Wednesday, November 27, 2019

வெறித்தனமும் வேற லெவல் வெங்காயமும்-பொன்.காந்தன்




இம்முறை மத்தாப்பு விடும் தீபாவளி
மனசு கனத்தபடி முடிந்திற்று
உடுப்போடு வெளியில் போனது
கடுப்பேத்தும் படியாய்
மேற் சட்டையின்றி மேய்ந்துவிட்டு வருகிறது
வேற லெவலில் விளைகிறது
இப்போது யாழ்ப்பாணத்து வெங்காயம்
நாலு நாளாய் குழியுள் நசியுண்ட மலரை
கைபிடித்து மீட்க முடியாத
கற்பனை கீறோக்களுக்காக
ஈழத்திலும் ஏதோ எங்கிருந்தோ வெறித்தனம்
நடுக்காட்டுப்பட்டியில்
நம் செல்லம் சுர்ஜித்தை மீட்க
ஒரு அம்புலிமாமா இல்லாத் தமிழகம்
சந்திராயன் தொலைந்தால் என்ன
தொலைந்தே போகட்டும்
கண்மணி சுர்ஜித் ஆம்ஸ்றோங்காயும் ஆகியிருப்பான்
கடிந்து கொள்ள எனக்கும் உரிமையுண்டு
இடிந்து போன கீழடியுள்தான்
என் பெத்தாச்சி பிறந்தாள்
தஞ்சைக் கோபுரத்தைகட்டிய தமிழனின் கர்வம்
ஆழத்துளைக்குழியில் வாழ்வற்று போயிற்று
மெல்ல மெல்லதமிழரின் உள்ளொளியை
மாய மயக்கமெனும் கறையான் அரிக்கின்றது
வெறும் வாயடிக்கின்ற மந்தைகளாகின்றோம்
மில்லருக்கு சிலையில்லை
பிரபாகரனுக்கு மணி மண்டபம் இல்லை
திலீபன் இருந்த இடம் வெறும் திட்டாய் கிடக்கிறது
தீருவில் மறந்து போயிற்று
மாலதிக்காக ஒரு மகா நாடு இல்லை
தனிநாயகம் அடிகளாரை பல தரித்திரங்களுக்கு தெரியாது
புலி பாய்ந்த நிலத்தில்
கட்டவுட்டுகளை பார்த்து கைதட்டுகிறது
தீபாவளி விசர்
காலியாய் போய் போகிறது தமிழன் கைப்பொருள்
ஆறேழு நாள் முன்பு
நாங்குநேரிக்கு இழுப்பட்டு விட்டேன்
நாடார் வாக்கு நமக்கே
சாதிய கோசத்தில்
பாதி வழிக்கு ஓடி வந்து பதறிப்போய்விட்டேன்
இன்னும்
ஈவேராக்கள் எத்தனைபேர் பிறந்தாலும்
நூலிழையில் தொங்கும் தமிழரை
ஏதேதோ குழிகளில் இப்போதைக்கு மீட்பு இல்லை
நாதியற்றவன் தமிழரென்று யார் சொன்னார்
நான்நம்பமாட்டேன்
கட்டவுட்டுக்கள் வந்து நாளை அவனுக்காக
காவலரணில் நிற்கும்
சைக்கிள் செயின்போதும் அதற்கு
எல்லை தாண்டும் எதிரிகளை
எட்டி ஒரே அடியில் வீழ்த்த
பட்டம் படிப்பு வேண்டாம்
கட்டவுட்டுக்களுக்கு பாலாபிசேகம் செய்தால்
நாளை அது காராம்பசுவாய் மாறி கறக்கும்
சட்டை கிழிப்பட்டு ரிக்கட் எடுத்தால்
தமிழர் சரித்திரத்தில் இடம் கிடைக்கும்
தியேட்டர் கதவை பிடுங்கி எறிந்து
திரைக்கு முன் விசிலடித்து
கதிரைகள் தாவி களேபரம் பண்ணினால்
உடனே வருவான் சயங்கொண்டான் மீண்டும்
இந்த பரணியைப்பாடச் சிலிர்க்க
சட்டையோடு படத்துக்குப் போய்
இடைவேளையில் யட்டியோடு வெளியில் வந்தால்
எட்டுத் தொகை பத்துப்பாட்டு யாத்த
எல்லாப்புலவனும் வருவான்
கெட்டுத்தொலையும் கிலிசு கேட்டை படைக்க
என்ன கட்டித்தூக்கி
காலடி நிலத்துள் புதைந்த ஈகங்களை காட்ட
பச்சை மட்டையும் பிரபாகரனும் இல்லை.
முற்றுப் புள்ளியை
இதைவிட வேறுமாதிரி வைக்க முடியவில்லை.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...