சுவர்களில் தாத்தாவின் படங்களைப்போல இப்பொழுது கொரானா மாஸ்க்கும் வீடுகளில் ஏதோ ஒரு இடத்தில் நிரந்தரமாகிவிட்டது.ஏதோ சந்தர்ப்பத்தில் இப்படி ஏதோ ஒன்று எங்கள் விருப்பு வெறுப்புக்களை கேட்காமலே எங்களோடு ஒட்டிக்கொள்கின்றது.சுமந்து கொண்டிருக்கின்றோம்.கொரானாக் கவசம் தொற்றிக்கொண்டு ஓரிரு ஆண்டுகள்தான் ஆகிறது.ஆனால் இப்போதும் படுக்கை அறையில் எங்கோ மூலையில் ஒரு நுளம்புத் திரிப்பெட்டியும் காலை திருநீறுபோல கிடக்கும் அதன் சாம்பலும் என காட்சிகள் தொடங்கி பல தசாப்தங்கள் பல ஆகிவிட்டன.நுளம்புத்திரியை எடுத்து அதை நிற்கவைத்து கொழுத்துகின்ற சிரமங்கள் போய் இப்போது தொலைபேசி சாச்சரை கழற்றி விட்டு இன்னொன்றை கொழுவிட்டால் நுளம்புச்சுருள் செய்யும் வேலையை அது செய்கின்றது.அது இருந்த உறையை எடுத்துப்பார்த்தால் இதமான தூக்கம் என்றிருக்கின்றது.உண்மையில் இதமான தூக்கம் தொலைந்து பல ஆண்டுகள் நூறு ஆண்டுகள் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.
அநேகமாக எல்லாவீடுகளிலும் இன்னொரு புதினமும் உண்டு மாலைப்பொழுதானால் விம்பிள்டன் டென்னிஸ் வீரவீராங்கனைகள் போல மாமியோ மருமகளோ அப்பாவோ சித்தப்பாவோ நிற்பார்கள்.நுளம்பும் அவர்களை ஆரம்பத்தில் கையில் வைத்திருக்கும் வலை பின்னிய மட்டையை பார்த்து கிரான்ட்ஸ்லாம் வெல்லப்போகிறார்கள் என்று நினைத்தது. போகபோகத்தான் புரிந்தது அது தங்களை கொல்ல மனிதர்கள் கடைசியாய் கண்டு பிடித்த நவீன ஆயுதம் என்று.இந்தக்கதை மலேரியாவை பற்றியது ஏனெனில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான மனிதகுலத்துன்பத்துக்கு மருத்துவ உலகம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக போராடி பல பத்து ஆண்டுகள் பரிசோதனை களத்தில் பயணத்து முடிவாக நேற்று மலேரியாவுக்கு எதிரான வெற்றிகரமான தடுப்பூசியை உலக மக்களுக்கு அங்கீகரித்து வரலாற்று தருணம் என்று சொல்லியிருக்கின்றது.இதுவரை பல இலட்சம் பேரை கொன்று தின்றுவிட்ட மலேரியா வலியில் இருந்து உலக சனங்களுக்கு மொஸ்க்குயிரிக்ஸ் ஊசியினால் விடிவு என்று நம்புவோமாக.
