Sunday, July 9, 2023

வசந்த காலம் -பொன்.காந்தன்



1981ம் ஆண்டு முன்னிரா நிலவில் எங்கள் கிராமத்தில் இருந்து சுமார் ஐந்து ஆறு கிலோ மீற்றர் தொலைவில் கிளிநொச்சி பட்டணத்தில் இருந்த கமலா ஸ்ரூடியோ வுக்கு எங்கள் அயலில் இருந்த சோமண்ணை ஈஸ்வரி அக்கா பிள்ளைகள் சாந்தி அக்கா வசந்தி அக்கா...வசந்தி அக்கா பின்னாளில் முள்ளி வாய்க்காலில் உயிர் முடிந்தார்.அப்போது அவர்கள் குமரிகளும் ஆகாத பருவ வயதில் இருந்தனர். இந்த பையன் அவர்களுக்கு செல்ல பிள்ளை. மற்றும் கனகசபை மங்கயர்க்கரசி அவர்களில் மகள் அன்பரசி என்ற செல்வி அக்கா இன்னொரு அயல் காரர் தொம்மாசி வீட்டில் இருந்தும் எல்லோருமாய் ஒரு பதினைந்து பேர் இருக்கலாம் அந்த இரவை இரசித்தபடி நடந்தனர். எனது ஆறாவது பிறந்தநாள் நாளுக்காக அந்த நிலா நாளை என் வீடு அயல் உறவுகள் எனக்கு பரிசளித்தன.நன்றி
பட்டணத்தின் கண்டி யாழ் சாலைக்கு ஏறு வதற்கு இடையில் ஒரு மைல் மண் பாதை. புளுதியும் பள்ளமும் மேடுமான அந்த பாதை துண்டுக்குள் அனுபவிக்க நிறைய இருந்தன. சிறிய காடு ஒரு வாய்க்கால் சம்பு புற்கள் தூக்கனாங் குருவி கூட்டு மரம் மருத மரங்கள் ஈச்சை அமேசான் காட்டின் பிள்ளை போல அந்த பாதை. பகலில் குருவிகள் குரங்குகள் மீன்கள் காணாங் கோழிகள் சம்பு உருவினால் பறக்கும் பஞ்சு குவியல்கள் இரவில் மின் மினி பூத்த மரங்கள் பாதையில் இருந்து திடீரென தண்ணிக்குள் பாயும் தவளைகள் அந்த நேரத்தில் செல்வி சாந்தி வசந்தி அக்கா போட்ட கூச்சல்கள் என அந்த சிறிய துண்டு அன்று வாய்த்த வரம்.
கார் காலம் என்றால் இந்த பாதையின் கோலமே தலை கீழாகி மழைக்கு வாய்த்த தேவதையே என்பது போல காட்டாறு செய்யும் லீலைகள் அதிகம்.அநேகமாய் எங்கள் கிராமத்தை கடப்பவர்கள் புண்ணிய நதியில் நீராடியே போக வேண்டும். மழைக்கும் அந்த பாதைக்குமான கதை பெரிது அதை வேறு உணர்ச்சியில் கலக்கலாம். என் பிறந்தநாள் அந்த இரவை பனி புகாரும் மூடி கூதல் காற்றில் மிதக்கும் மாசியில் என்பதால். சிலருக்கு பல்லு கிட்டியது.காட்டின் வாய்க்காலின் குளிர் எல்லாம் சேர்ந்து துருவத்தை நினைவூட்டும்.
பிரதான சாலையில் வாகனங்கள் ஓய்ந்திருந்தன. சில் வண்டின் ஒலிகள் நிறைந்திருந்தன. இடைகிடை யாழ்ப்பாண த்தில் இருந்து கொழும்புக்கு பொயிலை கருவாடு வெங்காயம் ஏற்றிய லொறிகள் கடந்தன. அதுவரை அக்கமார் பூசிய பொண்ட்ஸ் பவுடர் வாசம் அந்த நிலவிரவில் வேறொரு தேவ லோகத்தை சிருஸ்டிக்கி முயலுகையில் கருவாட்டு லொறி இந்திரலோகத்துக்கு சவால் விட்டு சென்றது.
கொடிகள் படர்ந்த மின் கம்பங்களில் ஆங்காங்கு கோப்பை விளக்குகள் சுற்றி பூச்சிகள்.பட்டணத்தில் இருந்த ஒன்று இரண்டு ஹோட்டல்களில் இருந்து தாமரை இலையில் சேர்ந்து எழும் கொத்து ரொட்டி வாசம். கிளிநொச்சி பழைய ஆசுபத்திரியின் மருந்து வாசம். ஏதோ ஒரு விடுதியில் யாரோ ஊசிக்கு பயந்து எழும் கெஞ்சல். ஆசுபத்திரி மேற்கு மூலையில் பற்றை களுக்கு நடுவில் மிரட்டும் சவ காம்பரா இவற்றை கடந்தால் திரேசம்மா கோயிலின் சுருபத்தில் உருகி முடியும் மெழுகு திரி. கூப்பிடு தூரத்தில் கந்தன் கோவில்.வந்து விட்டது கமலா ஸ்ரூடியோ.அன்றைய நாள் களில் எடுக்க பட்ட எல்லா புகை படங்களின் பின்பும் ஒரு பெரிய கதை உண்டு. படம் எடுக்க போவது என்பது ஒரு திருவிழா தான். அன்று குமரிகள் முழுகி கூந்தல் காற்றோடு கதை பேசும். முகங்கள் பூரித்திருக்கும்.இவாறா ன நாள்களில் பருவ வாலிபர் கண்டால் மயக்கமும் கனவும் தவனமும் தவிர்க்க முடியாது.
கமராவையும் பெரிய கண் கூசும் ஒளியையும் கண்டவுடன் என் முகம் சிணுங்கி விட்டது. அது தெரிகிறது. இன்று போல் அன்றும் இந்த.முகத்தில் புன்னகைக்கு கொஞ்சம் பஞ்சம் தான். வெளிறி போய் விட்ட இந்த படத்தின் பின் என் வெளிராத வசந்த காலம்.என் அம்மை அப்பன் குணம் சரசுவதி ஒரு நல் இரவை காட்டினீர்கள்.
.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...