Tuesday, May 25, 2021

கொசப்பு-பொன்.காந்தன்

கிடுகு வேலிக்குள் இருந்து

குமருகள் போயினர்
மதவடியில் கொசப்பென்று
மறுபடியும்
கதவடிக்கு திரும்புகையில்
கதைத்தபடி வந்தனர்
இளவயதுக் குறும்பென்றும்
ஏற்கவும் மறுத்தது
அந்நாளில் நம் ஊர்கள்
ஒரு பெடியன் சிரித்தாலே
சீசீயென்று சினந்ததும்
செருப்பெடுத்து காட்டியதும்
ஒழுக்கத்தின் உயர்வென்று
ஊருப்பட்ட கோடுகள் வட்டங்கள்
கொசப்பின் அர்த்தம் என்ன
விசிலடிக்கும்
விடலைப் பெட்டைகளுக்கு
நொட்டைவிடும்
படலைவரை
கன்னிகளை துரத்திவந்து
திரும்பி
நுரைதள்ள சைக்கிளோடும்
மடலை எழுதிவைத்து
மதவடியில்
மணிக்கணக்காய்
மாதக்கணக்காயும் காத்திருக்கும்
கடைசிவரையும்
காதல் கடிதம் குடுபடாமல்
கசங்கியும் கருகியும் போகும்
குட்டைபாவாடைக்கு
நக்கல்விடும்
கொண்டைக்கும்
குமரியின் நடைக்கு பாட்டும்பாடும்
இதுவெல்லாம்
வயதுக்கோளாற்றின்
வர்ண ஜாலங்களாய்
கண்டு கடக்காதன அன்றூர்கள்
கொசப்பின் சிரமங்கள் என்னவாம்
வீட்டில் விழுங்கிவிட்டு
வெளிக்கிட்டுப்போய் சந்தியில்
மதியச்சாப்பாடுவரை
தெருவைப் பார்க்கவேண்டும்
இடையில் ஐயா
அவர்தான் அப்பா வந்தால்
எழும்பி ஓடிப்போய் ஒளியவேண்டும்
இன்னும் மதவடியில் கண்டு
அதை காவிச் சென்று
மூட்டிவிடும்
சகுனிகளின் கண்படாமல்
சமாளிக்கவேண்டும்
அடிக்கடி தலைவாரச் சீப்பும்
சின்னச்சரையில் பவுடரும்
எப்பவும் செருக வேண்டும்
கனவிலும் வரும் காரிகையின்
முகவரி தேடிப்பிடிக்க
எதுவரை அவள் போகிறாளோ
அதுவரை தொடரவேண்டும்
நாய் துரத்தும்
நாலுபேர் நாக்குவளைக்க
சகிக்கும் பெருமனமும் வேண்டும்
இரவுச்சாப்பாட்டுக்கு முன்
எருமை செம்மறியென
ஏகப்பட்ட மிருகங்களை அழைத்து
புறுபுறுப்புக்களை
கேட்டுப் படியவேண்டும்
சாட்டுக்கு அம்மாவுக்கு
நாலு விறகு கொத்தியும்
இரண்டு வாளி
தண்ணியள்ளியும்
ஆட்டை அவிட்டுக் கலைத்தும்
ஆலாபனை செய்யவேண்டும்
வேறுமுண்டு
ஊர்த்திருவிழாவில்
குருத்து வெட்ட
கொசப்புக்கள் ஓடித்திரியும்
செத்தவீட்டில்
பந்தலுக்கு கிடங்கு கிண்ட
முதலாளாய் அது நிற்கும்
பாடை தூக்குவதிலும்
நாலுபேர்களில் ஒருவராயும்
கொசப்புக்களுக்கு
மதவடியில்
ஊருக்கு காவலர்களாயும்
பசிதூக்கம் மறக்கவும் தெரிந்தது
அடக்கமும்
ஆறுமணிக்குள் வீடடைந்து
விடியவிடிய படிப்பும்
கிடுகு வேலி ஆக்கிவைத்த
பருவ வயதிலக்கணம்
இன்றென்னாச்சு
மதிலுக்குள் மாறிற்றாம்
வேலிக்குள்
வேலியில்லை
வெட்டரிவாள் வேறு கஞ்சா
கட்டற்று ஏதேதோ
இப்போது கதையில்லை
விசிலில்லை நொட்டையில்லை
கட்டையும் பொல்லும்
கத்தியும் செயினும்
சுத்தித் தெரிகின்றன தெருவில்
நினைத்தால்
கொசப்பென்பது
எவ்வளவு மதிப்பான ஒரு சொல்
மறுபடியும்
கிடுகுவேலிக்குள் பெட்டைகள்
கொசப்புகள் என்று திட்டும்
வார்த்தைகள் இனிக்காதோ
ஏங்கும் இதுதான்
இன்று எமதூர்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...