கூடியிருந்து குழறியழுதவரை
குத்தி நெஞ்சில் இடித்தவரை
வாடிய முகத்துடன் இருந்த கிழவியை
வாசல் வரை இருந்து வருத்தப்பட்டவரை
காலடியில் கிடந்த கடுவனை
கவலை தோய்ந்த முற்றத்தை
யாரும் ஏதும்
நினைவாய் கொடுத்ததில்லை
எட்டுப்பிள்ளைகளும் இணையர்களும்
சுற்றி பேரப்பிள்ளைகளும்
கட்டிலில் கிடந்த பிரேதத்தை ஏந்தி
கொண்டு போய் கொட்டிலுக்கு பின் வளத்தி
மட்டில்லா கண் பொழிய
தம்பி வா அக்கா வா
மருமகனே நீயும் வாவென்று
ஊருப்பட்டோர் உச்சியில் உடலில்
வைத்த அரப்பும் எண்ணெய்யும்
வார்த்த நீரும்
செத்தேனா நானெனும் சிலிர்ப்பினை தந்த
அந்த உணர்ச்சியும் உறவும் கூட
யாரும் எவரும் கொடுத்ததில்லை
ஆடி அமாவாசை
சொர்க்கத்திலிருந்து அப்பு
சோறு தின்னவென இன்று
மத்தியானம் சேருமாற் போல்
மாடத்திலிருந்து பார்த்தார் ஊர்
இத்தாலி பிரான்ஸ் இலண்டன்
இங்கும் தெகிவளை வெள்ளவத்தை
எங்கும் ஒரு முறை பார்த்தார்
இறங்கினார் காகமாய் யாழ்ப்பாணம்
கைதடிப் பக்கமாய் பறந்தார்
கடைசியாய் வாழ்ந்த
முதியோர் இல்லத்து முற்றத்தில் குந்தினார்

No comments:
Post a Comment