Sunday, July 9, 2023

என்னுடைய மே நாள்-பொன்.காந்தன்,


நேற்று இரவு ஏதாவது முகநூலில் எழுதுவோம் என்றும் சாமம் கடந்தும் இருந்து படுத்த நடந்து யோசித்து எதுவும் வராமல் தூங்கி விட்டேன். எழும்பும் போது காலை 10ஆகி விட்டது. குளியல் அறைக்குள் நுழைந்து ஒரு அமைதியான நீரா டல் என்று நினைத்தபடி விளம்பர மாடல் போல கடந்த இரண்டு மூன்று வாரமாய் தேய்த்து தேய்ந்து போயிருந்த சவர்காரத்தை மேனியில் தடவி கொண்டிருந்த போது அந்தோ அது வழுக்கி குளியல் அறை கழிவு நீர் போகும் குழாய்க்குள் புகுந்து விட்டது. சரி போகட்டும் என்று இன்று அடுத்த புதிய சவர்க்காரம் எடுக்கும் மனம் இல்லை. கையை நுழைத்து பார்த்தேன். ஆனால் சவர்க்கார துண்டு வட துருவத்தில் இருந்தது. பிறகு சோப் போட்ட குறையுடன் ஒரு மெல்லிய வளைந்த ஏதாவது தேடி அலைந்து குறை சவர்க்காரம் கவ்வும் கருவியை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடு பட்டு ஒரு வாறு அதை உள்ளே விட்டு படுத்து கிடந்து எடுத்ததில் பெரு மூச்சு.இன்னும் குறைந்தது ஐந்து நாளைக்கு தாக்கு பிடிக்கும் என்பது என் நம்பிக்கை.
அப்போது தான் யாரோ ஒருவர் போர் காலத்தில் சொன்ன நினைவு. அண்ணன் பிரபாகரன் தனக்கு கிடைக்கும் வழங்கல் சவர்க்காரம் தேய்ந்து போனால் ஒவ்வொரு சவர்க்காரத்தின் தேய்ந்த துண்டுகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒட்டி ஒட்டி பின் அது ஒரு கட்டத்தில் முழு சோப் ஆகி விட . பிறகு அதை பல நாட்கள் பாவிப்பார் என்று.இந்த கதைகளுக்கு முன்பு எண்பதுகளில் என் தந்தையார் மாதச் சம்பளத்தில் வாங்கி வருவதில் ரெக்ஸ் சோனாவும் சன் லைற்றும் இருக்கும். அவர் அந்த சோப்புக்களின் பிரியர். சலவை தூள் வருவதற்கு முன்பு என் பள்ளி சீருடையில் சன் லைட் வாசமும் ரொபின் நீலத்தின் கோ டுகளும் பட்டும் படாமலும் இருக்கும் அம்மா நீல கலவை இடுவதில் விரலில் வித்தை வைத்திருந்தார். இல்லையென்றால் சிலர் வெள்ளை சட்டைக்கு பதிலாய் நீல சட்டை யோடு போகும் நிலை தான்.
மீண்டும் சோப்புக்கு வருகிறேன். அப்பாவுக்கு ரெக்சோனா பிடிக்கும் என்றாலும். எனக்கு சின்ன வயசில் லக்ஸ் மீது ஒரு காதல். அதற்கு காரணம் அடுத்த ஒழுங் கையில் இருந்த ரஞ்சினி குளித்து விட்டு எங்காவது போவதற்கு எங்கள் வளவுக்கு முன் தெருவை கடக்கும் போது அந்த லக்ஸ் வாசம் எங்கள் வளவு முழுக்க பரவி என் வாழ்வுக்குள்ளேயே ஒரு வருடல். காற்றில் மிதப்பது போல ஒரு ஏகாந்த இன்பம். ரஞ்சினியின் காதலன் கொடுத்து வைத்தவன் ஒரு பூவை போல மேனி முகரும் வண்டென மயங்கி இருப்பான்.ஆனால் பதினாறு எனக்கு ஆகும் போது என் தெரிவு கடையில் லக்ஸ் ஆக இருந்தது. காலை பனி புகார் கலையாத பொழுதில் தெருவில் போக ஒரு இளவரச உணர்வை லக்ஸ் தந்தது. அதன் மீதுள்ள பிரியம் காரணமாக மேனிக்கு மட்டு மல்ல ஆடைகளுக்கும் போட்டு தேய்த்தேன்.
நல்ல நினைவுண்டு ஒரு காலத்தில் சன் லைட் உறைகள் சேர்த்தால் தங்க நாணயம் என்று விளம்பரம் ஒன்று மஞ்சள் மயமாக. அந்த பைத்தியத்தில் உறை சேர்த்ததும் உண்டு ஆனால் தங்கமே நீ வாய் த்ததில்லை.இன்று குறை சவர்க்காரம் சேர்க்கிறேன் தங்க மான காலம் வந்து சேருமா.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...