Monday, December 2, 2019

திரும்பிய நாட்கள் பற்றிய ஊர் குறிப்பு-பொன்.காந்தன்



கடைசி நாட்களின் வரிகள்
முதல் தடவையல்ல
முன்பொருமுறை எழுதியபோது
திருநகரில் இருந்தேன்
போர் விமானங்கள்
தலைக்கு மேல் அலைந்துகொண்டிருந்தன
குண்டுகளின் அதிர்வில்
வேலிச் சருகளும் மலர்களும் உதிர்ந்தன
சுடசுட
பரோட்டா வாங்கும் கடை
வழமைக்கு மாறாக பூட்டியே கிடந்தது
மறைந்திருந்து புகைபிடிக்கும்
பெட்டிக்கடையும் திறக்கப்படவில்லை
அருகில் பெரிய புளியின் கீழ்
எவரும் இல்லை
வடை வண்டிலில்
பெற்றோல்மாக்ஸ் வெளிச்சம் இல்லை
எனக்குப்பிடித்ததோ இல்லையோ
வேறெதுவோ இராப்போசனமானது
மறுநாள் எப்படி விடியும்
சொல்லத் தெரியாதவனாக இருந்தேன்
பிறகு மறுநாள்
மிதி வண்டியை உழக்க ஆரம்பித்தேன்
அந்த பயணத்தின் முடிவை
அப்போது சரியாக அனுமானிக்க முடியாதவனாக
போய்க்கொண்டே இருந்தேன்
என்னுடன் பயணப்பை மட்டும் இருந்தது
வீட்டை பூட்டி திறப்புக்களை எடுத்திருந்தேன்
எனது செல்லப்பிராணிகளுக்கும்
என்னுடன் வரும்படி அழைத்திருந்தேன்
கரடிப்போக்குவரை அவையும் வந்திருந்தன
மாட்டை அவிட்டு விட்டிருந்தேன்
முன்பு
பொழுது போக்கிற்காக சென்ற வயல்வெளிகளை
வெறுமையுடன் கடந்துகொண்டிருந்தேன்
நான் திரும்பி வந்துவிடுவேன்
ஒரு வெற்றிப்பரணியை பாடிக்கொண்டு.....
எனக்கு ஒரு நம்பிக்கையை
பழைய நாட்கள்
மனம் முழுக்க விதைத்திருந்தன
வீண்போகாத நம்பிக்கையை
நானும் அனுபவித்திருந்திருந்தேன்
முல்லைத்தீவுக்காரனொருவர் சொல்ல கேட்டும்
சிலிர்த்திருக்கிறேன்
நண்பரொருவர் தந்த
ஸ்ரலின்கிராட் தியன்பியன்பூ நோர்மண்டி
வரலாற்று கதைகள் வழியேயும்
திரும்பிவிடுவேன் திருவாசமாகியது
ஓர் இரவில் முறிகண்டிப்பக்கமாய்
மிதிவண்டியில் மூச்சுவாங்க ஓடி
புத்துவெட்டுவான் காட்டுத் தெருவில்
யானைக்கு பயந்து போகாமல்
மாங்குளத்திற்கு
கடும் பனி பொழியும் பனியிரவில் பயணித்து
வடகாட்டில் குந்தினேன்
எறிகணைகள் எட்டாத தூரம்
பற்றைகளுக்களின் ஓரமாக தூங்கினேன்
காட்டுக்கிராமத்தின்
கோயில் குளம் சிறு வயல்கள்
வேட்டைக்காரர்களுன் ஏற்பட்ட நட்பு
யானை துரத்தும் சத்தம் எல்லாம்
என்னை தடுத்தாட்கொண்டன
பிறகு அக்கராயன் பக்கமாக
துணுக்காய் கோட்டைகட்டி வழியாக போனேன்
ஊர் திரும்பும் நம்பிக்கை முளைத்தபடி
கவிதைகளை எழுதினேன்
அவ்வாறே விசுவமடுவிலோ
தேராவிலிலோ குந்தியிருப்பேன்
அங்கிருந்தபடி
மூங்கிலாற்றுப்பக்கமாக வயல்களையும்
சோழன் தோட்டங்களையும் ரசித்தபடி
இன்னொரு வடை வண்டில்காரனை
சிநேகம் பிடித்தபடி திரும்புவேன்
வீடு அப்படியே இருக்கும்
காணி முழுக்க இப்பில் இப்பில் அடர்ந்திருக்கும்
எனது வீட்டு ஒழுங்கை
பூநாறிகளால் நிறைந்திருக்கும்
வேலிப்பூவரசகள் வெட்டப்படாமல் கொழுத்திருக்கும்
சன்னங்கள் துளைத்த தென்னைகளின் கீழ்
செத்தல்கள் முளைத்திருக்கும்
பலாவும் மாவும் நான்கைந்து பருவங்கள்
காய்த்துப் பழுத்து அழுகி
கொட்டைகள் விழுந்து
அதன் குடும்பம் பெருத்திருக்கும்
கிணறு பாசியடர்ந்திருக்கும்
விளிம்பில்
ஓரிரண்டு கற்கள் குண்டுகள் பட்டு உடைந்திருக்கும்
வீட்டுக்கூரையும் உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும்
ஒரு மிரண்டாப்போத்தலில்
தண்ணீரையும் நிரப்பிக்கொண்டு
முயல்கள் பாய்ந்தோட
காட்டுக்கத்தி ஒன்றுடன் வளவுக்குள்
மீண்டும் குடிபுகுதலை
அகதியின் திருவிழாவாக கொண்டாடுவேன்
இம்முறை
பழைய நாட்களில் ஊர் திரும்பியபோது
பதினெட்டாம் போர் ஏற்றத்தில்
சவரம் செய்யப்படாத முகத்துடன்
மகிழ்ச்சியுடன்
உழக்கிய மிதிவண்டி
போக போக இழந்துவிட்டேன்
சிறிய பயணப்பையையும்
சுமக்க முடியாதபடி இருந்தது
என்னை மட்டும் சுமக்கும் நாட்களாகின
திருநகர் அக்கராயன் கண்டாவளை
நான் பழகிய மனிதர்கள்
வலைஞர் மடத்திலும் மாத்தளனிலும்
மணலுக்குள் முண்டங்களாய் புதைக்கப்பட்டனர்
வன்னிப்பெரு விளையாட்டு விழாவில்
நான் ரசித்த உதைபந்து வீரன் ஒருவனை
கால்களை இழந்தவனாக
அவசர மருத்;துவமனையில் காண நேரிட்டது
ஒரு வாலிபன்
காதலியின் புகைப்படத்தை
தன் சட்டைப்பைக்குள் காவியபடி
எல்லா இளம் யுவதிகள் முகத்திலும்
அவளை
தேடி அலைந்து கொண்டிருந்தான்
பழைய நாட்களைப்போல
பலர் திரும்பமாட்டார்கள் என புலப்பட்டது
சென்றவர்கள் திரும்பா சொந்த ஊர்களும்
வாசல்களும்
உலகத்தில் இருந்துவிடுமா
இருக்கிறது
அந்த ஊரில் வசிக்கிறேன் இப்போது
இன்னமும்
பூநாறி அடர்ந்த ஒழுங்கைக்குள்
இப்பில் இப்பில் அடந்த வளவில்
திரும்புவேன் என்ற நம்பிக்கை மனிதனின் வாசல்
திறக்கப்படாமலே இருக்கிறது.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...