Sunday, July 9, 2023

வியப்பின் மலர்களும் வேண்டும் வரங்களும்-பொன்.காந்தன்

 


புத்தகப்பையில் போதைப்பொருள்
பச்சை மட்டையோடு
பரமபிதாக்களை தேடுகிறது நிலம்
சொத்தியும் கோணலுமாயும்
எங்கே போய்முடியுமிவ்வழி
ஈழ இரட்சண்யத்தை வேறெப்படி தொடங்க
வெற்றிலையும் தொடாத
வெறும் வாழைத்தண்டுகளே
வித்துடலாய் வீழ்ந்தன
முட்டைமாவும் முறுக்கோடும் காத்திருந்தவள் பிள்ளைதான்
இப்படியென்றாலும் நாம்
எலும்பு வளையாமல் திரியக்காரணம்
கச்சான விற்ற தாயே
காவியத்தை ஈன்றெடுத்தாள்
அலையின் முதலெழுத்து அங்கயற்கன்னி
வெடிப்பதற்கு முன்
ஒரு வியப்பின் மலர் பூத்திருக்கும்
விடைபெறுதலில்
அடர்காட்டின் இருளையும்
அழகாக்கிய புன்னகை
எக்கிப்பேசியும்
இடக்கரடக்கலில் மடக்கிப்பார்த்தும்
சுட்டு விரலை நீட்டி சொற்போர் கண்டும்
சூரியன் வசப்படவில்லை
சத்தம் சந்தடியில்லாமல் மில்லர் வந்தான்
மின்னலொன்று எழுந்தடங்கியது
மிருசுவில் வரை
குலுங்கியமர்ந்தாள் நிலத்தாள்
அப்போதுதான்
வெண்புரவியில் அமர்ந்த சுகம்
விடியலில் எழுப்பியது
சாத்துவாய் கூட தீர்த்தமாகியது
காந்தரூபனுக்கு பிறகு
கடலோடும் பேசலாம் என்றது மாலைவேளை
எரிமலையில் குளித்துவிட்டு
ஈழநாதம் தலைதுவட்டிக்கொண்டு நின்றது
வாளில் முகம் பார்த்து
வந்தது வாசலுக்கு உதயனும்
சிவகுமாரன் சீற்றத்தின் வாசல்
குட்டிமணி குலத்தின் குமுறல்
சங்கர் சரித்திரத்தின் பிறப்பு
இந்த அத்திபாரங்களில்
கூவைக்கு வீடா குயிலுக்கு மாளிகையா
ஈழதேவியை பச்சை குத்திய
இதயங்கொண்டார் விழுதில் வேறேதும் முளைக்குமா
வீதி வளைந்து தடுமாறுமா
திலீபனின் வற்றிய மேனிதான்
ஈழத்தின் வானவில்
பற்றிக்கொள்க அப்பேரழகை
மாலதிதான் எம் மாகாளி
அந்த மந்திரத்தில் கரைந்துருகு
இன்றும் கொண்டலும் அவளும்
குளக்கரையும் காற்றும் உலவுதென்றால்
அன்றவர் விட்ட உயிர்
ஆழபதித்த ஆணிவேர் மூலம்
நின்றவர் சன்னிதி மணியோசையில்
சிறகை வரமாய் கேளீர்
ஊதற்காற்றிலே
யாவரும் வாழ விறைப்பது எப்படி கேள்மின்
ஓருடையோடே
ஊரது உறங்க விழிப்பதெப்படி அறிக
சேறதில் புதைந்து முள்ளினில் கிழிந்து
ஈழத்தின் அழகாய் பூப்பதை கேட்டுவாங்கும்
விளம்பரம் இன்றியே
விலாசம் முகம் மறைத்துமே
அழுதிடும் இனத்துக்கு ஆண்டவரானதை தொழுமின்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...