Tuesday, March 8, 2022

அணிலார் குறிப்பு-பொன்.காந்தன்

 

செம்பரத்தை மறைவினிலே
செக்கல் நிற கடுவன் பூனை
நக்குவதும் பார்ப்பதுமாய்
நல்ல படி விருந்தொன்று
இப்பொழுது கிடைக்குமென்று
இருந்தபடி கற்பனையில்
அத் தருணம் மாமரத்தில்
அணிலொன்று உலவிவந்து
கொப்பினிலே கொந்தலினை
குறுக்கா கிடந்து கவ்வி
விற்பனைக்கு போகாதொரு
விளாட்டும்தான் ருசியென்று
பக்குவமாய் ஒரு புறத்தில்
பகலுணவாய் அருந்துகையில்
எப்படியோ அடி மரத்தில்
இறங்கிவர பாய்வொமென
எதிர்பார்ப்பில் களித்திருக்க
அக்கிளையில் ஒரு பெட்டை
அணிலொன்று வந்துசேர்ந்து
ஆணருகில் ஏதோசொல்ல
கொப்பினிலே மேல்சென்று
குறிபார்க்கும் பூனையாரை
வைத்த கண் வாங்காமல்
வடிவாக பார்த்து விட்டு
பெட்டையிடம் போயருகில்
பிறகால கதைகள்சொல்லி
முத்தங்களும் சிலபொழிந்து
மோகத்தினிலே கூடல்செய்ய
வப்பனாய் இருப்பான்போல்
வாய்க்குள்ள புறுபுறுத்தார்
வாயாமல் கறுத்தப் பூனை
எப்படித்தான் அணில்வாழ்வு
எழிலாக போகின்றது
நித்தமந்த தென்னங்கீற்று
தெவிட்டாத குரும்பட்டிகள்
கொய்யாமர கனிவிருந்து
கொந்தல் சுவை மாம்பழங்கள்
மத்தியானம் இரவு காலை
உத்தியோகம் கரைச்சலில்லை
பத்திரிகைகள் பார்த்தும்
அத்தினத்தை அளப்பதில்லை
எத்தனையோ நாள்பார்த்து
அட்டமி நவமி அதன்பிறகும்
மரணயோகம் பஞ்சமியும்
தட்டிக்கழித்து தடவியெடுத்து
உச்சத்திலொரு சுபகாலம்
அணில் வாழ்வில் ஏதுமுண்டோ
கன்னிராசி கடகமொன்று
உத்தரம் பூரம் ஓராம் பாதங்கள்
அச்சுவினி ஆயிலியம் குற்றம்
ஒத்து வராத தோசம்பொருத்தம்
ஒன்றுமில்லை சிக்கல்போலும்
கொப்பில் கூடிக் குழந்தைபேறு
குட்டிகளுக்கோ முகட்டில் வீடு
புலுனிகளோடு மாலைபாட்டு
இளனிகள் அரித்து தாகப்பாடு
குறிப்பு சாதகம் பெயர்ச்சியில்லை
மரங்கள் காய்க்க மகிழ்ச்சி எல்லை
அழுத அணிலை காண்பதுண்டா
விழுதில் தூங்கி தற்கொலையுண்டா
விரக்தி கிளையை முறிப்பதில்லை
பொழுது விடிய தினமும் ஓசை
அணில் பேசுவது என்ன பாசை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...