போற வழி பயணத்தில்
புதினங்கள் பல இருக்கும்
நாறவில்லை நல்ல கதை
நம் ஊரில் பலவுண்டு
ஆனையிறவு எட்டும்போது
அள்ளிவரும் உப்பு மணம்
காறியெல்லாம் உமிழவில்லை
கற்பூரம் போல அது
ஆசைப்பிள்ளை ஏத்தம்வரை
அடி மனசில் குடியிருக்கும்
சூசைப்பிள்ளை கடைச்சொதிக்கும்
சோக்கான சுவையும் தரும்
வேர்க்காமல் ஓரத்தால்
விழுகின்ற காற்றுக்கு
தூங்காமல் விடலாமோ
துலைவார்கள் விடமாட்டார்
ஐம்பத்தெட்டில் மந்திகையில்
அதிகாலை இரண்டுக்கு
செல்லம்மா வலியெடுத்து
சீக்கிரமாய் பெற்றெடுத்து
கந்தப்புச் சாத்திரியார்
கணக்குகள் பல பார்த்து
வந்திறங்கச் சனி ராகு
வரமுடியா வெள்ளிதிசை
குந்தியிருந்தது குறித்து
சர்ப்பதோடு சந்திரனும்
அசுரகணம் ஆண் குதிரை
வம்புக்குட்டி இதுவென்று
வாயுரைத்த கதையெல்லாம்
சண்டித்தனத்தோடு மறித்து
சந்தேகத்துடன் தடவி
வண்டில் எருவையும்
வைக்கோலையும் கிளறி
கிண்டிப் புலி பார்த்த
கிறுக்கருக்கும் சொல்லி
அன்றைக்கு ஓர் நாள்
ஆனையிறவு பயணம்
இயக்கச்சி பளை ஓரம்
எக்கசக்கம் கிடுகு மலை
வட்டுக்குள் பழுத்தும் ஓலை
வாழ்வினை முடிக்க தவமாம்
செட்டினில் விழுந்தும் ஓலை
சீக்கிரம் கிடுகும் ஆகும்
கட்டுக்கள் ஏற்றிப் போக
காத்திருக்கும் வண்டில் நூறு
பொத்தலின்ற முகடு வரை
பூரணமாய் கூரை வேய
உத்தரவாதமாம் நூறு
உலகத்தர பளைமார்க் கிடுகு
அத்திசை கடக்கும் போது
ஆயிரமாய் கிடுகு ஊறும்
முத்து லட்சுமி பின்னியிருக்க
முருகேசு இரண்டாக்கி
சின்னமணி அருகில் வைப்பார்
சீவரத்தினம் வீடு முன்னே
வாருமென நூறு மட்டை
வண்டிலேற முந்தி நிற்கும்
பளை ஓலை நல்ல நீளம்
ஒரு கிடுகு போதுமந்த
ஒன்றுமில்லா கிணத்தடிக்கு
உரிஞ்சானாய் நின்றவேலி
உடுப்பு போட்டு அழகாக்க
தெரிஞ்சாக்கள் கூடயெட்டி
தேக்கெனவே எழுந்தாலும்
குனிஞ்சாலும் காணாமல்
குமரிக்கு அறுக்கை பண்ண
பெரும்பாலும் அனுசரணை
பேருதவி பளைக் கிடுகு
அயல் வீட்டு பூனைரண்டு
அடுத்தடுத்து கருவாட்டை
களவெடுத்த கரணத்தால்
வழிகாண வேண்டுமென
வரம் கேட்டு பளை நோக்கி
வடிவேலு ஓடிப் போய்
அநியாயப் பூனைக்கு
அடைப்புகள் போட்டிடவே
அருள் கூர்ந்த கடவுள்கூட
பளைக்கிடுகு அவதாரம்
மதில்மாடி கொங்கிறீற்று
மலைபோல தகரங்களும்
புதிதாக கூரைவண்ணம்
புல்லரிப்பு ஆனாலும்
பளையாரின் பெருமையதோ
அடிவாங்கி தலையின்றி
அறுவாரால் இடையோடு
வெடிவாங்கி விழுந்தாலும்
உரமான வாழ்வொன்றின்
உயிர்ப்பாக தோன்றுகின்ற
உயர்தெங்கு கதையிலுண்டு
போற வழி பயணத்தில்
புதினங்கள் பல இருக்கும்
நாறவில்லை நல்ல கதை
நம் ஊரில் பலவுண்டுl
No comments:
Post a Comment