Tuesday, May 25, 2021

அன்னார்-பொன்.காந்தன்


செத்துப் பார்த்தார் சிற்றம்பலம்
ஒப்பாரியை எதிர்பார்த்தார்
ஒருவருக்கும்
அது தெரியவில்லை
பெண்சாதி அருகில் நின்று
பெரிதாய்க் குழறினாள்
ஐந்தாறு தள்ளி
அனுங்கி சிணுங்கின
சொல்லாமல் போனதாய்
குற்றங்கள் சுமத்தின
இந்நேரம் நேற்று
இருந்து விறாந்தையில்
நல்லாய்த் தொடர் பார்த்தவர்
இரவு படுக்கையிலும்
இளந்தாரிகள் இருக்கும்
வருத்தப்படாத சங்க
வாட்ஸப் குறூப்பிலும் போய்
வாயடித்தவர்
வேளை வந்ததென்று
வேலிக்குள்
நாய் ஊளையிடயில்லை
வேறொரு அசுமாத்தமுமில்லை
ஆளிப்படி
அசையாமல் இருக்கிறாரே
சோலி முடிந்த கதையை
சொல்லிக்கொண்டிருந்தன
பாட்டியிருந்திருந்தால்
பழசெல்லாம் இழுத்திருப்பாள்
இவளை
கூட்டிக் கொண்டோடி வந்தது
ஏபோட்டிக்காரில் போய்
இழுபடாமலுடன் தாலிகட்டி
உழைப்பு பிளைப்புக்கு
ஒரு கிழமை போகாமல்
உளுத்தங்களியும்
ஒடியல்மாவில் பிட்டும்
முகங்கழுவாமல்
முட்டைக்கோப்பியோடு
மூடிக் கதவை திறக்கத்தான்
மூத்தவள் பிறந்தவள்
ஆத்தை இருந்திருந்தால்
கால்மாட்டில் இருந்தின்று
கழுவி ஊத்தியிருப்பாள்
இளைய வயதிலென்
எடுப்பு முறுக்குகளை
எடுத்து விட்டுப் புலம்ப
எவர்க்கும் எண்ணமில்லை
நெஞ்சிலிடித்து
என் நெற்றியழகையும்
நிமிர்ந்த நடையையும்
கொஞ்சு தமிழில் குழறும்
குறுக்கு கட்டிய கிழவியும்
போன பஞ்சமியில் போயிற்று
கொஞ்சம் பொறுங்கள்
மடக்கி பிடித்துப்போனில்
ஒருவன் படத்தை எடுக்கிறான்
எழுத்துப் பிழைவிட்டு
என் பெயரை
சீற்றம்பலமென்று சிதைத்து
முகநூலில் எனக்கு
முடிவு கட்டுவான் போலும்
இலாச்சியை இழுத்து
இளையது ஏதோ தேடுகிறது
என்
ஏ ரி எம்மாய்த்தான் இருக்கும்
கறந்தெடுத்ததில்
கட்டுப் பணத்துக்கெடுத்தவைக்கு
வட்டியோடு சேர்த்து கட்டி
வாசலுக்கு தினம்
வராமல் பண்ணியாச்சு
பெட்டிக்கு செலவழிக்க முன்
பிரேதத்திலிருந்து மீளவேண்டும்
கட்டை வைப்பது காடாத்து
கொள்ளிச்சட்டியிலிருந்து
எல்லாம் விலை
இருந்தும் செய்தியறிந்து
ஓடிவந்தவர்களில்
பாடையிலிவன்
ஏறுவான் எப்போதென்று
காத்திருந்த கனவானுகளும்
மாலையோடு வந்து
மனுசிக்கு முன்
கண்ணீரும் இருசொட்டுவிட்டு
போனபின்னர்தான்
பொறுமையோடு
இன்னும் கொஞ்ச நேரம்
பிரேதமாய் இருந்தால்
வேலிக்கு உள்ளும் வெளியும்
சிற்றம்பலத்துக்கிருந்த
சீத்துவங்களை பார்க்கவும்
ஆசைகள் தோன்றிற்று
பிரேதமாயிருக்கிறார் சிற்றம்பலம்
ஸ்பீக்கரில் கேட்கிறது
மரண அறிவித்தல்
அன்னார்......

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...