Sunday, May 30, 2021

அசடுவழியும் முகம் வானம் முற்றம்-பொன்.காந்தன்


ஏதோ யோசனையில் முற்றத்தில்
அண்ணாந்தபோது
வானம்
என் புருவங்களை
வானவில்லாய் பார்க்கிறது
கிளிநொச்சி கடந்து
மாலைமங்கும் வேளையில்
ஆனையிறவுக்கு போகும்
நீர்க்காகங்களை
இமைக்காமல் பார்த்த விழிகளை
தொலைந்த நட்சத்திரமாய்
கண்டெடுத்த மகிழ்ச்சி அதற்கு
சீமெந்துப் பையவிழ்த்து
சேர்த்து கோர்த்து
முடிச்சிட்ட நூலிலும்
அம்மாவுக்கு தெரியாமல்
சிங்கர் மெசின்
பொவினுக்குள் உருவியதிலும்
விட்ட பட்டம்
தென்னையுயரம் பறந்தபோது
அடைந்த புளுகை
பெய்யாத மழைத்துளியாய்
மறைத்து வைத்திருக்கிறது
பிலாக்கொட்டை குருவிபிடிக்க
வேலிமரங்களுக்குள்
பதுங்கிய என்னை
நீல இளவரசியின்
செல்லப்பூனை தொலைந்ததாய்
சொல்கிறது வானம்
குளத்தடி மரங்களின்
சுற்றிக்கொண்டிருக்கும்
வெளவால்களின்
கொய்யாப் பழ வாசத்தை
மோப்பம் பிடிக்கும்
நினைவு கொத்தியாய்
நிற்க வைப்பதில் மகிழ்ச்சி
ஒரு பிறையாய்த் தேய்ந்து
துண்டுகளாய்
நிலாச் சோறிழந்து
குமிழிவிட்டுத் தவித்த
விண்மீனை தூண்டிலிட்டு
குனிந்து இமைக்காதிருந்தது
இன்று வானம்
மறுபடியும் குனிந்தேன்
தொலைபேசியின்
தொடு திரைக்குள்
புதையத் தொடங்கினேன்
ஒரு வேவு விமானம்
உனக்கு மேல்
ஓடிவிடு பதுங்குகுழியுள்
என் நாடி தொட்டு
தலை நிமிர்த்தி
சும்மா என்றது
மல்லிகை கொடியிடையில்
வானம்
அசடு வழியும்
முகத்தையும் பார்க்க
ஆசைப்பட்டிருக்கிறது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...