Tuesday, March 8, 2022

இரவுக்கொரு தொடக்கம்-பொன்.காந்தன்

 

பச்சலர் பார்டியும்
அங்கேதான் நடந்தது
பள்ளித் தேர்வு முடிவு வந்தபோதும்
அங்கே போவதற்கே
காசும் அளவாயிருந்தது
முன்னிரவைத் சந்திக்கும்
நல்ல முழுவியளமும் அதுவாயனது
வெங்காயத் துண்டும் வடையும்
எங்கேயோ
மிதக்க வைத்தது இரவொன்றில்
இங்கே தான்
அவன் எங்கேயோ நிற்பான்
நகரத்தின் முடிவுவரை தேடினால்
சுதி ஏற்றிக்கொண்டிருப்பான் சுண்டல்காரன்
வெந்து கொண்டிருப்பதை
விழியால் உண்ணும் கூட்டத்தில்
மந்திரிப்பதுபோல்
மிளகாய்ப்பொடியும் தூவி
மாங்காயை மத்தளம்அடிக்க விட்டு
ஏங்க வைக்கும் இரவின் சுவையை
எழுதி விடுவான் மனதில்
வாங்காதவர் இருக்கமுடியாது
அந்த இறால் வடையை
எங்கேயும் இறால் இருக்கலாம்
அங்கே இருப்பதிலே அற்புதமிருந்தது
எங்கேயும் நான்குபேர் சேரலாம்
அங்கே கூடுவதில் அலாதியிருந்தது
போய்வரும் போது
வாங்கி வரச்சொல்வதில்
இதுவரை இருந்தவைக்குள்
இடையில் புகுந்த இன்பசாகசன்
கொடுப்புக்குள் வடையோடு
மடிப்புக் குலையாமல் மனேச்சர்
இடுப்புக்குள் கைகுடுத்து
இரும்புச் சட்டிக்குள் விழுவார்போல
என்ஜினியர் ஒருத்தர்
பொரியட்டுமென்று பொறுத்திருக்கும்
வாத்தியாரும் வாச்சரும்
வெங்காயத்துண்டு இரண்டு
இன்னும் கூடக் கெஞ்சும் டாக்குத்தர்
தின்பதற்கு வாயில் வைத்து
ஒன்றரை கடித்து
இரண்டு மணித்தியாலமாய்
ஏதோ சிலாகிக்கும் எழுத்தாளர்கள்
மாசி வடை மயக்கத்தில்
காசு கொடுக்காமல்
கனதூரம் போய்
ஓடுப்பட்டு திரும்பும் ஒன்றிரண்டு
இங்கும் விடாமல்
கம்பசு கலாசாலை இளவட்டம்
கடன் கூட வைப்பதுண்டு
சுண்டல்காரனுக்கு யாரடிமையில்லை
மங்கும் அந்தி வேளை
மலரும் இரவின் முகத்தின்
கண்படும் முகவரியந்த வண்டியும்தான்
நின்றபடி உண்பதாய்
நினைப்பே வருவதில்லை
கண்டுவிடுவார் யாரென்றும்
கரவும் இருப்பதில்லை
இன்புறும் அப்பொழுதில்
இவ்வுலகே தெரிவதில்லை
ஏழையாயிருந்தாலும்
இந் நகரத்தின் இன்பம்தரும்
இரவுவெளிச்சம் வடை வண்டில்
இந்திரலோகமென்றாலும்
இரவுக்கொரு வடை வண்டில்
இல்லையென்றால்
நரகத்தின் சாயல்தான்
நம் தெருவோ சொர்க்கம்தான்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...