பால் கோப்பியுடன் பத்திரிகை
ஊகித்தபடி ஊருப்பட்ட செய்திகள்.
தாலி அறுப்பு
தகப்பனை மகன் கொன்றான்
திருகினார் கிழவியை
தீர்க்க தரிசியாக்கிவிட்டது
ஊரின் நடப்பு.
இன்னதென்று
முன்னதாயே சொல்லும் வரம்
எப்படி வாய்த்ததென்று
இன்ரவியூ தரவியலா.
இது சாபம்
பூபாலசிங்கத்தில் போய்
பூந்தி லட்டும் புரியாணி செய்யும்
சாந்தியின் சமையல் குறிப்பும் போதுமாயிற்று இந்நாள்.
கத்துக்குத்தும்
கஞ்சாச் செய்தியும் பார்க்க
எதற்கு
ஐந்து ரூபாய் குற்றி நான்கை
அநியாயமாக்குவான்
நாலு இடியப்பும்
நல்ல சொதிக்குமான காசு.
வெட்டுக்கொத்து செய்தி பார்க்க
விழுந்தடித்து போய்
விடிய வேணுமா ஒரு பேப்பர்.
இரண்டு காட் வாங்கிநிரப்பி
இருந்தபடி உரசினால்
குக்வித் கோமாளி
வனிதா வடை சுடுவது எப்படி
தனிய இருந்து தடவிப்பார்த்துவிடலாம்.
சீ காலிவரையும் தெரிந்து
காறித்துப்பும் அளவில் ஊர்வேலிக்குள்
அருவி வெட்டும் நிலத்தில்
ஆள் வெட்டும் அருவருப்புக்கதை.
தரவரிசையில் எகிறுகின்றது
கிளிநொச்சியென்ற சரித்திர கதையூர்.
படிப்புக்குறைந்து
வெடித்து வெம்பி திரிகின்றது
குடியும் குத்தும் வெட்டுமென்றொரு கூட்டம்.
செடிகளுக்கு நீர் செத்து வார்த்தாரே
இதற்காகவே
எருமை மாடுகள் இங்கு புரளவா
அதுவும் கூட
வயலை பண்படுத்தும் பக்குவப்பிராணி.
எதற்குப் ஒப்பிட
எங்கள் ஊர் இளவுகளை.
அது ஒரு காலம்
அடிநெஞ்சில் இருந்து அருவியாய் பாய்கின்றது
பிடிக்காதவர் வீட்டுக்கு
பின்னேரக்கையாக வேவு பார்த்து
கல்லால் எறிந்து இரண்டு ஓட்டை
கழற்றுவதைவிட
உயர்ந்த குழப்படியிலா விடலையூரிது.
பட்டப்பெயரை
படலையில் எழுதிவிட்டு
கெட்டித்தனத்தின் உச்சியில்
கூத்தாடியது இளமையன்று.
மடலை எழுதிவிட்டு
மயக்கத்தில் ஓடிப்போய்
மடியில் ஒன்றுடன் வர எல்லாம் சுபம்
ஏகப்பட்ட மகிழ்ச்சி.
எல்லாம் மறைந்து இருள் சூழ்ந்துள்ளது.
அடித்துக்கொலை
அம்பாள்குளத்தில் சடலம்
கஞ்சாப்பொதிகள் மீட்பு
கைது செய்யப்பட்டவருக்கு வயது பதினேழு.
எங்கே போகின்றது
எங்கள் ஊர்கள்
எதிர்ப்படும் முகங்களை கொண்டே
குழப்படியின் வகை
குடுவா கஞ்சாவா குத்துவெட்டா
எல்லாமே கணிக்கலாம்
இரவு என்ன நடக்குமென்றும்.
பிறகெதற்கு பத்திரிகை
ஓலை கட்டி ஊர்தி போனால்
உலர் உணவு சேர்த்துத் திரிந்தால்
காலத்தை கணித்து
எங்கள் ஊர்கள் கதைத்த செய்தி
நேரெதிராய் தேய்ந்து
பாழடைந்து பட்டுக்கருகிக்கிடக்கிறது.
தலைவர்களோ பதவிக் கனவில்
படுத்தெழும்புகிறார்.
நம் தலைமுறையோ
தடுக்கி பாழ் குழியில் வீழ்ந்து
திருத்த யாருமின்றி
தெருவில் போதையில்
கொலையாளிகளாய் சேதியில்.
No comments:
Post a Comment