கொட்டில் பிள்ளையாரின்
வெள்ளிப்பொங்கலில்
வட்டுக்காய் அளவில்
வரிசையில் குந்தியிருப்போம்
கோயிலுக்கோ
கும்மாளமடிக்கவோ
அமரர் ஆகிப்போன
சம்மந்தரும்
தருமநாயகத்தாரும்
ஒரு பார்வை பார்க்கையில்
எங்கள் வாய்கள்
பஜனைக்கு ஆடும்
கும்பிடவரவில்லை
குறுக்கால போனதுகள்
கடவுளுக்கும்
அந்த படையலுக்கும்
நன்றாகத் தெரியும்
நெக்குருகிப் பூக்கும்
புன்னகையையும்
எங்களிடம்
கொட்டில் பிள்ளையாரும்
நிச்சயம் எதிர்பாரார்
பூசை முடிந்து
கடைசியாய்
ஐயரின்
மூன்று கைதட்டில்
அந்த வரிசை முழுக்க
புழுபடிய
குந்தியிருந்த
குறும்புகளின் புன்னகை
அப்போதுதான்
பிள்ளையாரை
தண்டிகையில் அழகாக்கும்
இப்போதும்
இந்த அகிலத்தையே
அழகு செய்ய
எல்லாம் முடிந்ததென்று
கைதட்டுக்கும்
அந்த
புன்னகைக்குமான யாசிப்பு
நிறைந்து போயிருக்கிறது
வெள்ளியிலிருந்து
அடுத்த வெள்ளிவரையும்
லாக்டவுணில்
No comments:
Post a Comment