மலேரியாவுக்கும் நுளம்புக்கும் நமக்கும் பூர்வ ஜென்ம பந்தம்போல துரதிஸ்டவசமாக எங்களுக்கும் பிணைப்புண்டு.மலேரியா பீடித்த மீண்டவர்கள் நான் உட்பட உங்களில் ஏராளம்பேர்.கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீடுகளை சுற்றி காடுகளும் பற்றைகளும் இருந்தன.இந்த கட்டிடக்காடுகள் இல்லை.குடிசைகளுக்குள் வாழ்ந்தோம்.வீட்டு முற்றம் அநேகமாய் நிறைந்த பூமரங்களுக்கு மத்தியில் இருந்தது.அதற்கு அப்பால் கோரைப்புற்களும் கஞ்சாங்கோரைகளும் நாயுருவி தொட்டாச்சிணுங்கி கீழ்க்காய் நெல்லி இப்படி நினைவில் பெயர்கள் மறந்துபோன ஏராளம் செடிகொடிகள் நின்றன.செவ்வந்திகள் விதைகொட்டினால் நூறாய் அவதாரமெடுக்கும்.மணிவாழை ஒன்று நட்டால் போதும் அது ஊரை சுற்றி வளைக்கக்கூடியது.சீனியாசும் அப்படித்தான் செவ்வரத்தை அகன்று பெருக்கும்.மல்லிகை கொடி விட்டுத் தாவி அடுத்தவரோடு உரசிக்கொண்டிருக்கொண்டிருக்கும் முற்றம் இப்படித்தான் இருக்கும்.மாலை மங்கும் வேளையில் இந்த அழகிய முற்றத்தில் தாக்குதல்கள் தொடங்கும்.அநேகமாக கெரில்லாக்கள் அந்தப்பூக்கன்றுகளுக்குள் மறைந்திருந்து வந்துதான் தாக்குதலை நடத்தினார்கள்.யார் அந்த தாக்குதலாளிகள்.நுளம்புகள்தான்.மலேரியா டெங்கு போன்ற நோய்காவிகள் என்பதால் நுளம்பு மனிதனுக்கு எதிரிகளாகவிட்டன.ஆனால் உற்றுக்கவனித்தால் உலகத்தில் ஒவ்வொரு படைப்புக்கும் வாழ்வில் தங்களுக்கு முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ள ஏதோ ஒரு பலம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.சிறிய நுளம்புக்கு அதன் கூரிய ஆயுதமாய் இருக்கும் அலகுதான் வரம்.தன் வரத்தை அது பயன்படுத்துகின்றது.அநேகமாக எல்லோருடைய கைகளும் நுளம்புகளை பதம் பார்த்தவைகள்தான்.சிலர் அடிக்கும் போது கொடிய தூசணங்களும் சேர்த்துக்கொள்வார்கள் காரணம் கடி தந்த வலிதான்.சிலர் தங்கள் கன்னத்தில் இருக்கும் நுளம்புக்கு குறிவைத்து தாக்குதலை தொடுக்கும்போது நுளம்பு தப்பிவிடுவதும் உண்டு அந்த வேளையில் ஐந்து விரல் தழும்புகளை நாமே நமக்கு வைப்பதுமுண்டு.ஒமக்குச்சி தொடக்கும் குண்டுகள் வரை ஒருவரையும் விட்டுவைப்பதில்லை நுளம்புகள்.
நுளம்புகள் மட்டும் இரத்தத்தை உறிஞ்சு விட்டு தூங்கிடுவதில்லை.அவை தங்களின் மாலை விருந்து பற்றி சிலாகித்து பேசுவதுமுண்டு.ஒவ்வொருவது இரத்தத்தின் ருசியை பொறுத்த குடிகாரப்பயல் என்றும் என்னதான் இவன் சாப்பிடுவானோ என்று கேள்வி எழுப்பியும் கலப்படக்காரன் என்றும் அவையும் ஒவ்வொருவருக்கும் சான்றிதழ்களை வழங்குகின்றன.அதனால் நுளம்புகளிடமாவது நல்ல பெயரெடுக்க முயலவேண்டியிருக்கின்றது.நிறைய உறிஞ்சிவிட்டது பெண் நுளம்பாய்த்தான் இருக்குமென்று பெண்கள் மீதுள்ள கடுப்பை நுளம்பின் மீது தீர்ப்பாரும் உள்ளனர்.வன்னி மண்ணை பொறுத்தவரை எப்படி கெரில்லாக்களுக்கு மணலாறு வசதியாய் இருந்ததோ நுளம்புகளுக்கும் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏராளம் மறைவிடங்கள் இருந்தன.தென்னை மட்டைகள் தேங்காய் கோம்பைகள் சிரட்டைகள் கிணத்தடி வாய்க்கால்கள் மணிவாழைத்தோட்டம் வைக்கல் பட்டடை அடிவளவு என்று நுளம்புகள் பாசறை அமைத்தும் குடும்பம் நடத்தி வம்சம் பெருக்கவும் வசதிகள் அதிகம்.இதனால் அடிக்கடி வன்னி வாழ் பெருமக்கள் தங்கள் வீடுகளில் ஒப்பபேரேசன் செம்பரத்தை ஒப்பரேசன் குறோட்டன் என்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியிருந்தது.இதனால் நீண் கூந்தலோடு இருந்து மல்லிகை கிப்பியாகவும் தாடியும் மீசையுமாய் இருந்த குறோட்டன் முழுச்சவரம் செய்தும் காணவேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது.ஆனால் கஞ்சாங்கோரைக்கும் வேப்பம் குழைக்கும் கரிச்சட்டிக்கும் ஒரு காலப்பெறுமதி இருந்தது.மாலையானால் ஒரு பக்கத்தில் வேப்புகளின் கிளைகளை வளைப்பதும் கஞ்சாங்கோரை தேடி வளவுக்குள் திரிவதும் வேப்பங்கொட்டை பொறுக்கி பேணிக்குள் நிரப்பி வைத்திருப்பதும் வழமையாக இருந்தது.நுளம்புகளில் இருந்து தப்பிக்க நம்மவர்கள் கண்ட இயற்கை வழி வக்சின் அதுதான்.இடைக்கிடை ஆபத்பாந்தவர்கள்போல மலத்தியோன் விசிறும் மலேரியா ஒழிப்பு பிரிவினர் தோன்றினார்கள்.ஓவசியர் காலாட்படை தளபதி போல முன்னே வந்து போனார்.கூரையில் இருந்து கூடவே கரப்பான்களும் கட்டெறும்புகளும் விழுந்தன.பிறகு கொஞ்ச நாள் நுளம்புகள் இல்லாத தூக்கம்.பிறகு அந்த மருந்துக்கும் ஈடுகொடுக்கும் அவதாரத்தோடு நுளம்புகளின் அடுத்த சந்ததி பிறந்தது.கடி தொடங்கியது.
