Sunday, July 9, 2023

தடுத்தாட் கொண்ட இரவும் தமிழர் தலை நகரும்-பொன்.காந்தன்



இன்னார் என்றுரைக்காமல்
காற்றில் எழுதியதோர் மடல்
பொன்னார் மேனியன்தான் ஊகம்
தம்பல காம நாற்றின் நளினம்
கலந்திருக்க கண்டேன்
படுத்தே கிடக்கும் உரோமங்களை
எழுப்ப வல்லது எதுவாம்
கந்தளாய் குளுகுளுப்புதான்
ஆறுகளை கடந்தே வந்ததால் போலும்
ஓரங்களில் நாணல் ஒட்டியுள்ளது
முகவரி கோணமலையே
எந்நாளும் இப்படி இருப்பதில்லை
மான்கள் மனதுள்ளும் சுகம்
கோணமலை முகடிருந்து
வானக் குமரியை
வட்டமிடும் நினைப்பில் தான்
போகட்டும் விடு
அகத்திணையை
அடுத்தொரு நாள் ஆராதிக்கலாம்
கச்சான் விற்கும் கறுத்த கிழவியும்
குச்சி ஐசுடன்
கொஞ்சம் தள்ளி நிற்பானும்
செருப்பு கழற்றி போகும்
சின்ன மணி கடையும்
கற் பூரம் என்ற குரலும்
காணாமல் போய் விட்டால்
கோபுரம் இருந்தும் கோயில் அழகிருக்கா
வாயிலில்
ஒயில் கடை போட்டால் ஒப்பாது
சாயல்கள் மாற விட்டால்
சரித்திரம் வெளிறத் தொடங்கும்
இடபத்துக்கு பதில்
முதலில் எருமை வைப்பார்
எடுத்து விட்டு
கறுப்பாக
ஒரு கண்டறாவியை கொண்டு வருவர்
காண்டா மிருகம் தான்
சிவனின் வாகனமென்று
சிலபர்ஸ் எதிர் காலத்தில் எழுத படலாம்
இப்போது
வேரை பற்றி விலாசத்துக்கு
கால தேவாரம் அருளி
திரு சிற்றம் பலம் சொல்லா விட்டால்
கோணேஸ்வரருக்கும்
இப்படித்தான் ஏதோ இன்று கவலை
தக்கனின் யாகத்தோடு
தாண்டவத்தை நிறுத்த நினைத்ததுண்டு
நக்கீரரொடு
நெற்றி கண்ணையும் நிரவி
பக்தரோடு பக்தராக
சந்தைக்கும்
சைவ கோட்டலுக்கும்
எம் பெருமான் போய் வர எண்ணியதுண்டு
பின்னேர கையாய்
மண்டூர் முருகனையும்
மூத்த விநாயகரை யாழில் இருந்து
வள்ளி தெய்வ யானை
மருமக்கள் சமேதராய்
குச்ச வெளி கடற் கரையில்
குதூகலிக்க எதிர் பார்த்தார்
கங்கயை
சடையில் இருந்து பண்ணையில் இறக்கி
யாழ்பாண தண்ணி பிரச்சனையை
சோல்வ் பண்ணவும்
கோணமலையான் கொண்டிருந்தார் உளம்
ஆனால் இப்போ
நிஸ்டையில் கால் மடக்கும் இடத்தில்
ஸ்வீமிங் பூல் கட்ட திட்டமாம்
அஸ்வமேத யாக சாலைக்குள்
கப்பில்ஸ் கட்டி புரள
ஒரு கட்டில் போடவும் எண்ணமாம்
கச்சான் கிழவியை கலைத்து விட்டு
காஸ்பேர்க் அருந்த கனவாம்
சுற்றுலா துறைக்கு சுதி பண்ண
அம்மை உமையை
நைற்றியில் காண நினைக்கும்
நய வஞ்சகத்தின் பூர்வீக அழிப்பு
வேலியடியில் வில்லங்கம்
கடவுளின் காணிக்கே பிரச்சனை
கோணேஸ்வரர்
வெறும் அமுதோடும்
அர்ச்சனையோடும் இல்லை
தமிழோடும் தலைநகரோடும் தான்
நெடுகலும் நானே தானே
நீங்களும் திறக்கலாம் நெற்றிகண் கோணமலையானின்
இன்றைய நாட் குறிப்பது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...