Saturday, September 28, 2019

அவனை தவிர வேறெவராலும் தரமுடியாது அந்தச் சிலிர்ப்பை- பொன்.காந்தன்



புல்லரிப்பு இல்லாமலேயே பொழுதுகள் விடிகின்றன
ஏதேதோ கண்டாறிவிக்குள் என் வாழ்வு
வாடிக்கையாளனை கவர
ஆடைகளை மாத்தி ஆடிப்பார்க்கிறது ஒரு நடனம்
ஆயினும் ஏதோ ஒன்று
கிறக்கத்திலிருந்து இழுத்து எழுப்பி நிமிர்த்துகின்றது
இப்படி ஒரு பொழுதை நினைத்துப்பார்த்ததில்லை
இப்போதெல்லாம்
எனக்கென ஒரு நாடு பிறந்திருக்கவேண்டும்
அப்படித்தானே
அந்த அற்புத நாட்கள் கடந்தன
எப்பவோ தேசியக்கொடி தயார்
இப்பவோ அப்பவோ என விடியல்
வாசலை எட்டிப்பார்த்த தருணத்தில்
செண்பகமும் வாகையும் காந்தளும்
கண்களுக்கு முன் கிடந்தன
தட்டுத் தாம்பாளத்தை எடுத்து
பொட்டுப் பிறையோடு வாசலில் நில்லடி
என் சகியை தட்டி எழுப்பி
தலையில் தண்ணியை வார்த்து
சில்லென்று அல்லவா இருந்தேன்
மல்லாந்து எவனும் படுத்துக்கிடந்ததில்லை
வில்லன்களை களத்தில்
கரிகாலனின் முப்படைகள்
உள்ளங்கையில் தமிழீழத்தை வைத்துக்கொண்டு
ஓட்டிக் கலைத்துக்கொண்டிருந்தார்கள்
வன்னி சிலிர்த்து
என் கவிதைகள் புல்லின் நுனியில் குந்துவதும்
பூநகரி மணலில் புரள்வதும்
நிலாவரையில் குளிப்பதும்
மட்டக்களப்புக்கு ஓடித்திரிவதும்
கோணமலை சிகரத்தில் கொடியை கனவு காணுவதுமென்று
நிற்க நேரமின்றி
ஒரு தேசக்கனவில் நீந்திக்கொண்டிருந்தது
இப்போது நினைக்கின்றேன்
அத்தனையும் அவனே தான் தந்தான்
அவனை விட எவராலும் தரமுடியாது அந்தச் சிலிர்ப்பை
பிரபாகரன் காலத்தில் பிறந்ததை விட
வேறென்ன பேறெனக்கு வேண்டிக்கிடக்கிறது
ஆண்டியாய்க் கிடந்த தமிழனுக்கு
ஆடை கொடுத்து
அம்மணங்களை எல்லாம் ஒவ்வொன்றாய் மறைத்து
மாண்டு கிடந்த தமிழர் இராச்சியத்தை
மீண்டும் காட்டிய அந்த மின்னலை
நான் என்ன சொல்லிப் பாடுவேன்
வண்ணக்கனவென்பது
வாழ்வதற்கான ஒரு தேசத்தை மீட்பெதன
சொல்லில் அல்ல
முள்ளிலும் தானும் நடந்தே காட்டிய தேவன்
வல்வையில் பிறந்த தமிழர் வல்லரசு
முள்ளிவாய்க்காலுக்கு பிறகு அவன்
எல்லோருக்குள்ளும் அவதாரமெடுத்த
அதிவீரம் ஆகிவிட்டான்
ஏதோ ஒரு விதத்தில் எதிரிகளும்
பிரபாகரனெனும் பேரை
நாளாந்தம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்
நல்ல வீரனுக்கு அழிவில்லை
வல்வையில் அல்லாமல்
எல்லை தாண்டி சில வேளை பிறந்திருந்தால்
எல்லா வல்லரசுகளுக்கும்
பிரபாகரனே பெரும் தளபதியாயிருப்பார்
ஈராக் போல
ஈழம்  எண்ணெய் வயலாயும் இல்லைத்தான்
இந்த சமுத்திரப் பிராந்தியத்தில்
இன்னமும் தமிழர்களை
வஞ்சகத்தோடு பார்க்காத நல்லவர்களும் அதிகமில்லை
வன்னியெனும் சின்ன நிலத்துக்குள்ளிருந்து
விண்ணிலே பறந்து
கொழும்புவரை புட்பகத்தில் புறப்பட்டு வந்ததும்
எல்லை கடந்து
பலருக்கு ஒரு குமைச்சலாக இருந்திருக்கலாம்
பிரபாகரனை
உலகின் ஒப்பற்ற தலைவனாய் உச்சரிக்க
இதுதான் பலபேருக்கு இடைஞ்சலாய் இருக்கலாம்
எல்லா வல்லரசுகளும்
ஈழத்தின் முள்ளிவாய்க்காலில்தான்
தங்களுக்கு முதுகெலும்பு இல்லையென்பதை
வரலாற்றில் எழுதவேண்டுமென விதியென்றால்
என்னதான் செய்வது
கொஞ்சம் பின்னடைவுதான் ஈழத்தமிழருக்கு
சந்ததி என்று ஒன்று உண்டல்லவா
எல்லா இனத்துக்கும்
அது நித்திரை கொள்ளுமா என்ன
தர்மத்தின் வாழ்வுதனை  சூது கவ்வும்
தர்மமே ஒரு நாள் நிச்சயம் வெல்லும்
பிரபாகரன் தர்மம்
தமிழரின் தாரக மந்திரம்
வீழாத விடிவெள்ளி
தாழாத தன்மானம்
தமிழனின் அடையாளம்
வாழ்க அந்த பெருவீர வரலாறு










No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...