ஆழியவளை மீன்காரி
தாளையடியிருந்து வருவாள் சந்தை
காலை பத்து மணிக்கெல்லாம்
களை கட்டும் அவளால்
கூடையை இறக்கினால் குவியும் சனம்
கொண்டையிலும் செதிலிருக்கும்
கூறு விலை சொல்லுவாள்
குறையாதோ என்றும் குரல் கேட்கும்
ஒட்டியை தூக்கிவைத்து
ஊற வைப்பாள் வாயை
சொட்டும் அவள் வார்த்தையில்
சுறாவிலே காதல் வரும்
சூவாப் பாரைக்கும் மனமலையும்
வெட்டிப் பொரித்தாலென்ன
வீட்டுக் குசினி தெரியும்
நட்டமில்லை வாங்கினால்
நாளைக்கும் அவிக்கலாம்
நாலு மாதிரி கதையிருக்கும்
நாயும் காகங்களும் நின்று
தேவியின் திருக்கரம்
திருக்கையை தாராதோவென்று பார்க்கும்
கூவி விற்குமவள் சத்தம்
காலச் சங்கீதம் தான் ஒரு கால்
நாறிப் போகாத மீன்
நாளும் தந்தவள் தேவதைதான்
செட்டுக்காட்டினால் யாரும்
செதிலை கிளப்பி
தொட்டுப்பாரென்று சொல்வாள்
மத்தியானம் கறியில்
சொர்க்கத்தை சுவைக்க வைத்தாள்
மறுநாள் உறியிலும்
கெட்டுப்போகாத ஓர் நாளிருந்தது
பக்கத்தில் மாட்டுத்தாள் பைக்கும்
படியளந்தாள் அவள்
நெட்டை மீனின் வால்
நீண்டு வெளியில் தொங்க
எட்டு வீட்டு நாயும் பூனையும்
இழுப்பட்டு திரிய
பத்துப்பேர் விருந்துக்கு
பாரையோடு நடந்த தெருவின்
அழகான நாளின் ஆகர்சியவளே
விற்றபடி அவள்
விட்டு மார்புக்குள் எடுக்கும்
மிச்சக் காசுகள் தான்
சட்டைப்பையில் யாவருக்கும்
சமத்துவம் படிப்பித்தது
பக்கப்பாட்டுக்கு சட்டியில்
பாலும் உப்பு தூள் புளி வெங்காயமும்
தட்டிப் போட்ட மிளகும்
தாழிச்சதுகளும் சுதி மீட்ட
பிட்டுச்சோத்தோடு
பேரின்பம் தந்த குழம்பில்
எட்டோ பத்துநாள்
இறுகி விறைத்து மரத்து
கட்டையில் செதில் நீக்க
கத்திகள் ஆகாதென்று
கண்டக் கோடாரியெடுக்க வைத்த
கொத்தி பிளந்துண்ணும்
குளிர்சாதனப்பெட்டி ஒட்டி
தொற்றிக் கொண்டதடி மீனாள்
துரதிஸ்டம் தான் இந்நாள்

No comments:
Post a Comment