Tuesday, March 8, 2022

மஞ்சத்தடியில் மசுந்துகிறான் ஒருத்தன் அந்தப்புரத்தை அளக்கிறது ஒரு கறுமம்-பொன்.காந்தன்

 

ஒருக்களித்து தூங்குகிறாள் அழகி
உருவியெடுப்பதற்கு
ஊருப்பட்ட திருடர்கள்
கட்டுடலை காந்துகிறேன் கண்ணால்
பட்டமரத்தின் பறவையாய் பாடுகிறேன்
ஒட்டிய மேனியசைத்து
ஓசை கேட்டு திரும்புகிறாள்
மிஸ் யூடா செல்லம் என்றேன்
கொட்டுக்குளிருக்கும் இருக்கும் கிளிகளாய்
இன்னமும் சொட்டும் தேன்
உதட்டில் துளிகளுண்டு
விட்டுப்போக முடியாத விரகத்தில்
வெளியான் போல் காதலனின் தவிப்பு
கட்டுக்குலைக்கப்பட்டாலும்
கண்ணின் ஓரத்தில்
ஒத்தி இழுக்கும் கணை உறங்கிறது
ஓ மை பேபி
பட்டுவஸ்திரத்தை பரதேசிகள் பறித்தன
பாயும் குடுக்கவில்லை பதிலாய்
கட்டுநாயக்காவில் கள்ளர் வந்திறங்குகிறார்
பூஞ்சல் கண்ணன்
பூரி மணத்தோடு ஒருவன்
எக்சிற் கிடையாது
எல்லாத்திருடர்களும் எம் வேலிக்குள்ளே
கள்ளக் கூட்டங்களுக்கு
காலுக்கு செங்கம்பளம்
உள்ளம் கொள்ளை கொண்டவளுக்கு
உருப்படியான துணிமணி இல்லை
எக்கிறிமென்ற் என்கிறார்கள்
எல்லாத்திருட்டுக்கும்
இலாவகமாய் ஒவ்வொரு நாமம்
கைச்சாத்து என்று
காணிக்குள் நுழைகின்றார்கள்
மஞ்சத்தடியில் மசுந்துகிறான் ஒருத்தன்
அந்தப்புரத்தை அளக்கிறது ஒரு கறுமம்
ஊஞ்சலடியிலும் ஒரு இளவு
காற்று விழ
கவட்டை விரிக்க முடியில்லை
பட்டுப்பாதை போகிறதாம் பாவாடையோரம்
அவளை விடுங்கடா அறுவாரே
அற்புதத் திருத்தேரில் திரிந்தவளுக்கு
குப்பை மேடா மஞ்சம்
பொய்கை நீராடியவளுக்கு
புத்தடிக் குழியை காட்டுகின்றார்
பட்டம் அறுந்து விழுந்த வெளியில்
கட்டை சிவலையொன்று
கட்டியவழியிலும் கனக்சன் இல்லை
குத்தகைக்கு எடுத்த கோதாரியாம்
குந்தியிருந்து விட்டு
குளிர்ந்த குளத்து தண்ணியால்
அலம்பி அடிக்கவும் குறுக்கே எவனோ
ஐம்பத்தி மூன்றுவீதம் பங்காம் அதிலும்
மாடத்தோடிருந்தவளுக்கு
ஏனிந்த நிலை
மானத்தை மட்டும் வைத்திருக்கிறாள்
மற்றெதெல்லாம்
கூறு போட்டு குதறியெடுக்கப்படுகின்றன
சாணிபோடவும் மாட்டுக்குப் பயம்
சட்டியை எவன் ஏந்துவான்
சொண்டுக்குள் தான் முணுமுணுக்கவேண்டும்
தேர்ச்சாரதி திருடனின் ஆளின்று
கால் மாட்டிலும் ஏதோ சத்தம்
காற்றாலை திட்டமாம்
சீலையை தூக்க
சிலு சிலுவென்றிருக்குமாம்
மாமரத்து காற்றை என்ன செய்ய
மடியில் அவளை கிடத்த வருடும்
தென்றலை எங்கு அனுப்ப
ஆரது புதுசாய் வளவுள்
குசினுக்குள்ளும் குறுங்கால பங்களிப்பாம்
மானிய அடிப்படையில்
மசாலாப் பொடியாம்
தூளாலை அடிப்பேன் துலைவாரே
தும்புக்கட்டையுமுண்டு
ஆளில்லை அவனென்று
எத்தனை ஆட்டம் எருமைகளே
ஒரு நாள் வரும்
ஒருக்களித்துக்கு கிடக்கும் அழகிக்கு
மறுபடியும் திரும்பும் ஆனந்தம்
திரும்பும் பக்கமெல்லாம் திருவெழிலாவாள்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...