ஏனோ தெரியவில்லை
இரவு கனவில்
பேனா வந்து விட்டது
இதென்ன புதிசாயிருக்கு
ஊர்வசிகள் உலவும் வேளை
எப்படி இது உள்ளே வந்தது
வீணாப் போனவனே என்றே
என்னை விழித்தது
பெரிதாய் நின்றது பேனா
பூஞ்சல் துடைத்து நோக்கினேன்
நீல கூந்தலுடன்
நெடுத்த ரெனோல்ட்
என் கைபேசியை அது
கள்ளப் பெண்டாட்டியோ என்றது
ஐபாட்டை கண்டு
அந்தப்புரம் தான் போலென்றது
கணனியை கண்டு
கடவுளே கருவாயா
போதாதா உனக்கு ஒன்றென்று
பொரிந்து தள்ளியது
கைகழுவி விட்டு கனகாலம்தான்
லவ்லெற்றர் எழுதும் போது
மைகூட கக்காமல் மசிந்தது
பொய்கள் நூறெழுதுகையில்
மெய் கூசாமல் குமிழ் சிரித்தது
வேசமிட மனம் ஒப்பவில்லை
மானே என்றிழுத்து
மடியில் இருத்தி வருடிக்கொடுத்தேன்
எதையும் மறக்கவில்லை
கண்ணே ரெனோல்ட்டென்று
கசிந்துருகினேன்
மெல்ல அந்த வெண்மேனியை
கண்மணியேயென கால்வரை
எழுதாத புதுச் சொல்லால் இளகினேன்
மன்னித்துக் கொள்
மடலெழுதக் கூட தேடுவதில்லைதான்
ஈமெயிலில்தானே
ஈமக்கிரியை வரை எல்லாமின்று
பிங்கரை வைக்க
பேசாமல் எல்லாம் திறக்கிறது
பிறகெதற்கு பேனா
காணாமல் ஆக்கியது குற்றம்தான்
கைநாட்டை தவிர
வையென்றால்
வடகீழ் மூலைக்கிழுத்து
வல்லைபோய் சில்லாலை சுளிச்சு
முல்லைத்தீவு ஓடி
முறுக்கியிடும் சிக்னேச்சரோடு
என்னென்றாலும் இழுபட்டதானே
இந்த பேனாக் கூட்டம்
கள்ளச் சைனுக்கும் கூட
கவலைபட்டு விட்டு விட்டெழுதி
விதியையும் நொந்ததுதானே
பாக்கரொன்று
கிளாக்கரிடமிருந்தது
தூக்கலாமென்று எத்தனை திட்டம்
பவுன்ரைனொன்றுக்கு
பத்துப் பேர் சுத்தியது நினைவு
பால்பாய்ண்ட் இல்லாமல்
பத்தியம் ஆனதா இல்லை
கவர்ச்சிக்கு மட்டுமென்ன குறைச்சல்
ஒரு சொட்டுமை வரை
உள்ளே காட்டுவதிலும் உச்சம்தான்
பின்னால் கழற்றவும் பேசாமலிருந்தது
உறுப்பெழுத்தா ஓம்தான்
கிறுக்கலா அதற்கும் சம்மதம்
வெற்றிடம் நிரப்பவா
வேண்டாமென்று நின்றதில்லை
பத்து புள்ளி கட்டுரைக்கு
செத்து செத்து எழுதியதன்றோ
சுத்திவளைத்து ஏன் கதைப்பான்
மல்லிகாவின் கையிலிருக்கும்போது
மணிமணியாய் எழுதும்
வஞ்சகம்தான்
நான் எழுதும்போது மட்டும்
கோட்டைவிட்டிறங்கி
கோப்பாய் பக்கமிழுக்கும்
என்ன இருந்தாலும்
பகுதி இரண்டு பரீட்சையில்
பரம்பொருளாய் பக்கத்துணைதான்
பல அனுபவம் அதற்கு
மழையென்றால் மலையும்
கதலியென்றால்
காதலியுமெழுதிய
வித்தகரோடும் விழுந்து சிரித்தது
களத்திலிருந்தும் கடிதம் எழுத
காவலர்களோடு கூட இருந்தது
நிலத்தின் கதையை
நிமிர்ந்து புனைய
சுரந்து கிடந்தது சுதந்திர மை
எழுத்து எழுத்து
எல்லாம் எழுத்திலேயே இருந்தது
இரவில் கவிதை வர
எழும்பி எடுத்த ஏவுகணையது
கரும்பு வில்லின்
கணைகளும் அது தான்
இறுதிக்கடிதம் எத்தனை வரைந்தது
இனிமையும் நிறைய
இதயம் கனக்கும் ஈரமையுமதிகம்
விரும்பி முதலில் வாங்கியது
நான் ஒரு றெனோல்ட்
நீங்கள்....
No comments:
Post a Comment