இன்றைக்கு கனகாம்பரம் சூடிச்செல்லும் கூந்தல்களை காண்பதரிது அதனால் கஞ்சாங்கோரையும் அதன் வாசனையும் இந்த இளைய தலைமுறையில் எத்தனை பேருக்கும் தெரியும் என்ற கேள்வியுமுண்டு.
இந்த படலத்தில் நாங்கள் வசமாக நுளம்புகளின் சுற்றி வளைப்புக்குள் சிக்கியது இடப்பெயர்வுகளின்போதுதான்.அக்கராயன் வன்னேரி ஆனைவிழுந்தான் மல்லாவி மாங்குளம் தெருவழிகளில் வன்னியில் காட்டோரங்களில் நுளம்புப்படையணிகள் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டன.யூஎன்சிஆர் தந்த வலைகளுக்குள் புகுந்து தப்ப முயன்றபோதும் காலை மாலையில் காட்டுப்பற்றைகளுக்குள் மிரண்டா போத்தலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு போய் மறைவாய் குந்திய வேளைகளில் கடிக்கக்கூடாத இடங்களிலெல்லாம் ஈட்டிகளை இறக்கி எல்லாம் முடித்து எழும்புவதற்குள் எண்பது நூறு இடங்களில் கண் மூடி முழிப்பதற்கு இடையில் தாக்குதலை முடித்துவிடும் நுளம்புகள்.அக்கராய்ன் மல்லாவி வெளிநோயாளர் பிரிவு நிரம்ப வழிந்தது.எல்லோரும் ஒரு போர்வையை போர்த்தபடி நின்றிருந்தோம் வைத்தியர் சோதிக்கவே தேவையில்லை அனைவருக்கும் மலேரியா சீசனது.சில சுப்பையரிடமும் தமிழ் வைத்தியர் சித்திராவிடமும் ஜீவாவிடமும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு சங்கரிடமும் தாமோதரப்பிள்ளையிடமும் ஓடினர்கள்.பலர் குளோரோ குயினை போட்டுவிட்டு அரைக்கண் தூக்கத்தில் யாரோ தன்னை அழைத்து வர வந்திருப்பதாய் புலம்பினார்கள்.சிலர் வெயிலில் நிற்க சுகமாக இருக்கிறது என்றார்கள்.சிலர் வேப்பம் பட்டையை அவித்து மூன்று நேரமும் தேத்தண்ணி போல குடித்துவிட்டு வாயை தேங்காய் விழுந்து நெளிந்த பானை போல் வைத்துக்கொண்டு நின்றார்கள்.
கடைசியில் என்ன நடந்தது.நுளம்புகளுக்கு ஒரு பெரிய கூட்டமொன்று அக்கராயன் குளத்துக்கு பக்கத்தில் நடந்தது.தாங்கள் தோல்வியடைந்துவிட்டதாகவும் அதற்கு காரணங்களையும் தேடின.முடிவான நுளம்புகளின் அறிக்கையில் தாம் பல்வேறு உத்திகளை வகுத்து தாக்குதல்களை தொடுத்தபோதும் மலேரியா ஏவுகணையை அவர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள்.அதற்கு காரணம் முதலாவது அவர்கள் தமிழர்கள் இரண்டாவது பாணும் பருப்பும் சீனி இல்லாத தேத்தண்ணியும் சிறுவயதில் சாப்பிட்டு உளுத்தங்களியும் ஒடியல் பிட்டும் என்று எழுதப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment