கள்ளன் என்றார்கள்
கதவுக்கு பூட்டுப்போட்டோம்
கடிநாய் என்றனர்
கல்லைத் தூக்கினோம்
பிடயன் என்றார்கள்
தடியெடுத்தோம்
எலித்தொல்லை
இரவிரவாய்
தேங்காய் சொட்டோடு
தீர்த்துக்கட்டினோம்
கத்தரிக்குள் பட்சிகளாம்
கடவாய் கிழிஞ்ச வெருளி
கட்டித்தூக்கினோம்
நீத்துப்பூசணி
நாவூறுக்கு
நாலைந்திடத்தில் கள்ளி
காணாதென்று
மதிலுக்கு பிசுங்கான்
உப்பு மிளகாய்ப்போட்டு
ஒவ்வொரு நாளும் எரிப்பு
கப்புக்கு
திருநீறு சந்தணம்
பத்தியிறக்கும்போதும்
பத்துச்சாத்திரி கூட்டிவந்தோம்
செத்தபிறகு
ஏழெட்டு கழிப்புக்கள்
செய்வினை சூனியமென்று
அங்கங்கு தேசிக்காய்
முட்டை தேடினோம்
ஆகமிஞ்சினால்
சாமியாரை கூட்டிவந்து
சாம்பிராணியோடு
ஓம்கிறீமென்று
ஓடவைத்தோம் பேயையும்
சாத்தான் பிடித்ததென்றும்
ஆத்தா
வந்திருக்கிறாரென்றும்
செபிச்சு மந்திரிச்சு
குழையை அடிச்சு
கோழியை அறுத்து குடிச்சு
ஆட்டை கிடத்தி
அறுத்துப் படைத்தும்
அடைந்தோம் ஏதொவொன்று
பத்துநாளுக்குள்
நல்ல செய்தி வருமென்று
இருபதுபேருக்கு அனுப்பினோம்
எதிலும் எவரிலும்
நம்பிக்கையில்லை
எல்லாம் பக்கமும் பூட்டினோம்
சிசிரிவி
படுத்துக் கிடந்தபடி
பக்கமெல்லாம் பார்த்தோம்
படையல் வைத்தோம்
பாதயாத்திரை போனோம்
நோன்பிருந்தோம்
கையில் கட்டினோம் நூல்
இடுப்பிலும்
ஒன்றை கட்டினோம்
உள்ளங்கையில் ஏந்தி
உள்ளும் கொஞ்சம் விட்டோம்
படுக்கையின் கீழும்
ஒன்றை வைத்தோம்
பல்லி சொல்லவும் கேட்டோம்
பாம்பு படமெடுக்கவும்
பாலோடு நெருங்கினோம்
இதற்கு பிறகும்
இப்போது கையை பிசைந்தபடி
கண்ணுக்குத் தெரியாக்
கறுமம் பிடிக்க
கையறு நிலையில்
கொல்ல வேண்டும்
கொரோனாவை
கோபத்திலுள்ளோம்
செய்யவழியின்றி
சுவரைப் பார்த்தபடி
தேங்காய் சொட்டுவைத்த
எலிப்பொறி
சிரிக்கிறது போல பிரமை
No comments:
Post a Comment