Tuesday, May 25, 2021

சுயசும் சசி ரீச்சரும்-பொன்.காந்தன்



எட்டாம் வகுப்பில்

கிராமத்துப் பள்ளியில்
உலக வரைபடத்தில்
ஒரு சிறுபுள்ளியை காட்டி
சசி ரீச்சர்
இதுதான் சுயஸ் என்றார்
முப்பது ஆண்டுக்கு முன்
சிற்றெறும்பும் சிக்கிவிடும்
எங்களது சுயஸில்
இலங்கை மப்பிலும்
பல கோடுகள்
புள்ளிகளை காட்டினார்
மகாவலி கங்கை
பேதுருதாலகால மலை
நக்கிள்ஸ்
மலைத்தொடரென்றார்
எமக்கு
சுயஸ் நைல் அமேசன்
எவரெஸ்ட் எல்லாமே
வெகுகாலம்
கோடும் புள்ளியும்தான்
சசி ரீச்சர் எங்களை
சுயசுக்கு அழைத்துப்போக
கனவு கண்டிருக்க கூடும்
கோடு
நதியாய் மாறும் புல்லரிப்பை
புள்ளிகள்
மலைகளாகும் அதிசயத்தை
நாம்
இரசிக்க முடிந்ததில்லை
ஊருக்குள் இருந்த
ஆனையிறவு நீரேரியே
எமக்கு வரைபடகோடுதான்
ஆனையிறவு
ஒரு போர்க்களமாயிருந்தது
வன்னி வரைபடத்தை வைத்து
படைகள்
புள்ளிகளும் கோடுகளுமிட்டன
சசிரீச்சரும்
எங்கள் சமுகக்கல்வி வகுப்பும்
அதற்குள்தான் இருந்தது
நாங்களும்
எங்களூரும் பள்ளியும் கூட
புள்ளிகள் கோடுகளாய்
குண்டுகளின் இலக்குகளாய்.
சுயசும் கப்பல்களும்
வன்னியை தாண்டமுடியாமல்
எங்கள் கிராமத்து பள்ளி
வரைபடத்தில்
அன்றே சிக்கிக்கொண்டன
சசிரீச்சர்
தனது சொந்த ஊரான
ஆனையிறவுக்கு அப்பாலிருந்த
யாழ்ப்பாணத்தை
வரைபடத்தில் மட்டும் பார்த்தார்
தனது முற்றத்தையும்
ஒழுங்கையையும் குறித்துவைத்தார்
பெருமூச்சுக்கள் எறிந்தபடியே
எங்களுக்கு முன்
உலக வரைபடத்தை விரித்தார்
சுயஸ் கால்வாயை குறித்துக்காட்டினார்
நேற்று அதில்
பெருங்கப்பலொன்று சிக்கிக்கொண்டது
தேசமற்ற
ஒரு ரீச்சரும் மாணவர்களும்
குறித்துக்கொண்ட சுயசும்தான் அது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...