Sunday, December 8, 2019

உலராப்பறவை-பொன்.காந்தன்



இராமசாமியின்
மீன் பெட்டியில் தொடங்கும்
ஒரு நீர்க்காக்கையின் நீச்சல்
முடிவற்ற குளத்தில்
உலராப்பறவையின் காதலாயிற்று
கரை ததும்பிக்கிடக்கும்
சலனத்தில்
எம்பிக் குதிக்கும் மீன்குஞ்சுகள்
ஆழக் குமுழிகளின்
கனவில் வளரத்துடிக்கும்
கள்ளுண்ட வாயில்
சிக்குண்ட விரால்களின்
வெடில் தீரா வார்த்தைகளில்
மயங்கித் தெளியும்
இத்தீராக்குளம்
மொச்சையில் கிடந்துழலும் நாய்கள்
இராமசாமியின் மீன் பெட்டியை
அமரர் உலகம் வரை
பின் தொடரும் கிறக்கமாய்
விட்டுப்பிரியாதபடி குளம்
தீட்டு நாட்களற்றும் பரந்து கிடக்கிறது
கூதல் ஊறிக்கிளர்ந்த
சிறகு முளைத்தெழுந்த பட்சி
பட்ட மரத்தில்
சிலுப்பிடச் சிந்திய துளிகள்
கரையில் தேன்குடமாய் உடைய
முடிவற்ற குளத்தின் வார்த்தைகள்
புலம்பித் தாமரை இதழாய் அவிழ்ந்தன
வெகு நேரமாய் கரையில்
காத்திருந்த
தூண்டிலில் சிக்கிக்கொண்டது
முடிவற்ற குளத்தின் மோகம்
மீன் கொத்தியின் பாடலாகி
பேரூந்துக்கு காத்திருக்கும்
தேவதையின் செவிகளிலும்
உலராப்பறவையின் காதல் நீள்கிறது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...