கொட்டித்தீர்ப்பதாய் இல்லை
குறும்புதான்
முனகிப்பிறகு இரண்டு துளி சிந்துவதும்
என்ன வருத்தமிது
சீனிகரைத்து சிறிதருந்தினால்
பிறகு சீறுமென்பார்கள்
மாரியென்றால் பொழிக
மறந்தும் பூவாளித் தெளிப்பு வேண்டாம்
உடையார்கட்டு உதடுநிரம்ப
ஊருக்குள் முத்தமிடுவது எப்போது
கதவடியில் கண்ணடித்து இரணைமடுவாள்
கண்டாவளையோடு கலவிகொள்ள
விடாய் தீர்ந்து கிடக்கும் வெலிக்கண்டல்
அட ஆரிய குளம்கூட
தேவலோக தெப்பக்குளமாகும்
ஊருக்குள் கிடக்கும் ஓட்டையெல்லாம் புகுந்து
சேட்டை விடும் கார்காலம்
செழிக்கட்டும் முன்னே
மாநகர சபைக்கு ஊடல்வரக் கூடும்
ஒப்பாரியும் வைத்து
ஓடு சனியனேயென துரத்தவும் கூடும்
நான்குநாள் விடாமல் அடித்தால்
வில்லங்கம்தான்
கால்வாயெல்லாம்
மேல்வாய் தள்ளும்
கணவாயில் காய்ச்சிய கூழ்
நகைமாடத்துக்குள் போய்த் திரும்பும்
ஆரோ கள்ளடித்துவிட்டு வரும்போது
கலக்கியடித்து
உள்ளங்காலில் பட சுட்ட அப்பம்
வெள்ளத்தில் மிதந்து வந்து எட்டிப்பார்க்கும்
ஆத்தை மறித்துகட்டிய அப்செயரை
நேற்று வந்த நினைவில் வந்து மோதி
பிறகு வீதியை பிளந்து கடந்து
விதியையையும் நொந்தும் போகும்
அணியமில்லா வள்ளமாய்
மணியத்தாரின் வீடு தோன்றும்
அதுக்காக ஒதுக்காக விலத்தி
ஓவசியரின் காட்டின்படி
மழைக்காலம் தகுமோ
மடையுடைய கொட்டவேண்டாமோ
இதுக்காகவே கவிஞனும் பேனாவும் உண்டு
ஒரு குவளை தேனீரும்
இரவினிக்க போர்வையுமுண்டு
இடைதழுவும் மின்னலும்
உடை நழுவும் முகிலும் கூட
வரவேண்டாமா வாரடித்து ஓடட்டுமே
கண்ணெட்டும் வரை கருமுகில்
காலடி முன்னே ஐந்தும்
பின்னே பத்தும் வைத்து
என்னை மழைதொடும் வரை நடந்த நடை
எப்போதோ பெய்த மழையில்
துவட்டாமல் சிந்தும் நினைவுகள்
புத்தகத்தை மடக்கி நெஞ்சில் வைத்து
தாழ்வாரங்கள் இருந்தும்
தவறவிட்ட ஆனந்தம்
கால் சேற்றில் ஓவியம் வரைந்த தூரிகை பையா
இழுத்துவாடா மழையை
இரவெல்லாம் பகலெல்லாம் பெய்யச்சொல்
கடதாசிக்கப்பலில் காலம் வருக
மல்லிகைப்பந்தலில் உரசும் இந்து சமுத்திரம்

No comments:
Post a Comment