோடு காத்திருப்பதாய்
தோன்றும் போது
பாலத்தை கடந்து விடும் கால்கள்
அந்த ஐம்பது சதம் என்னவாச்சு
என்று கேட்கிறீர்களா
இந்த இனிய நினைவுகளை தந்தது
அந்த ஐம்பது சதம்தானே

No comments:
Post a Comment