Wednesday, November 27, 2019

வேர்த்துக்கொட்டும் மாரியும் வேலிக்காந்தளின் ஆமோதிப்பும்-பொன்.காந்தன்



கார்த்திகை முற்றத்தில் இறங்குகிறேன்
பன்னீர் குடங்களை சுமந்தபடி முகில்கள்
என்னை ஏன் நாயென்றும் விசாரிக்கவில்லை
இன்னமும் நான் மாறவில்லை
இனியென்னவோ!
ஏனோ சில வெற்றிடங்கள்
நிரப்பப்படாதிருப்பதே அழகெனப்படுகின்றது
முள்ளிவாய்க்கால்வரை
உச்சி சிலிர்த்த ஒரு இந்திரப்புரவி
சித்திரத்தேரில் வைத்து ஈழத்தாயை இழுத்துச்சென்றது
அப்போது என் கவிதைக்கும்
பித்துப் பிடித்த குணமொன்றிருந்தது
பிறகு பேத்தைகளின் சவாரி தொடங்கியது
சாத்துவாயர்கள் எப்படி
சங்க காலத்தை உருவாக்க முடியும்
வெளியே மாரிக்குளிர்
உள்ளே ஊருப்பட்ட புளுக்கங்கள்
வேர்த்துக்கிடக்கிறது இதயச்சுவர்கள்
ஏரியாப் பொறுப்பாளர் பெடியன் ஒருத்தனின் முகம்
இரட்டை சடையை சேர்த்து முடிந்த
இளவழகியின் பார்வை
ஆனையிறவு ஆகாய கடல் வெளியில்
காயப்பட்ட ஒரு பிள்ளையின் முனகல்
ஒரு சிற்றூரவை கிழவரின் சிற்றுரை
முதல் முதல் பொய்க்காலொன்று
எனக்குள் ஏற்படுத்திய பெருவுணர்ச்சி
இப்படி என்னன்னவோ
என்னை பிடித்திழுத்திழுத்து
எங்கெங்கோ போய் வருகின்றன
நுளம்படிக்கக் கூட
இப்போது கையில் பலமில்லாதது போல்படுகிறது
முதன் முதல் ஊருக்கு நடுவில்
ஒரு போராளியில் உடலை பீடமொன்றில் வைத்து
தகனம் செய்தபோது
பள்ளிக்காற்சட்டை சேட்டோடு
ஒரு காவிய காலத்தின் தளிர்ப்பை
கண்கள் அப்படியே மூடிப்பத்திரப்பத்திக்கொண்டது
அம்மம்மா குழலுக்காகவும்
ஒரு ஐஸ் குச்சிக்காகவும் அடம்பிடித்து விட்டகண்ணீர்
வித்துடல் மேல் விழுந்து
ஒரு சத்திய வேள்வியில் சமர்ப்பணமாகும்
உன்னத தருணத்தை அடைந்தது எத்தனை பெருவரம்
என்னை மறந்து சில வேளைகளில்
சில நண்பர்களோடு சிரித்துக்கொண்டிருக்கும்போது
இந்த புன்னகைக்காக யாரோ
உயிர்கொடுத்து விட்டதையெண்ணி
உள் மன ஆத்துமம் ஓங்கி ஓலமிடுகிறது
இக்கணத்தில் வாழ்ந்துவிடு எனும் ஓர் கவிஞனின்
அர்த்தமுள்ள வாசகத்தைப்போல்
எல்லாவற்றையும் மறந்துவிடலாமென
கங்கணம் கட்டி இறங்கும்போது
என் கவிதைகளில் துர்நாற்றம் வீசுகிறது
கங்கையில் விடுத்த ஓலைபோல
மிச்சமின்றி
ஏதோ எல்லாவற்றையும் கொட்டி எழுதி
ஆற்றில் விட்டுவிடவேண்டுமென மனம் அங்கலாய்க்கிறது
கெமுனுவின் வரவு நடக்கின்றபோது
எல்லாளன் பெயரில்
ஏதும் எழுதாமல் இருக்கமுடியவில்லை
எவரேனும் ஒரு அன்னியன்
என்னை இம்சிக்கின்றபோது
கண்முன்னே வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகன்
நெஞ்சுக்குள் எழுவதை என்ன செய்ய நான்
நான் வஞ்சிக்கப்பட்டிருக்கிறேனா
தோற்கடிக்கப்பட்டிருக்கிறேனா
பாடங்கற்க பணிக்கப்பட்டிருக்கிறேனா
காலத்தோடு நித்தம் ஒரே கைகலப்பு
வாழ்வது ஆள்வது பற்றி
விண்ணிறங்கும் தேவதையிடம்
நான் சொல்லப்போவதில்லை
வேரும் விதைகளும் தமிழனுக்குள் சொல்லும்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ
அதையேதான் சொல்வேன்.
வேலிக் காந்தள் உன் ஓலை சரிதான் என்கிறது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...