தேர்வு எழுதிக் காத்திருப்பது
ஒரு தேவசுகமென்று சொல்லலாமா
இந்திரலோகத்தில் தொங்கும்
இளக்கயிற்றில் வாழ்வது போலாமே
பதிலெழுதியது சரியானாலும்
பசியெடுக்காத ஒரு வருத்தம் இருக்கும்
தாளொன்றை
தலை கீழாய்க் கட்டிவிட்டதாய்
சந்தேகமொன்று ஆட்டிவைக்கும்
இரண்டு புல்டோசர்கள்
இதயத்துக்குள் உருண்டுகொண்டிருக்கும்
எது பிழை எது சரியென்று
இன்னொரு மாறாட்டமும் பீடித்துலுப்பும்
எவர் சந்திக்கவில்லை
ஒரு தேர்வையும் முடிவையும்
எதுவானாலும்
காலத்தின் கைபிடித்து
எவரும் எழமுடியும்
எதிர்காலம் ஆயிரம் கதவுகளோடு
ஒன்று மூடும்
இன்னொன்று திறக்கும்
விழும்போது கிடைப்பது அடிகளல்ல
அவை படிகள்
தோல்விகள் சில கேள்விகள் தரும்
சரியாக பதிலெழுதினால்
வரலாற்றிலும் அனுமதி கிடைக்கலாம்
கடைசி பெஞ் காரர்கள்
முதற்பரிசு பெறுகின்றவர்களுக்கு
முன்னுதாரணமாயும் மாறலாம்
தோற்கலாம் துவண்டுவிட கூடாது
கலசங்களாக்க நினைக்கும் காலத்துக்கு
அது தான் பிடிக்காத ஒன்று
ஊருக்குள் இப்போது தேர்வொன்றின்
தேறுதல் வந்துள்ள காலம்
இனிப்பும் கசப்புமாயிருக்கும்
வாழ்க்கை ஓட்டத்தில் இதுவுமொன்று
இடறி விழுதலும் சகஜம்
முழுங்கால் தழும்புண்டோ
கவனியுங்கள்
முதற்தேர்வு அங்குதான் நடந்தது
உடும்பு பிடித்தெழும்பி
நடக்க முயல்கையில்
நாலு இடத்தில் விழுந்தவை
எழுதலுக்கான முதலாது கற்கை
முற்றத்திலேயே முடிந்துவிட்டது
இதுவெல்லாம் துரும்பு
உள்ளத்தில் இருக்கிறது
ஈயம் இரும்பு நம்பு
ஆனையிறவில் ஆகாய கடல் வெளிச்சமர்
ஓலைகட்டி
ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள்
பள்ளிகள்
இப்படி தான் மூடிக்கிடந்தன பலமாதம்
முட்டைமா சேகரிப்பும்
பொம்மர் ஒரு பக்கம்
கொள்ளிவால் பிசாசாய் இரவுகள்
காயம்பட்ட மேனிகளுக்கு
கட்டுப்போட்டு
ஊருக்குள் கிடத்தியிருந்தனர்
நாளைய சந்ததிகளுக்காக
நாலிளம் இரத்தமும் உயிரும் கசிந்துகொண்டிருந்தது
அக்காலத்திலும்
ஒரு கபொத தேர்வு வேளை
நெருங்கி வந்துவிட்டது
நடக்காது பரீட்சையென்று
படிக்காதும் இருந்தனர் பலர்
நடக்குமென்ற நம்பிக்கையில்
புத்தகமும் கையுமாய்
புண்ணுக்கு மருந்துகட்டுமிடத்தில்
ஒத்தாசை புரிந்தனர் சிலர்
தேடிக்கொண்டிருந்தது
வை பன்னிரண்டு சகடை
ஓடிப்போய் பங்கருக்குள் ஒளிந்தனர்
முடிவில்
சுட்டெண்ணும் நேரசூசியும்
கைக்கெட்டியபோது
அந்தக்கெட்டிக்காரர்கள்
புத்தகத்தோடு
தவமிருந்தினர் சில வாரங்கள்
குப்பி விளக்கை காற்றணைத்தது
வித்துடல்களும் வந்து கொண்டிருந்தன
பல்லைக்கடித்தபடி
பாவம் பிள்ளைகளென
முன்னமே ஊட்டியிருந்தனர் ஆசிரியர்கள்
கொஞ்சமே தஞ்சமாயிருந்தது
நாலு நளவெண்பாவோடும்
தேற்றங்கள் சிலதோடும்
தேவாரங்கள் ஒன்றிரண்டோடும்
இங்கிலீசில் ஏதோ ஒன்றிரண்டு
அலுமினியும் செம்பு ஆவர்த்தனமும்
கூடவே கூட்டிக்கொண்டு
சிலபர்ஸ் முடியாத
சிக்கலான போர்ப்பொழுதில்
தேர்வு மண்டபத்தில்
திகிலோடு போயமர்ந்தனர்
நம்பிக்கையால் எழுதினர்
மார்கழிக்கு பிறகு வந்த முடிவில்
மயிரிழையிலும் பலர் வென்றனர்
ஒரு முறை தோற்றவர்
மறுபடியும் எழுதினர்
அவர்களில் சிலரே
ஒரு வழியும் தெரியாமல் பூட்டிக்கிடந்த
புளுதி வன்னியில்
அதிவிசேடமாய் தேறி வென்றனர்
No comments:
Post a Comment